சென்னை வானொலி எனும் ஆலமரம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2013
00:00

வானொலி நமது வாழ்வோடு இரண்டறக் கலந்துவிட்ட ஓர் அங்கம். “காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்’என்று மகாகவி பாரதியின் ஆசையைச் செவ்வனே நிறைவேற்றவரும் ஓர் ஊடகம் வானொலி.
தென்இந்தியாவிலேயே முதலாவது வானொலி நிலையம் எனும் பெருமையைக் கொண்டுள்ள சென்னை வானொலி நிலையம் தனது 75ஆவது ஆண்டு சேவையை நிறைவு செய்துள்ளது.
“சென்னை வானொலி’ எனும் பெயரில் 1938ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி சென்னை எழும்பூர் மார்ஷல்ஸ் சாலையில், அன்றைய மாகாண முதல்வர் ராஜாஜி அவர்களால் துவக்கப்பட்டது. முதன்முதலாக ராஜாஜி அவர்கள் உரையாற்றினார். அதன்பிறகு பல்வேறு தொழில் நுட்ப வளர்ச்சிகளைக் கண்டு 1954ஆம் ஆண்டு காமராஜர் சாலையில் கலங்கரை விளக்கத்திற்கு அருகே தற்போது உள்ள கட்டடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது.
ஒரே ஒரு அலைவரிசையுடன் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே தனது ஒலிபரப்பைச் செய்து வந்த சென்னை வானொலி, ஆலமரமெனப் படர்ந்து விரிந்து எட்டு அலைவரிசைகளுடன் 24 மணி நேரமும் தனது ஒலிபரப்பினைச் செய்து வருகிறது. சென்னை - ஏ, சென்னை - பி, எஃப்.எம் ரெயின்போ, எஃப்.எம் கோலட், தென்கிழக்கு ஆசிய சேவை, விவித் பாரதி, டிடிஎச்1, டிடிஎச்2 என எட்டு அலைவரிசைகளில் பல்வேறு விதமான பல்சுவை நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருகின்றது சென்னை வானொலி நிலையம்.
75 ஆண்டுகால சேவையினைக் கடந்து பவள விழாக் கண்டுள்ள சென்னை வானொலி நாட்டின் சமூக, பொருளாதார, கிராமப்புற வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளது என்றால் அது மிகையில்லை.
தொடக்கக்கல்வி முதல் உயர்கல்வி வரை அனைவருக்கும் பயன்தரும் வகையில் கல்வி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. இதற்கென ஆண்டுதோறும் பாடத்திட்டங்கள் தயார் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு பாடத்திலும் வல்லுநர்களைக் கொண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதால் துறைவாரியாக ஆசிரியர்கள் இல்லாத பள்ளி மாணவர்கள் மிகுந்த பயன்பெறுகின்றனர்.

இளையபாரதம்: “யுவ வாணி’ என்ற பெயரில் இந்தியா முழுவதும் இளைஞர்களுக்கான நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றன. தமிழில் நல்ல பெயராக வைக்கலாம் என்று எண்ணிய சென்னை வானொலி நிர்வாகிகள், “இளைய பாரதத்தினாய் வா... வா... வா...’ என்று பாடிய பாரதியாரின் கவிதை வரியிலிருந்து “இளைய பாரதம்’ என்ற பெயரைச் சூட்டினர்.
இந்த இளையபாரதம் நிகழ்ச்சி முழுவதுமே இளைஞர்களால் திட்டமிடப்பட்டு, தயாரித்து ஒலிபரப்பப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பல இளைய சமுதாயத்தினர் பிற்காலத்தில் வானொலி, தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் துறையில் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தனர்.

பண்ணை இல்லம்: சென்னை வானொலி நிலையத்தின் மற்றொரு சிறப்பு நிகழ்ச்சி பண்ணை இல்லம். பயிர்களுக்கு ஏற்படும் நோய், அவற்றை போக்கும் மருந்து ஆகியவற்றைப் பற்றியும், புதிய புதிய சாகுபடிகளைப் பற்றியும் விவசாயிகளுக்கு வல்லுநர்களின் விளக்க உரையுடன் வழங்கி வருகிறது இந்நிகழ்ச்சி. 90 நாள்களில் மகசூல் தரும் “ஆடுதுறை 27’ என்ற நெல்ரகம் அறிமுகப்படுத்தியபோது, சாகுபடி குறித்த விவரங்களைச் சந்தேகங்களை விவசாயிகளுக்கு மிகவும் விளக்கமாக இந்நிகழ்ச்சி வழியாகச் சென்னை வானொலி வழங்கியது. அதனால் அவ்வகை நெல் “ரேடியோ நெல்’ என்றே வழங்கப்பட்டது. இப்பண்ணை இல்லம் நிகழ்ச்சியில், தொடக்கத்தில் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் பங்கு பெற்றுள்ளார் என்பது கூடுதல் செய்தி.

