மீற முடியாத உத்தரவு! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
மீற முடியாத உத்தரவு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2013
00:00

காக்கைகள், கோழிகளைப் போல வீட்டு முற்றத்தில் வைக்கப்பட்டிருந்த சோற்றை ஆவலோடு கொத்திக் கொண்டிருந்தன.
""காக்காச்சி... இங்க வா,'' சுந்தரியம்மா தன் செல்லக் காக்கையைப் பெயர் சொல்லி அழைத்தபடி, முற்றத்துத் திண்டில் வந்தமர்ந்தாள்.
காக்கைகள் கூட்டத்திலிருந்து கறுகறுவென எல்லாவற்றையும்விட, அதீதக் கறுப்பாயிருந்த, "காக்காச்சி' என்ற காகம், சுந்தரியம்மா அருகே நான்கு குதியில் வந்து நின்று, அவள் கால்விரல்களுக்கிடையே அலகால் செல்லமாய் கொத்தியது.
""இப்பெல்லாம் ஒடம்பு எனக்கு ஒத்துழைக்க மாட்டேங்குதுடீ காக்காச்சி... எப்பக் கீழ விழுவேன்னு தெரியல. காலுல பலமில்ல; என்னமோ ஒண்ணு என்னக் குப்புற தள்ளத் துடிக்குது. தரையில கால் ஊனி நிக்க முடியாம தடுமாறுது. சீக்கிரமா ஒன்ன விட்டுட்டு போயிருவேன் போலருக்குடீ.''
சோர்வாகச் சொல்லிக் கொண்டிருந்த சுந்தரியம்மாவை, காக்காச்சி வேதனையோடு பார்த்து, தன் அலகால், அவள் சேலைத் தலைப்பைக் கவ்வி இழுத்து, "அப்படிச் சொல்லாதே' என்பதைப் போலக் குதித்து, சுந்தரியம்மாவின் மடியிலேறி நின்று, வாத்சல்யத்தோடு கரைந்தது.
""நீ ஒண்ணும் கவலைப்படாதேடீ... நெருப்புன்னதும், நாக்கு சுட்டுறவாப் போகுது? இன்னும் என்னென்னெல்லாம் பாக்கணுமோ... என்னென்ன பாடுல்லாம் படணுமோ... பெறப்பெடுத்து வந்த காரியத்துல துரும்பு மிச்சமிருந்தாலும் போயிறவா முடியும்? ஆனா, எனக்கு எல்லாமே புளிச்சுப் போச்சிடீ. நான் படுற பாட்ட நீ பாத்துக்கிட்டுத்தானே இருக்கறே?''
காக்காச்சி, கவனமாய் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, அவள் சொன்னதைப் புரிந்து கொண்டதால் ஏற்பட்ட வேதனையோடு, அவளையே பரிதாபமாய் பார்த்துக் கொண்டிருந்தது. மற்ற காக்கைகளும், சோற்றுப் பருக்கைகளை அலகால் கொத்தித் தின்றபடியே, காக்காச்சியையும், சுந்தரியம்மாவையும் கவனித்துக் கொண்டுதானிருந்தன.
""என்னோட ஒம்பதாவது மக பொறந்த அன்னக்கித்தான், ஒங்கம்மக்காரியும் ஒன்னயப் புத்தம் புதுசா கூட்டிலேருந்து கூட்டிட்டு வந்திருந்தா. ஒங்கம்மாகிட்ட ,""யடீ... அழகி... நான் பெத்துட்டேன்னு நீயும் பெத்தெடுத்த குஞ்சோட வந்து நிக்கறியா? எனக்குப் பொறந்திருக்கறது ஒம்பதாவது புள்ள. இது தான் கடைசியும். நீ இன்னும் கூடு கெட்டி, முட்ட போட்டுக் குஞ்சி பொரிச்சுடாதே ஒடம்பு தாங்காது.
