சென்னையில் கடந்த ஐந்து வருடங்களாக ‘சென்னை வானவில் விழா’ நடைபெற்று வருகிறது. 2009ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு ஜூன் மாதமும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் இந்த விழாவை ஒழுங்கு செய்துகொண்டு வருகிறோம். சர்வதேச மொழியில் லிநிஙிஜி என்று சுருக்கமாகக் குறிப்பிடப்படும் சமூகத்தினரே நாங்கள் - Lesbian, Gay, Bisexual, and Transgender / Transexual persons. தமிழில் ‘ஓரினப்புணர்ச்சி’, ‘அலி’, ‘ஒன்பது’, ‘பொட்டை’ போன்ற கேலிச் சொற்களை நிராகரித்து, எங்களைச் சுட்டும் புதிய மொழியை ஏற்று நிற்கிறோம் - ஒரு பாலீர்ப்பு கொண்டோர், இரு பாலீர்ப்பு கொண் டோர், பால் நிலை கடந்தோர். தொடர்ந்து எங்களால் வெவ்வேறு விதங்களில் கற்பனை செய்துகொள்ளப்படும் மொழியில் சொல்ல வேண்டுமானால்: நங்கைகள், நம்பிகள், திருநங்கைகள், திருநம்பிகள்.
இவை எவையும் முற்றுப் பெற்றுவிட்ட மொழி விளையாட்டுக்கள் அல்ல. காலங்காலமாக எங்களுக்கென, நாங்கள் ஏற்கும், எங்களுக்குரிய மதிப்பை நல்கும், எங்கள் இருப்பை அங்கீகரிக்கும் மொழி இருந்திராத நிலையில், நாங்கள் எங்களை எப்படி அழைத்துக்கொள்ளப் போகிறோம் என்ற தீர்மானமும் ஒரே நாளில் ஏற்பட்டு விடாது. ஆனால் ஒன்று நிச்சயம்: ஓரினச்சேர்க்கையாளர் என்ற அடையாளப் பெயரை நிராகரிக்கிறோம். ஏனெனில் இது உடற்சேர்க்கை மட்டும் குறித்த வாழ்வு நிலை அன்று. விழைவு, இச்சை, காதல், உறவு போன்ற நுண்ணுணர்வுகளையும் உள்ளடக்கியது. திருநங்கைகளைக் குறிக்க ‘அலி’, ‘ஒன்பது’ போன்ற அடையாளச் சொற்களைப் பயன்படுத்துவது தவறு என்று அறிந்துகொண்டுள்ள தமிழ் ஊடகங்களும் அறிவுஜீவிச் சமூகமும் ‘ஓரினச்சேர்க்கையாளர்’ என்று சொல்வதில் உள்ள அவமதிப்பையும் விரைவில் உணர்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் ஏன் இந்த வானவில் விழா? ஆண்களும் பெண்களும், திருநங்கைகளும், திருநம்பிகளும் எப்படி ஒரு சமூகக் குழுவாக தங்களை ஒருங்கிணைத்துக்கொள்ள இயலும்? எதற்காக? எதன் அடிப்படையில்? இவர்கள் ஒவ்வொருவரின் பிரச்சினைகளும் வாழ்வனுபவங்களும் வெவ்வேறாக இருப்பனவே. இவர்கள் எந்தப் புள்ளிகளில் இணைகிறார்கள்? எந்தக் குறிக்கோள்களை எட்ட? பாலியல்பு (sexuality) என்பதை அடையாள அரசியலாக முன்னிறுத்த வேண்டியதன் அவசியம் என்ன? மேற்கூறிய அடையாளப் பட்டியலில் திருநங்கைகளுக்கும் திருநம்பிகளுக்கும் பிரச்சினையாக இருப்பது அவர்களுடைய பாலினம் (gender) தானே; இவர்களும் ஒருபாலீர்ப்பாளர்களும் இணைந்து செயல்படுவதன் காரணம் என்ன? பாலினத்திற்கும் பாலியல்பிற்கும் உள்ள தொடர்பு என்ன? நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும் நிலையில் இவற்றை ஒரு உரிமைசார் அரசியலாகக் கையிலெடுப்பது அவசியமா? இவை அனைத்தும் மேலை நாட்டுப் பண்பாட்டு இறக்குமதிகள் என்ற குற்றச்சாட்டிற்கு என்ன பதில்? இந்தியாவில் இது குறித்த வழக்கு ஒன்று தில்லி உயர்நீதிமன்றத்திலும் பின் உச்சநீதிமன்றத்திலும் நடைபெற்றதல்லவா? அதன் பின்னணி என்ன? பாலியல்பிற்கும் நீதித்துறைக்கும் என்ன சம்பந்தம்? மாற்றுப் பாலியல் அடையாளங்கள் வேற்று நாட்டு இறக்குமதிகள் இல்லை எனினும் இங்குள்ள பாலியல் அரசியலுக்கு ஒரு சர்வதேச வரலாற்றுப் பின்னணி இருக்குமல்லவா? அது என்ன? பெண்களின் பாலியல் அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்குத்தான் பெண்ணியம் இருக்கிறதே. பின் ஏன் மாற்றுப் பாலியல் கொண்ட பெண்கள் வேறொரு அரசியலையும் முன்வைக்கிறார்கள்? திருநங்கைகள் பெண்கள் எனின் அவர்களுக்குப் பெண்ணியத்தில் இடம் இருக்கிறதா? - இவை போன்ற எண்ணற்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கவே இந்தத் தொடரை எழுதுகிறேன்.
