மானும், குதிரையும் அடர்ந்த புல்வெளி ஒன்றில் இரை தேடிக் கொண்டிருந்தன. அந்த நேரத்தில் திடீரென கடும் மழை பெய்யத் தொடங்கியது.
மானும், குதிரையும் மழையில் நனையாமல் அருகில் இருக்கும் குகைக்கு சென்று ஓரமாக ஒதுங்கி நின்றன.
""நண்பா, நாம் அருமையான புற்களை நன்கு ரசித்து, ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், அதற்குள் மழை வந்து விட்டதே, இனி மழை நின்ற பின்னர்தான் நாம் புற்களை சாப்பிட முடியும். ஆனால், மழை சீக்கிரமாக விடாது போன்று தோன்றுகிறதே!'' என்றது மான்.
""ஆமாம் நண்பனே! என்ன செய்வது? இந்த கடும் மழையில் நனைந்து கொண்டு நாம் இரை தேட முடியாது. மழை நின்ற பின்னர் தான் இரை தேட முடியும். அதுவரையிலும் நாம் சற்று அமைதியுடன் இந்தக் குகையிலேயே நிற்போம்,'' என்றது குதிரை.
மானும், குதிரையும் ஒன்றையொன்று பார்த்தபடி அமைதியுடன் நின்று கொண்டிருந்தன. மான், குதிரையின் எதிரே நின்று கொண்டிருந்தது. எனவே குதிரை மானின் முகத்தைக் கூர்ந்து கவனித்தது. மானின் தலையில் இருக்கிற கொம்புகளை கண்கள் மூடாமல் பார்த்தது குதிரை.
"அடேயப்பா! இந்த மானின் கொம்புகள் எந்த அளவுக்கு நீண்டு அழகாக இருக்கின்றன. நமக்கு இது போன்று கொம்புகள் இல்லையே. நம் தலையிலும் கொம்புகள் முளைக்க வேண்டும். இந்த மானிடம் யோசனை கேட்கலாம். ஆனால், இந்த மானானது அதனைத் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. அதனால், நாம் இதனைப் பற்றி வேறு யாரிடமாவது யோசனை கேட்டு, அதன்படி கொம்புகள் முளைக்கச் செய்ய முயற்சிப்போம்' என்று மனதில் எண்ணியது குதிரை.
அமைதியாக நின்ற குதிரையை ஏறிட்டது மான்.
""குதிரையே! உனக்குள் ஏதோ யோசித்துக் கொண்டிருக்கிறாய் போலத் தெரிகிறதே. நீ என்ன யோசிக்கிறாய் என்பதை நான் அறிந்து கொள்ளலாமா?'' என்று கேட்டது மான்.
""மானே, ஒன்றுமில்லை. மழை எப்போது விடுமென்று யோசிக்கிறேன்,'' என்றது குதிரை.
சிறிது நேரத்தில் மழையும் நின்றது. மானும், குதிரையும் குகையை விட்டு வெளியே வந்தன.
""நண்பா, மழைதான் நின்றுவிட்டதே, நாம் இருவரும் சென்று புற்களை மேயலாம்,'' என்றது மான்.
குதிரைக்கோ புற்களை மேய மனமில்லை.
""மானே, எனக்கு வயிறு நிறைந்து விட்டது. அதனால், என் இருப்பிடத்திற்கு திரும்புகிறேன். எனக்கு முக்கியமான வேலையொன்று இருக்கிறது,'' என்று கூறியபடி சென்றது குதிரை.
அந்த இடத்தை விட்டு வேகமாக வந்து கொண்டிருந்த குதிரை, வழியில் ஒரு கரடியைப் பார்த்தது. அந்தக் கரடியோ மிகவும் குறும்புக்கார கரடி. அது காட்டிலுள்ள மற்ற விலங்குகளிடம் அடிக்கடி குறும்பு செய்து கொண்டிருந்தது.
கரடியின் குணத்தையறியாத குதிரையும், அதன் அருகில் சென்றது.
""வா குதிரையே, நலமாக இருப்பாய் என்று நினைக்கிறேன். உன் முகத்தைப் பார்க்கிற வேளையில் ஏதோ ஒன்றை என்னிடம் சொல்ல வந்திருக்கிறாய் போலத் தெரிகிறது,'' என்றது கரடி.
""ஆமாம் கரடியாரே! சரியாக கண்டுபிடித்து விட்டீரே,'' என்றது குதிரை.