சேர்ந்திசை: சென்னை வானொலியில் எப்போதுமே இசைக்கு முக்கியத்துவம் கொடுப்பதுண்டு. கர்நாடக இசை, திரைப்படப் பாடல்கள் அதிகம் ஒலிபரப்பப்பட்டாலும் மெல்லிசைப் பாடல்களும் ஒலிபரப்பப்பட்டன. இதற்கென டி.ஆர்.பாப்பா தலைமையில் குழு ஒன்று பாடல்களை உருவாக்கினர்.
நாட்டுப்பற்று, ஒற்றுமை, உழைப்பின் உயர்வு பாடல்களைத் தேர்வு செய்து இசையமைப்பாளர் எம்.பி. சீனிவாசன் தலைமையிலான சேர்ந்திசைக் குழுவினரால் இசையமைத்து “சேர்ந்திசை’ என்ற பெயரில் ஒலிபரப்பினர். இந்நிகழ்ச்சியில் குரலுக்கும் வார்த்தைகளுக்கும்தான் முக்கியத்துவம் வழங்கப்பட்டது. வாத்தியங்களுக்கல்ல.

வானொலி அண்ணா: குழந்தைகளுக்காக, சென்னை வானொலி நிலையம் ஒலிபரப்பிய நிகழ்ச்சி “பாப்பா மலர்’ இந்நிகழ்ச்சியை நடத்தியவர்கள் “வானொலி அணணா’ என்று எல்லோராலும் அறியப்பட்டனர். வானொலி அண்ணாவாக வலம்வந்தவர்களில் அய்யாசாமி, கூத்தபிரான், என்.சி. ஞானபிரகாசம் போன்றவர்கள் முக்கியமானவர்கள்.
பெற்றோரைப் பிரிந்திருந்த குழந்தைகள் மீண்டும், சென்னை வானொலியால் ஒன்று சேர்ந்த நெகிழ்ச்சியான சம்பவமும் நடைபெற்றுள்ளது. 1994ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாள் “சிறுவர் சோலை’ எனும் நிகழ்ச்சியை ஒலிபரப்பினர். நிகழ்ச்சியைப் பொறுப்பேற்று நடத்தியவர் வானொலி அண்ணா ஞானபிரகாசம். அன்றைய நிகழ்ச்சியில் அரும்பாக்கத்தில் செயல்பட்டுவந்த “அரும்பு இல்லம்’ எனும் ஆதரவற்ற பெற்றோரைப் பிரிந்து வாழும் சிறுவர்களின் இல்லத்தில் உள்ள சிறுவர்களை நேர்காணல் செய்து ஒலிபரப்பப்பட்டது. அதனை கேட்டு திண்டிவனத்திலிருந்து இரு பெற்றோர் வானொலி நிலையத்தினைத் தொடர்பு கொண்டு அந்நிகழ்ச்சியில் ஒலித்த சிறுவர்களின் குரல் காணாமல் போன தங்களது மகன்களின் குரலைப் போன்று உள்ளதாகக் கூறினர். அடுத்த நாள் அவர்களை நிலையத்திற்கு வரவழைத்து அவர்களை அரும்பு இல்லத்திற்குக் கூட்டிச் சென்று சிறுவர்களைப் பெற்றோருடன் சேர்த்து வைத்தது சென்னை வானொலி.

ஆரோக்கிய பாரதம்: மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை வழங்கும் பல்வேறு தேசிய நலத்திட்டங்களை மக்களுக்கு“ கொண்டு செல்லும் நிகழ்ச்சி “ஆரோக்கிய பாரதம்’. காசநோய் தடுப்புத்திட்டம், தேசிய கண்பார்வை இழப்புத் தடுப்புத்திட்டம், தேசிய தடுப்பூசிகள் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களைப் பற்றியும் திட்டங்களின் பலன்களைப் பற்றியும், அந்தந்தத் துறையைச் சேர்ந்த வல்லுநர்கள், மருத்துவர்கள் மூலமாக விளக்கங்கள் கொடுத்து விழிப்புணர்வினையும் இந்நிகழ்ச்சியின் மூலம் வானொலி மக்களிடையே ஏற்படுத்துகிறது.

