ஓவியர் ஒருவர் பிரபல நகர் ஒன்றில் தனது ஓவியக் கண்காட்சியை நடத்தினார்.
""என்னைப் போல வேகமாக யாராலும் ஓவியம் வரைய முடியாது!'' என்று பெருமையடித்துக் கொண்டார். ஒரே நிமிடத்தில் இரண்டு உயிரினங்களை வரைவேன்,'' என்றார்.
பார்வையாளர்களில் இருந்து ஒரு சிறுவன் முன்னே வந்தான்.
""உங்களால் ஒரு நிமிடத்தில் இரண்டு உயிரினங்களைத்தான் வரைய முடியுமா? நான் ஒரு விநாடியில் பத்து உயிரினங்களை வரைவேன்!'' என்றான்.
ஓவியர் அவனை எரிச்சலுடன் பார்த்தார்.
""வீண் சவடால் வேண்டாம். எங்கே வரைந்து காட்டு பார்ப்போம்!'' என்றார்.
""முதலில் நீங்கள். அப்புறம் தான் நான்!'' என்றான் சிறுவன்.
ஓவியர் தன் பிரஷை வண்ணத்தில் தோய்த்தார். இப்படி ஒரு கீறல். அப்படி ஒரு தீற்றல். சில கோடுகள் என்று ஒரு நிமிடத்தில் ஒரு குரங்கு, ஒரு கரடி ஆகியவற்றை வரைந்து அசத்தினார்.
""இப்போது உன் முறை!'' என்று வெற்றிப் பெருமிதத்துடன் சிறுவனை நோக்கிச் சொன்னார்.
சிறுவன் தன் இரு கைகளின் பத்து விரல்களையும் பழுப்பு வண்ண ஜாடியில் அழுத்தி எடுத்து, ஒரு பெரிய வெள்ளைத் தாளில், பத்து விரல்களையும் அழுத்தினான்.
""இதோ பத்துப் புழுக்கள்!'' என்று காட்டிச் சிரித்தான்.
ஓவியர் வெட்கி தலைகுனிந்தார்.
***