பதிமூணாம் எண் வீடு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2013
00:00

பண்டிகைக் கால வியாபாரம் முடிந்ததும், தன் பேன்சி ஸ்டோருக்கு, ஒரு நாள் விடுமுறை விட்ட அசோக், அன்று ஊருக்குப் போய், பெற்றோரைப் பார்த்து வர தீர்மானித்தான்.
"ஒரு முறை, உங்க ஊரை வந்து பார்க்கணும் அசோக்' என்று சொல்லிக் கொண்டிருந்த கடை ஊழியனும் தோழனுமான சங்கரை,"ஊருக்கு வர்றீயா?' என்று கேட்க, அவனும் சம்மதித்தான்.
சிட்டியிலிருந்து, நூறு கி.மீ., தொலைவில் உள்ளது ஊர். புது பைக்லேயே சங்கருடன் பயணமானான் அசோக். அசோக்குக்கு, பழகிப்போன வழி சங்கருக்கு புதுமையாக இருந்தது. அவன், வழியெங்கும் வேடிக்கை பார்த்து, அனுபவித்துக் கொண்டு வந்தான்.
அசோக், சங்கர் இருவரும் அறிமுகமானது, ஒரு டீக்கடையில். அப்போது, சங்கர் வேலை தேடிக் கொண்டிருந்தான். " என் கடைக்கு சேல்ஸ் மேனா வந்துடறியா...' என்று அசோக் கேட்க, உடனே தலையசைத்தான்.
"என்ன கடை சார்?'
"பிருந்தா பேன்சி ஸ்டோர். என் அம்மா பேர் பிருந்தா...'
"எங்க இருக்கு சார்?'
தன் தலையை சுட்டிகாட்டிய அசோக்,"இங்கு இருக்கு...' என்றான்.
ஏதோ தமாஷ் செய்கிறான் என்று நினைத்தான் சங்கர். ஆனால், நிஜம். அந்த நேரம், அந்தக்கடை சிந்தனை அளவில் தான் இருந்தது.
"இல்லாத கடையில, எனக்கு என்ன வேலை கொடுப்பீங்க...' என்று கேலியாக கேட்டான்.
"கடை இல்லை சங்கர்... சூப்பர் கடை. பக்கத்தில் சூப்பர் மார்க்கெட்டும் ஆரம்பிக்கிறேன். இன்னையிலிருந்து, உனக்கு அப்பாயின்மென்ட். இந்தா அட்வான்ஸ்...' என்று ஐநூறு ரூபாய் கொடுத்தான்.
"பிராந்து...' என்று நினைத்தான் சங்கர்.
சில மாதங்களில்...
மார்க்கெட் வீதியில், ஒரு இடம் பிடித்து கடை துவங்கினான் அசோக். மூணு வருட உழைப்பில், வெற்றிகரமான வியாபாரம்.
லாபத்தில் கொஞ்சம் ஒதுக்கி வைத்து, பக்கத்தில் துணிக்கடையும் போட்டு விட்டான். வீட்டு மனை ஒன்று வாங்கிப் போட்டிருக்கிறான். அவனிடம், இப்போது பத்துபேர் வேலை பார்க்கின்றனர். அடுத்து, அதே வளாகத்தில் டிப்பார்ட்மென்ட் ஸ்டோர் துவங்கும் முஸ்தீபுகளில் இருக்கிறான்.
ஆற்றலும், உழைப்பும், இன்முகமும் கொண்ட இந்த இளைஞன், நிறைய சாதிப்பான் என்ற நம்பிக்கை விழுந்ததும், சங்கர் கெட்டியாக பிடித்துக் கொண்டான்.
"என்னையும் அப்படியே கொஞ்சம் தேற்றி விட்ரு அசோக்...' என்பவனை, "உன்னை நம்பு சங்கர். முன்னேற்றத்துக்கு அதுதான் அடிப்படை...' என்பான் சங்கர்.
மூன்று மணி நேர பயணத்தில் ஊர் வந்தது.
