ஒருவருக்குத் தன் நிறுவனத்தில் மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டு விட்டது. இழப்பு என்றால் அப்படி இப்படியான இழப்பு கிடையாது. சுமார் 100 கோடி ரூபாய் இழப்பு. தலையில் கையை வைத்து அப்படியே உட்கார்ந்து விட்டார் அவர். "இவ்வளவு பெரிய இழப்பை எப்படி ஈடுகட்டுவது?' என்ற கவலையே அவர் மனதைப் படாதபாடு படுத்திற்று.
மிகுந்த கவலையுடன் அந்த மாநகரின் பூங்கா ஒன்றிற்குச் சென்று பித்துப் பிடித்தவர் போல அமர்ந்தார். அப்போது அவர் அருகே பெரியவர் ஒருவர் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக இருப்பதைப் பார்த்த பெரியவர் காரணம் கேட்டறிந்தார்.
உடனே தன்னைப் பற்றி அவரிடம் எடுத்துக் கூறினார். அந்த ஊரில் மிகப்பெரிய பஞ்சாலை ஒன்றின் நிறுவனர் இந்த பெரியவர் என்பதை அறிந்து கொண்ட அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.
அப்போது பெரியவர் சொன்னார், ""இப்போது 100 கோடி ரூபாய் இருந்தால், உன் பிரச்னை சரியாகி விடுமா?'' என்று கேட்டார்.
அவரும் உற்சாகமாக, ""ஆமாம்,'' என்றார். உடனே பெரியவர் சற்றும் யோசிக்காமல், தன் கைவசமிருந்த செக் புத்தகத்தை எடுத்துக் கையெழுத்திட்டுக் கொடுத்தார். அதில் பெரியவர் குறிப்பிட்டிருந்த தொகை...
500 கோடி ரூபாய்!
""நீர் எதிர்பார்த்ததை விட அதிகமாகப் பணம் கொடுத்திருக்கிறேன். இதைப் பயன்படுத்தி உன் இழப்பை சரி செய்து நிறுவனத்தை நன்றாக நடத்து. ஆனால், ஒரு நிபந்தனை. சரியாக அடுத்த ஆண்டு இதே நாளில், இதே நேரத்தில் நான் இங்கு வருவேன். அப்போது இந்தப் பணத்தை நீ எனக்குத் திருப்பித் தந்துவிட வேண்டும்,'' என்றார் பெரியவர்.
இவரும் சந்தோஷமாக அதனைப் பெற்றுக் கொண்டு அலுவலகம் வந்தார். அந்த செக்கை தனது அலுவலக லாக்கரில் வைத்துப் பூட்டினார். அலுவலக முக்கிய அதிகாரிகளை அழைத்து, தன்னிடம் 500 கோடி ரூபாய் இருப்பதைச் சொன்னார். ஆனால், 100 கோடி ரூபாய் இழப்பு எவ்வாறு ஏற்பட்டது என்பது கண்டு பிடிக்கப்பட்டால் தான், அந்தப் பணத்தைத் தான் நிறுவனத்தில் முதலீடு செய்ய இருப்பதாகவும் உறுதிபடத் தெரிவித்தார்.
முதலாளியிடம் பணம் இருப்பதைத் தெரிந்து கொண்டதும், உயரதிகாரிகள் அனைவரும் நம்பிக்கையுடன், மீண்டும் உழைக்கத் தொடங்கினர். ஒருசில நாட்களிலேயே இழப்புக்கான காரணம் தெளிவாகக் கண்டுபிடிக்கப்பட்டு, அதன் ஓட்டைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. "இனிமேல் எந்தவிதமான பணக் கஷ்டம் வந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம்' என்ற திடநம்பிக்கையை பெரியவர் அளித்த செக் கொடுத்தது.
எனவே நிறுவனம் மறுபடியும் கனகம்பீரமாக எழுந்து நின்று முன்பைக் காட்டிலும் பன்மடங்கு உழைப்போடு சுறுசுறுப்பானது. பெரியவர் கொடுத்த பணத்தைத் தொடவே இல்லை.
ஒரு ஆண்டு கடந்தது. 100 கோடி ரூபாய் இழப்பு சரிசெய்யப்பட்டதோடு, 100 கோடி ரூபாய் அளவிற்கு லாபத்தையும், அந்த நிறுவனம் சம்பாதித்தது. சரியாகப் பெரியவரைச் சந்தித்து ஓராண்டு ஆகியிருந்தது. அவர் கூறியது போல அதே பூங்காவை நோக்கி இந்த நிறுவன முதலாளி சென்றார். பூங்காவில் சிறிது நேரம் பெரியவருக்காக காத்திருந்தார் .
குறிப்பிட்ட நேரத்தில் பெரியவரும் சரியாக அங்கு வந்து சேர்ந்தார். இவரைப் பார்த்து, ""என்ன சோகமாக இருக்கிறீர்கள்?'' என்று கேட்டார்.
""இல்லையே, நன்றாகத்தானே இருக்கிறேன். போன வருடம்தான் பிசினஸில் 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதால், சோகமாக இருந்தேன். ஆனால்...'' என்று அவர் பேசி முடிப்பதற்குள் பெரியவர் இடைமறித்தார்.
""100 கோடி ரூபாய் இழப்பா? கவலைப் படாதீர்கள். இதோ பிடியுங்கள் 500 கோடி ரூபாய்க்கான செக் தருகிறேன். இதை வைத்து உங்கள் இழப்பை ஈடுசெய்து கொள்ளுங்கள். ஆனால், அடுத்த ஆண்டு இதனை எனக்குத் திருப்பித் தந்துவிட வேண்டும்,'' என்று கூறியவாறு செக் புத்தகத்தைத் திறந்து எழுதத் தொடங்கினார் அந்தப் பெரியவர்.
இதைப் பார்த்த நிறுவன முதலாளிக்குக் குழப்பமாக இருந்தது. "இந்தப் பெரியவர் என்ன செய்கிறார்?' என்று புரியாமல் தவித்தார்.
அப்போது அங்கே படபடப்போடு நுழைந்த பெண்மணி ஒருவர், பெரியவரை அன்போடு அணைத்து மெல்ல அழைத்துச் செல்ல முற்பட்டார்.
அந்த முதலாளியோ மிகுந்த குழப்பத்தோடு அந்தப் பெண்மணியைப் பார்க்க, ""இவருக்கு சில ஆண்டுகளாக மனநிலை சரியில்லை. யாரைப் பார்த்தாலும் தன்னிடம் உள்ள பழைய செக் புத்தகத்தைக் கிழித்துக் கொடுத்து விடுவார்,'' என்று சொல்லியவாறு பெரியவரை அழைத்துச் சென்றார் அந்தப் பெண்மணி.
செல்லாத செக்கை வைத்துக் கொண்டு நிறுவனத்தை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்ல முடிந்தது நம்பவே முடியாத மிகப்பெரிய பிரமிப்பைக் கொடுத்தது அந்நிறுவன முதலாளிக்கு.
***