தொப்பிக்கு வணக்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2013
00:00

நீண்ட நாட்களுக்கு பிறகு பிறந்த குழந்தையாதலால் தெல், பெல்லை மிகவும் செல்லமாக வளர்த்து வந்தான். அந்த நேரத்தில் தன் பிள்ளையும் வில் வித்தையில் தன்னைப் போல் சிறந்து விளங்க வேண்டும் என்று சிறு வயதிலேயே வில் பயிற்சி அளிக்கத் தொடங்கிவிட்டான்.
பெல் ஐந்து வயதாவதற்குள் அம்பெய்யக் கற்றுக் கொண்டான். அதைக் கண்டு தந்தை பூரித்துப் போவான். அவனை நீண்ட நேரம் பிரிந்திருக்கத் தெல்லுக்கு மனம் வராது. அதனால் வேட்டையாடச் செல்லும் போதும், ஊரி ஏரியில் படகு செலுத்தும் போதும் அவனைத் தன்னுடனே அழைத்துச் செல்வான். சில வேளைகளில் பெல்லைத் தன் தோள் மீது அமர்த்திச் சுமந்து செல்வான். மகன் நடந்து வருகிறேன் என்று மறுத்தாலும் கேட்காமல் அவனைத் தோளில் தூக்கிச் செல்வான். மகன் மீது அவ்வளவு பாசம் தெல்லுக்கு.
சுவிட்சர்லாந்து, வில்லியம் தெல் காலத்தில் ஆஸ்திரிய மன்னன் ஆட்சிக்கு உட்பட்ட நாடாக இருந்தது. முன்பு உரிமை நாடாக விளங்கிய சுவிட்சர்லாந்து அப்போது அடிமை நாடாக - ஆஸ்திரிய மன்னன் கொடுமைக்கு ஆளான நாடாக அல்லல்பட்டுக் கொண்டிருந்தது.
ஆஸ்திரிய மன்னன் கொடியவன். ஆணவமே அவனது மூச்சு. அதனால் தான் வென்ற நாடுகளை, மக்கள் புரட்சி செய்து மீண்டும் விடுதலை பெறாமல் இருப்பதற்காக கொடிய அடக்கு முறைகளைக் கையாண்டு அடிமைகளைப் போல் அடக்கி ஒடுக்கி வைத்திருந்தான்.
தெல் வாழ்ந்த பகுதி நகருக்கு மிகத் தொலைவில் மலைப் பகுதியாக இருந்ததால் ஆஸ்திரிய மன்னனின் கொடுமைகளை அனுபவிக்கும் நிலை ஏற்படவில்லை அவனுக்கு. ஆனாலும், அவன், ஆஸ்திரிய மன்னனால் சுவிட்சர்லாந்துக்கு அவன் சார்பில் ஆட்சி நடத்த அனுப்பப்பட்ட தலைவனும், அதிகாரிகளும் செய்யும் கொடுமைகளையும் சொந்தநாட்டு மக்களை நாயினும் கீழாய் மிகக் கேவலமாய் நடத்துவதையும் அறிந்திருந்தான்.
நகரிலிருந்து மலைப்பகுதிக்கு வருவோர் நகரில் நடக்கும் கொடுமைகளை அடுக்கடுக்காகக் கூறிக் கண்ணீர் வடிப்பர். அப்போ தெல்லாம் தெல், "ஆஸ்திரிய மன்னனின் கொடுங்கோன்மையை ஒழிக்க வேண்டும், என் தாய் நாட்டை அவன் பிடியிலிருந்து மீட்க வேண்டும்!' என்று கூறிக் கொள்வான்.
அப்போது அவன் நெஞ்சம் குமுறும். 'நான் ஒருவன் மட்டும் ஈடுபட்டால் போதாது. அதற்கேற்ற காலமும், சூழ்நிலையும் வாய்க்கும் போது என் உயிரையும் கொடுப்பேன். அதுவரை பொறுமையாய் இருக்கத்தான் வேண்டும்' என்று தன்னை அடக்கிக் கொள்வான்.
ஒருநாள் தெல் தன் மகன் பெல்லுடன் நகருக்குப் புறப்பட்டான். இப்போது தெல் கட்டிளங்காளையாக இல்லை. இருந்தாலும் உடற்கட்டு சிறிதும் குறையாமல் முறுக்கோடு இருந்தான். அவன் தலையிலும், மீசை தாடியிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நரை முடிகள் வெள்ளிக் கம்பிபோல் தலையை நீட்டிக் கொண்டிருந்தன. காலிலே வேட்டைச் செருப்பு அணி செய்தது. இடத்தோளில் வில்லும், முதுகில் அம்புக்கூடும் தொங்கிக் கொண்டிருந்தன. வலத் தோளில் வேட்டையாடிய மான்தோலும், புலித்தோலும் தொங்கிக் கொண்டிருந்தன.
பன்னிரண்டு வயதுச் சிறுவனான பெல் அவன் பின்னே சென்றான். அவன் தோளில் வில்லும் முதுகில் அம்புக் கூடும் தொங்கிக் கொண்டிருந்தன. மீசை அரும்பாத பால் வடியும் முகம். கழுத்தளவு நீண்டு தொங்கும் கத்தரித்து விடப்பட்ட கருமையான மயிர்க்கற்றை தோளில் துவண்டு அசைந்து கொண்டிருந்தது. அவன் மார்பில் பவளமாலை புரண்டு கொண்டிருந்தது.