""எங்க வீட்டுக்கார மனுசங்கிட்ட, நா மல்லுக் கெட்டியும், அந்தாளோட அடங்காத பசியில ஒம்பது பெத்துட்டேன். ஒடம்பு என்ன இரும்பிலயா அடிச்சு வெச்சிருக்கு? சுருக்கா ஆடிப் போயிரும். இந்தக் காக்காச்சியோட நிப்பாட்டிக்கன்னு, ஒங்கம்மக்காரிக்கிட்ட நா சொல்லிக்கிட்டிருந்ததை, அவளும் தலையாட்டிக் கேட்டுக்கிட்டுதானிருந்தா... நீயும் தலையாட்டாம நின்னுகிட்டுத்தானிருந்தே. அன்னிக்கி, ஒனக்கு நா போட்ட சோத்துப் பருக்கய, நீ ஆசையோட சாப்பிட்டப்பவே என்னோட பத்தாவது புள்ள நீயின்னு முடிவு செய்துட்டேன். நீயும் கொறஞ்சவளா? இன்னைக்கு வரை, நீ என்னைப் பார்க்க வராம இருந்ததேயில்லை. என்னோட மனசுலேருக்கற சந்தோசமோ, துக்கமோ, இத்தனை காலமா ஒங்கிட்டயும் ஒங்கம்மாக்கிட்டேயும், ஒங்களவிட்டா நீங்க கூட்டிட்டு வர்ற காக்காக் கூட்டத்துக்கிட்டயுந்தா சொல்லியிருக்கறேனே தவிர்த்து, எம்புருசங்கிட்டயோ, புள்ளைகள் கிட்டயோ, அக்கம்பக்கத்தார்கிட்டயோ சொல்லியிருக்கேனாடீ காக்காச்சி?'' கேட்டுக் கொண்டிருக்கும்போதே, சுந்தரியம்மாவின் கணவர் முற்றத்திற்குள் வந்தார்.
அவரைக் கண்டதும் காக்கைகளெல்லாம் படபடவெனச் சிறகடித்துப் பறந்தன. சுந்திரியம்மாவும், காக்காச்சியும் சற்றே விலகினர்.
""சவத்த மனுசி, இந்தக் காக்காக் கூட்டத்தக் கட்டிக்கிட்டா அழுவ? காக்காவுக்குச் சோறு வைக்கறதத் தான் கண்டிருக்கிறோம். அதுக்கிட்ட ஒக்காந்து, அக்கம் பக்கத்துப் பொம்பளகிட்டப் பழக்கமிடறத மாதிரிப் பேச்சுக் குடுக்கறத இங்கதாம்ளா கண்டிருக்கேன். வர வர ஒனக்குக் கிறுக்கு முத்திப் போச்சுளா. வயித்தப் பசிக்குது... சோத்தப் போடு.
"" வேளாவேளைக்கு ஒழுங்காச் சாப்பிடுறியா... இல்லன்னா காக்காச் சாப்பிடறதப் பாத்த திருப்தியில பட்டினி தான் கெடக்கறியா? பட்டினி கெடந்து கெடந்து நோக்காட்டுல அழுந்து. நீ மட்டும் அழுந்திட்டுப் போனாத் தான் பரவாயில்லியே... எனக்குத் தானளா பெரிய அழுத்தமாருக்கு? ஒரு சோத்தக் கறியப் பொங்கறதுக்குக் கால்கையில் தெம்பில்லை. ஒண்ட்ராட்டம் ஆஸ்பத்திரியில போயி, ஒன் நோக்காட்டுக்குச் செலவு செய்யணும். போதாக்கொறைக்கு ஒனக்குச் சேலத் துணிகூட நாங்கெடந்து தொவச்சி நாறணும். எதுக்குக் கெடந்து என் உயிர எடுக்கிறா... பேசாமச் செத்துத் தொலய வேண்டியது தானே... நீ இல்லன்னு இங்க யாரு வருத்தப்படப்போறா? இப்பச் சோறு கீறு பொங்கினியா... இந்தக் காக்காக் கூட்டத்தப் பராக்குப் பாத்துகிட்டு அடுப்பக் காயவெச்சிட்டியா?'' பொறுமையிழந்து பேசும், தன் கணவனைக் கண்ணால் பார்க்கக்கூட பிரியமில்லாத சுந்தரியம்மா, முற்றத்துத் தூணைப் பற்றி பிரயதனப்பட்டு எழுந்து சமையற்கட்டிற்குள் போய் சமைத்து வைத்திருந்த சாப்பாட்டை எடுத்து, பரிமாற முயன்றாள்.