சினிமாவில் பார்த்தது போல் பசுமையான ஊர். ஒரு பக்கம் குன்று, இன்னொரு பக்கம் நதி (நீர் இல்லை). இரண்டு பக்கமும் தோப்புகள். நேர்த்தியான நாலு வீதிகள். கோவில் இருந்த தெருவில் நுழைந்த பைக், ஒரு ஓட்டு வீட்டின் முன் நின்றது.
வீட்டுக்குள் போனதும், அப்பா, அம்மா, அண்ணன் குடும்பம் என்று அனைவரையும் அறிமுகப்படுத்தினான். உபசரிப்பு தடபுடலாக இருந்தது.
அசோக்கைப் பார்க்க, அடுத்தடுத்து ஆட்கள் வந்து கொண்டிருந்ததால், சாப்பாட்டுக்குப் பின், ஊரைச் சுற்றிப் பார்க்க, அவன் வருவான் என்று தோன்றவில்லை. தானே கிளம்புவது என்று தீர்மானித்து,""அசோக், நீ உன் வேலையை பார். நான், அப்படியே ஊரைச் சுற்றிப் பார்த்துவிட்டு வருகிறேன்.''
""தனியாகவா... இரு நானும் வர்ரேன்.''
""வேணாம். உன்னைப் பார்க்க ஆட்கள் வந்துகிட்டேயிருக்காங்க... நீ அவங்களை கவனி. நான் போயிட்டு வர்ரேன்.''
""இரு. துணைக்கு யாரையாவது...''
""ஆமாம்... இது பெரிய சிட்டி... நான் சின்னஞ்சிறுவன். தொலைந்து போறதுக்கு...''
""சரி... எங்காவது குளம், குட்டையில் ஜில்லுன்னு தண்ணியைப் பார்த்ததும், குளிக்க இறங்கிடாதே. உள்ளூர் பேய்க்கும், வெளியூர் தண்ணிக்கும் பயப்படணும்... தெரியுமா?''
""நான், எதிலும் இறங்க மாட்டேன், போதுமா!''
""ம்...இன்னொரு எச்சரிக்கை. நீ, இந்த ஊரில் எந்த வீட்டுக்கும் போ; யாருடனும் பேசு. ஆனால், பதிமூணாம் எண் வீட்டுப் பக்கம் மட்டும் போயிடாதே. அந்த வீட்டு பெரியவர்கிட்ட மட்டும் பேசிடாதே'' என்றான் அசோக்.
"சரி...' என்று கிளம்பினான். தனியாக கிளம்பினாலும், உள்ளூர்வாசிகள் தாமாகவே துணைக்கு சேர்ந்து கொண்டனர்.
அவர்களோடு, ஊரைச் சுற்றிவிட்டு திரும்பும் போது, அந்த பதிமூணாம் எண் வீடு நினைவுக்கு வந்தது.
அங்கு ஏன் போக வேண்டாம் என்றான். அது, திகில் வீடோ! அங்கே, ஒரு பெரியவர் இருப்பார் என்றானே... யாராயிருக்கும்... உள்ளூர் பேய்க்கு பயந்தாகணும்ன்னு வேறு சொன்னானே, என்று குடைந்தது. சஸ்பென்ஸ் தாங்கவில்லை. உடன் வந்தவர்களிடம் விசாரித்தான்.
""அது என்ன பதிமூணாம் எண் வீடு?''
""அதா... நம்ம அசோக்கோட பெரியப்பா வீடு தான்''
""அந்த வீட்டில் என்ன மர்மம்.''
""மர்மமா?''
""அந்தப் பக்கம் என்னை போக வேணாம்ன்னு சொன்னானே அசோக்,'' என்று கேட்டுக் கொண்டு நடக்கும் போதே, அந்த வீடு வந்துவிட்டது. ஒரு பெரியவர் திண்ணையில் உட்கார்ந்திருந்தார். இவனைக் கண்டதும், ""தம்பி இங்க வா,'' என்று கூப்பிட்டார்.
""போய் பேசுங்க,'' என்று சொல்லிவிட்டு, உடன் வந்தோர் நழுவினர். சங்கருக்கு உதறல் எடுத்தது.
