வயலின் வனிதா! (22)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2013
00:00

இதுவரை: பயிற்சி இசைநிகழ்ச்சியில் தனிக் கச்சேரி செய்த வனிதா, சரியாக வயலின் வாசிக்காததால் சங்கர்லால் கோபம் கொண்டார். இதனால் சந்தோஷத்தில் வனிதாவின் அத்தையும், லீலாவும் இருந்தனர். இனி-

""நான் போயிருந்தேன், இவளோட ஸ்கூலுக்கு. இவ வயலின் தனியாக வாசிப்பான்னு சொன்னார் நிகழ்ச்சி தயாரிப்பாளர். நான் கூட "தேவலாமே நம்ம வனிதா அதிர்ஷ்டக்காரிதான். இவ தனியாக வாசிக்கிற லட்சணத்தைப் பார்க்கலாம்னு ஆர்வமாக நிமிர்ந்து உட்கார்ந்தேன். இவ பேந்தப் பேந்த விழிச்சா பாரு! அத்தனை பேரும், "கொல்'னு சிரிச்சுட்டாங்க. நானா இருந்தா அவமானம் தாங்காம அந்த இடத்திலேயே உயிரை விட்டிருப்பேன்,'' என்று முகவாயை தோளில் இடித்துக் கொண்டாள் லீலா. பிறர் உள்ளத்தைக் குத்தி, ரணமாக்கி மகிழ்வதில்தான் இவளுக்கு எத்தனை மகிழ்ச்சி? என்று எண்ணியபடி தலை குனிந்து நின்றாள் வனிதா.
""இனிமேலாவது வயலின் வாசிக்கிற வீம்பை, பிடிவாதத்தை விட்டுட்டு, பிழைக்கிற வழியைப் பாரு!'' என்று மகா, மகா திருப்தியோடு, எழுந்து உள்ளே போனாள் காமாட்சி.
"வயலின் மீது அத்தைக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு? நான் வயலினைத் தொடக்கூடாது என்பதில் ஏன் இத்தனை கண்டிப்பு? ஏன்... ஏன்... என்ன காரணம்? விடை தெரியாமல்' வெந்து போனாள் வனிதா.
அந்த சனிக்கிழமை பரசுராம் கடைக்குப் போன போதுதான் அவளுக்கு ஆறுதல் ஏற்பட்டது. வனிதாவைக் கண்டதும் பரசுராம் பரிவோடு கேட்டார்.
""குழந்தே அன்னிக்கு ஏம்மா அப்படித் தடுமாறினே? நீ பிரமாதமா வாசிச்சு கை தட்டல் வாங்கப் போறேன்னு ஆவலோடு எதிர்பார்த்தேன். ஆனா ஏன் அப்படி?''
வனிதாவுக்கு அவர் அப்படிப் பரிவோடு, அன்போடு கேட்டது காயத்துக்கு மருந்து தடவியது போலிருந்தது. பதில் சொல்ல முடியாமல் அழுகை தொண்டையில் தக்கையாக அடைத்துக் கொண்டது. தன் இரு கைகளையும் அவர் முன் நீட்டினாள். சிரமப் பட்டு அழுகையை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டு, ""இன்னிக்கு இந்த விரல்கள் சரியாப் போச்சு. ஆனால் அன்று இந்த விரல்களை அசைக்க முடியவில்லை. ரணமாக வலித்தன!'' என்று தான் அத்தையிடம் பிரம்படிபட்டதை விவரித்தாள்.
""அத்தனை கொடுமைக்காரியா உன் அத்தை! ராட்சஸியாக இருப்பாள் போலிருக்கே?'' என்று கூறினார் பரசுராம்.
"என் அப்பா இருந்தால் இப்படித்தான் அன்பு காட்டுவார்' என்று எண்ணிக் கொண்டாள் வனிதா.
""கவலைப் படாதே குழந்தே... கண்ணைத் துடைத்துக்கொள். அன்றைய தோல்வியை மறந்து விடு. ஒருவருடைய திறமையை யாராலும் அழிக்க முடியாது; வயலினில் நீ புகழ்பெறப்போவதை உன் அத்தையினால் தடுத்துவிட முடியாது. இங்கு உன் வேலை முடிந்ததும், நீ இங்கேயே வயலின் பிராக்டீஸ் செய்யலாம். உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு!'' என்றார் பரசுராம்.