""தள்ளுத் தள்ளு... தள்ளிப்போ... சோத்தப் பரிமாறுறேன்னு விழுந்து தொலைச்சிடாத... பொறவு, அதுக்கும் நாந்தான் ஆஸ்பத்திரியில போயி தெண்டம் போடணும். வச்சிட்டுப் போ. நானே போட்டுத் தின்னுக்கறேன். எல்லாம் என் கருமம்; நோக்காட்டுக்காரியப் போட்டு, பாடு பாக்கணும்ன்னு எந்தலையில கடவுளு எழுதிப்புட்டான். இந்தச் சனியனோடக் கெடந்து இன்னும் எத்தனை காலம் லோலுப் படணுமோ!''
மனசாட்சி இல்லாமல், தன் இயலாமையைத் தூசிக்கும் கணவனின் கடுஞ்சொற்களால் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு முற்றத்திற்கு வந்த சுந்தரியம்மாவை, இன்னும் போகாமல் காத்திருந்த காக்காச்சியும் மற்ற காக்கைகளும் கனிவோடு நோக்கின.
மீண்டும் முற்றத்துத் தூணருகே அமர்ந்து கண்களைத் துடைத்தபடியே காக்காச்சியைப் பார்த்தாள் சுந்தரியம்மாள். காக்காச்சி தலையை இடப்பக்கமாய்த் திருப்பிய படியே சுந்திரியம்மா அழுகிறாள் என்பதைத் தெரிந்து கொண்டு, அவளின் கால்விரல்களுக்கிடையே, தன் அலகால் கொத்தி ஆறுதல் சொன்னது. சின்னதாய் ஒரு மவுனம் தாங்கியமர்ந்திருந்த சுந்தரியம்மா, காக்காச்சியைப் பார்த்தாள்.
""பாத்தியா காக்காச்சி, இந்த ஆம்பிளைகளை... அவங்களுக்காகத் தான் எல்லாமே நடக்கணும். சிரிக்கணும்... சிணுங்கணும்... சில்மிசம் செய்யணும். அவங்க நாக்குக்கு, எது ருசியோ அதச் செஞ்சுக் குடுக்கணும். கால்ல சக்கரத்தக் கட்டிக்கிட்டு ஓடுன மாதிரி ஓடுனா மட்டுந்தான் அவங்களுக்குப் பிடிக்கும். பொம்பள மட்டும் நோய் நொடி வராத வரம் வாங்கிட்டு வந்துறணும். நமக்கு ஒடம்பு வலி, அசதின்னு ஏதும் வந்துறப்படாது. அப்படி வந்துட்டாலும் அவங்ககிட்டக் காட்டிறப்படாது. ராப்பகலா அவங்களுக்காக மட்டுந்தான் வாழணும். வாழ்ந்தாச்சே... முப்பத்தஞ்சு வருசமா, இந்த மனுசனுக்காக மட்டுமே வாழ்ந்தாச்சே... கண்ட கண்ட பொம்பளகூடவெல்லாம் சவகாசம்... வாயத் தொறந்தா பொய் மட்டுந்தான் வரும். எவகூடப் போனாலும் ஏன்னு கேக்கத் தெரியாம வாழ்ந்தாச்சு. அப்படிக் கேட்டுட்டா, நான் பெத்தப் புள்ளய்க மனசுக்குள்ள அப்பா ஒரு அயோக்கியருன்னு பதிவாகிறப்படாதேங்கற பயம். ஆனா, அதுதான், அந்த மனுசருக்குத் தொக்காகிப் போச்சு.
