முதலாளி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2013
00:00

காட்டு ரோஜா படத்திற்கு முதலில், "புக்' செய்யப்பட்ட, அப்போது பிரபலமாக இருந்த ஒரு நடிகை போட்ட கண்டிஷன்களை டி.ஆர்.சுந்தரம் ஏற்றுக் கொள்ளாமல், அவரை திருப்பி அனுப்பி விட்டார். நீண்ட நாள் மாடர்ன் தியேட்டர்சுக்கு வராமலேயே இருந்த நடிகை பத்மினியை, காட்டுரோஜா படத்திற்கு ஒப்பந்தம் செய்தார் டி.ஆர்.சுந்தரம். இந்தப் படத்தில் எஸ்.எஸ்.ஆர். மனோகர், எம்.ஆர்.ராதா, முத்தையா, புஷ்ப மாலா போன்றோர் நடிக்க டி.ஆர்.சுந்தரம் படத்தை இயக்கினார். புதுவிதமான கதை அமைப்பைக் கொண்ட இப்படம் நன்றாக ஓடியது.
கோவை நாராயணன் கம்பெனி தயாரித்த, கணவனே கண்கண்ட தெய்வம் மற்றும் பாக்கியலட்சுமி படங்களில் வேலை செய்த டைரக்டர் கே.வி.சீனிவாஸ், மாடர்ன் தியேட்டர்சுக்காக ஒரு படம் டைரக்ட் செய்ய வந்தார். அந்தப் படம் தான், யாருக்குச் சொந்தம்?
இந்தப் படத்தில் கன்னட நடிகர் கல்யாண் குமார், தேவிகா, மனோகர், எஸ்.வி.சுப்பையா போன்றோர் நடித்தனர். இப்படம் 1963ல் எடுக்கப்பட்டது. சற்று பின்னோக்கி போய், சில முக்கியமான விஷயங்களை, இங்கே சொல்ல வேண்டி இருக்கிறது.
கடந்த, 1948-1950ம் ஆண்டில், சேலம் ஓரியண்டல் தியேட்டரில், கே.ஆர்.ராமசாமியின் நாடகக் கம்பெனி, பிரபல நாடகங்களை நடத்தி வந்தது. நல்ல வசூல் இருந்தாலொழிய, நாடகக் கம்பெனியை நடத்துவது என்பது அவ்வளவு லேசான காரியமல்ல. அந்த நிலை, கே.ஆர்.ராமசாமிக்கும் வந்தது. நாடகக் கம்பெனியை மூடி விட்டார். அதனால், அதில் நடித்துக் கொண்டிருந்த நடிகர்களில் சிலர், எங்கே போவது என்று தெரியாமல், மாடர்ன் தியேட்டர்சில் ஐக்கியமாயினர். அவர்களில் முக்கியமானோர், ஓ.ஏ.கே.தேவர், கே.கே.சவுந்தர், டி.எம்.சவுந்திரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எல்.ராகவன். இவர்கள் எல்லாரும், நிரந்தரமாக ரிகர்சல் ஹாலில் தங்கினர். ஏறக்குறைய, 30 நடிகர்களுக்கும் அங்கே தான் உணவு.
சனிக்கிழமை, புதன்கிழமை தவறாமல் அவர்கள் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். ஸ்டண்ட் பார்ட்டியை சேர்ந்தோர் கத்திச் சண்டை, சிலம்பாட்டம், மல்யுத்த பயிற்சிகளைப் பெற வேண்டும்; இது கட்டாயமான ஏற்பாடு.
அவர்கள், தனியாக தங்கள் குடும்பங்களில் இருந்தால் கூட இவ்வளவு சவுகர்யங்கள் நிச்சயம் கிடைக்காது. யாருக்கும் எந்தக் குறையும் வைத்ததில்லை டி.ஆர்.சுந்தரம். நாடகக் கம்பெனியில் இருந்து வந்த நடிகர்களுக்கு, காளி. என்.ரத்னம் காமெடி சீன்களை உருவாக்க யோசனை சொல்லி, நடிக்கவும் வைப்பார்.
இதைப் போல, இன்னொரு கோஷ்டியும் அங்கே தங்கி இருந்தது. அவர்கள், இசைக் குழுவை சேர்ந்த வாத்திய கோஷ்டியினர், அவர்களும் தங்கள் பங்குக்கு, புதிய, புதிய டியூன்களை போட்டு பார்ப்பர். மியூசிக் டைரக்டர்கள் ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் போன்றோர், இங்கே தங்கி இருந்ததால், புதிய டியூன்களுக்கு ஒத்திகை பார்ப்பது, சுலபமாக போய் விட்டது.