""அட...உன்னைத்தான். என்னமோ பேயைக் கண்டது போல நடுங்கற. சும்மா வா... நான் மனுஷந்தான். பாரு... காலு, கையெல்லாம் முழுசு முழுசா இருக்கு; தரையில பாதம் வச்சிருக்கேன்,'' என்று காட்டினார். போய், எதிரில் அமர்ந்தான்.
""அசோக்கோடு, இன்னொரு ஆளும் வந்திருக்காரு. புதுசா தெரியுறாருன்னு பேசிக்கிட்டாங்க. நீதானா அது?'' என்றவர், மேலும் கீழும் பார்த்து, ""எதுனா சாப்புடுறியா...'' என்று கேட்டார்.
""ஆச்சு,'' என்றான்.
அவர், வெற்றிலையை எடுத்து சாவகாசமாக நரம்பெடுத்தபடி, பேச ஆரம்பித்தார்.
""அசோக்குக்கு நீங்க என்ன வேணும்?''
""நண்பன். அதே நேரம், அவரது பேன்சி ஸ்டோரையும், கார்மென்ட்ஸ் கடையையும் சூப்பர்வைஸ் செய்துகிட்டுயிருக்கேன்.''
""என்ன தொகை புரளுது?''
""மாசத்துக்கு, அஞ்சாறு லட்சம் டர்ன் ஓவர்.''
""வேறென்னெல்லாம் செய்யப் போறானாம்...''
""நிறைய ப்ளான் வச்சிருக்கார். அடுத்ததா, ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோர் ஆரம்பிக்க போறார்.''
""எல்லாம் செய்து, கடைசியில் ஊத்தி மூடி ஊரெல்லாம் கடனாக்கி, அவன் மானத்தையும், அவன் அப்பா அம்மா மானத்தையும் வாங்கி, நடுத்தெருவுல நிறுத்தப் போறானாக்கும்.''
திடுக்கிட்டு,"" ஐயா, என்ன இப்படி சொல்றீங்க...'' என்றான் சங்கர்.
""பின்ன என்ன தம்பி. பயிர் வைக்கிறவன் பயிர் வைக்கணும். சட்டி பானை செய்யறவன், அந்த வேலையைப் பார்க்கணும். பானை வனையுரவனெல்லாம், பயிர் செய்ய போனால் என்னாகும். அந்த கதை தெரியுமா <உங்களுக்கு? சரி அதை விடுங்க. நாங்க எல்லாம் பரம்பரையா விவசாயம் பார்க்குறவங்க. அதைத் தவிர வேற ஒண்ணும் தெரியாது. இந்த தலைமுறையில தான், நாலு எழுத்து படிச்சு ஏதோ உத்தியோகத்துக்கு போறாங்க. நாலுகாசு சம்பாதிச்சு, குடியும் குடித்தனமுமா இருக்காங்க. பிசினசு, கிசுனசுன்னு யாரும் போனதில்லை, போனவனும் உருப்பட்டதுமில்ல. வியாபாரம் எங்க பரம்பரைக்கே ஆகாதுன்னேன்.''
சுண்ணாம்புத் தடவிய வெற்றிலையை மடித்து, வாய்க்குள் இருந்த சீவலுக்கு துணையாக போட்டு அதை, வாயோரம் அதக்கிக் கொண்டே,""நான் தான் முதல்ல அடிபட்டது. விவசாயம் போதாதுன்னு, நாலு ஏக்கர்ல செங்கல் சூளை போட்டேன். மூட்டம் போடும்போதெல்லாம், மழையா கொட்டி, சூளையைக் கரைச்சி எடுத்துக்கிட்டு போயிரும். இல்லேன்னா அரைகுறையா வெந்து, செங்கல் வீணாப் போகும்.