""புள்ளைகளப் பெத்தாச்சு... வளத்தாச்சு... கல்யாணம் காட்சி, பேரன் பேத்தின்னு பாத்தாச்சு. ஒரு பிள்ளையாவது எங்கிட்டத்தில இருந்திருந்தா மனசுல உள்ள பாரத்த, அதுக்கிட்டவாவது சொல்லி ஆத்திக்கலாம். அதான் எல்லாம் மெட்ராசு... பம்பாய்ன்னு போயாச்சே, ஒம்பது பெத்தேன்னுதான் பேரு. நான் செத்துக் கிடந்தாக்கூட ,"அம்மா'ன்னு அழுறதுக்கு யாருமில்லாத அனாதயாத்தான் கெடப்பன் போலருக்கு.
""எனக்கு இந்த மனுசன்தான் தொண... இந்த மனுசனுக்கு நாந்தான் தொணங்கறதாலத் தான் இந்த முற்றத்தையும், இந்தக் கூடத்தையும் சுத்தி சுத்தி வாரேன்? இப்பகூட இந்த மனுசருக்காகவும், இவரோட வசதிக்காகவுந்தான் நாங்கெடந்து தட்டோலம் விடுறனே தவிர, வேறெதாச்சும் எனக்கு உண்டா... இதெல்லாம், இந்த மனுசருக்குத் தெரியுமா தெரியாதா... நடுத்தெருக்காரியோட தொடுப்பு வச்சிருக்கறதா ஊரே பேசுது. அதான் நா செத்தா அவள இந்த வூட்டுக்குள்ள கொண்டு வந்து, வச்சிக்கலாம்ன்னு நெனைப்பு. இந்த வயசுலயும் தாகமெடுத்தலையுற மிருகத்தப் போட்டுக் கெட்டியழணுமா காக்காச்சி... போட்டும் எப்படியோ போட்டும்.''
விரக்தியாய் தலையில் கை வைத்தபடி மவுனமானாள் சுந்தரியம்மாள்.
காக்காச்சிக்கு, சுந்தரியம்மாவிடம் பழகிப் பழகி... அவளின் ஆதங்கங்களெல்லாம், அத்துப்படியாகி விட்டிருந்தது. அவளின் பாஷையெல்லாம் புரிந்து. சலனமில்லாமல் சுந்தரியம்மாவின் விலாப் பகுதியில், தன் இறக்கையால் உரசித் தேய்த்தது.
""பொறந்த எல்லாமே செத்துத்தான் தீரணும். மண்ணுல பொறந்த எல்லாமே மண்ணுக்குத் தான் திரும்பியாகணும். கை, கால் திடமிருக்கறதால தான், திடங்கெட்டுப் போன என்னை, வார்த்தைக்கு, வார்த்த செத்துத் தொல செத்துத் தொலன்னு, அந்த மனுசன் பேசுது? எனக்கு மட்டும் சாகாம உசிரக் கையில பிடிச்சுக்கிட்டிருக்கணும்ன்னு ஆசையா? இந்த மனுசங்கூட கெடந்து வார்த்தைக்கு வார்த்த செத்துத் தொலையறதவிட ஒரேடியா செத்துப் போயிறத்தான் நினைக்கிறேன். சாவு வந்தாத் தானே! நா செத்தப் பொறவு தான், அந்தாளுக்கு என்னோட அரும தெரியும்.
""ஆனா, என் மக்க தான் பாவம். அம்மா அம்மான்னு புள்ள குட்டியோட ஓடி வந்து நிக்கும். அம்மய்க்குப் பொறவு யாருகிட்ட வந்து நிக்கப் போவுதுக. எல்லாத்தயும் உட்டுட்டுப் போனாலும் காக்காச்சி ஒன்னயும், ஒன் கூட்டத்தயும் உட்டுட்டுப்போறமேங்கற கவல தான் என் நெஞ்சுக்குழிய அடச்சுகிட்டு நிக்குது.
