கூகுள் கடந்து வந்த 15 ஆண்டுகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2013
00:00

பதினைந்து ஆண்டுகளுக்கு முன், செப்டம்பர் 27ல், மக்கள் தங்கள் இணைய உலாவில், கூகுள் தேடுதளத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். அப்போது ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் இல்லை; குரோம்புக் பயன்படுத்தி யாரும் வீடியோ பார்க்கவில்லை; கூகுள் கிளாஸ் அணிந்து பாட்டு கேட்கவில்லை; அல்லது ஹாட் பலூன் தரும் இணைய இணைப்பில் தேடலை மேற்கொள்ளவில்லை. சாதாரண தேடு தளம் தரும் நிறுவனமாக, 15 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப் பட்ட கூகுள் நிறுவனம், இன்று உலகில் மிகச் சிறந்த சக்தியும் தொழில் நுட்பமும் கொண்ட நிறுவனமாக, ஆக்டோபஸ் போல பல திசைகளில் தன் செயல்பாட்டினைக் கொண்டுள்ளது. உலகின் பல கோடி மக்கள் குறித்த தகவல்களைத் தன்னகத்தே கொண்ட ஒரே நிறுவனம் இதுவாகத்தான் இருக்கும். இந்த உலகம் மட்டுமின்றி, பிரபஞ்சம் குறித்த தகவல்களைத் தன்னிடத்தே வைத்திருப்பதிலும், விளம்பரம் வழியே வருமானம் பெறுவதிலும், கூகுள் நிறுவனத்தை மிஞ்ச இன்று எந்த நிறுவனமும் இல்லை. பலூன் வழியே இன்டர்நெட், ட்ரைவர் இல்லாத கார், கண்களின் அணியும் கம்ப்யூட்டர் என கூகுள் செல்வதைப் பார்த்தால், ""என்னிடம் வா, உன் வாழ் நாளை 10 ஆண்டுகள் நீட்டித்துத் தருகிறேன்'' என்று கூகுள் சொன்னாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.
இணையம் என்பது புரியாத புதிராகவும், குழப்பமான குவியலாக இருந்ததை, இதில் நீங்கள் மதித்துப் போற்ற வேண்டிய விஷயங்கள் உள்ளன என்று மக்களை ஏற்றுக் கொள்ள வைத்தது கூகுள்.
இணையத்தில் நம் அன்றாட பிரச்னைகளுக்கான தீர்வுக்காக அணுகியபோது, நம் சமூகத் தொடர்புகளை, நண்பர்களுடான உறவு கொண்டாடும் அஞ்சல்களை, அழகாக அடுக்கி வைத்து நாம் பயன்படத் தந்தது. நம் பேச்சுக்களை டெக்ஸ்ட்டாக மாற்றித் தந்தது. உலகில் நாம் எங்கு இருக்கிறோம்; எங்கெல்லாம் போக ஆசைப்படுவோம் என்று எடுத்துக் காட்டியது. நாம் பயணிக்கும்போது, நாம் செல்ல வேண்டிய பாதையைக் காட்டி, எடுத்துச் சொல்லி, வழிகாட்டியது. எல்லாவற்றிற்கும் மேலாக, நம்மைப் பற்றிய தகவல்களை ஆய்வு செய்து, நம் எதிர்காலத் தேவைகளும், விருப்பங்களும் என்னவாக இருக்கும் என்று எடுத்துக் காட்டுகிறது.
உலகக் குடிமக்கள் அனைவரையும் வளைத்துப் போட்டு, அனைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான நிறுவனமாக கூகுள் எப்படி வளர்ந்தது? அமெரிக்காவின் மென்லோ பார்க் என்ற இடத்தில், லாரி பேஜ் மற்றும் செர்கே பிரின் ஆகிய இருவரால், சூசன் ஓஜ்சிக்கி என்பவரது வீட்டின் கார் நிறுத்துமிடத்தில், 1998ல் தொடங்கப்பட்ட கூகுள் நிறுவனம், இன்று உலகளாவிய நிறுவனமாகத் தன் 15 ஆவது ஆண்டின் நிறைவு விழாவினைக் கொண்டாடியது.