""அதுதான் சரி வரலை. கரி வியாபாரம் செய்யலாம்ன்னு, இருந்த தோப்பை வெட்டி விறகாக்கி கரியாக்கினேன். எவ்வளவு கவனமாக இருந்தும், கரி சாம்பலாகி கையைக் கடிச்சுது. என்ன அர்த்தம்... வியாபாரம் நமக்கு வராதுன்னு முடிவாச்சு. இரு என்ன கேட்க வர்றேன்னு புரியுது. உங்களுக்கு ஆக வரலைன்னா மத்தவங்களுக்கும் அப்படியே ஆகணுமான்னு கேட்கப்போற இல்லையா... நான் படிக்காதவன், வெள்ளந்தி, விவரம் கெட்டவன். எனக்கு வியாபாரம் வரலை. சரி... என் தம்பி, அசோக்கோட அப்பன் கொஞ்சம் படிச்சவந்தான். விவரம் தெரிஞ்சவந்தான். ஏலச்சீட்டு ஆரம்பிச்சான். ஆரம்பித்திலேயே சொன்னேன். இது சரிவராது; இருக்கிறத வச்சு நிம்மதியா வாழறதைப் பார்ன்னு. அதெல்லாம் சரியா செய்திடுவேன்னு ஆரம்பிச்சான். முதல் தடவை அஞ்சாயிரம் நட்டம் . சீட்டு எடுத்த ஒருத்தன் திருப்பிக் கட்டாம ஓடிட்டான். முழிச்சுக்க வேணாமா... விட்டதைப் பிடிக்கறேன்னு, அடுத்தடுத்து சீட்டு புடிச்சுகிட்டே போனான். லட்ச ரூபாய்க்கு நஷ்டப்பட்டு பிறகுதான் புத்தி வந்தது. பாதி நிலத்தை வித்து, கடனை அடைச்சான்.
""தனக்கு வந்தது புள்ளைக்கு வரக்கூடாதுன்னு, அசோக்கை படிப்புல போட்டான். படிச்சதும், ஒரு வேலைக்கு போடான்னோம். பய புள்ளைக்கு புத்தி போகுது பாரு..." உத்தியோகம் என்ற பேரால, வருஷக் கணக்கா ஒரே இடத்தில உட்கார்ந்து, சீட்டு தேய்க்க என்னால முடியாது. நான் பிசினசு செய்யப் போறேன்னு...' மல்லு கட்டினான்.
""கூப்பிட்டு பக்கத்துல உட்கார வச்சு, கிளி பிள்ளைக்கு சொல்றது போல சொன்னேன். "அசோக்கு... உன் படிப்புக்கு நல்ல உத்தியோகம் கிடைக்கும். அதுல உட்கார்ந்துடு. வருஷம் போகப் போக புரொமோஷன் எல்லாம் வரும். பரிட்சையெல்லாம் வைப்பாங்களாம். அதை எழுதினா புரொமோஷன் சீக்கிரம் கிடைக்குமாம். நீ அதிகாரியாகி நல்ல நிலைக்கு வரலாம்டா. நாங்க கெட்டது போதாதா; நீ ஏண்டா கெடப்போறேன்னேன்...' ஒரு பெரியப்பா என்ற முறையில், புத்திமதி சொல்றது தப்பா சரியா சொல்லு தம்பி,'' என்று தாம்பூல எச்சிலை, "ப்ளிச்' என்று தெருவில் துப்பினார்.
அவர் முகத்தைப் பார்த்தபடி அமைதியாக உட்கார்ந்திருந்தான் சங்கர்.
""அது அவனுக்கு பிடிக்கலை. சொந்த அனுபவத்துல பாடம் கத்துக்கறவன் அதிபுத்திசாலி இல்லையா தம்பி. அப்பாவும், பெரியப்பாவும் வியாபாரத்துல பட்ட அடியைப் பார்த்தும், பிடிவாதமா நானும் அதையே செய்வேன்னு செய்தால் என்ன செய்றது? அவன் படிச்சதுக்கு என்ன அர்த்தம்? படிச்ச முட்டாள்ன்னு சொல்வாங்களே... அப்படித்தான் அவன். சொல்லச் சொல்லக் கேட்காம அப்பன்கிட்ட பணத்தை பிடுங்கிட்டு போய், டவுன்ல எலக்ட்ரானிக்ஸ் கடை போட்டான். இவனுக்கு, அதுல ஒரு அனுபவமும் இல்லை. யாரோ ஒரு இன்ஜினியர் கிடைச்சிருக்கார்... அவர் பார்த்துக்குவார், நான் நிர்வாகத்தை பார்த்துக்குவேன்; எல்லாம் சரியா வரும்ன்னு மார்தட்டினான். நான் அடிச்சு சொன்னேன்... "நயா பைசா வீடு திரும்பாது'ன்னு, சரியா போச்சு. தலையில துண்டை போட்டுக்கிட்டு வந்தான், ஏதோ என்னால தான் நட்டம் வந்த மாதிரி எம்மேல கோபம். வந்தால் போனால் என்னை பார்க்கறதுமில்லை, பேசறதுமில்லை... யாருக்கு நட்டம்.''
