ஜி.டி.பிர்லாவின் இமாலய சாதனை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 செப்
2013
00:00

பிற்காலத்தில் பிர்லா குழுமம் எனகிற தொழில் சாம்ராஜ்யத்துக்குப் பிள்ளையார் சுழி போட்டவர் ஷிவ் நாராயண பிர்லா தான். இது நடந்தது 18வது நூற்றாண்டில். அவர் காலத்தில்தான், மார்வாரிகளின் பாரம்பரியமான வட்டிக்கடை வியாபாரத்திலிருந்து பருத்தி வியாபாரத்துக்கு ஷிவ் நாராயண பிர்லா மாறினார். புதிய தொழிலைச் செம்மையாகச் செய்வதற்காக, சொந்த ஊரான பிலானியிலிருந்து கல்கத்தாவுக்குப் போய்த் தங்கினார் அவர். வியாபாரத்தில் நல்ல லாபம் கண்ட பிறகு, பிலானிக்குத் திரும்பிச் சென்று அங்கு ஒரு பெரிய வீடு கட்டினார். அந்தக் கட்டிடம் இன்றும் “பிர்லா பங்களா’ என்ற பெயரில் விளங்குகிறது.
அவரது குடும்பத்தினரால் தத்து எடுக்கப்பட்ட பல்தேவ் தாஸ் பிர்லா என்பவரும் பூல் சந்த் சொடானி என்பவரும் கூட்டுச் சேர்ந்து “அபின்’ என்கிற போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டனர். கோடிக்கணக்கில் கொழுத்த லாபம் சம்பாதித்தார்கள் இவ்விருவரும். எனினும், பல்தேவ் தாஸ் பிர்லாவின் மூத்த சகோதரர் ஜூகல் கிஷோர் பிர்லா ஒரு சிக்கலில் சிக்கிக் கொண்டதால், 1916ல் மூன்று மாத காலம் தலைமறைவானார்.

மற்றொரு புறம், பல்தேவ் தாஸ் பிர்லாவின் மகன் ஜி.டி.பிர்லா என்கிற கனிஷ்யம் தாஸ் பிர்லா தலையெடுத்து, வியாபாரத்தைப் பல புதிய, புதிய தொழில்களில் விரிவுபடுத்தினார். ஆக, 19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் ஜி.டி.பிர்லாவால் தொடங்கப்பட்ட நவீன தொழில்கள்தான் இன்றும் பிர்லா குழுமங்களின் “கார்பொரேட்’ கம்பெனிகளாக ஆரோக்கியமாக வளர்ந்துள்ளன என்றால் மிக அல்ல. அவர்தான் வட்டிக் கடையிலிருந்து தொழிற்சாலைகளுக்கு முழுமையாக மாறினார். கல்கத்தாவிலேயே நிரந்தரமாகத் தங்கி வங்காளத்தில் பெரிய அளவில் நடைபெற்றுவந்த சணல் தொழிலில் ஈடுபட்டார். சணல் தொழில் ஜி.டி. பிர்லாவுக்குக் கை கொடுத்தது. அவரது முன்னேற்றத்தை ஐரோப்பிய சணல் கம்பெனிகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஆங்கிலேய அரசின் மூலம், ஆங்கிலேய கம்பெனிகம் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த கம்பெனிகளும் பிர்லாவுக்குத் தொல்லை கொடுத்தனர். ஜி.டி.பிர்லா அதை தாக்குப்பிடித்தார்.
விரைவிலேயே காற்று பிர்லாவுக்குச் சாதகமாக வீசத் தொடங்கியது. முதல் உலகப் போர் மூண்டது. இதன் தாக்கத்தால் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தது. அதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார் ஜி.டி.பிர்லா. அதன் விளைவாக அவரது தொழில் அசுர வேகத்தில் வளர்ந்தது.
உலகப் போர் முடிந்த பிறகு, 1919ல் ரூ.50 (ஐம்பது) லட்சம் மூலதனத்துடன் பர்லா சகோதரர்கள் லிமிடெட் என்கிற நிறுவனம் தொடங்கினார் ஜி.டி.பிர்லா. அதே ஆண்டில் குவாலியரில் ஜவுளி ஆலையைத் தொடங்கினார். இது பிற்காலத்தில் “ரயான்’ என்கிற “சிந்தடிக்’ ஆடைகள் பிரபலமடைய காரணமாக இருந்தது. 1926ம் ஆண்டில் ஜி.டி.பிர்லா பிரிட்டிஷ் இந்தியாவில் மத்திய சட்டசபையில் அங்கத்தினராகத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்டார். இப்படித்தான் அவருக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டது. இந்தியாவில் நீண்டகாலம் பிரபலமாக இருந்த “அம்பாசிடர்’ கார்களை உற்பத்தி செய்த “இந்துஸ்தான் மோட்டார்ஸ்’ தொழிற்சாலையை 1952இல் நிறுவினார் ஜி.டி.பிர்லா.
தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வந்த பிர்லா குழுமம், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, ஆங்கிலேய கம்பெனிகளுக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டங்களையும், ஜவுளி ஆலைகளையும் விலைபேசி வாங்கியது. அது மட்டும் அல்லாமல் சிமெண்ட், ரசாயனம், ரயான், உருக்குக் குழாய்கள் என நவீன துறைகளில் நுழைந்து வெற்றிக் கொடி நாட்டியது பிர்லா குழுமம்.

