கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2013
00:00

கேள்வி: கூகுள் டாக் பைல் ஒன்றை வேர்ட் டாகுமெண்ட் பைலாக மாற்ற விரும்புகிறேன். பல வேளைகளில் முயற்சி செய்த போதிலும், தொடர்ந்து எர்ரர் மெசேஜ் கிடைக்கிறது. சரியான வழி என்ன?
என். ஆகாஷ்குமார், தாம்பரம்.
பதில்:
இது ஓர் ஆர்வமுட்டும் கேள்வி. பலருக்குக் கீழே தந்துள்ள பதில் பயன்படும். இதற்கு இரண்டு வழிகள் உள்ளன. முதலில் கூகுள் டாகுமெண்ட் செல்லுங்கள். அதில் நீங்கள் காப்பி செய்து, வேர்ட் பைலாக மாற்ற விரும்பும் டெக்ஸ்ட் மற்றும் படங்களைக் காப்பி செய்திடவும். முழுவதும் வேண்டும் எனில், Ctrl + A கீகளை அழுத்தி, தேர்வு செய்து, பின்னர், Ctrl + C கீகளை அழுத்தவும். தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த டெக்ஸ்ட்டை, வேர்ட் பைலாக மாற்ற, வேர்ட் புரோகிராமினைத் திறந்து, புதிய பைல் ஒன்றை உருவாக்கி, அதில் அப்படியே Ctrl + V கீகளை அழுத்துவதன் மூலம் பேஸ்ட் செய்திடவும். நீங்கள் கூகுள் டாக்ஸ் கொடுக்கும் Edit>Copy பயன்படுத்தினால், எர்ரர் மெசேஜ் தான் கிடைக்கும்.
அடுத்து கூகுள் டாக்ஸ் பயன்படுத்தி டாகுமெண்ட் ஒன்றை உருவாக்கிப் பின்னர், அதனை வேர்ட் பைலாக எப்படி மாற்றுவது எனப் பார்க்கலாம். கூகுள் டாக்ஸ் தரும் File மெனுவினைத் திறக்கவும். அடுத்து, Download as என்பதில் கிளிக் செய்திடவும். இதனைத் தொடர்ந்து Word என்பதில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து டயலாக் பாக்ஸ் திறக்கப்படும். இதில் Open with என்ற இடத்தில் கிளிக் செய்து, மைக்ரோசாப்ட் வேர்ட் புரோகிராமுடன் திறந்திடச் சரியான தேர்வை மேற்கொள்ளவும். அடுத்து சேவ் பைல் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால், குறிப்பிட்ட டாகுமெண்ட் வேர்ட் பைலாக சேவ் செய்யப்படும். ஓகே பட்டன் அழுத்தி வெளியேறவும். இனி இந்த வகையில் சேவ் செய்த பைலை வேர்ட் டாகுமெண்ட்டாகத் திறந்து பயன்படுத்தலாம்.
இந்த இரண்டாவது வழி, வேர்டில் தரப்பட்டுள்ள சேவ் அஸ் போலவே இருப்பது போலத் தெரியும். இதில் உள்ள ஒரே வித்தியாசம், கூகுள் டாக்ஸ் சேவ் அஸ் என இந்த செயல்பாட்டிற்குப் பெயர் தராமல், டவுண்லோட் வித் என அழைக்கிறது.

கேள்வி: அவுட்லுக் டாட் காம் மெயில் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கி செட் செய்வது எப்படி? விளக்கமாகக் கூறவும்.
-என்.விமலா ஜெபராஜ், புதுச்சேரி.
பதில்:
பெரிய விளக்க மெல்லாம் தேவை இல்லை. இது மிக எளிது. முதலில் அவுட்லுக் டாட் காம் தளம் செல்லவும். அங்கு லாக் இன் ஸ்கிரீன் ஒன்றைப் பார்க்கலாம். அதில் Sign up now என்ற ஒரு ஆப்ஷன் கிடைக்கும். இதில் கிளிக் செய்திடவும். உங்களுக்கு ஏற்கனவே Hotmail, SkyDrive or Xbox LIVE அக்கவுண்ட் இருந்தால், அதனைப் பயன்படுத்தி நுழையலாம். பின்னர் அவுட்லுக் டாட் காம் இமெயில் முகவரியைப் பெறலாம். அல்லது உங்களைப் பற்றிய அடிப்படைத் தகவல்களைத் தந்து, பாஸ்வேர்ட் ஒன்றை உருவாக்கி, அவர்கள் கூறும் நிபந்தனைகளுக்கு உட்படுவதாக ஏற்றுக் கொண்டால், உங்களுக்கு அவுட்லுக் டாட் காம் அஞ்சல் கணக்கு ஒன்று உருவாகிவிடும்.

