திருந்துவார்களா? | கலைமகள் | Kalaimagal | tamil weekly supplements
திருந்துவார்களா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 செப்
2013
00:00

கீழ்த்திசையின் அடிவானம் இன்னும் வெளுக்கவில்லை.
மார்கழி மாதத்துக்கே உரிய அதிகாலைப் பனிக்காற்றின் குளுமை. கனத்த போர்வைக்கடியில் இதமான வெப்பத்தில் பொய்த்தூக்கம்.
மனச்சிறகுகளின் விசிறியடிப்பில் நெஞ்சில் நினைவுகளின் புரளல்.
“பிளாஸ்க்கில் காப்பி இருக்கு எழுந்து குடிங்க. நான் கோயிலுக்குப் போயிட்டு வந்துடுறேன்.’
கோபாலகிருஷ்ணன் போர்வை விலக்கி எழுந்த பொழுது தெரு விளக்கு வெளிச்சத்தில் மங்களம் நடை இறங்கிச் செல்வது தெரிந்தது.

மார்கழி முடியும்வரை இந்த கூத்துதான்.
பச்சைத் தண்ணியைத் தலையில் ஊற்றி, முற்றம் நிறைய கோலம் போட்டு, சுற்றிலும் செம்மண் பார்டர் இழுத்துவிட்டு, பெருமாள் தரிசனம்.
கோபாலகிருஷ்ணன் பல்தேய்த்து விட்டு வந்து காபியை டம்பளரில் ஊற்றி கட்டிலுக்கு வந்தார். ஒரு மடக்கு தான் குடித்திருப்பார். வாசலில் மாட்டு வண்டி நிற்கும் சத்தம்.
சென்னையிலிருந்து வரும் முதல் ரயிலில் யாரோ வந்திருக்கிறார்கள். காபி டம்ளரை மேஜைமீது வைத்துவிட்டு வீட்டு வாசலுக்கு வந்தார்
வண்டியிலிருந்து அவர் மகள் மைதிலி இறஙகி, வண்டிக்குள் படுத்திருந்த குழந்தையை எழுப்பி “சுந்தர் வீடு வந்திருச்சி எழுந்திரு...அதோ, பாரு தாத்தா’ என்றதும் கோபால கிருஷ்ணன் படியில் விரைவாக இறங்கித் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு, “வாம்மா, ஃபோனில் பேசியிருந்தா நானே ஸ்டேஷன் வந்திருப்பேன்’ என்றார்.
வண்டிக்காரன் பெட்டி, படுக்கைகளை ஒவ்வொன்றாக இறக்கினான்.
“அப்பா, நீங்க உள்ள போய் இவனைப் படுக்க வையுங்க... இதோ பணம் கொடுத்தவிட்டு வந்துவிடுகிறேன்’ கோபாலகிருஷ்ணன கூடத்திற்கு வந்து குழந்தையைக் கட்டிலில் படுக்க வைத்து ஃபேனைச் சுருக்கமாகச் சுழலவிட்டார். பின் மகளுக்கு உதவியாகப் பெட்டி படுக்கைகளைக் கொண்டு வந்த ஹாலில் வைத்தார்.
“என்னம்மா, மாப்பிள்ளைக்கு டெல்லி, மும்பாய், எங்காவது டிரான்ஸ்பரா? திடுதிப்புனு வந்திருக்க.’
“டிரான்ஸ்பரெல்லாம் இல்ல அங்கதான் இருக்கா’ என்று மொட்டையாகச் சொல்லிவிட்டு, “அம்மா, கோயிலுக்குத்தானே! வர்றப்பவே நெனச்சேன் மார்கழி மாதம்... போகாம இருப்பாளா... ரொம்ப பனி கொட்டுதே கொஞ்சம் விடிஞ்சப்பறம் போனா என்ன?’ என்றவாறு ஜன்னல் கதவைத் திறந்தாள்.
கோவில் கோபுரத்தில் தோரணம் தோரணமாய் வண்ண ஒளி மலர்கள் பளிச்சிட்டன.