தீவிரமான விவாதங்களைக் கையிலெடுக்கும் முன், இந்த முதல் கட்டுரையில் ஒரு வரலாற்றுப் பின்னணியை வழங்க நினைக்கிறேன். முதலில் ஜூன் மாத நிகழ்வுகளைக் குறித்து:
நியூயார்க் நகரில் 1969ஆம் ஆண்டு நிகழ்ந்த நிகழ்வொன்றின் நினைவாகவும், அதிலிருந்து உருவான மாற்றங்களை நினைவிலிருத்தும் வழியாகவும் உலகெங்கிலும் ஜூன் மாதத்தின் இறுதி வாரம் ‘Pride Week’ - மாற்றுப் பாலியல்பு மட்டும் பாலியம் கொண்டோரில் சுயபெருமிதத்தைக் குறிக்கும் வாரமாகக் கொண்டாடப்படுகிறது. சென்னையில் ‘வானவில் விழா’ நிகழ்வுகள் இப்பொழுது ஜூன்-ஜூலை மாதங்களில் கொண்டாடப்படுவதற்கு வேறொரு காரணமும் உண்டு: 2009ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி தில்லி உயர் நீதிமன்றம் வெளியிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பொன்றை வரவேற்பதும் அதன் நோக்கமாகிறது.
1970களுக்கு முன் அமெரிக்காவில் (USA) மாற்றுப் பாலியல்பு கொண்டோர் உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகத்தினராகவும் சட்டப்படி தண்டனைக்கு உரியவர் களாகவுமே இருந்து வந்தனர். 1952ஆம் ஆண்டு அமெரிக்க மனநல மருத்துவர்களின் சங்கம் (American Psychiatric Association - APA) தனது மருத்துவப் பட்டியலில் ஒருபாலீர்ப்பை ஒரு மனப் பிறழ்வாகக் குறிப்பிட்டது. பல ஆய்வுகளுக்குப் பின் 1973ஆம் ஆண்டில் தான் இச்சங்கம் ஒருபாலீர்ப்பு ஒரு மன நோயல்ல என்று அறிவித்து அதனைத் தன் நோய்ப் பட்டியலிலிருந்து நீக்கியது. அதுவரை அங்கு ஒருபாலீர்ப்பு கொண்டோர் மருத்துவ சிகிச்சை மூலம் ‘குணப்படுத்தப்பட’ வேண்டியவர்களாகக் கருதப்பட்டனர். எண்ணற்றோர் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு, பலர் மிகக் கொடூரமான சிகிச்சை முறையான மின் அதிர்வு சிகிச்சைக்கும் உள்ளாக்கப் பட்டனர். மருத்துவத்தின் கண்ணோட்டம், சட்டத்தின் பார்வை, சமயம் சார்ந்த கருத்துக்களின் தாக்கம், சமூகத்தில் மேலோங்கி நிற்கும் குழுவினரின் ஒழுக்கப் பண்பு ஆகியவை அனைத்தும் எல்லா சமூகங்களிலும் மாற்றுப் பாலியல்பு கொண்டோரை ஒடுக்கியாளப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன (இந்தியாவில் இது எப்படி செயல்படுகிறது என்பதை பின்வரும் கட்டுரைகளில் பார்ப்போம்).