கேள்வி: பெர்சனல் கம்ப்யூட்டருடன் ஐ-பேட் சாதனத்தையும் பயன்படுத்தத் தொடங்கி உள்ளேன். என்னுடைய ட்ராப் பாக்ஸ் அக்கவுண்ட்டிற்கு, கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் அதே பாஸ்வேர்டைப் பயன்படுத்த முடியுமா
-கா. சிந்தாமணி, மதுரை.
பதில்:
முதலில் ட்ராப்பாக்ஸ் குறித்து அறியாதவர்களுக்கு இதனைக் கூறிக் கொள்கிறேன். ட்ராப் பாக்ஸ் என்பது க்ளவுட் கம்ப்யூட்டிங் முறையில் இயங்கும் ஒரு சேவை ஆகும். இதில் அக்கவுண்ட் தொடங்கி,இதில் நாம் உருவாக்கும் பைல்களை சேவ் செய்து வைக்கலாம். மற்றவர்கள் பயன்படுத்த அனுமதி அளிக்கலாம். வீடியோ, மியூசிக், படங்கள், டாகுமெண்ட்கள் என எந்த பைலையும் சேவ் செய்திடலாம். நீங்கள் விரும்பினால், ட்ராப் பாக்ஸில், ஐபேடில் பயன்படுத்த எனப் புதிய அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கலாம்.
ட்ராப் பாக்ஸ் சேவையின் சிறந்த வசதி என்னவெனில், அதன் அக்கவுண்ட்களும், பாஸ்வேர்ட்களும், சேவ் செய்யப்பட்ட பைல்களும், அனைத்து வகையான சாதனங்களிலும் ஒருங்கமைக்கப்படுகின்றன.
ஐ.ஓ.எஸ். ட்ராப் பாக்ஸ் அப்ளிகேஷன் என ஒரு புரோகிராம் ஒன்று ஆப்பிள் ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கிறது. மேலும் ஐ பேட் சாதனத்திற்கு இதனைப் பெற https://www.dropbox.com/ipad என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும். ஐபேடிற்கு என தனியே அக்கவுண்ட் திறப்பதாக இருந்தால், https://www. dropbox.com/referrals/NTg1NDI0NzI2OQ?src=global9 என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.

கேள்வி: என் மனைவிக்கு விண்டோஸ் 8 கொண்ட லேப்டாப் வாங்கிக் கொடுத்த போது, என்னுடைய மைக்ரோசாப்ட் லைவ் ஐ.டி.யைப் பயன்படுத்தினேன். இப்போது அதனைத் தன்னுடைய லைவ் ஐ.டிக்கு மாற்றும்படி என் மனைவி கேட்டுக் கொள்கிறார். அனைத்து புரோகிராம்களையும், அப்ளிகேஷன்களையும் ரீ இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும் என்பதால், நான் இதனை விரும்பவில்லை. இரண்டு பேரையும் திருப்தி படுத்தும் வகையில் ஏதேனும் வழி காட்டவும்.
-சி.சபரீஷ், சென்னை.
பதில்:
முதன்மை அக்கவுண்ட்டில் (primary account) பயன்படுத்திய லைவ் ஐ.டியினை மாற்ற, முதலில் அதனை லோக்கல் யூசர் அக்கவுண்ட்டாக மாற்ற வேண்டும். இதற்கு, விண்டோஸ் 8 ஸ்டார்ட் ஸ்கிரீன் செல்லவும். அங்கு “user” என டைப் செய்து எண்டர் தட்டவும். அடுத்து Settings என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், இடது பக்க திரையில் இருந்து, தேடல் முடிவுகளிலிருந்து Users என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு லோக்கல் அக்கவுண்ட்டிற்குச் செல்ல ஓர் ஆப்ஷன் கிடைக்கும். இதனைத் தேர்ந்தெடுத்து, இங்கு உங்கள் மைக்ரோசாப்ட் லைவ் ஐ.டி.யினைத் தரவும். இந்த லோக்கல் அக்கவுண்ட்டிற்கு ஒரு யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கேட்கப்படும். இவற்றைத் தரவும். இதன் பின்னர், வெளியேறி, நீங்கள் இந்த பெயருடன் யூசர் அக்கவுண்ட்டினைச் செயல்படுத்தலாம். இப்போது, மீண்டும் அதே வழியில் சென்று, Switching Account Types வரை செல்லவும்.
இப்போது, நீங்கள் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் ஒன்றிற்குச் செல்ல ஆப்ஷன் கிடைக்கும். இதனைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் இயக்க விரும்பும் மைக்ரோசாப்ட் லைவ் ஐ.டி.யினைத் தரவும். இனி, திரையில் காட்டப்படும் செயல்பாடுகளை மேற்கொண்டு, இறுதியில் கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்து, புதிய மைக்ரோசாப்ட் லைவ் ஐ.டி.யுடன் தொடங்கலாம். இப்போது சிஸ்டம் முன்பு இருந்த படியே இருக்கும். ஆனால், நீங்கள் புதியதாகக் கொடுத்த உங்கள் மனைவியின் மைக்ரோசாப்ட் லைவ் ஐ.டி முதன்மை அக்கவுண்ட் ஆக இருக்கும்.