“அப்பா, கோபுர அலங்காரமெல்லாம் பிரமாதமாயிருக்கு’ என்றவள் பெட்டியைத் திறந்து சோப்பு டப்பா, துண்டு முதலியவற்றை எடுத்துக் கொண்டு பின்வாசல் கதவைத் திறந்து கொல்லைப்புறம் சென்றாள். கோபால கிருஷ்ணன் மனம் பின்னோக்கிச் சென்றது.
“மாப்பிள்ளைக்கு டெல்லியிலே அரசாங்க வேலை. வேலைக்குரிய மதிப்பும் மரியாதையும் பத்தி நான் சொல்ல வேண்டிதில்லை. உங்களுக்கே தெரியும், கோயில் உற்சவத்தில் நம்ம மைதிலியை அவங்க வீட்டார் எல்லாரும் பாத்தாச்சு... மாப்பிள்ளையும் பாத்திட்டார். பச்சைக் கொடியையும் விசிறிட்டார். இப்ப நந்து உங்க மைதானத்தில், என்ன சொல்லுறீங்க?’
ஐந்து வருடத்திற்கு முன்னால் கல்யாணத் தரகர் வீட்டிற்கு வந்த இதே கூடத்தில் அமர்ந்து அவர் கைபிடித்துச் சொன்னார்.
“பையன் பெரிய உத்தியோகத்தில் இருக்கார். ரொம்ப எதிர்பார்க்கலாமில்லையா! நான் ரிடையர்டு ஹெட்மாஸ்டர், பூர்வீகச் சொத்து கொஞ்சம் உண்டு. மைதிலி ஒரே பொண்ணு... எல்லாம் அவளுக்குத்தான் இருந்தாலும் தகுதின்னு பார்க்கும்போது...’ கோபாலகிருஷ்ணன் சொல்லி முடிப்பதற்குள் தரகர் குறுக்கிட்டார்.
“தகுதியில நாம் என்ன குறைச்சல். நம்ம மைதிலியும் எம்.ஏ. படிச்சிருக்கு. அடக்கம், ஒழுக்கம், அழகு இதுல எது இல்ல? எல்லாத்துக்கும் மேல அருமையாகக் கவிதை எழுதுமே. மைதிலி உட்கார தராசுத் தட்டு தரையைத் தொடும் சாமி. திறமையானவளாச்சே... நம்ம தகுதியை நாம குறைச்சிடலாமா? நீங்கள் சரின்னு சொல்லுங்க... ஐப்பசியில இங்க நாதஸ்வரம் ஒலிக்கும்.’
ஐப்பசியில் நாதஸ்வரம் ஒலித்தது.
பெரிய உத்தியோம். அடிக்கடி டிரான்ஸ்பர். மதுரை, திருச்சி, கோயம்புத்தூர். பிறகு பயிற்சிக்கு மீண்டும் வடக்கே.
அரிதாகக் காட்சி தரும் பறவைகள் போல எப்பொழுதாவது மாப்பிள்ளையும், பொண்ணும் வருவார்கள்.
நாற்காலியில் அமர்ந்த மறுநொடியே மாப்பிள்ளை கைக்கெடிகாரத்தை நோக்க ஆரம்பித்து விடுவார்.
“மைதிலி, நீ பேசிட்டு அப்புறம் வர்றியா. நான் டிராவலர்ஸ் பங்களா போறேன். மினிஸ்டர் சாம்ராஜ் காத்திட்டிருப்பார். எனக்கு மீட்டிங் இருக்கு. நிறைய ஃபைல் பார்க்கணும்?’
அவசரத்தை உணர்த்தும் வார்த்தைகளில் சிறிது உஷ்ணம் தெரியும்.
இருதலைக்கொள்ளி எறும்பாய்த் தவிக்கும் மகளின் நிலை கண்டு பெற்றோரின் நெஞ்சு பதறும்.