அவருடைய அன்பான வார்த்தைகள் இடிந்து போன அவள் இதயத்துக்கு இதமாக இருந்தன. பரசுராம் கடையை ஒழுங்கு படுத்துவதில் முனைந்தாள். எல்லாவற்றையும் சீர் செய்த பிறகு அங்கு ஒரு பெரிய நிலைக் கண்ணாடி இருந்தது. அதைக் கண்டதும் அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது. அந்தப் பெரிய கண்ணாடியை கடை வாசலைப் பார்த்தபடி கோணம் பார்த்து சுவரில் சாய்த்து நிறுத்தினாள். அந்தப் பின் அறையிலிருந்தபடியே கண்ணாடி மூலம் கடைக்குள் வருபவர்களைப் பார்க்க முடிந்தது. கடை வாசலைக் கடந்து போவோரையும், தயங்கி நிற்பவர்களையெல்லாம் கண்ணாடி மூலம் கண்காணிக்க முடிந்தது.
"இது ஒரு நல்ல ஏற்பாடு!' என்று தன்னைத் தானே பாராட்டிக் கொண்டாள் வனிதா.
"நான் இந்த கண்ணாடியில் பார்த்தபடியே வயலின் பயிற்சி செய்யலாம். அதே சமயம் கடைக்கு வருபவர்களையும் பார்க்கலாம். பரசுராம் சார் கடைக்கு வருபவர்களைக் கவனிக்க வேண்டுமே என்ற கவலை இல்லாமல் தன் அலுவலில் ஈடுபடலாம். கண்ணாடி மூலம் வருபவர்களைத் தெரிந்து கொண்ட நான், உடனே வாசல் பக்கம் போய் அவர்களைக் கவனிக்க முடியும். அதே சமயம் வயலின் வாசிக்கவும் செய்யலாம்' இப்படி திட்டமிட்டு திருப்திப்பட்டுக் கொண்டாள். பரசுராமிடம் தன் யோசனையை கூறியபோது அவரும் பாராட்டினார்.
இசை விழாவிற்கு இரண்டே நாள்தான் இருந்தது. வனிதாவுக்கு அதே நினைவு, ஏக்கம், அவள் கலந்து கொள்ளப் போவதில்லையே, அதுதான் ஏக்கம். அன்று பள்ளியில் நடந்த பயிற்சிக்கு இரண்டு ரிகர்சலுக்குப் பிறகு சங்கர்லால் தன் கோபத்தை வெளிப்படுத்தி விட்டார்.
""உன் மீது அத்தனை நம்பிக்கை வைத்து உன்னை வாசிக்கும்படி அறிமுகப்படுத்தியதற்கு, நீ என் முகத்தில் கரியைப் பூசி விட்டாய். ஆர்கெஸ்ட்ராவில் நீ இல்லாமலிருந்தாலே சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன்!'' என்று கூறி அவளை இசைக் குழுவிலிருந்து நீக்கி விட்டார். அதுவும் பல மாணவிகளின் முன்னால்.
இப்படிக் கூறியது வனிதாவுக்கு ரொம்ப அவமானமாகப் போயிற்று. அவளிடம் அன்பு கொண்ட தோழிகள், ""பாவம்டி வனிதா!'' என்று தங்களுக்குள் அனுதாபப்பட்டனர்.
உண்மையைக் கூறினால் அவர் நம்பப் போவதில்லை. அப்படிப்பட்ட மனநிலையில் அவர் இல்லை. கோபம், சீர்தூக்கிப் பார்க்கும் அவர் சிந்தையை மறைத்துக் கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்ட அவள், தன்னிலை விளக்கம் ஏதும் தரவில்லை. கண்ணீர் வழிய, தலைகுனிந்தபடிதான் ஒதுக்கப்பட்டதை ஏற்றுக் கொண்டாள்.
இசைவிழாவில் கலந்து கொள்ளும் மாணவிகள் பள்ளியின் வேனில் குதூகலத்துடன் ஏறிக் கொண்டு கிளம்பிய போது வனிதா தன் அழுகையை அடக்கிக் கொண்டு, சிரித்த முகத்தோடு கையசைத்து அவர்களுக்கு விடை கொடுத்தாள்."பரிசு பெற்றுத் திரும்புங்கள்!' என்று மனதார வேண்டிக் கொண்டாள்.
இசை விழாவில் தான் கலந்து கொள்ளாதது வனிதாவுக்கு ஏக்கமாக இருந்தாலும் அவள் அத்தை காமாட்சிக்கும், அவள் மகள் லீலா வுக்கும் ரொம்ப மகிழ்ச்சி. பிறர் தோல்வியில், துயரத்தில் மகிழும் ஜென்மங்கள். ஒருவிதத்தில் வனிதாவுக்கு அது நன்மையே செய்தது. அத்தை முன்போல், வனிதாவிடம் எரிந்து விழவில்லை. கடுப்பைக் காட்டவில்லை. லீலாவும் தன் அம்மாவிடம் கோள் மூட்டுவதில்லை. இதனால் அவர்களுக்கு வனிதாவிடம் அன்பு ஏற்பட்டு விட்டது என்று கூறமுடியாது. இம்சிப்பது குறைந்தது. அவ்வளவுதான்.