படப்பிடிப்புக்கான வசன ஒத்திகை, நடன ஒத்திகை ரிகர்சல் ஹாலில் தான் நடக்கும். தினமும் காலையில், ஒரு தடவை டி.ஆர்.சுந்தரம் இங்கே வந்து பார்த்துவிட்டு போவார் என்பதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஆரம்ப காலங்களில் படங்கள் எடுக்கப்பட்ட போது, வெளியூரிலிருந்து வரும் பிரபல நடிக, நடிகையருக்கு சேலத்தில் தங்குவதற்கு, நல்ல ஓட்டல் வசதி கிடையாது. அதனால் சீரங்கபாளையம், குமாரசாமிப்பட்டி, அஸ்தம்பட்டி போன்ற இடங்களில் நடிக, நடிகையர் வசதிகளுக்கு ஏற்றாற்போல் வீடு, பங்களாவை, மாடர்ன் தியேட்டர்ஸ் வாடகைக்கு எடுத்து வைத்துக் கொள்ளும். என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஜி.ஆர்., பி.யு.சின்னப்பா, டி.ஆர்.ராஜகுமாரி போன்றோர் இந்த பங்களாக்களில் தங்கி, படத்தில் நடித்திருக்கின்றனர்.
இவர்கள் வரும்போது, தங்கள் சமையல்காரர்களை கூட்டி வந்து விட்டால், அவர்களுக்கான வசதிகள் செய்து கொடுக்கப்படும். இதைக் கவனித்து கொள்ள வேண்டியது, ரிகர்சல் ஹால் மானேஜரின் வேலை! அந்த வேலையை, திறமையுடன் நிர்வகித்து வந்தவர்களுள் முக்கியமானவர் எம்.ஏ.வேணு. வேணுவின் வாழ்க்கையை புரட்டினாலே, அது ஒரு சினிமாக் கதை போல இருக்கும். மாடர்ன் தியேட்டர்சின் ஆரம்பகால படங்களில், துணை நடிகராக தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர் வேணு. அவரது சுறுசுறுப்பாலும், கடுமையான உழைப்பாலும் முதலாளியின் கவனத்தை வெகு சீக்கிரத்தில் கவர்ந்து விட்டார். அதுமட்டுமல்ல, டி.ஆர்.சுந்தரத்தின் கோபத்தையும், இடி தாங்கி போல இறங்கும் திட்டுக்களையும், பொறுமையுடன் வாங்கிக் கொள்வார் வேணு.
ரிகர்சல் ஹாலில், ஒரு இடத்தில் எல்லாக் காரியங்களையும் செய்து முடிக்கும் திறமை படைத்தவர் என்ற பெயரை, விரைவில் பெற்று விட்டார். ஆரம்ப காலத்தில் ஸ்டுடியோவின் மானேஜர்களாக இருந்த முனிசாமி முதலியார், சிங், நாராயணசாமி நாயுடு, பரசு போன்றோரிடம், நல்ல பெயர் எடுத்தவர் வேணு. "வேணுவைக் கேள்!' என்ற பேச்சு எல்லாப்புறமும் எதிரொலிக்கும்.
மனிதனுக்கு நல்ல நேரம் வந்தால், அது நிரந்தரமாக நிலைத்து நிற்பதில்லை. தொடர்ந்து வருவது கெட்ட நேரம் தான்... என்றாலும், இதை யாரும் தெரிந்து கொண்டதாக தெரியவில்லை. வேணு, மிகவும் செழிப்படைய தொடங்கினார். அவரிடம் உதவி கேட்டு வருவோரை, வெறும் கையுடன் அனுப்பியது கிடையாது. இந்த தாராள மனப்பான்மை, டி.ஆர்.சுந்தரத்தின் காதுக்கும் போனது. இதையெல்லாம், அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஸ்டுடியோவில் எடுத்த, இரண்டொரு படங்கள் வியாபார ரீதியாக சரியாக போகவில்லை. அஞ்சலிதேவி, டி.ஆர். மகாலிங்கம் நடித்த, மாயாவதி ரிலீஸ் ஆன முதல் நாளே, படத்தின் ரிப்போர்ட் சரியாக இல்லை என்பது, முதல், "மேட்னி ஷோ'வில் தெரிந்து விட்டது. டி.ஆர்.சுந்தரம், மாலையில் வழக்கம் போல் ரிகர்சல் ஹாலுக்கு வந்தார். அங்கே இருக்க வேண்டிய மானேஜர் இல்லை. விசாரித்த போது, வேணு, மாயாவதி படத்தை பார்க்க தன் குடும்பத்தாருடன் மாடர்ன் தியேட்டர்ஸ் காரில் போயிருப்பதாக கூறினர். வேணு வந்த பின், அவரை அருகில் அழைத்து, அவரது கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்தார். என்ன ஆத்திரமோ... முதலாளி கொடுத்த அறையின் வேகம், அடுத்து இருந்தவர்களும் பயந்து தங்கள் கன்னத்தில், கை வைத்துக் கொண்டதாக பிறகு கூறினர்.
