அமெரிக்காவில் இருந்து தாயகம் வந்து, ஆடி ரசிகர்களை பிரமிக்க வைத்த இளம் நடனமணி ராகஸ்ரீ கொமந்தூரின் நாட்டிய நிகழ்ச்சி மிகச் சிறப்பாக இருந்தது. க்ளீவ்லாண்ட் தியாகராஜர் விழாவில், பிரேமையில் சகுந்தலை என்ற நாட்டிய நாடக நிகழ்ச்சியில், திறமை ஜொலிக்க ஆடிய பெருமையும் இவருக்குண்டு. இந்த நாட்டிய நாடகத்தை சிறப்பாக வடிவமைத்திருந்தார் ராதிகா சுரஜித். பாரம்பரிய புஷ்பாஞ்சலியுடன் துவக்கி அழகுற ஆடிய ராகஸ்ரீ ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின், விநாயக துதிப்பாடலான கிரிராஜசுதா (பங்காள) (ஆதி) மூலம் அவரை வணங்கினால் கிடைக்கும் அளவற்ற அருள் விநாயகப் பெருமானின் அவதார மகிமைகளை சிறப்பாக ஆடி உணர்த்தியது வரவேற்க வைத்தது.
பிரதான வர்ணமாக பூர்வி கல்யாணி ராகத்தில் பத்மஸ்ரீ கே.என்.தண்டாயுதபாணி பிள்ளையின் பதவர்ணமாகிய சாமியை வரச் சொல்லடி சகியேயை (பூர்வி கல்யாணி) (ஆதி) மிக உயர்வான முறையில் கையாண்டு அனுபவித்து ஆடினர். இளம் நடனகுரு கிருபா பாஸ்கரனின் நட்டுவாங்கம் எல்லாமே முதல் தரமாக இருந்தது. அரிபிரசாத்தின் மதுரமான பாட்டு, கண்டதேவி விஜயராகவன் வயலின் - அனில்குமாருடைய சிறப்பான லயம் - முருகன் ஒப்பனை எல்லாமே நிகழ்ச்சிக்கு செறிவூட்டின.
- மாளவிகா