புதிய வங்கி: 1942இல் “வெள்ளையனே வெளியேறு’ கோஷம் விண்ணை முட்டியது. போராட்டத்துக்குப் பிறகு, மக்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வகையில், இந்திய மூலதனம், இந்திய மேலாண்மையைக் கொண்டு ஒரு புதிய வங்கியைத் தொடங்க வேண்டும் என்று எண்ணினார் ஜி.டி. பிர்லா. அதன் பயனாக உருவானதுதான் யுனைடெட் கமர்ஷியல் வங்கி (தற்போதைய யுகோ வங்கி). இது 1943ல் கல்கத்தாவில் தொடங்கப்பட்டது. 1969இல் மற்ற பெரிய வஙகிகளைப் போல் இதுவும் தேசியமயமாக்கப்பட்டது.

புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்கள்: பிலானியில் பிர்லா இன்ஸ்டிடூயுட் ஆஃப் டெக்னாலஜி 1964இல் தொடங்கினார். ஜி.டி.பிர்லா அதற்கு முன்பே 1943இல் ஜவுளி தொழில் நுட்ப மேம்பாட்டுக் கழகத்தை அவர் நிறுவியபோது, அது பெரும் வரவேற்பைப் பெற்றது. இவ்விரண்டு உயர் தொழில்நுட்பக் கழகங்கள் இன்று உலக அளவில் பேசப்படுகின்றன என்பது கண் கூடு.
இவை தவிர பல்வேறு நகரங்களிலும், சிற்றூர்களிலும், கல்லூரிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளும் பிர்லா நிர்வாகத்தினரால், இலவசக் கல்வி நிலையங்களாக நடத்தப்படுகின்றன.

காந்திஜியுடனான உறவு:
ஜி.டி.பிர்லா 1916லேயே காந்திஜியை நேரில் சந்தித்துள்ளார். அந்தச் சந்திப்பு காலப்போக்கில் மெல்ல, மெல்ல நட்பாகவும் தோழமையாகவும் மலர்ந்தது. பிற்காலத்தில், காந்திஜி எப்போது டெல்லிக்கு வருகை புரிந்தாலும், பிர்லா மாளிகையில் தங்குவதும், பஜனைகள் உள்ளிட்ட தனது காரியங்களை அங்கேயே மேற்கொள்வதும் வாடிக்கை ஆயிற்று. மகாத்மா காந்தி, கோட்சேயின் குண்டுக்கு இரையாகி, தனது இறுதி மூச்சு விட்டதும் பிர்லா மாளிகையில்தான் என்பது சோகம்.
சொல்லப்போனால், காந்திஜி தனது கடைசி 144 நாள்களை இந்த இல்லத்தில்தான் கழித்தார். 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி காந்திஜி நம்மைவிட்டுப் பிரிந்தார். அந்தக் கட்டிடம் அமைந்துள்ள சாலையின் பெயர் “தீஸ்’ (30) ஜனவரி மார்க் என்று பெயரிடப்பட்டுள்ளது. உலகிலேயே ஒரு சாலை. ஒரு தேதியின் பெயரில் அழைக்கப்படுவது இதுவாகத்தான் இருக்கும்!
மத்திய அரசு, இந்தக் கட்டிடத்தை 1971ல் கையகப்படுத்தி, அதை காந்திஜியின் நினைவு இல்லமாக மாற்றியுள்ளது; பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் இந்த நினைவாலயம், தில்லிக்கு வருகை புரியும் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளிடையேயும், தில்லி வாசிகளிடையேயும் மிகவும் பிரசித்தமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாடெங்கும் “பிர்லா மந்திர்’கள்: புதுதில்லி, ஐதராபாத் உள்ளிட்ட பல நகரங்களின் வெள்ளைப் பளிங்கு கற்களால் ஆன கோயில்களைப் பிர்லா குடும்பத்தினர் பிரம்மாண்டமான வகையில் அமைந்துள்ளனர். புதுதில்லியில் உள்ள பிர்லா மந்திரின் பெயர் லட்சுமி நாராயண் மந்திர் ஆகும். ஸ்ரீ விஷ்ணு மற்றும் ஸ்ரீ லட்சுமி விக்ரகங்கள் பிரதானமாக இடம் பெற்றிருந்தாலும், சிவபெருமான், கிருஷ்ண பரமாத்மா, கௌதம புத்தர் ஆகியோரது விக்ரகங்களும் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்மிகச் சொற்பொழிவுகள் நிகழ்வதற்காகவும் பஜனைகளுக்காகவும் கீதா பவனம் என்கிற சிறப்பு மண்டபமும் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது. ஏழரை ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள “லட்சுமி நாராயண் மந்திர் பல்தேவ் தாஸ் பிர்லா மற்றும் அவரது மகன் ஜூகல் கிஷோர் பிர்லா ஆகியோரால் 1933இல் கட்டத் தொடங்கி 1936இல் முடிவுற்றது. மகாத்மா காந்திஜி இந்தக் கோவிலை திறந்து வைத்தார். வருடத்தில் 365 நாள்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பயணிகளும் வந்து வழிபடுகிறார்கள் என்றாலும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி அன்றும் தீபாவளி அன்றும் பக்தர்களின் கூட்டம் கணக்கில் அடங்காது.’