இவை தவிரவும் 1950களிலும் 1960களிலும் அமெரிக்காவில் ஒருபாலீர்ப்பு கொண்டோருக்கு எதிராக வேறொரு அரசியல் சூழ்நிலையும் நிலவியது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஆண்டுகளில், உள்ளிருந்து அமெரிக்காவை வீழ்த்த கம்யூனிஸ்டுகளுடன் இணைந்து செயல்படுபவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள் மிகுந்த துன்புறுத்தலுக்கு உள்ளாயினர். ஜோசஃப் மெக்கார்த்தி என்ற அமெரிக்க செனட்டர் கம்யூனிஸ்டுகள் அல்லது அவர்களது ஆதரவாளர்கள் என்று கருதப்பட்டவர்களை எல்லாத் துறைகளிலும் வேட்டையாடி, வெளியேற்றி, தேசத் துரோகிகள் என்று பெயரிட்டு, தீவிரமான விசாரணைகளுக்கு உட்படுத்தி, அவர்களது தினசரி வாழ்க்கையை நரகமாக மாற்றியது வரலாறு. (அமெரிக்காவின் தலைசிறந்த இலக்கிய ஆளுமைகளுள் ஒருவரான நாடக ஆசிரியர் ஆர்தர் மில்லர் தனது ‘தி க்ரூசிபில்’ (1953) என்ற நாடகத்தில் 17ஆம் நூற்றாண்டின் இறுதியில் சூனியக்காரிகள் என்று கருதப்பட்டு தூக்கிலிடப்பட்டவர்களின் கதையைச் சித்தரிப்பதன் மூலமாக மெக்கார்த்தியின் இந்தக் கம்யூனிஸ்ட் வேட்டை குறித்த விமர்சனத்தை முன் வைத்தார்). இந்த ஆண்டுகளில் அமெரிக்க அரசு ஒருபாலீர்ப்பு கொண்டவர்களை நாட்டுப் பாதுகாப்பினை சமரசம் செய்யக் கூடியவர்களாக அறிவித்தது. அவர்கள் மனநலம் பிறழ்ந்தவர்கள், ஆதலால் அவர்கள் எளிதில் மிரட்டப்பட்டு இரகசியம் பாதுகாக்கும் தன்மையை இழந்து விடுவார்கள் என்று அமெரிக்க அரசும் உளவுத்துறையும் நம்பின. இதனைக் காரணமாகக் கொண்டு எண்ணற்றோர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். பலருடைய பணி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. பலர் நீண்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இத்தகைய பீதி குறைந்துவிட்ட பின்னரும் ஒருபாலீர்ப்புக் கொண்டோர் மீது செயல்படுத்தப்பட்ட அடக்குமுறைகள் குறையவில்லை. அவர்கள் செல்லும் மதுபானக் கடைகள் அடிக்கடி ரெய்டுகளுக்கு உள்ளாயின, சில இழுத்து மூடப்பட்டன. அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்த பேராசிரியர் எவரும் ஒருபாலீர்ப்பு கொண்டவர் என்று சந்தேகிக்கப்பட்டால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இதுவே நாம் கவனிக்க இருக்கும் முக்கிய நிகழ்விற்கான சமூகப் பின்னணி, அரசியல் சூழ்நிலை.
‘ஸ்டோன்வால் இன்’ போராட்டங்கள்
1969 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் தேதி, நியூயார்க் நகரில் க்ரெனிஷ் என்ற இடத்தில் உள்ள ‘ஸ்டோன்வால் இன்’ என்ற மதுபான அரங்கில் நியூயார்க் நகர போலீஸ் ரெய்டு நடத்தியது. பலமுறை காவல் துறையினரால் ரெய்டுகளுக்கு உட்படுத்தப்பட்டு, அவமதிக்கப்பட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, துன்புறுத்தப்பட்டு சலிப்படைந்திருந்த மக்கள் இந்தக் குறிப்பிட்ட நிகழ்வில் தங்கள் பொறுமையின் எல்லையை அடைந்தனர். குறிப்பாக, பெண் உடையில் இருந்த ஆண்களும், திருநங்கைகளும் இந்தப் போராட்டத்தை முன் நின்று நிகழ்த்தினர். ‘ஸ்டோன்வால் இன்'னில் காவல் துறையினரை மக்கள் எதிர்த்து நிற்பதை அறிந்து அருகில் இருந்த பார்களிலிருந்து மக்கள் திரளத் தொடங்கினர். குறிப்பாக வசதி குறைந்த வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள் செல்லும் இடமான ‘ஸ்டோன்வால் இன்’ போலீசாரால் தேர்வு செய்யப்பட்டதும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. தங்களுக்கு ஆதரவு தரும் ஒரே இடமான ‘ஸ்டோன்வால் இன்’ தங்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிடும் என்ற ஆத்திரமும் அங்குக் குழுமியிருந்த மக்களை பொங்கியெழச் செய்தது. காவல் துறையினர் எதிர்பார்த்த விதத்தில் அந்த ரெய்டு நிகழவில்லை. பலமான எதிர்ப்பை சந்தித்தனர். காவல் துறையினருள் பலரை மதுபான அரங்கை விட்டு வெளியேற மக்கள் அனுமதிக்கவில்லை. அவர்களை விடுவிக்க மேலும் பல வண்டிகளில் காவல்துறையினர் வரும்படி ஆயிற்று. அடுத்த பல நாட்களுக்கு இந்த மக்களெழுச்சி தொடர்ந்தது. ‘ஸ்டோன்வால் இன்னிற்கு’ அருகில் உள்ள தெருக்களிலும் பூங்கா ஒன்றிலும் மக்கள் திரண்டு, குரலெழுப்பி, தங்கள் ஒற்றுமையைத் தெரிவித்தனர்.