""ஐயா... நீங்க சொல்றதெல்லாம் சரிதான். உங்க அனுபவத்தை வச்சு அப்படி பேசறீங்க . நீங்க தோத்துட்டிங்க என்பதற்காக யாருமே வெற்றி பெற முடியாதுன்னு நினைக்கறது எப்படி சரியாகும். அசோக் ... டவுன்ல ஆரம்பிச்சது வேணும்ன்னா தோற்றிருக்கலாம்... சிட்டியில ஜமாய்க்கிறார். நீங்க, ஒரு முறை வந்து பாருங்க.''
""நான் ஏன் அங்க வரணும். இன்னொரு அடி விழுந்தா... நாய் துரத்தினது போல பதறியடிச்சுகிட்டு ஓடியாந்து விழுவான்ல... அப்ப பார்த்துக்கறேன்.'' என்றார்.
அசோக், "பதிமூணாம் எண் வீட்டுப் பக்கம் போகாதே... அங்கு உள்ளவரிடம் பேசாதே...' என்று ஏன் சொன்னான், என்பது சங்கருக்கு புரிந்தது. இன்னும் கொஞ்சம் நேரம் இங்கு இருந்தால், தன்னிடம் இருக்கும் நம்பிக்கையைக் கூட மனிதர் ஸ்ட்ரா போட்டு, உறிஞ்சி விடுவார் என்று தோன்ற, ""சரிங்க ஐயா... நான் கிளம்புறேன் வயித்தை என்னமோ செய்து,'' என்று எழுந்தான்.
""தம்பி உன்னைப் பார்த்தால், அப்பாவியாய் தெரியுது. நீயாவது, அவனை விட்டு விலகி கொஞ்சம் புத்தியோடு பிழைக்கப் பாரு,'' என்று சொல்லியனுப்பினார். வியர்க்க விறுவிறுக்க வீடு திரும்பினான்.
""நீ சொல்லச் சொல்லக் கேட்காம, அந்த வீட்டுப் பக்கம் போயிட்டேன் அசோக்,'' என்றான்.
புன்னகைத்தான் அசோக்.
""பெரியப்பா நல்லவர்தான். அவர் அனுபவம் அப்படி பேச வைக்குது. அக்கறையால்தான் அப்படி பேசறார். ஆனால், பேசற விதம்தான் நம்மை பாதிக்குது. அவரை நிந்தித்து பயனில்லை. நாமதான் ஒதுங்கியிருக்கணும். எனக்கு நம்பிக்கை இருக்கு. அவரும் ஒரு நாள் உணர்வார்'' என்றான் அசோக்.
பயம் விலகியவனாக,"ம்' கொட்டினான் சங்கர்.
***

படுதலம் சுகுமாரன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balagurunathan Sattanathan - Chennai,இந்தியா
10-ஜூன்-201321:23:00 IST Report Abuse
Balagurunathan Sattanathan மொக்கை கதை.
Rate this:
Cancel
sandeep - coimbatore,இந்தியா
10-ஜூன்-201320:33:21 IST Report Abuse
sandeep stories published in varamalar 9.6.2013 were excellent
Rate this:
Cancel
gvvrajan - mumbai,இந்தியா
09-ஜூன்-201320:35:50 IST Report Abuse
gvvrajan நல்ல கதை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X