“சரிம்மா, நீ கௌம்பு, இன்னொரு தடவை வர்றபோது அம்மாட்ட நிறைய பேசலாம். புறப்படு தாயி, மாப்பிள்ளை கோவிச்சிடக் கூடாது’ மகளை துரிதப்படுத்துவார் கோபாலகிருஷ்ணன்.
படியிறங்கிக் காரில் ஏறும் பொழுது மகளின் கண்களில் நீர் ததும்பும். முகத்தில் தெரியும் வேதனை கோபால கிருஷ்ணன் நெஞ்சைத் தாக்கும்.
“பள்ளிக்கூடத்து வாத்தியார், தாலுகா ஆபீஸ் கிளார்க், இப்படி உத்தியோகம் பார்க்கிற மாப்பிள்ளையை வீட்டுக் கொண்டு வராம, ரொம்ப படிச்சவருன்னு தரகன் பேச்சை கேட்டு தலைக்கீழா நின்னு கல்யாணம் முடிச்சீங்க. எப்பவும் இங்க வந்தா காலில் வென்னீர் கொட்டல்தான். நாலு வார்த்தை மனங்குளிர பேசறதுக்குள்ள “புறப்படு புறப்படு’ன்னு கூடத்திலிருந்து ஜெபம். பொறந்த வீட்டுல குழந்தைக்கு இரண்டு நாள் தலைசாஞ்சு படுத்து பெத்தவகிட்ட பேச மனசு துடிக்குமே. இது கூட தெரியாம என்ன ஆபீஸர்... பொடலங்காய்.’
சமையலறையிலிருந்து கோபமும், குரல் கம்மலுமாய்ப் படபடவெனறு மங்களம் பொரிவது கேட்கும்.
“என்னை மாதிரி ஹெட்மாஸ்ட்டருன்னா ஸ்கூலுக்கும், வீட்டுக்கும் மட்டும் நடந்தே ஒத்தையடிப்பாதை போட்டுத் தடம் பதிச்சிடலாம். தேசத்தின் பொருளாதாரத்தை மாப்பிள்ளை பாக்குறாரு. அதோட பொறுப்பு பத்தி உனக்கு என்ன தெரியும்?’
“எனக்குத் தெரியல உங்களுக்குத் தெரிஞ்சா சரி. பிரசவம் கூட அவங்க வீட்டுலதானாம். லண்டனில் படிச்ச பெரிய டாக்டரம்மா “யாரும் துணைக்கு வேண்டாம் நானே பார்த்துக்கிடுறேன்னு’ சொல்லிட்டாளாம். லண்டனென் சந்திர மண்டலத்துக்கோ போய் வந்தவளாத்தான் இருக்கட்டுமே. பாரம் சுமக்கும் மகளோட வயிற்றைப் பரிவோடு பெத்தவ தடவினாலே சிசு சிலிர்த்துக்கிட்டு வெளிவந்துடும். தெய்வமே தாயா மாறி பிரசவம் பாத்ததா சொல்லுவாங்க... இங்க பெத்தவ துணையில்லாம் பேறுகாலம். எல்லாம் என் தலை எழுத்து.’
மறுபடியும் புலம்பல், அதைத் தொடர்ந்து விசும்பல்.
“அட, மைதிலி வந்திருக்காளா! சுந்தர் என் செல்லம்’ மங்களம் கோவிலிலிருந்து திரும்பி விட்ட குரல் கேட்டு கோபால கிருஷ்ணனின் மனதில் படலம் படலமாய் விரிந்த காட்சிகள் அறுந்து விட்டன.
பேரனை எடுத்த மடியில் படுத்த வைத்துத் தலையைத் தடவி கன்னத்தை வருடி, பிஞ்சு விரல்களை இதமாய் இழுத்துக் கண்களில் நீர் ததும்ப, “என் செல்லம், வெல்லக்கட்டி..’
“மங்களம்... பாவம், குழந்தை தூங்கட்டும், இரயிலுல வந்த களைப்பு. உன்னோட கொஞ்சலுல விழிச்சிடப் போகுது.’