கேள்வி: விஸ்டாவில் போட்டோக்களைக் கையாள போட்டோ காலரி தரப்பட்டது. விண்டோஸ் 7 சிஸ்டத்தில் தேடிப் பெற இயலவில்லை. எப்படி இதனைப் பெறலாம்?
-என்.திலீபன், கோவை.
பதில்:
நீங்கள் குறிப்பிடும் Windows Photo Gallery விண்டோஸ் 7ல் இணைத்துத் தரப்படவில்லை. விஸ்டா தந்த கசப்பான அனுபவத்தினால், மைக்ரோசாப்ட், விண்டோஸ் 7ல் பல துணை புரோகிராம்களை நீக்கிவிட்டது.
விஸ்டாவினால் நாம் சந்தித்த ஒரு பெரும் பிரச்னை, அதன் இயக்க வேகம் ஆகும். ஏகப்பட்ட துணை புரோகிராம்கள் உள்ளிணைந்து வடிவமைக்கப்பட்டதால்,அதனை உருவாக்கிய கோடிங் வரிகள் அதிகமாகி, விஸ்டா பெரிய அளவில் அமைந்தது. அதனால் அதன் இயக்க வேகம் தடைபட்டது. அதே போல விண்டோஸ் 7 சிஸ்டம் அநாவசியத்திற்குப் பெரிதாக அமைந்து விடாமல் இருக்க, மைக்ரோசாப்ட் சில புரோகிராம்களை விட்டுவிட்டது. அப்படி ஒரு புரோகிராம் தான் லைவ் போட்டோ காலரி. இது ஒரு போட்டோ மற்றும் வீடியோ பைல் மேனேஜர் மற்றும் போட்டோ எடிட்டர். இதனை http://download. live.com/photogallery என்ற முகவரியில் இருந்து டவுண்லோட் செய்து பதிந்து இயக்கலாம்.

கேள்வி: எலக்ட்ரானிக் வடிவத்தில் நூல்களைப் படிப்பது இப்போது பெருகி வருகிறது. இதனைத் தொடங்கிய போது அமேஸான் கிண்டில் (Amazon Kindle) என ஏன் அந்த சாதனத்தை அழைத்தனர்? பெயருக்கும் சாதனத்திற்கும் சம்பந்தமே இல்லையே? இதனை வடிவமைத்தவர் பெயரா அது? தோழிகளுக்குள் இது ஒரு பெரிய கேள்வியாக உள்ளது.
-கே. மாலதி, திருப்பூர்.
பதில்:
நல்ல கேள்வி. சில தகவல்களைக் கூடுதலாகவும் தருகிறேன். இது போன்ற தகவல்களை நீங்கள் கூகுள் தேடலிலும் பெறலாம்.
இ-புக் என அழைக்கப்படும் எலக்ட்ரானிக் நூல்கள் படிக்கும் வழக்கத்தில் ஒரு மாபெரும் புரட்சியைக் கொண்டுவந்த சாதனம் இது. இதனை வடிவமைத்த குழுவைச் சேர்ந்த ஒரு தம்பதியரை, மைக்கேல் க்ரோனன் மற்றும் கரேன் ஹிப்மா, அமேஸான் நிறுவனம் இந்த சாதனத்திற்குப் பெயர் ஒன்றைத் தருமாறு கேட்டுக் கொண்டனர். இந்த சாதனம் எதற்கெல்லாம், எந்த வழிகளில் எல்லாம் பயன்படும் என்று இவர்கள் ஆழ்ந்து சிந்தித்தனர். எந்த தொழில் நுட்பத்தையும் நினைவு படுத்தும் வகையில் பெயர் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். அதே நேரத்தில் சிந்தனையைத் தூண்டும் வகையிலும், பல நல்ல பொருளைத் தருவதாகவும் இருக்க வேண்டும் என எண்ணினார்கள். எனவே Kindle என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்தனர். இதற்கு எரிவதைத் தூண்டுவது, ஒளிறச் செய்வது, நல்லவற்றிற்குத் தூண்டுவது, கொழுந்துவிட்டு எரியச் செய்வது என்று பல பொருள் உண்டு. தொன்மை வாய்ந்த நார்ஸ் மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு இந்த சொல் வந்து இப்பொருளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த சொல்லின் மூலப் பொருள் ""மெழுகுவத்தி'' என்பதாகும். இந்த சொல்லைத் தந்த ஹிப்மா கூறுகையில், ""நூல்களில் நாம் பெறும் தகவல்களும் செய்திகளும் தீயைப் போன்றவை; பக்கத்திலிருப்பவர்களிடமிருந்து இதனைப் பெறுகிறோம். மேலும் அதனைத் தூண்டுகிறோம். பின் அவற்றை மற்றவர்களுக்குத் தருகிறோம். இப்படியே அது அனைவரின் சொத்தாக மாறுகிறது'' என்றார். உண்மைதான், பொருத்தமான பெயர்தான்.

Advertisement

 

மேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X