அடிவாங்கிய வேணுவிற்கு ஆத்திரம் வந்தது. கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல், முதலாளியை கண்டபடி திட்டிவிட்டார். திட்டிய மறுகணமே, அவர் வெளியேறி விட்டார். வேணுவின் சகாப்தம் முடிந்தது என்று எல்லாரும் முடிவு கட்டி விட்டனர். மறுநாள் காலை, டி.ஆர்.சுந்தரம் ரிகர்சல் ஹாலுக்கு வந்தார். வேணு, வேலைக்கு வரவில்லை என்பதை அறிந்தார். என்ன நினைத்தாரோ, ஒரு ஆளை அனுப்பி, வேணுவை அழைத்து வரச் சொன்னார். இதையே எதிர்பார்த்து இருந்தது போல், வேணுவும் வந்து விட்டார்.
டி.ஆர்.சுந்தரம் எதுவும் பேசாமல், ஒரு கட்டு பணத்தை, அவரது கையில் கொடுத்து, "போய்... எங்காவது நல்லபடியாக பிழைத்துக் கொள்...' என்று சொல்லி விட்டார்.
அடித்த தானும், திட்டிய வேணுவும் இனி ஒன்றாக இணைந்து, செயல்பட முடியாது என்ற முடிவுக்கு முதலாளி வந்தது தான், இதற்கு காரணம். அத்துடன், இனி வேணு எங்காவது போய் பிழைத்துக் கொள்ளட்டும் என்ற நல்லெண்ணமும் ஒரு காரணமாக இருக்கலாம்.
வேணு, தனியாக கம்பெனி ஆரம்பித்து, கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவை தன் படங்களுக்காக உபயோகப்படுத்திக் கொண்டார். மாடர்ன் தியேட்டர்சில், இருபது படங்களுக்கு மேலாக உதவி டைரக்டராக பணியாற்றிய, கே.சோமுவை தன் முதல் படத்திற்கு டைரக்டர் ஆக்கினார். நாடகத்துறையில் அனுபவம் வாய்ந்த, ஏ.பி.நாகராஜன் கதை வசனகர்த்தாவாக உருவெடுத்தார். மாங்கல்யம், பெண்ணரசி மற்றும் நால்வர் என்று, பல படங்களை வேணுவும் இன்னும் சிலரும் கூட்டு சேர்ந்து, தயாரித்து வெளியிட்டனர். இவைகளுக்கு பின் தான், வேணு சற்று அகலக் காலை வைத்தார், சம்பூர்ண ராமாயணம் படத்தின் மூலமாக. இப்படத்திற்கு, சேலம் ரத்னா ஸ்டுடியோவில் இருந்து, ஒரே, "புளோரில்' பெரிய செட்டுகள் போடப்பட்டன. மிகவும் வேகமாக படம் வளரத் தொடங்கியது.
அப்போது, வேணு இரண்டு பெரிய கார்கள் மற்றும் சிறிய கார்கள், ஜீப் மற்றும் சில கார்களை தன் புரொடக்ஷன் வேலைகளுக்காக உபயோகப்படுத்திக் கொண்டு இருந்தார். சேலம் வந்து விட்ட வேணுவைப் பற்றி, அவ்வப்போது தகவல்கள் டி.ஆர்.சுந்தரம் காதுகளில் விழுந்த வண்ணம் இருந்தன. ஒரு நாள், வேணுவை அழைத்து வரச் சொல்லி, ஆள் அனுப்பினார். வேணுவும், ரிகர்சல் ஹாலுக்கு வந்தார்.
அப்போது நடந்த உரையாடல்கள்.
"எப்படி வந்தாய்?'
"காரில்'
"என்ன கார்?'
"செவர்லே!'
"எங்கே அது?'
"வெளியில் நிற்கிறது!'
இதற்குப் பின் டி.ஆர்.சுந்தரம், வேணுவுக்கு படம் எடுக்கும் தொழிலைப் பற்றியும், அதில் ஏற்படும் லாப, நஷ்டங்களையும், செலவுகளை எங்கே, எப்படி சுருக்குவது என்பது பற்றி, அரைமணி நேரம் பாடம் எடுத்தார்.
கண்களில் நீர் மல்க, அதைக் கேட்டுக் கொண்டிருந்த வேணு, போகும் போது டி.ஆர்.சுந்தரத்தின் கால்களில் விழுந்து, வணங்கி, விடை பெற்றுச் சென்றார்.
அதற்கு பின், சம்பூர்ண ராமாயணம் படத்தை வெளியிட்டார். அப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.
தொடரும்.

ரா. வேங்கடசாமி

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X