கேள்வி பதில் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements
கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2013
00:00

கேள்வி: சாம்சங் எஸ் 3 ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கியுள்ளேன். இதில் கேமரா ஐகானில் அழுத்தி, போட்டோ எடுத்தேன். பட பட வென நிறைய போட்டோக்கள் எடுக்கப்பட்டன. அந்த ஐகானில் எங்கு சென்றும், எடுத்த போட்டோக்களைப் பார்க்க இயலவில்லை. எப்படி இயக்க வேண்டும்?
என். சரண்ராஜ், சிவகாசி.
பதில்:
சில புதிய டிஜிட்டல் சாதனங்களை வாங்கி இயக்கும்போது இது போன்ற சந்தேகங்கள், கேள்விகள் எழும். தொடர்ந்து பயன்படுத்தினால், சாதன இயக்கம் நம் வசத்திற்கு வரும். இங்கு உங்களின் கேள்வியைப் பார்ப்போம்.
சாம்சங் எஸ் 3, ஓர் அருமையான ஸ்மார்ட் போன். இதன் கேமரா பல்வேறு வசதிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. கேமரா ஐகானைத் தொட்டு அதன் மெனுவினைப் பெறவும். ஐகானை அழுத்தியவுடன் கிடைக்கும் திரையில் சதுரமாக ஒரு ஐகான் தென்படும். அதனைத் தொட்டு அழுத்தவும். இப்போது உங்களுக்கு Shooting Mode என்ற மெனு கிடைக்கும். இதில் உங்கள் கேமராவில் Burst Shot என்னும் பிரிவு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை அதன் எதிரே உள்ள சிறிய வட்டத்தில் பச்சை நிற புள்ளி இருப்பதைக் கொண்டு உணரலாம். இது தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதால், நீங்கள் ஒரு போட்டோ எடுக்க ஒரு முறை அழுத்தியவுடன், பல போட்டோக்கள் அடுத்தடுத்து எடுக்கப்படுகின்றன. இதில் நீங்கள் அழுத்தினால், அந்த ஆப்ஷன் விடுபடும். இதற்குப் பதிலாக Single shot என்பதனைத் தொட்டு தேர்ந்தெடுக்கவும். இங்கு இன்னும் சில ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். ஒவ்வொன்றையும் தேர்ந்தெடுத்து, எடுக்கப்படும் போட்டோ எப்படி அமைகிறது என்பதனைப் பார்க்கவும். இனி போட்டோ எங்கு உள்ளது என்ற உங்கள் கேள்வி. ஐகான் பக்கங்களில், Gallery என்று ஒரு ஐகான் இருக்கும். இதனைத் தொட்டுத் திறந்தால், நீங்கள் எடுத்த போட்டோ கிடைக்கும். இந்த போனை நன்றாக, அதிகச் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தவும்.

கேள்வி: அவுட்லுக் டாட் காம் மெயில்களில் படங்களை இணைக்க இன்ஸெர்ட் ஆப்ஷன் கிடைக்கும் எனப் படித்தேன். ஆனால், என்னுடைய அவுட்லுக் டாட் காம் மெயிலில் அந்த மெனு ஆப்ஷன் கிடைப்பதில்லை. இது எதனால்? இதனைப் பெற என்ன செய்திட வேண்டும்?
சா. சந்திர சேகர், தாம்பரம்.
பதில்:
அவுட்லுக் டாட் காம் தளத்தில், மெயில்களை கம்போஸ் செய்கையில், போட்டோக்கள் மற்றும் படங்களை இணைக்க Insert Option என்னும் மெனு வசதி காட்டப்படும். இந்த ஆப்ஷன் உங்களுக்குக் கிடைக்கவில்லை என்றால், உங்கள் பிரவுசரினால் தான் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக, நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 பயன்படுத்துபவராக இருந்தால், அதில் Insert Pictures Inline option சரியாகக் காட்டப்பட மாட்டாது. இது போன்ற சூழ்நிலையில், உங்கள் பிரவுசரை பதிப்பு 10க்கு அப்டேட் செய்திடவும். பிரச்னையை அது தீர்க்கலாம்.

