எல்.கணபதி-பாண்டிச்சேரி: மோடி பிரதம மந்திரி வேட்பாளராக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளாரே?
தெரிந்த விஷயம்தான். கொஞ்ச காலதாமதம் ஆகியிருக்கிறது. உபரித்தகவல்: வாஜ்பாய் பிரதமராகப் பதவியேற்றபோது நாடெங்கும் என்ன அலை வீசியதோ அதுபோன்று இப்போது மோடி அலை வீசுவதாக வயது வித்தியாசமின்றிச் சொல்கிறார்கள்.
ரூபாவெங்கட்-திருச்சி: லோக்சபா தேர்தல் முன்கூட்டியே வருமா?
வராது. உபரித்தகவல்: ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் ஏதாவது நடந்தால் முன்கூட்டியே வரலாம். முறையாக நானும் ஓர் அரசியல் வானிலை ஆறிக்கை படித்துவிட்டேன்.
மதுரை சம்பத்-கொச்சி: உணவுப்பாதுகாப்புத் திட்டம் காங்கிரஸ் கட்சிக்குக் கை கொடுக்குமா?
உணவுப் பாதுகாப்புத் திட்டம் பற்றி சோனியாவும் ராகுலும்தான் பேசவேண்டும். பல மாநில அரசுகள் இந்தத் திட்டத்தை எதிர்க்கின்றன. காங்கிரஸ் கட்சிக்கு கை கொடுக்காது! உபரித்தகவல்: உணவுப் பாதுகாப்புப் பற்றிய சிந்தனை ஓர் அரசுக்கு வரவேண்டியது நியாயம்தான். உணவு உற்பத்தி பெருகவேண்டுமானால் விவசாயம் செழிக்க வேண்டும்! விவசாயம் பெருக அரசு உதவவேண்டும். உணவு பொருட்களை இறக்குமதி செய்வதைக் குறைத்தால் பொருளாதார நிலை வலுப்பெறும். விவசாயப்புரட்சி இன்றைய தேவையும் கூட.
வசுமதி பாலன்-காரையார்: 90 விழுக்காடு மக்கள் முட்டாள் என இந்தியர்களைப் பற்றிய கருத்துக்கு மார்கண்டேய கட்ஜு மன்னிப்பு கேட்டுள்ளாரே?
நல்ல நீதிபதி. இவருடைய அண்மைக்கால பலப் பேச்சுக்கள் மன்னிக்கப்பட வேண்டியவைதான். உபரித்தகவல்: பொதுவாக நீதிபதிகள் பொறுப்புள்ளவர்களாகவும், நகைச்சுவை உணர்வுடன், இசை அறிவு பெற்றவர்களாகவும் இருந்தார்கள். பல இந்திய நீதிபதிகள் துணிச்சல்காரர்கள். கட்ஜூவை மனதில் வைத்துக் கொண்டு எல்லோரையும் எடைபோட்டுவிடக் கூடாது. இந்தியாவில் நீதித்துறை, ராணுவம் இரண்டும் இன்னமும் எதை செய்யவேண்டுமோ, எங்கு மூக்கை நுழைக்க வேண்டுமோ அங்குமட்டும் தான் மூக்கை நுழைத்து வேண்டியதைச் செய்கின்றன.
ஆர்.லதா-மதுரை: டெல்லி பாலியல் குற்றச்சாட்டுக்காக விதிக்கப்பட்ட மரண தண்டனை பற்றி?