தேடுதல் வர்த்தகத்தில், கூகுளை நெருங்க, மைக்ரோசாப்ட் எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை. பல கோடி டாலர்கள் செலவில் தன் பிங் (Bing) தேடல் தளத்தினைத் தொடர்ந்து மாற்றி அமைத்து வருகிறது. ஆனாலும், அமெரிக்காவில் தேடல் வர்த்தகத்தில் 18 சதவீதப் பங்கினையே பெற முடிந்தது. கூகுள் அமெரிக்கா வில் 70 சதவீதப் பங்கினையும், உலக அளவில் 90 சதவீதத்தையும் கொண்டு வேகமாக முன்னேறியும் வருகிறது.
பதினைந்து வயது நிரம்பிய கூகுள், தொடர்ந்து முன்னேறுகையில், பல ஆண்டுகள் டிஜிட்டல் உலகில் கொடி நாட்டிய மைக்ரோசாப்ட், மொபைல் சாதனங்களில் ஏற்பட்ட மாற்றத்தை கோட்டைவிட்டதால், இன்னும் எழுந்து வர இயலாமல் தவிக்கிறது. கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் இயங்கு தளம், ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். தளத்துடன் இணைந்து, மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் மொபைல் போன் திட்டங்களைத் தகர்த்தது. மைக்ரோசாப்ட் பெற்ற வெற்றிமுனைகளையும், மேற்கொண்ட தவறுகளையும், கூகுள் பாடமாக எடுத்துக் கொண்டு தன் திட்டங்களை வகுத்தால், தோல்வியின்றி தொடரும் என்பதில் சந்தேகமில்லை.

கூகுள் கடந்து வந்த பாதை:
நவம்பர் 1998: கூகுள் தன் இணையதளத்தினை http://google.stanford.edu என்ற முகவரியில் தொடங்கியது. ஐ.பி.எம், இண்டெல் மற்றும் சன் நிறுவனங்கள் இலவசமாகக் கொடுத்த சாதனங்களுடன், தன் நிறுவனத்தைத் தொடங்கியது கூகுள். சன் மைக்ரோசிஸ்டத்தின் துணை நிறுவனர் பெக்டால்ஷிம் ஒரு லட்சம் டாலர் நிதி அளித்து உதவி செய்தார்.
ஜனவரி 1999: கூகுளின் சோதனைத் தளம் http://alpha.google.com என்ற முகவரியில் இயங்கத் தொடங்கியது. பின்னர் Google.com என்ற முகவரிக்கு மாறியது.
ஏப்ரல் 1999: தன் அலுவலகத்தினைப் புதிய இடத்திற்கு மாற்றியது.
மே 2000: கூகுள் உலகளாவிய அளவில் தன் சேவையை நீட்டித்தது. பயனாளர்கள், பிரெஞ்ச், ஜெர்மன், இத்தாலியன், ஸ்வீடிஷ், பின்னிஷ், ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ், டச், நார்வேஜியன் மற்றும் டேனிஷ் ஆகிய மொழிகளில் தங்கள் தேடல்களை மேற்கொள்ள கூகுள் உதவியது.
ஜூலை 2000: கூகுள் நூறு கோடிக்கும் மேலான இணைய தளங்களைப் பட்டியல் இட்டு, தகவல்களைத் தர முடிந்தது.
ஆகஸ்ட் 2000: எங்களுடன் விளம்பரப் படுத்துங்கள் என்ற லிங்க்கை கூகுள் தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது. கூகுளில் தேடல் களின் நாளொன்றின் எண்ணிக்கை, ஒரு கோடியே 30 லட்சமாக உயர்ந்தது.
அக்டோபர் 2000: AdWords என்று சொல்லப்படுகிற விளம்பரச் சொற்கள், கூகுள் இணைய தளத்தில் வரத் தொடங்கின.
ஜூலை 2001: கூகுள் குரூப் தொடங்கப்பட்டது. தேஜா நியூஸ் என்ற நிறுவனத்தை கூகுள் வாங்கியது.இது செய்திகளைச் சேர்த்து வைத்துப் பயன்படுத்தும் நிறுவனமாகும்.இதனை groups.google.com என்ற தன் நிறுவனப் பிரிவிற்கு அளித்து, தன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த வழங்கியது.
பிப்ரவரி 2002: கூகுள் 'Search Appliance' என்ற தேடல் வகையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம அனைத்து இணைய டாகுமெண்ட்களும் அலசப்பட்டு, தொகுப்பு பட்டியல் உருவாக்கப்பட்டு தரப்பட்டன. மைக் ரோசாப்ட் ஆபீஸ் டாகுமெண்ட்ஸ் மற்றும் பி.டி.எப். பைல் உட்பட பலவகையான பைல் வகைகள் இதன் கீழ் ஆய்வுக்கும் தொகுப்புக்கும் எடுத்துக் கொள்ளப்பட்டன.