இப்போதெல்லாம் வனிதா தினமும் பள்ளி முடிந்ததும் மாலை வேளையில் சந்தடி இல்லாத பள்ளிக்கூட வளாகத்தில் தன் வயலினில் பயிற்சி செய்து வரலானாள். முழு ஈடு பாட்டுடன் அவள் அதில் மூழ்கிப் போனாள். இது அவள் மனதுக்கு நிம்மதி யளித்தது. ஆனால், இதற்கும் ஆபத்து வந்தது ராணி மூலம்.
ராணி அந்தப் பள்ளியின் துப்புறவுத் தொழிலாளி. பல வருஷங்களாக அப் பள்ளியில் வேலை செய்கிறாள். மாலை பள்ளிக்கூடம் முடிந்ததும் வகுப்பறைகளையெல்லாம் கூட்டி குப்பைகளை அகற்றி சுத்தமாக்குவது அவள் பொறுப்பு. தன் கடமையை கச்சிதமாக நிறைவேற்றுபவள் ராணி. அத்தனை பெரிய கட்டடத்தில் எங்கும் ஒரு குப்பையைக் கூட காண முடியாது. பள்ளி நிர்வாகிகளிடம் ராணிக்கு ரொம்ப நல்ல பெயர். இந்த ராணி, வனிதாவின் நிம்மதிக்கு எமனாக வந்தாள். காமாட்சியைப் போலவே, இந்த ராணிக்கு வயலின் மீது ஏன் இத்தனை வெறுப்பு என்பது புரியவில்லை வனிதாவிற்கு.
அன்று வனிதா தன்னை மறந்த நிலையில் வயலின் வாசித்துக் கொண்டிருந்தபோது திடீர் பிரவேசம் செய்தாள் ராணி.
""இந்தா பாப்பா! உன்னோட தினமும் ரோதனையாப் போச்சு!'' என்று கூறியபடி துடைப்பத்துடன் தோன்றினாள் ராணி.
""அதான் கச்சேரி விழா எல்லாம் முடிஞ்சு போச்சே, இன்னும் இங்கே தினமும் ஏன், இப்படி? என்னை வேலை செய்ய விடாமல் தலை வேதனைப்படுத்திக்கிட்டு இருக்கே?'' என்று கேட்டாள்.
"" நான் டீச்சர்கிட்டே அனுமதி பெற்றுத் தான் இங்கே பிராக்டீஸ் செய்யறேன். இது இசை விழாவுக்காக அல்ல.. நிரந்தரமான என் வாழ்க்கைக்காக!'' என்றாள் வனிதா.
முகம் கடுத்தாள் ராணி.
""அப்போ நீ தினமுமே இப்படித்தான் என்னை வேலை செய்ய விடாமல் சத்தம் போடுவேன்னு சொல்றியா? இது என்ன சங்கீத ஸ்கூலா? என்னால நிம்மதியா வேலை செய்ய முடியாது. நான் தலைமை ஆசிரியர்கிட்ட கண்டிசனா சொல்லிடறேன்!'' என்று கூறியபடி தலைமை ஆசிரியர் அறையை நோக்கி விரைந்தாள்.
வனிதா அதிர்ச்சியடைந்து போனாள்.
தலைமை ஆசிரியரிடம் ராணி, தன்னால் நிம்மதியாக வேலை செய்ய முடியாதென்றும் தான் வேலையை விட்டு நின்று விடுவ தாகவும் கூறவே, தலைமை ஆசிரியையின் நிலை சங்கடமாயிற்று.
"ராணியைப் போல ஒரு நல்ல வேலைக் காரி கிடைக்க மாட்டாள். ஆனால், இவள் வயலின் இசையை சத்தம், தொல்லை என்று கருதுகிறாளே' என்று வியப்படைந்தார் தலைமை ஆசிரியை "இசையை ரசிக்கத் தெரியாத ஜென்மம்!' என்று நினைத்தவர், ""அந்தப்பெண் அனுமதி கேட்டுதான் வயலின் பிராக்டீஸ் செய்யறா. உனக்கு அதனால தொல்லைன்னா... நான் வனிதா கிட்டே சொல்றேன். நீ வேலையை விட வேண்டாம்!'' என்றார் தலைமை ஆசிரியை.
- தொடரும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X