மவுஸ் வடிவமைத்த எங்கல்பர்ட் மரணம்! | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements
மவுஸ் வடிவமைத்த எங்கல்பர்ட் மரணம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2013
00:00

இன்றைய கம்ப்யூட்டர்களின் தொடக்க காலத்தில், மவுஸ் உட்பட பல்வேறு சாதனங்களை வடிவமைக்கக் காரண கர்த்தாவாக இருந்த எங்கல்பர்ட் (Doug Engelbart), சென்ற ஜூலை 2ல், தன் 88 ஆவது வயதில் மரணமடைந்தார். 1950 முதல் 1960 வரை, "கம்ப்யூட்டர் உலகின் தீர்க்கதரிசி" எனப் பாராட்டும் புகழும் பெற்றவர் எங்கல்பர்ட். மனிதனின் நுண்ணறிவை வளப்படுத்துவதில், கம்ப்யூட்டர் முக்கிய பங்கினை எடுத்துக் கொள்ளும் எனவும், உலகப் பிரச்னைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு, அவற்றிற்குத் தீர்வு காண கம்ப்யூட்டர் பயன்படும் எனவும் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தவர் அவர்.
இன்றைய கம்ப்யூட்டர் உலகில் அதிகம் பேசப்படும் ஹைப்பர் டெக்ஸ்ட், ஸ்கிரீன் பகிர்மாணம், பல விண்டோ செயல்பாடு, வீடியோ டெலி கான்பரன்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் துணை சாதனமாக மவுஸ் -- ஆகியவற்றைக் கொண்டு வர முழு முதற் காரணமாக இருந்தது எங்கல்பர்ட் மேற்கொண்ட ஆய்வுகளே.
அவர் கண்டுபிடித்து வடிவமைத்த மவுஸ், கம்ப்யூட்டரின் பயன்பாட்டினையே மாற்றி அமைத்தது. 1960 ஆம் ஆண்டு மவுஸ் குறித்து ஆய்வு மேற்கொள்ளத் தொடங்கிய எங்கல்பர்ட், 1963ல் அதனை வடிவமைத்தார். 1968ல், சான் பிரான்சிஸ்கோவில், முதல் முதலாக, பொதுமக்களுக்கு மவுஸினை இயக்கிக் காட்டினார். அப்போதே, வீடியோ டெலி கான்பரன்சிங் என்பதை நடத்திக் காட்டினார். அதுவே, இன்டர்நெட்டின் அடிப்படையாக அமைந்தது.
1970ல் மவுஸ் சாதனத்திற்கான வடிவமைப்பு உரிமையைப் பெற்றார். தொடக்கத்தில், மரத்தாலான ஷெல் ஒன்றில், இரு உலோக உருளைகளை அமைத்து மவுஸ் உருவாக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக, இன்றைய வடிவமைப்பினைப் பெற்றது.
இதன் பயனைப் பலமுறை அவர் விளக்கிக் காட்டினாலும், 1984ல் ஆப்பிள் நிறுவனம் தான் முதன் முதலில் வர்த்தக ரீதியாக மவுஸை மக்களிடம் கொண்டு சேர்த்தது. 1987 ஆம் ஆண்டில் மவுஸ் வடிவமைப்பு உரிமை காலம் காலாவதியானதால், பொது பயன்பாட்டு சாதனமாக மவுஸ் மாறியது. மவுஸுக்கான எந்த ராயல்டி உரிமைப் பணமும் எங்கல்பர்ட் பெற்றதே இல்லை. 1980 ஆம் ஆண்டு மத்தியிலேயே, நூறு கோடி மவுஸ் புழக்கத்தில் இருந்தது என்றால், அவர் எவ்வளவு தொகையை விட்டுக் கொடுத்துள்ளார் என்று கணக்கிட்டுக் கொள்ளலாம். ஆப்பிள் நிறுவனத்திற்கு இதன் வடிவமைப்பினை வழங்கிய ஸ்டான்போர்ட் ஆய்வு மையம், இதற்கென 1983ல், 40 ஆயிரம் டாலர் பணம் பெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது.
கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் இவருக்கென ஓர் ஆய்வுக் கூடம் அமைக்கப்பட்டு, பல ஆய்வுகளை அதில் இவர் மேற்கொண்டார். இன்றைய இன்டர்நெட் வடிவமைப்பின் முன்னோடியான ஆர்பா நெட் (ARPANET) அமைப்பினை வடிவமைப்பதில் பெரும் பங்கு கொண்டார். அப்போதே, மின் அஞ்சல், வேர்ட் ப்ராசசிங் ஆகிய பிரிவுகளில், முன்னோட்டமான கருத்துகளையும் செயல்முறைகளையும் வழங்கினார். கம்ப்யூட்டர் ஒன்று பெரிய அறை ஒன்றில் வைக்கப்பட்டு, தகவல்கள் மிகப் பெரிய துளையிட்ட அட்டைகள் வழியாகத் தரப்பட்டுச் செயல்பட்ட காலத்தில், அவர் வழங்கிய ஆய்வு இலக்குகள் எல்லாம், மிக மிக முன்னேறிய ஒரு காலத்தில் தான் வர முடியும் என உடன் இருந்தவர்கள் அப்போது கூறினார்கள். இன்று அவை நடைமுறையில் இருப்பதைக் காண்கையில் அவரை "கம்ப்யூட்டிங் தீர்க்கதரிசி" என அழைத்தது சரிதான் என்று கொள்ள வேண்டும்.
கம்ப்யூட்டர் மற்றும் மனித நுண்ணறிவு வளம் குறித்து 25 நூல்களை இவர் எழுதினார். 20 புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையினைப் பெற்றிருந்தார்.
1997ல், எம்.ஐ.டி. பல்கலை, இவருக்கு விருதாக 5 லட்சம் டாலர் வழங்கியது. பெர்சனல் கம்ப்யூட்டிங் பிரிவில் சில அடிப்படைகளை வடிவமத்ததற்காக, தொழில் நுட்பத்திற்கான தேசிய விருது (National Medal of Technology) 2000 ஆண்டில் வழங்கப்பட்டது.
மனிதன் மற்றும் கம்ப்யூட்டர் இடையே ஓர் அருமையான உறவினை ஏற்படுத்தக் காரணமாக இருந்ததற்காகவும், மவுஸினை சிறந்த உள்ளீடு சாதனமாக அமைத்ததற்காகவும், கம்ப்யூட்டர் ஹிஸ்டரி மியூசியம், இவருக்கு 2005 ஆம் ஆண்டில், பெல்லோஷிப் விருதினை வழங்கி கவுரவித்தது.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X