அமெரிக்க வரலாற்றில் மாற்றுப் பாலியல் கொண்டோர் சமூகத்தில் இத்தகைய எழுச்சி ஏற்பட்டது இதுவே முதல் முறை. உலக வரலாற்றிலும் ஒடுக்குதலையும் வன்முறையையும் எதிர்த்து இத்தகைய வலிமையுடன் இவ்வளவு எண்ணிக்கையில் மக்கள் திரண்டு போராடியது இதுவே முதல்முறை. இதற்கு முன் போராட்டங்களே இல்லை என்று கூறிவிட இயலாது. ‘ஸ்டோன்வால் இன்’ போராட்டங்களின் பிரும்மாண்டமே அவற்றை உலக வரலாற்றில் இத்தகைய முக்கிய இடத்தில் வைத்திருக்கின்றது.
இந்த மக்களெழுச்சியை நினைவுகூர்வதற்கே, அரசின் அடக்குமுறையின் சின்னமாக விளங்கும் காவல் துறையினரை எதிர்க்க சாதாரண மக்களுக்கு உள்ள சக்தியை நினைவில் நிறுத்தவே உலகெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் இறுதி வாரம் Pride வாரமாக, மாற்றுப் பாலியல் கொண்டோரின் சுய பெருமிதத்தைக் குறிக்கும் நாளாகக் கொண்டாடப்படுகிறது. 1970ஆம் ஆண்டில் முதல் முறையாக லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ மற்றும் நியூயார்க் நகரங்களில் மாற்றுப் பாலியல் கொண்டோர் ஊர்வலங்கள் நடைபெற்றன. இன்று அமெரிக்காவில் மட்டுமன்றி ஐரோப்பிய நகரங்களிலும், ஹாங்காங்க் போன்ற ஆசிய நகரங்களிலும், சிட்னி போன்ற ஆஸ்திரேலிய நகரங்களிலும் கூட ஜூன் மாதம் மாற்றுப் பாலியல்பு மற்றும் பாலினம் கொண்டோரால் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவிலும் பல நகரங்களில் ‘வானவில்’ விழாக்கள் ஜூன் மாதம் கொண்டாடப்படுகின்றன. பல நகரங்கள் வெவ்வேறு காரணங்களுக்காகவும், தனிப்பட்ட வரலாற்று நிகழ்வுகளை அனுசரிக்கவும் இப்பொழுது தமது ‘வானவில்’ விழாக்களை வெவ்வேறு மாதங்களில் கொண்டாடுகின்றன. ஆனால் Pride என்கிற உணர்வைக் குறிப்பதில் ‘ஸ்டோன்வால் இன்’னில் தொடங்கிய போராட்டமும் எழுச்சியும் இன்றுவரை தனிச்சிறப்புப் பெற்றிருக்கின்றன.
சென்னையில் இப்பொழுது ஜூன்-ஜூலை இரு மாதங்களுமே மாற்றுப் பாலியல்பு மற்றும் பாலினம் குறித்த நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு வருகின்றன. இந்த இருமாதக் கொண்டாட்டம் ‘ஸ்டோன்வால் இன்’ போராட்டங்களை மட்டுமல்லாமல் சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் ஏற்பட்ட ஒரு வரலாற்று நிகழ்வையும் முன்னிறுத்துகின்றன. 2 ஜூலை 2009 அன்று 'நாஸ் ஃபௌண்டேஷனுக்கு எதிரான யூனியன் ஆஃப் இந்தியா' என்ற வழக்கில் தில்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பே அந்த நிகழ்வு. 18 வயதுக்கு மேற்பட்ட எவரும் பரஸ்பர சம்மதத்துடன் ஈடுபடும் ஒருபால் உடலுறவு குற்றமாகாது என்பதே இந்தத் தீர்ப்பின் சாரம். இந்த வழக்கின் பின்புலம், அதன் முக்கிய விவாதங்கள், அதைக் குறித்து வைக்கப்பட்டுள்ள விவாதங்கள் போன்றவற்றை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.
அனிருத்தன் வாசுதேவன்