பிர்லா மந்திர், ஐதராபாத்:
இது தென் இந்திய, ராஜஸ்தான் மற்றும் ஒரிசா கட்டிடக்கலைகளையும், பாணியையும் உள்ளடக்கியதாகக் கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளும் ஸ்ரீபத்மாவதி தாயாரும் எழுந்தருளியுள்ள இந்தக் கோயில் 280 அடி உயரமுள்ள குன்றின்மீது அமைக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் கட்டப்பட்ட இந்த ஆலயத்தை 1976ல் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் ஸ்வாமிகளான ஸ்ரீரெங்கநாதானந்த சுவாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. சிவபெருமான், பார்வதி தேவி, பிரம்மா, சரஸ்வதி, விநாயகர், ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ சாய்பாபா ஆகிய ஸ்வாமிகளின் விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன என்பது குறிபபிடத்தக்கது. ஐதராபாத் செல்லும் எவரும் இந்தக் கோயிலுக்குப் போய் தரிசனம் செய்யாமல் இருப்பதில்லை.

கிருஷ்ண குமார் பிர்லா (தோற்றம் 11.11.1918 மறைவு 30.08.2008): ஜி.டி.பிர்லாவின் இரண்டாவது மகன் கிருஷ்ணகுமார் பிர்லா, ராஜ்ய சபையின் அங்கத்தினராக இருந்தார். பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். பிலானி பி.ஐ.டி.எஸ். தொழில்நுட்பக் கழகத்திற்கு 1983 முதல் 2008 வரை - அதாவது அவர் மறையும் வரை - வேந்தராக பொறுப்பு வகித்தார்.

ஆதித்திய விக்ரம பிர்லா: ஜி.டி.பிர்லா 1983ல் மறைவதற்கு முன், தனது பெரும்பாலான கம்பெனிகளையும் ஆஸ்திகளையும் பேரன் ஆதித்திய விக்ரம் பிர்லாவுக்கு எழுதி வைத்திருந்தார். இதன்மூலம் பசந்த் குமார் பிர்லாவின் மகனான ஆதித்தியா விக்ரம் பிர்லா கிட்டத்தட்ட 13800 கோடி ரூபாய் மிதப்புடைய பிர்லா தொழில் சாம்ராஜ்யத்துக்கு அதிபரானார். இவர் இந்தியாவின் மிகத்திறமை வாய்ந்த தொழில் அதிபர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்தான் இந்துஸ்தான் கேஸ் கம்பெனியை பன்மடங்கு விரிவுபடுத்தினார். நலிவடைந்திருந்த இந்தோ - கல்ஃப் உரம் மற்றும் ரசாயன கம்பெனியை வளம் மிக்க கம்பெனியாக மாற்றிக் காட்டினார். ஆனால், 1993லேயே அவருக்கு உடல்நலம் குன்றியது. புற்றுநோய்க்கு ஆளான அவர் அமெரிக்காவில் பால்டிமோர் நகரில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காமல் ஆதித்தியா பிர்லா தனது 51வது வயதிலேயே 1995ல் மரணமடைந்தார்.