பொக்கிஷங்கள்: சென்னை வானொலி நிலையத்தில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல மேதைகளின் அரிய குரல் பதிவுகள் இன்றும் பேணிப் பாதுகாக்கப்படுகின்றன. குறிப்பாக ராஜாஜி, பம்மல் சம்பந்த முதலியார், பெரியார், காமராஜர், சர்.சி.பி. ராமசாமி ஐயர், எஸ். சத்தியமூர்த்தி, ருக்மணிதேவி அருண்டேல், சரோஜினி நாயுடு போன்ற தலைவர்களின் குரல்கள் அடங்கிய பதிவுகள் இங்கே உள்ளன.
அனந்தராம தீட்க்ஷிதர், கிருபானந்தவாரியார், வாகீச கலாநிதி கி.வா. ஜகந்நாதன், கி.ஆ.பெ.விஸ்வநாதம், கீரன் ஆகியோரது மேடைப் பேச்சுக்கள் அடங்கிய பதிவுகளும் இங்கே பாதுகாக்கப்படுகின்றன. கிருபானந்த வாரியாரது பதிவுகள் மட்டும் நூற்றுக்கும் மேல் உள்ளன.
எம்.ஜி.ஆர். கண்ணதாசன், டி.எஸ். பகவதி, சிவாஜிகணேசன், பாரதிதாசன், கொத்தமங்கலம் சுப்பு, பி.எஸ். ராமைய்யா, டி.ஆர். மகாலிங்கம், கவிமணி ஆகியோரது குரல் பதிவுகளும் இங்கே உள்ளன.
கோட்டையில் ஆங்கிலேயக் கொடியினை இறக்கிவிட்டு இந்தியத் தேசியக் கொடியினைச் சுதந்திரத்திற்கு முன்பே ஏற்றிய பாஷ்யம் ஆர்யா அவர்கள் கொடி ஏற்றிய உடன் கோட்டையில் ஆற்றிய உரையின் அரிய பதிவு இன்றும் சென்னை வானொலி நிலையத்தில் உள்ளது.
இத்தகைய ஒலிக்களஞ்சியத்திலிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளை எடுத்துப் பவளவிழா சிறப்பு நிகழ்ச்சியாக “பவளப்பேழை’ எனும் பெயரில் கடந்த ஓர் ஆண்டாக ஒலிபரப்பி வருகின்றனர்.