“விழிக்கட்டும். நல்லா விழிக்கட்டும், பிரசவம் பார்க்க விடல, உத்திரத்தில் தொட்டில் கட்டி உறங்கத் தாலாட்டுப் பாடவிடல. அத்தி பூத்தது போல வந்திருக்கா. கழட்டி வைச்ச சக்கரத்தைக் காலுல மாட்டுறதுக்குள்ள கொஞ்சிடுறேன்.’
மங்களம் சொல்லி முடிப்பதற்குள் இடுப்புக் கீழ்வரை சொங்கும் ஈரத்தலை முடியைக் கோதிவிட்டவாறு வந்தாள் மைதிலி.
“வா மைதிலி... காலை டிபன் சாப்பிடுர வரை இருப்பியா இல்ல உடனே வண்டி ஏறிடுவியா. பெரிய அதிகாரியோட பொண்டாட்டினா பந்த பாசத்தை அறுத்திடணுமா? இல்ல சொந்தபந்தம் ஒட்டி உறவாடிரும்ங்கிற பயமா?’
மைதிலி சிரித்துக் கொண்டே அம்மா அருகில் நெருக்கமாக அமர்ந்தாள். பிரசாதத் தட்டிலிருந்த குங்குமத்தை எடுத்து நெற்றியிலும், வகிட்டிலும் வைத்துக் கொண்டே, “அம்மா, காலைக்கு அடை, அவியல் செய். சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. மதியம் என்ன சமைக்கணும்னு அப்புறம் சொல்றேன்’ என்றதும் மங்களத்தில் முகத்தில் மகிழ்ச்சி.
“இன்னிக்கு முழுக்க இங்க தான் இருக்கப் போறீயா! பெருமாளே, எங்க என் குஞ்சு நிரந்தரமா இந்தக் கூடு விட்டு பிரிஞ்சுடுச்சோன்னு தவிச்சேன். அடை அவியலென்ன அப்பம், அதிரசம் எல்லாம் ஒரு நொடியில் தயார் பண்ணிடுறேன்.’
மங்களம் எழுந்து சமையலறைக்குள் புகுந்தாள். மைதிலியும் தாயைப் பின் தொடர்ந்தாள். குழந்தை சிணுங்கி விட்டு விரல்களை வாயில் சப்பியவாறு திரும்பிப்படுத்துத் தூங்க ஆரம்பித்தது. கோபாலகிருஷ்ணன் வாசலில் பேப்பர்காரன் வீசி எறிந்த பேப்பரை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார்.
வெகுநாள்களுக்குப் பிறகு அறுசுவை மணம் சமையலறையிலிருந்து வெளிவர ஆரம்பித்தது.
காலை எல்லோரும் டிபன் சாப்பிட்டு முடிக்க ஒன்பது மணிக்கு மேலாகிவிட்டது.
“அம்மா, காலையில் சாப்பாடு கொஞ்சம் ஓவர். மதியம் வெறும் ரசம் சாதம் மட்டும் போதும்’ என்றவாறு கூடத்திற்கு வந்த மைதிலி, கோபாலகிருஷ்ணனைப் பார்த்து “அப்பா, நம்ம வக்கீல் மாமா ஊருலயிருக்காரா’ என்று கேட்டாள்.
“யாரு, ராஜசேகரன்தானே, இருக்கானே, நேத்து தாமிரபரணியிலே ரெண்டு பேரும் ஒண்ணா குளிச்சோமே. என்ன விஷயம்?’
“ஒண்ணுமில்லே விவாகரத்து பற்றி சில சந்தேகம் கேட்டுத் தெரிஞ்சுக்கணும்?’
“விவாகரத்தா! என்னடி கர்மம்... அது பத்தி நீ எதுக்குத் தெரிஞ்சுக்கணும்’ என்று கேட்டவாறு வந்த மங்களம், கூடத்தில் அமர்ந்து அரிவாள்மனையில் காய்கறி நறுக்க ஆரம்பித்தாள்.