""எல்லாம் ஒரு அனுபவம்தான். சரி... சரி... நீ என்னைத் தேடி வந்த காரணத்தைச் சொல்,'' என்று ஆர்வமாகக் கேட்டது கரடி.
""கரடியாரே, நீ எனக்கொரு யோசனை கூற வேண்டும். நீர் கூறுகின்ற யோசனையில்தான் என்னுடைய எதிர்காலமே அடங்கி யிருக்கிறது,'' என்று உணர்ச்சிப் பெருக்கோடு கூறியது குதிரை.
""குதிரையே, நீ மிகவும் உணர்ச்சி வசப்படுகிறாயே. நான் உனக்கு என்ன யோசனை கூற வேண்டும்?'' என்று கேட்டது கரடி.
""கரடியாரே, நீர் மானைப் பார்த்திருப்பீரே! அந்த மானின் தலையில் அழகிய கொம்புகள் இருக்கிறதே. அதனைப் போன்று என் தலையிலும் கொம்புகள் முளைக்க வேண்டும். ஆனால், அந்தக் கொம்புகள் மானின் கொம்புகளை விட மிகவும் அழகானதாக இருக்க வேண்டும்,'' என்றது குதிரை.
கரடி சிறிது நேரம் யோசனை செய்தது.
"இந்தக் குதிரை தனக்குக் கொம்பு முளைக்க வேண்டும் என்று பேராசை பிடித்து அலைகிறது. அதனால் நாம் இதற்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்' என்று மனதுக்குள் நினைத்தது.
உடனே, நீண்ட நேரமாக யோசனை செய்வது போன்று நடித்தது கரடி.
""கரடியே! நீ எதற்காக யோசித்துக் கொண்டிருக்கிறாய்? உனக்கு ஏதாவது யோசனை தோன்றிவிட்டதா?'' என்று கேட்டது குதிரை.
""ஆமாம் குதிரையே, நீ கேட்டுக் கொண்ட படி உனக்குக் கொம்பு முளைக்க என்ன செய்வதென்று யோசனை செய்தேன். அதற்கு நல்லதொரு விடை கிடைத்தது. நான் கூறுகிற யோசனையை நீ கேட்பாயானால், கண்டிப்பாக உனக்குக் கொம்புகள் முளைத்துவிடும்,'' என்றது கரடி.
""சபாஷ் கரடியே, நீதான் அறிவுத் திலகமாயிற்றே. உன்னுடைய ஒப்பற்ற ஆற்றலைக் கண்டு எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நீ என்ன யோசனை கூறப் போகிறாய்?'' என்று ஆவலோடு கேட்டது குதிரை.
""குதிரையே, நாம் வசித்து வரும் இந்தக் காட்டிற்கு வடக்கு திசையில் நீர் நிறைந்த குட்டை ஒன்று இருக்கிறது. நீ அந்தக் குட்டையில் இறங்கி சிறிது நேரம் மூழ்கியிருக்க வேண்டும். உடலெல்லாம் சேறு ஒட்டிய நிலையில் இந்தக் காட்டைச் சுற்றி வலம் வரவேண்டும். நீ காட்டைச்சுற்றி வந்து கொண்டிருக்கிற வேளையிலேயே தானாக உனக்கு கொம்புகள் முளைத்துவிடும்,'' என்றது கரடி.
அதனைக் கேட்ட குதிரையோ துள்ளிக் குதித்தது.
""கரடியே! நீ எனக்கு அற்புதமான யோசனையை வழங்கினாய். உன்னுடைய யோசனைப்படி இதோ இப்போதே நான் குட்டையைத் தேடிச் செல்கிறேன்,'' என்று புறப்பட்டது குதிரை.
சிறிது நேரத்தில் குதிரை குட்டையை வந்தடைந்தது. வேகமாகக் குட்டையில் இறங்கி மூழ்கத் தொடங்கியது. சிறிது நேரம் நன்றாக மூழ்கி இருந்துவிட்டு குட்டையிலிருந்து கரை ஏறியது. குதிரையின் உடல் முழுவதும் சேறாகக் காணப்பட்டது. அதன் கண்கள் மட்டும் தெளிவாகத் தெரிந்தன. அது பார்ப்பதற்கு வித்தியாசமான விலங்கு போன்று இருந்தது. குதிரையோ மகிழ்ச்சியோடு குட்டையை விட்டு புறப்பட்டது.