பண்பலை: சென்னை வானொலியின் பண்பலை ஒலிபரப்பு வெறும்பொழுது போக்கு அம்சங்களை மட்டும் உள்ளடக்கியதாக இல்லாமல், கல்வி, தகவல்கள், பொழுதுபோக்கு என அனைத்து அம்சங்களையும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. செய்திகள் ஒலிபரப்பப்படும் ஒரே பண்பலை சென்னை வானொலியின் ரெயின்போ எஃப்.எம் தான்.
கல்விச் சம்பந்தமான ஆலேசானைகள், அறிவுரைகள், வழிகாட்டுதல்கள் அடங்கிய நிகழ்ச்சிகள், கலந்தாய்வு நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பப்படுகின்றன. வணக்கம் சென்னை, இது நம்ம ஏரியா போன்ற நிகழ்ச்சிகளில் அரிய தகவல்கள் கொடுக்கப்படுகின்றன.
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் திரைப்படப் பாடல்கள் மட்டுமல்லாது, கவிதை, கலந்துரையாடல்கள் போன்று பலதரமான நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன. மகளிர் மட்டும் எனும் நிகழ்ச்சியில் வித்தியாசமான சாதனைப் பெண்களை உலகுக்கு அறிமுகம் செய்கின்றனர்.
தேன்சிந்துதே வானம் எனும் நேயர் விருப்ப நிகழ்ச்சிக்கு, உள்ளூர் மட்டுமல்லாது செயற்கைகோள் மூலம் கேட்கும் மஸ்கட், நார்வே, சூடான், சவுதி அரேபியா, நைஜீரியா, ஆஸ்திரியா போன்ற வெளிநாட்டுத் தமிழர்களிடத்திலிருந்தும் தொலைபேசி அழைப்புகள் வருவது இந்நிகழ்ச்சியின் வெற்றி எனலாம்.
அகில இந்திய வானொலியின் சென்னை நிலையத்தின் 75ஆம் ஆண்டு நிறைவு விழாவில் தில்லி பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அலுவலர் ஜவஹர் சர்க்கார் பேசும்போது,
“அகில இந்திய வானொலியின் சென்னை நிலையம் ஒரு வானொலி நிலையமாக மட்டுமல்லாமல், பிற வானொலி நிலையங்களைக் காட்டிலும் மிகச் சிறந்த முறையில் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் வகையிலான நிகழ்ச்சிகளை மக்களுக்கு வழங்கி வருகின்றது. எனவே சிறந்த நிகழ்ச்சிகள் மற்றும் ஒலிப்பதிவுகளைப் பாதுகாக்கும் வகையில் இங்கு விரைவில் அதிநவீன ஆவணக் காப்பகப் பிரிவு அமைக்கப்படும். இந்த பிரிவில் அதிநவீன தொழில் நுட்பக் கருவிகள் பயன்படுத்தப்பட உள்ளன. அதனால் விரைவாக டிஜிட்டல் மயமாக்கப்படும். இந்தியாவிலேயே தில்லி நிலையத்திற்குப் பிறகு இரண்டாவதாகச் சென்னை நிலையத்திற்கு இந்த நவீனத் தொழில்நுட்பம் கொண்டுவரப்பட உள்ளது’ என்றார். இந்நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற, மூத்த, துவக்ககால, ஊழியர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், சென்னை வானொலி நிலைய கூடுதல் தலைமை இயக்குநர் (பொறுப்பு) க.பொ.ஸ்ரீனிவாசன், பிரசார் பாரதி உறுப்பினர் (ஊழியர்) பிரிகேடியர் (ஓய்வு) வி.ஏ.எம்.ஹூசேன், பெங்களூரு வானொலி மற்றும் தொலைக்காட்சி கூடுதல் இயக்குநர் ஜெனரல் ஆர்.வெங்கடேஸ்வரலு மற்றும் சென்னை வானொலி மற்றும் தொலைக்காட்சியின் இந்நாள், முன்னாள் ஊழியர்கள் பெருவாரியாகக் கலந்து கொண்டனர்.
பவளவிழா நினைவாக நினைவுத் தூண் ஒன்றும் சென்னை வானொலி நிலைய வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. அகில இந்திய வானொலியின் சென்னை நிலையம் பவள விழா கொண்டாடியதைத் தொடர்ந்து பவள விழா மலர் ஒன்றும் வெளியிடப் பட்டுள்ளது.
சென்னை வானொலியின் பவள விழாவினை சிறப்பிக்கும் வகையில் அஞ்சல்துழை சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டுள்ளது. இதனை அஞ்சல் துறையின் சென்னை வட்டாரப் பிரிவுத் தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் வெளியிட்டார்.
தென்னகத்திலேயே முதல் வானொலி நிலையமான சென்னை வானொலி நிலையத்தினை “தாய் நிலையம்’ என்று கூறலாம். சென்னை வானொலி நிலையத்தில் பயிற்சி பெற்றவர்கள் தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட பிற வானொலி நிலையங்களில் மட்டுமல்லாமல், லட்சத்தீவு மற்றும் போர்ட் பிளேர் போன்ற மற்ற இந்திய வானொலி நிலையங்களையும் நிர்வகிக்கும் பொறுப்புகளில் இடம்பெற்றனர்.
கடந்த 75 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மட்டும் 11 வானொலி நிலையங்கள் தொடங்கப்பட்டு இயங்கி வருகின்றன. ஒவ்வொரு வானொலி நிலையமும் பண்பலை ஒலிபரப்பு உட்பட பல்வேறு அலைவரிசைகளில் பலவிதமான நிகழ்ச்சிகளை ஒலிபரப்பு செய்து நாட்டு மக்களுக்குச் சேவை செய்து வருகின்றது.

- எஸ்.சங்கரநாராயணன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sudha.T - California,யூ.எஸ்.ஏ
18-ஆக-201303:26:48 IST Report Abuse
Sudha.T ஆறுவது சினம் கட்டுரை மிகவும் பயனளிப்பதாக உள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X