சில நிமிடங்கள் எதுவும் பேசாமல் இருந்த மைதிலி, “அப்பா... அம்மா உங்களையும் தான், நான் சொல்லப் போறத கேட்டு அதிர்ச்சியடையக்கூடாது. விவாகரத்து எனக்குத்தான்... உங்கள் மாப்பிள்ளையோடு வாழப்பிடிக்கல’ என்றாள் அழுத்தமாக.
“என்னடி... வயத்தில நெருப்ப அள்ளிக் கொட்டுற.’
பதறி அழ ஆரம்பித்து விட்டாள் மங்களம்.
கோபால கிருஷ்ணன் அதிர்ச்சியை வெளிக்காட்டாமல் “என்னம்மா விவாகரத்தா? என்ன நடந்துச்சு?’
“நடக்கக்கூடாதது நடந்திருச்சு. உங்க மாப்பிள்ளை ஒரு துரோகி.’
“துரோகியா.. மாப்பிள்ளைக்கு வேற பொண்ணோட ஏதாவது தொடர்பா?’மெல்ல இழுத்தார் கோபால கிருஷ்ணன்.
“அப்பா வேற ஒருத்தியோடு தொடர்பு வெச்சிருந்தா உடல் சம்பந்தப்பட்ட முறையற்ற அரிப்புன்னு பொறுத்து நெஞ்சுக்குள்ள புழுங்கித் தவிச்சுக் கிட்டிருப்பேன். அதை வேற விதமா எதிர்த்திருப்பேன். மேலும் இது என்ன மட்டும்தான் பாதிக்கும். ஆனா உங்க மாப்பிள்ளை செய்யறது சமுதாய துரோகம்.’
“சமுதாய துரோகமா?’
“ஆமாம், சமுதாய துரோகம். தேசத் துரோகம்னு கூடச் சொல்லலாம். உங்க மாப்பிள்ளை லஞ்சம் வாங்குறார். அரசுப் பணத்தை இரண்டு அரசியல்வாதிகளோட சேர்ந்துக்கிட்டு நிறைய சுருட்டி பொண்டாட்டி பேருல, பையன் பேருல சொத்து சேக்குறாரு. காவேரிக் கரையில் வயல், தஞ்சாவூரில் தோப்பு, அடையாறில் விலை உயர்ந்த பிளாட் இப்படி அடுக்கிட்டே போகலாம். ரெண்டு கையையும் நீளமா நீட்டி நீட்டி வாங்கித் தள்ளுறாரு.’
“ஐயோ, பெருமாளே, இதென்ன கொடுமை. ஒரு பருக்கை சாப்பிட்டாலும் அது உழைச்ச காசுல கிøட்சதாயிருக்கணும்னு உங்க அப்பா சொல்லுவாறே. அவரோட மாப்பிள்ளை லஞ்சம் வாங்குறாரா, ஊரு உலகத்துக்குத் தெரிஞ்சா கேவலமில்லையா. படிப்பும் பதவியும் சொந்த பந்தங்களை தலை நிமிரல்ல வைக்கணும். நீ எடுத்துச் சொல்ல வேண்டியதுதானே.’
காய்களை நறுக்காமல் அரிவாள் மனையை ஒதுக்கி வைத்து மங்களம் புலம்ப ஆரம்பித்து விட்டாள்.
“அம்மா, சொல்லாம இருப்பேனா, சொன்னேன். அழுதேன்... ஏன், செத்துப் போறதாக் கூட பயமுறுத்தியாச்சு. எல்லாம் பாறையில தூவின விதை மாதிரி எந்தப் பலனும் தரல.’
“புருஷன் லஞ்சம் வாங்குறதுக்கு வீட்டுப் பொம்பளைங்கதான் காரணம்னு ஊருல உலகத்தில சொல்லுறது உண்டே. பழியும் பாவமும் உன் தலையிலும் விழுமே. கட்டுச் செட்டா ஊரே மெச்ச உன்ன நாங்க வளத்ததற்குப் பலனா? உழைக்காம வர்ற லஞ்சக் காசு குருட்டுப் பிச்சைக்காரன் திருவோட்டில திருடியதுக்குச் சமம்னு எங்க அப்பா சொல்லுவார்.’