வரவேற்கிறேன். இதுபோன்ற குற்றங்கள் நடக்காமல் இருக்க கடுமையான தண்டனைகள் தேவைப்படுகின்றன. குற்றம் செய்தவர்கள் திருந்த வழி கிடைக்கலாம், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் திரும்பப் பழைய நிலையைப் பெறுவார்களா? கடுமையான தண்டனைகள் தேவை என்பது என் கட்சி. உபரித்தகவல்: பல மேற்கத்திய நாடுகள் ஒரு விஷயத்தைச் செய்துவிட்டால் நாமும் அதைச் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மரண தண்டனையைச் சில வெளிநாட்டு அரசாங்கங்கள் தேவையில்லை என்று விட்டு இருக்கலாம். பல மேலை நாடுகளில் விவாகரத்து (கணவன் - மனைவி பிரிவது) எளிதானது. மறுமணமும் எளிதானது. இந்தியா அந்தப் பாதையை மேற்கொள்ளலாமா? நமக்கென்று ஒரு பாரம்பரியம் இருக்கிறது. நமது கலாச்சாரம் உலகக் கலாச்சாரம் எல்லாவற்றையும் விடச் சிறந்தது.
ஆர்.ஆர்.சாமி-திருவண்ணாமலை: கருணாநிதி அவர்களின் மணிமேகலை உதாரணம்?
மணிமேகலை என்று உணவுப் பாதுகாப்புச் சட்டம் திருத்தங்களுடன் கொண்டு வந்ததற்காக சோனியா காந்தியை கருணாநிதி அவர்கள் பாராட்டியுள்ளார்கள். இதில் என்ன தப்பு கண்டு விட்டார்கள். எத்தனையோ தலைவர்களை அவர் பாராட்டிய போதெல்லாம் அதற்குத் தகுந்த அர்த்தம் கண்டுகொண்டு விமர்சனம் செய்தோமா? இல்லையே அவருடைய அடுக்குமொழிச் சொல், தமிழ் அறிவு என்றெல்லாம் அவருக்கே புகழாரம் சூட்டினோமே. அது மாதிரிதான் இதுவும். இது அவரின் சாமர்த்தியம். உபரித்தகவல்: மணிமேகலையை இணையத்தில் ஒருவர் இப்படி எழுதி இருந்தார். மணி மேக் லை என்று.
எல். ராமையா-பாண்டிச்சேரி: காரத் - ஜெயலலிதா சந்திப்பு?
முதல்வரை காரத் சந்தித்து உள்ளார். கூட்டணியில் இருப்பவர்கள், நலம் விரும்பிகள் சந்திப்பதில் தவறு என்ன இருக்கிறது. உபரித்தகவல்: தமிழகத்தில் ஜெ பக்கம்தான் காம்ரேட்டுகள் இருப்பார்கள் என்று யூகிக்கலாம்.
கே.குணசேகரன்-விருதுநகர்: தமிழை உயர்நீதிமன்றத்தில் ஆட்சி மொழியாக்க ஆதரவு தருவீர்களா?
நான் என்ன ஆதரவு தருவது? நான் இதை வரவேற்கலாம். தமிழில் தீர்ப்புகள் வெளியாகும் நாளை நானும் ஆவலுடன் எதிர்பார்க்கலாம். உபரித்தகவல்: தமிழை நீதிமன்றத்தில் ஆட்சி மொழியாகச் செயல்படுத்த உள்கட்டமைப்பு வசதிகள் அவசியம். நீதி நூல்கள், மொழி பெயர்ப்பாளர்கள், தமிழ் சுருக்கெழுத்தர்கள், அதிக அளவில் இல்லை. தமிழில் தீர்ப்பு கிடைக்க உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்கிறார் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சந்துரு.
வி.எஸ்.அரசு-நாகர்கோவில்: இராமாயணத்தின் சிறப்பு என்னவென்று ஒரு வரியில் சொல்லுங்கள்?
ஒருத்தனுக்கு ஒருத்தி. இதுதான் ராமகாதையின் சிறப்பு. உபரித்தகவல்: இரண்டு மான்கள் கொடுத்த திருப்பம்தான் ராமகாதை. ஒரு மான் மாயமான். இன்னொரு மான் ஹனுமான். உபயம் வாரியார் ஸ்வாமிகள்.