கேள்வி: என் கம்ப்யூட்டரில் உள்ள Add/Remove Programs பிரிவில் மைக்ரோசாப்ட் விசுவல் சி ++ என்பதில் 14 வரிகள் உள்ளன.2005 முதல் 2010 வரை இவை ஆண்டுக் கணக்கிடப்பட்டு பதியப்பட்டுள்ளன. இறுதியாக அமைக்கப்பட்டதை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற அனைத்தையும் அழித்துவிடலாமா? என்னுடைய ஓ.எஸ்.விண்டோஸ் 7 அல்ட்டிமேட் 64 பிட்.
என்.மேகலா, சென்னை.
பதில்:
மிக விபரமான உங்கள் கேள்விக்கு நன்றி. உங்கள் கேள்விக்கு "கூடாது' என்றுதான் பதில் தருவேன். இந்த வரிகள் அனைத்தும், ஒரே வரி திரும்ப திரும்ப பதியப்பட்டவை போலக் காட்சி அளித்தாலும், இவை உங்கள் இன்ஸ்டால்டு புரோகிராம் பட்டியலில் காட்சி அளிப்பதால், அவற்றை நீக்குவது உங்களுக்குப் பிரச்னையை உண்டாக்கும். இவை அனைத்தையுமே சில புரோகிராம்கள் பயன்படுத்தலாம். எனவே ஒன்றை நீக்கினால்,உடனே அதன் விளைவு தெரியாது. ஆனால், தேவையற்ற விளைவுகளைச் சில நாட்களில் நீங்கள் சந்திப்பீர்கள்.

கேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டத்திலிருந்து விண்டோஸ் 8 சிஸ்டம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளேன். இதில் எனக்குப் பழக்கமான விண்டோஸ் மீடியா பிளேயர் புரோகிராமினை என் ஆடியோ பைல்களை இயக்கும் மாறா நிலை புரோகிராமாக செட் செய்திட விரும்புகிறேன். இதனை விண்டோஸ் 8 சிஸ்டத்தில் எப்படி மேற்கொள்வது என வழி காட்டவும்.
என். பாலச்சந்திரன், பெங்களூரு.
பதில்:
சின்ன வேலைதான். ஒரு சில செட்டிங்ஸ் மாற்றங்களை மேற்கொண்டால் போதும்.
1. நீங்கள் ஸ்டார்ட் ஸ்கிரீனில் இருந்தால், அங்கு Default என டைப் செய்திடவும். இப்போது திரையின் இடது பக்கத்தில் Default Programs என கிடைக்கும். அதில் கிளிக் செய்திடவும். நீங்கள் டெஸ்க் டாப் மோடில் இருந்தால், கண்ட்ரோல் பேனலைத் திறந்து Default Programs என்பதில் கிளிக் செய்திடவும்.
2. இங்கு Set your default programs என்பதில் கிளிக் செய்து, பின்னர், உங்கள் கம்ப்யூட்டரில் என்ன என்ன புரோகிராம்கள் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன என்று கிடைக்கும் பட்டியலுக்குக் காத்திருக்கவும்.
3. கீழாகச் சென்று, விண்டோஸ் மீடியா பிளேயர் என்பதனைக் காணவும். இதில் கிளிக் செய்திடவும்.
4. இப்போது உங்களுக்கு இரண்டு ஆப்ஷன் உள்ளது. ஆடியோ, வீடியோ என எந்த பைலையும் இயக்கும் வகையில், விண்டோஸ் மீடியா பிளேயரை, மாறா நிலை புரோகிராமாக அமைக்கலாம். அல்லது தனித்தனியே பைல்களின் வகையை இதனுடன் தொடர்பு படுத்தலாம். முடிவு செய்து அதற்கேற்ப Set this program as default என்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும்.
5. முடிந்தவுடன் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: விண்டோஸ் சிஸ்டம் கடிகாரத்தில் தேதி மாற்றம் செய்திட முயற்சிக்கையில், மாதத்தின் பெயரில் வித்தியாசமான ஸ்பெல்லிங் கிடைக்கிறது. இதற்கு வைரஸ்தான் காரணமா? அப்படி என்றால், எப்படி இதனைச் சரி செய்வது?
என். சீனிவாசன், அரும்பாக்கம், சென்னை.
பதில்:
நீங்கள் எங்கு இந்த மாற்றத்தை மேற்கொள்ள முயற்சித்தீர்கள் எனக் கூறவில்லை. உங்கள் கம்ப்யூட்டரின் மொழி தேர்வில், எப்படியோ சிறிய அளவில் குழப்பம் ஏற்பட்டு, அதன் விளைவே இது. இதனைச் சரி செய்திட கண்ட்ரோல் பேனலில் உள்ள Regional Settings ஐகானை டபுள்-கிளிக் செய்யுங்கள். Regional Settings என்ற டேபை கிளிக் செய்யுங்கள். இங்குள்ள டிராப்-டவுன் லிஸ்ட்டை கிளிக் செய்து English (United States) என்பதைத் தேர்வு செய்து ok செய்யுங்கள். சரியாகி விடும். (உங்கள் கம்ப்யூட்டரில் ஆங்கிலத்துக்குப் பதில் வேறொரு மொழி தேர்வாகியுள்ளதால்தான் இந்த குழப்பம்)