“ஏம்மா மாப்பிள்ளையோட அப்பா, அம்மாகிட்ட போயி இது பற்றிச் சொல்லலாமில்லையா, ஒருக்கால் பெத்தவங்க சொன்னா பள்ளை திருந்தலாமே?’
மைதிலி பலக்கச் சிரித்தாள்.
பின், “அப்பா, அவங்க ஊருக்குப் போய் என் மாமனார், மாமியார் கிட்ட விலாவாரியா விளக்கி “உங்க பிள்ளை பாதை மாறிப் போறாரு புத்தி சொல்லி திருத்துங்க’னு சொன்னேன். அதுக்கு அவங்க அருமையா பதில் சொன்னாங்க. “நீ, ஒரு ஹெட்மாஸ்டர் மக. உங்க அப்பா “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்’னு கத்துத் தரலியா. இப்ப என் பையன் பக்கம் காத்து வீசுது. சம்பாதிக்கிறான். நானும் அரசாங்கத்தில வேலை பாத்தவன்தான். அப்ப என்கு கிடைச்ச சம்பளத்தில் இவ்வளவு பெரிய வீடு கட்ட முடியுமா? நூறு பவுன் போட்டு ரெண்டு மகள்களைக் கரை ஏத்த முடியுமா? எல்லாம் மேஜைக்குக் கீழே வாங்கின பணத்தாலதான் முடிஞ்சது. லஞ்சம் வாங்குறாரு தடம் தவறிப் போறாரு அப்படி இப்படி சொல்லிட்டு இந்த வீட்டுப் பக்கம் வராதே. எப்படி வாழணும்னு என் பையனுக்கு நாங்க நல்லாவே சொல்லித் தந்திருக்கோம்’ அப்படின்னு மேல ஒரு வரி என்ன பேச விடல’
“அப்பனுக்கு பள்ளை தப்பாம பிறந்திருக்கு’ மங்களம் தலையில் அடித்துக் கொண்டாள்.
“அப்பா, இந்தத் தேசம் யாரை நம்பி இருக்கு தெரியுமா? அரசியல்வாதிகளையா? இல்லப்பா. அதிகாரிகளை. ஓர் அதிகாரியாகணும்னா கல்வியும், திறமையும் வேணும். இந்தத் தேசத்தின் நாடி நரம்புகளே அவங்கதான். அவங்க கையில படியிற கரை பாரதத்தாயின் முகத்தில் படியிற மாதிரி. இந்தத் தேசத்தில கருமை படரலாமா? இந்தியாபவா அது லஞ்சக் காடு, வஞ்சக பூமின்னு அடுத்தவங்க ஏளனம் பேச இடம் கொடுக்கலாமா? கூடாதப்பா விடக்கூடாது. நேர்மையற்ற முறையில வந்த “நீசப் பணத்தோட நீங்க வீட்டு நடை ஏறினா நான் இறங்கிடுவேன்’னு ஒவ்வொரு வீட்டிலும் மனைவி சொல்லணும். நான் முதல்ல இறங்கிட்டேன். பொறுத்திருந்து பாருங்க எங்கள் வெற்றியை.’
“அப்ப, உன் எதிர்காலம்?’
“எதிர்காலம்... என்னப்பா புருஷன் இல்லேன்னா இருட்டுல வெளவால் மாதிரி முடங்கிடுவேன்னு பயப்படுறீங்களா. என் கல்வி, நீங்க கற்பித்த நல்லொழுக்கம் இரண்டும் தான் எனக்கு துணை, ஒரு நல்ல தேசம் இந்த இரண்டும் நிறைஞ்ச பிரஜையை எப்பவும் கைவிடாது. இடுக்கண் களையும் என் இந்தியா ஒரு நல்ல தேசம். அது என்னைத் தவிக்க விடாது’
சட்டையை மாட்டிக் கொண்டு வக்கீல் ராஜசேகரனைப் பார்க்க மகளுடன் புறப்பட்டார் கோபாலகிருஷ்ணன்.

- எட்டயபுரம் ராஜன்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X