"இப்போது நாம் இந்த காட்டைச் சுற்றி வந்தால் கொம்புகள் உடனடியாக முளைத்து விடும். கரடியின் யோசனைப்படியே நாம் நடப்பதால், நமது எண்ணமும் நிறைவேறி விடும்' என்று மனதுக்குள் நினைத்தது குதிரை.
குதிரை சேறு நிறைந்தபடி விகாரமான தோற்றத்தில் காட்டைச் சுற்றி வந்து கொண்டிருப்பதை மற்ற விலங்குகள் எல்லாம் பார்த்தன. குதிரையின் விகாரமானத் தோற்றத்தைக் கண்டு அவைகள் அச்சத்தால் நடுங்கின.
இது ஏதோ விபரீதமான விலங்கு போன்று தெரிகிறதே. இதனால் நமக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படும் போல் தெரிகிறதே. நாம் உடனடியாக இந்த விலங்கைக் கொன்றுவிட வேண்டுமென்று முடிவு செய்தன.
உடனே சிங்கத்தின் தலைமையில் எல்லா விலங்குகளும் ஒன்று கூடின. எல்லாம் ஒன்று சேர்ந்து குதிரையைத் தாக்க வந்தன. அதனைக் கண்ட குதிரையோ திடுக்கிட்டது. உயிர் பிழைத்தால் போதுமென்று ஓட்டமெடுத்தது.
குதிரை காட்டாற்றின் பக்கமாக ஓடிக் கொண்டிருக்க, சிங்கம் முன்னால் விரட்ட மற்ற விலங்குகள் எல்லாம் அதன் பின்னால் ஓடி வந்தன.
குதிரையோ ஓடி ஓடிக் களைப்புற்றது. ஓடுவதற்கு மறுபக்கம் பாதையும் இல்லாததால் பொத்தென்று காட்டாற்றில் விழுந்தது. குதிரை காட்டாற்றில் விழுந்ததும், சேறெல்லாம் தண்ணீரில் கரைய குதிரை சுயரூபத்தை அடைந்தது.
அதனைத் துரத்தி வந்த சிங்கமும் மற்ற விலங்குகளும் வியப்படைந்தன.
""குதிரையே! நீயா இப்படி உருவம் மாறியிருந்தாய்? நீ மட்டும் காட்டாற்றில் குதிக்காமல் இருந்திருந்தால், நாங்கள் எல்லாருமாக ஒன்று சேர்ந்து உன்னைக் கொன்றிருப்போமே. எதற்காக இப்படி உடலெங்கும் சேற்றினைப் பூசிக் கொண்டாய்?'' என்று கேட்டது சிங்கம்.
குதிரையோ ஆத்திரத்தோடு, மற்ற விலங்குகளின் கூட்டத்தில் கரடி நிற்கிறதா என்று தேடிப் பார்த்தது. கரடியை காணாததால், வெறுப்போடு சிங்கத்தைப் பார்த்தது.
""சிங்க ராஜாவே, எனக்குக் கொம்புகள் முளைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். காட்டில் இருக்கும் குட்டையில் மூழ்கி எழுந்து, காட்டைச் சுற்றி வந்தால் கொம்புகள் முளைத்து விடுமென்று கரடியார் எனக்கு யோசனை கூறினார். அவர் யோசனையைக் கேட்டு இப்படி நடந்தேன். நீங்கள் மட்டும் என்னை இப்படி மூர்க்கத்தனமாகத் துரத்தியிருக்கவில்லை என்றால் நான் இப்படிக் காட்டாற்றில் விழுந்திருக்க மாட்டேன். அதற்குப் பதிலாகக் காட்டைச் சுற்றி வந்திருப்பேன்... எனக்கும் கொம்புகள் முளைத்திருக்கும், கெடுத்திட்டீங்களே!'' என்று புலம்பியது குதிரை.
குதிரையின் பேச்சைக் கேட்டதும் மற்ற விலங்குகளுக்கெல்லாம் சிரிப்பு வந்து விட்டன. சிங்கராஜாவோ விழுந்து, விழுந்து சிரித்தது.
""குதிரையே, உன்னைப் பார்க்கிற வேளையில் எங்களுக்கெல்லாம் பரிதாபமாக இருக் கிறது. உன்னைப் போன்ற ஒரு முட்டாளை வேறு எங்கும் காண முடியாது,'' என்றது சிங்கம்.
மேலும் இயற்கையின் அமைப்புகளை நம்மால் மாற்ற முடியாதென புத்திமதி கூறி குதிரையின் அறியாமையை போக்கியது சிங்கராஜா.
***