இவர்கள் இருவரும் சென்ற சமயம் "ஜெஸ்லர்' என்பவன் அந்நகருக்குத் தலைமை அதிகாரியாய் நியமிக்கப்பட்டிருந்தான். இவன் ஆஸ்திரிய மன்னனைக் காட்டிலும் கொடியவன். இரக்கம் என்பதற்கு அவன் நெஞ்சில் கொஞ்சம் கூட இடம் இல்லை. மக்கள் கொடுமை தாங்காமல் குமுறி அழுவதைக் காண்பதிலே அவனுக்குத் தனி மகிழ்ச்சி. கட்டளைக்குப் பணியாதவர்களை மரங்களில் கட்டி வைத்து சாட்டையால் அடிப்பான். ஆணையை அலட்சியப்படுத்தினால் சிறையில் தள்ளி வாட்டுவான். கொடுமையைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் அவனையோ, மற்ற அதிகாரிகளையோ எதிர்த்துப் பேசிவிட்டால் போதும் அவர்கள் தலை தரையில் உருளும். கொலை செய்ய அஞ்சாத கொடியவன்.
சுவிஸ் மக்கள் ஆஸ்திரிய மன்னனைத் தான் எமன் என்று தூற்றி வந்தனர். ஜெஸ்லர் வந்து காட்டாட்சி நடத்தியதைக் கண்டு "மன்னன் எமன் அல்ல, இவன்தான் எமன். இந்தக் கொடும்பாவி வந்ததிலிருந்து கொடுமையும், கொலையும் மலிந்து விட்டன. இவனுக்குச் சாவு வராதா? இவனே எமன். இவனுக்கு எப்படி சாவு வரும்!' என்று குமுறுவர்.
தெல்லும் பெல்லும் நகர எல்லையை அடைவதற்கும் சூரியன் உச்சியை அடைவதற்கும் சரியாக இருந்தது. எல்லையில் ஆள் உயரக் கம்பம் ஒன்று நின்றது. அதன் தலையில் ஒரு தொப்பி இருந்தது. அதைக் கண்டதும் பெல்லுக்கு வியப்பு.
""அப்பா அப்பா! அதோ பாருங்கள் மரக்கம்பம் ஒன்று தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறது. நான் இதுவரை தொப்பி அணிந்த மனிதரைத்தான் பார்த்திருக்கிறேன். தொப்பி அணிந்த மரத்தைப் பார்த்ததே இல்லை. இங்கு மட்டும் ஏனப்பா மரம் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறது?'' என்று கேட்டான்.
தெல் அதைக் கேட்டுச் சிரித்தான். பதில் கூறவில்லை. பெல் அவனை விடவில்லை. ""என்னப்பா... கேட்கிறேன் பதில் கூற மாட்டேன் என்கிறீர்களே! சொல்லுங்கள் அப்பா!'' என்று நச்சரித்தான்.
பதில் கூறாவிட்டால் விடமாட்டான் என்று நினைத்து, ""மகனே! காரணத்தோடுதான் மரக்கம்பம் தொப்பி அணிந்திருக்கிறது,'' என்றான்.
""அந்தக் காரணத்தைத்தான் கூறுங்கள் என்று கேட்கிறேன்!''
""தொப்பி மனிதர்கள் தலையில் அணிந்து கொள்ளக் கூடிய பெருமையுடையதுதான். ஆனால், இங்கு மரக்கம்பம் தன் தலையில் அணிந்திருக்கிறது ஏன் தெரியுமா? இங்கு மரத்திற்கும், மனிதனுக்கும் வேறுபாடில்லை. அதனால் தான் அது அணிந்திருக்கிறது!''
""இங்கு மரத்திற்கும் மனிதனுக்கும் வேறுபாடில்லையா? எப்படி அப்படி இருக்க முடியும்? எனக்கு ஒன்றும் புரிய வில்லையே!''
""உனக்கு இப்போது புரியாது. பெரியவனானால்புரியும்!''
""இப்பவே எனக்குச் சொன்னால் புரியும்!'' என்று பெல் கூறியதும், தெல் அவன் முதுகில் தட்டிக் கொடுத்து, ""இங்கு மனிதர் ஆட்சி நடத்தவில்லை. மரத்தைப் போன்றவர் தாம் ஆட்சி நடத்துகின்றனர். அதனால்தான் மரம் தொப்பியை மாட்டிக் கொண்டு நிற்கிறது. மரத்துக்கு அறிவோ, இரக்கமோ இருக்காது. அதேபோல் நம் நாட்டை அடிமையாக்கி வைத்திருக்கிற ஆஸ்திரிய மன்னனுக்கும் மனித உணர்வோ, அறிவோ, இரக்கமோ இல்லை!'' என்று கூறினான்.
""அப்பா! ஆஸ்திரிய மன்னன் ஏன் நம் நாட்டை ஆள வேண்டும்?'' என்று கேட்டான் பெல்.
""அது பெரிய கதை. போகும் போது விளக்கமாகச் சொல்கிறேன். நேரமாகிவிட்டது. நம் பொருட்களை விற்று கம்பளி, வீட்டுப் பொருள்கள் முதலியன வாங்கிக் கொண்டு இருட்டுவதற்குள் வீட்டுக்குத் திரும்ப வேண்டும்,'' என்று கூறிக் கொண்டே நடந்தான்.
கம்பத்துக்குச் சற்று தொலைவில் கூடாரம் அடித்துத் தங்கியிருந்த ஆஸ்திரிய நாட்டு வீரர்கள், கம்பத்தருகே வந்த இருவர் தொப்பியை வணங்காமல் செல்வதைக் கண்டனர். அவர்களுள் ஒருவன் விரைவாக ஓடி தெல்லை வழிமறித்து நிறுத்தினான்.
- தொடரும்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X