கேள்வி: புதியதாக விண்டோஸ் 7 பயன்படுத்தத் தொடங்கி உள்ளேன். இதில் வால் பேப்பர்களை, ஒரு ஸ்லைட் ஷோ போலப் பயன்படுத்தலாம் என்று என் நண்பர் கூறுகிறார். இதனை எப்படி மேற்கொள்வது எனத் தெரியவில்லை. செட் செய்வதற்கான வழிகளைக் கூறவும்.
தி. முத்து காமராஜ், சிவகாசி.
பதில்:
விண்டோஸ் 7 சிஸ்டத்தில் பல அழகான வால் பேப்பர்கள் தரப்பட்டுள்ளன. அந்த வால் பேப்பர்கள் அனைத்தையும், அல்லது நீங்கள் விரும்பும் சிலவற்றை மட்டும், ஒரு ஸ்லைட் ஷோவாக அமைக்கும் வசதி தரப்பட்டுள்ளது. டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து, Personalise > Desktop Background என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின் கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, நீங்கள் விரும்பும் வால்பேப்பருக்கான படங்களை மட்டும் தேர்ந்தெடுக்கவும். பின்னர் எவ்வளவு நேரத்திற்கு ஒருமுறை இந்த படங்கள் மாறிக் காட்சியாகத் தெரிய வேண்டும் என்பதனை முடிவு செய்து அமைக்கவும். இது 10 விநாடிகள் முதல் ஒரு நாள் வரை இருக்கலாம். இவை வரிசையாக இல்லாமல், மாறி மாறி வர வேண்டும் எனில் Shuffle என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம்.

கேள்வி: எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் அடிக்கடி சில பேஜ் பிரேக் ஏற்படுத்தி அமைக்கிறேன். ஆனால், இவை சரியாகக் காட்டப்படவில்லை. எதில் தவறு ஏற்படுகிறது என்று புரியவில்லை. இதனை முறையாக செட் செய்வது குறித்து கூறவும்.
ஆ. கண்ணதாசன், கோவை.
பதில்:
எக்ஸெல் ஒர்க்புக்கில், நீங்கள் ஏற்படுத்தும் ஏற்படுத்தப்படும் பேஜ் பிரேக் கோடுகள், காட்டப்பட வேண்டும் எனில், அதற்கான வழிகளை எக்ஸெல் தருகிறது. நீங்கள் பேஜ் பிரேக் ஏற்படுத்துகையில் இன்ஸெர்ட் மெனு சென்று, அதில் உள்ள பேஜ் பிரேக் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கிறீர்கள். தானாக ஏற்படுத்தப்படும் பேஜ் பிரேக், எக்ஸெல் நாம் ஏற்படுத்தி வைத்துள்ள செட்டிங்ஸ்களுக்கேற்ற வகையில், அதுவாகவே ஏற்படுத்தும் பிரிவாகும். இவற்றைக் காட்ட சில வழிகளை நாம் ஏற்படுத்த வேண்டும்.
1. Tools மெனுவிலிருந்து Options என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் உடனேயே ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைத் தரும்.
2. இதில் உள்ள டேப்களில் View டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. அதில் உள்ள பேஜ் பிரேக் செக் பாக்ஸை நீங்கள் தேர்ந்தெடுத்தால், பேஜ் பிரேக் திரையில் காட்டப்படும். தேர்ந்தெடுத்தபின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X