""ஒனக்கு அறிவு தெரிஞ்ச நாள்லேருந்து என்னய விட்டுப் பிரியாம எங்கூடயே பழகிட்ட, எனக்குப் பொறவு யாரு ஒன்னை கவனிப்பா... ஒன்னக் கண்டதும், அக்கறையா யாரு சோறு போடப் போறா... ஒன்னயும் ஒரு உசிரா நெனச்சு ஒன்னக் கூட்டி வச்சிகிட்டு யாரு பழக்கம் உடப் போறா? ம்ம்ம்... நான் செத்துருவேன் காக்காச்சி. நெனச்சிறாம நான் செத்துப் போயிருவேன். என்னையே கவனிக்காத இந்த மனுசரு, ஒன்னயவா கவனிக்கப் போறாரு... நான் செத்த பொறகு, நீ இங்கே வராதே! உங்கூட்டத்தோட எங்கயாவது நல்ல பாக்கியசாலியிருந்தா, அவளத் தேடிப் போயிரு. என்ன காக்காச்சி நா சொல்றது புரியுதா?''
கண் நிறைந்த நீரோடு காக்காச்சியைப் பார்த்தாள் சுந்தரியம்மாள். காக்காச்சி, அவளைப் பார்க்காமல் பிடிவாதமாய், அவள் மடியிலேறிப் படுத்துக் கொண்டது.
எண்ணி ஏழாம் நாள்...
சுந்தரியம்மா வீட்டிலிருந்து ஒப்பாரிச் சத்தம்.
சுந்தரியம்மா இறந்துவிட்டிருந்தாள்.
ஊரிலிருந்து அவளின் மக்களும், மற்றவர்களும் வந்து சேர்ந்து அழுத அழுகை ஊரையே கரைத்தது.
வழக்கமாய்ச் சுந்தரியம்மாவைத் தேடி வரும் காக்காச்சிக் குழுவினர், "கா...கா...கா...' என்ற சத்தத்தோடு, வந்து வீட்டின் முற்றத்தில் கூடியதும் சுந்தரியம்மா செத்து விட்டது தெரிந்து விட்டது. துயரத்தோடு, "காகாகா... காகாகா...' என்று என்றுமில்லாத அளவு சத்தமிட்டுக் கரையத் தொடங்கின.
காக்காய்களின் ஓலத்தால், தானிட்ட ஓலத்தைத் தள்ளி வைத்து விட்டு வெளியே வந்த சுந்தரியம்மாவின் பெரிய மகள்,
""எங்கம்மா இருந்திருந்தா ஒங்களைப் பசியோடப் பார்த்துக்கிட்டிருப்பாளா? நா சோறு போடறேன். அம்மா போடறதா நெனச்சிக் கொத்தித் தின்னுங்க,'' என அழுதபடியே எங்கிருந்தோ சோற்றுப் பருக்கைகளெடுத்து வந்து முற்றத்தில் தூவினாள்.
காக்கைகள் சோற்றை ஏறெடுத்துப் பாராமல், மேலும் அதிகமாய்த் துக்கத்தைத் தங்கள் குரலில் ஏற்றி, கரைந்தன.
காக்காச்சி மட்டும் சட்டெனப் பறந்து சுந்தரியம்மாவைக் கிடத்தியிருந்த கட்டிலைச் சுற்றி விட்டு, அங்கிருந்து வெளியேறி, "காகாகா' வெனச் சத்தமிட்டபடியே வானில் பறந்தது. அதைத் தொடர்ந்து, மற்ற காக்கைகளும் வானில் பறந்து, சுந்தரியம்மா செத்துக்கிடக்கும் வீட்டைச் சுற்றிச் சுற்றி ஓலமிட்டுக் கொண்டிருப்பதை, அந்த ஊரே அழுத கண்களோடு பார்த்தது.
பின் குறிப்பு: காக்கைகள் இப்படியெல்லாம் செயல்படுமா என்ற கேள்வி இதைப் படிப்பவர்களுக்கு எழும். காக்கைகளிடம் பழகினால் அல்லது காக்கைகளைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனித்தால் காக்கைகளுக்கும், மனிதர்களுக்கும், குறிப்பாக மனித ஆவிகளுக்கும் அமானுஷ்யமான தொடர்பிருப்பது உண்மை என்று தெரியும்.
***

தாமரை செந்தூர்பாண்டி

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X