நவம்பர் 2002: Google Answers சேவை வெளியானது. கூகுள் சலித்துத் தேடிக் கண்டறிந்த 500 வல்லுநர்களும், அறிஞர்களும், வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு 24 மணி நேரத்தில் பதில் அளிக்கும் சேவை இது. இதற்கு கேள்வி ஒன்றுக்கு 2.50 டாலர் கட்டணம். 24 மணி நேரத்தில் விடை கிடைக்கும்.
மார்ச் 2003: Business Solutions தொடங்கப்பட்டது. நிறுவனங்களின் செயல்பாட்டிற்கு இந்த தீர்வு முறை மிகவும் உதவி வருகிறது.
மார்ச் 2004: Froogle அறிமுகமானது. நுகர்வோர் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் பொருட்கள் பட்டியல், வாடிக்கையாளர்களுக்குக் கிடைத்தது. பின்னர் 2007ல் இது Google Product Search எனவும், 2012ல் Google Shopping எனவும் பெயர் மாற்றம் பெற்றது.
பிப்ரவரி 2005: Google Local வெளியானது. வாடிக்கையாளர்கள், தாங்கள் வசிக்கும் இடங்களில், தங்களுக்குத் தேவையான வர்த்தகத் தகவல்களைப் பெற இந்தப் பிரிவு உதவுகிறது.
ஏப்ரல் 2006: கூகுள் மேப்ஸ் (Google Maps) அறிமுகமானது. டிஜிட்டல் உலகில் புதிய சகாப்தத்தினை இது ஏற்படுத்தியது. Google Local இதனுடன் இணைக்கப்பட்டது.
ஆகஸ்ட் 2006: கூகுள் வீடியோ (Google Video) உருவாக்கப்பட்டுச் சோதனை முறையில் தரப்பட்டது. உலகின் முதல் ஆன்லைன் வீடியோ வர்த்தக மையமாக இது பெயர் பெற்றது. டிவி நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் டாகுமெண்ட்ரி படங்களை இதன் மூலம் தேடிப் பெற முடிந்தது. கூகுள் வீடியோ ஸ்டோரில், படங்களை விற்கலாம், வாங்கலாம், வாடகைக்கு எடுக்கலாம். அக்டோபர் 2006ல், யு ட்யூப் வாங்கப்பட்டு, அதனுடன் கூகுள் வீடியோ இணைக்கப்பட்டது.
மே 2007: கூகுள் இணைய தளத்திற்கு புதிய இண்டர்பேஸ் தரப்பட்டது. இதுவரை சர்ச் கட்டத்தின் மேலாகத் தரப்பட்ட லிங்க்ஸ் அனைத்தும், மேல் இடது பக்கம் கொடுக்கப்பட்டன. Maps, Labs, Patents, Reader, Scholar மற்றும் Finance போன்ற லிங்க்குகள் இடம் பெற்றன.
செப்டம்பர் 2009: யூசர் இண்டர்பேஸ் மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டது. I'm Feeling Lucky சர்ச் பாக்ஸிலிருந்து தள்ளி இடம் பெற்றது.
நவம்பர் 2011: Google + அறிமுகப்படுத்தப் பட்டது. முதலில் அழைப்பு பெற்றவர்களுக்கு மட்டும் எனச் செயல்படத் தொடங்கி, பின்னர், செப்டம்பர் 2011ல், அனைவருக்கும் தரப்பட்டது.
செப்டம்பர் 2013: கூகுள் தன் 15 ஆவது ஆண்டுவிழாவினைக் கொண்டாடியது. கூகுளின் புதிய தேடல் முறையாக ""ஹம்மிங் பேர்ட்'' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில், கம்ப்யூட்டர் மற்றும் பிற இணையத் தொடர்பு சாதனங்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. வலைத் தளங்களின் எண்ணிக்கையும் வளர்ந்துள்ளது. எனவே, இந்த தேடல் முறை, மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நாலெட்ஜ் கிராப் (Knowledge Graph) என்ற ஒரு தேடல் முறையை முன்பு அறிமுகப்படுத்திய கூகுள், தற்போது அதன் மேம்பாடடைந்த தொழில் நுட்பமாக இதனைத் தந்துள்ளது.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X