குமார் மங்கலம் பிர்லா: ஆதித்தியா பிர்லாவின் அகால மரணத்திற்குப் பிறகு அவரது மகன் குமார் மங்கலம் பிர்லா, ஆதித்திய பிர்லா குடும்பத்துக்கு 1195இல் அதிபரானார். 28 வயதிலேயே, ஒரு மிகப் பெரிய தொழில் சாம்ராஜ்யத்திற்குப் பொறுப்பேற்க இவரால் முடியுமா என்று உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பலர் புருவங்களை உயர்த்தினார்கள்.
மும்பை பல்கலைக்கழகத்தில் பிகாம்/ஐ.சி.ஏ.ஐ. கழகத்தின் மூலம் சார்டர்டு அக்கவுண்டன்ட் மற்றும் லண்டன் மாநகரில் பெற்ற எம்.பி.ஏ. ஆகிய கல்வித் தகுதிகள் இவருக்குக் கை கொடுத்தன.
ஜவுளி, ஆயத்த ஆடைகள், சிமெண்ட், அலுமினியம், உரம், இன்சூரன்ஸ், தகவல் தொழில்நுட்பம், பி.பி.ஓ. மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள் என பல்வேறு புதிய துறைகளில் நுழைந்து வெற்றி பெற்றார் இளைஞர் குமார் மங்கலம் பிர்லா.
இவர் பொறுப்பேற்றபோது எகிப்து, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட சில நாடுகளில் மட்டுமே வியாபார அமைப்புகள் இருந்தன. தற்போது ஆஸ்திரேலியா, துபாய், வடஅமெரிக்கா, கனடா, பிரேசில், இத்தாலி, ஸ்பெயின், ஹங்கேரி மற்றும் சீனா உள்ளிட்ட 40 நாடுகளில் பிர்லா குழுமத்தின் தொழில் விரிவடைந்துள்ளன. குழுமத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 14000 கோடியிலிருந்து, இவரது காலத்தில் ஒரு லட்சத்து, எண்பது ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
தனது முன்னோர்களைப் போலவே தொழிலைக் கடந்து சமுதாய நலன் மேம்பாட்டுக்கான பணியிலும், பங்களிப்பிலும் முனைப்பு காட்டுகிறார் இவர், இலவசக் கல்வி தரும் 42 பள்ளிகளில் 45000 மாணவர்களுக்குத் தரமான இலவசக் கல்வி, 8500 மாணவர்களுக்கு தகுதி அடிப்படையில் உயர்கல்விக்கு “ஸ்காலர்ஷிப்’ (உதவித்தொகை) லட்சக்கணக்கான கிராமவாசிகளுக்கு 18 மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை உள்ளிட்ட சமுதாய நலன்களுக்காகக் கணிசமான தொகையைத் தங்கள் லாபத்திலிருந்து ஒதுக்கீடு செய்திருக்கிறது இக்குழுமம்.
அண்மை காலமாக, கம்பெனிகள் சட்டப்படி, “கார்பொரேட் கம்பெனிகள் சமூகப் பொறுப்பு’ அடிப்படையில் தங்கள் லாபத்தில் ஒரு பகுதியைச் சமூக நலப்பணிகளுக்குச் செலவிட வேண்டும் என்கிற நியதி இருந்து வருகிறது. ஆனால், இதனை அறிமுகப்படுத்தியதற்குப் பல காலம் முன்பே பிர்லா குழுமம் போன்ற பல குழுமங்கள் இந்தியாவில் இந்த உயர்ந்த கோட்பாட்டைச் செயல்படுத்தி வருகின்றன என்பது பெருமிதத்துக்குரியது.
ஆக, கொள்ளுப்பாட்டனார் ஜி.டி.பிர்லா முதல் கொள்ளுப் பேரன் குமார் மங்கலம் பிர்லா வரை தொழில் துறையிலும் சரி சமுதாயத்துறையிலும் சரி சிகரங்களைத் தொட்டவர்கள் என்பதில் ஐயமில்லை.

எஸ். கோபாலகிருஷ்ணன்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X