ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஆண் உண்டு. அதுபோல் ஒவ்வொரு ஆணுக்குள்ளும் பெண் உண்டு. அர்த்த நாரீஸ்வரரின் தத்துவமே இதுதான்.
சிவபெருமானின் ஊர்த்தவ தாண்டவத்தின் முன், பார்வதி தேவி தோற்றுப் போனதாகப் புராணம் சொல்கிறது. நாமும் நாட்டியத்தில் தெய்வமாக நடராஜப் பெருமானைத் தானே இன்றும் வணங்கி வருகிறோம்.
இப்படி ஆதிகாலத்தில் இருந்தே எல்லா கலைகளும் புருஷத் தன்மையோடு சேர்த்துதான் வந்திருக்கிறது. அதனால் ஆண் - பெண் இருபாலருக்கும் சமமான பங்கு, உரிமை நாட்டியத்தில் உண்டு.
கலைஞர்களுக்குத்தான் வயதாகுமே தவிர - கலைக்கு மட்டும் வயதே கிடையாது. கலைஞர்கள் வயதாக ஆக மெருகு ஏறி ஏறி - ஆண், பெண், வயது, உடம்பு என்பதை மறந்து, தெய்வீகத்தில் ஒளிர்கிறார்கள்.
நல்ல கலைவடிவமாகச் செய்தால், ஆண்கள் நடனத்தை அனைவராலும் ரசிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர்களுள் துர்க்கலாலும் ஒருவர். தேர்ந்த கதக் கலைஞர் மாத்திரமல்லாமல் இவர் மிகச் சிறந்த பாடகர் மற்றும் வாத்தியக் கலைஞரும் கூட. ஆனால் பாவம் 1990ஆம் ஆண்டு அவர் தனது 42வது வயதிலேயே இயற்கை எய்தியதுதான் துரதிஷ்டம்.
அவரது மறைவுக்குப் பின் அவரது மனைவியும், புகழ்பெற்ற கதக் நடனமணியுமான கீதாஞ்சலிலால், டெல்லியில் பிரபல "கதக் கேந்திரா' மூலம் நூற்றுக்கணக்கான கதக் கலைஞர்களை உருவாக்கியவர். அவருக்குப் பக்கப் பலமாக அவரது கலைவாரிசுகள்... மகன் அபிமன்யுலால், மருமகள் விதாலால்.
அந்தக் காலத்தில் எப்படி நம் ஊர்களில் பெண்களை வெளியே அதிகம் எக்ஸ்போஸ் பண்ணாமல் நாட்டியக் கலைகளிலும் சரி, கிராமியக் கலைகளிலும் சரி, ஆண்களே பெண் வேடம் போட்டு, ஜனங்களை ரசிக்க வைத்தார்களோ - அதுபோல் வட இந்தியாவில் பாடகர் குழு, கூட்டம் கூட்டமாக, ஊர் ஊராகச் சென்று ஜனங்களுக்குப் புராண, இதிகாச கதைகளைச் சொல்லும் பழக்கம் இருந்திருக்கிறது.
கதா என்றால் கதை. கதகார் என்றால் கதை சொல்பவர். அப்படிக் கதை சொல்வதில் சுவாரசியம் சேர்ப்பதற்காக, படிப்படியாக முக அசைவுகள், கை அசைவுகள், கால் அசைவுகள் எனப் பண்ணப் பண்ண - கதை பாட்டாகி, பாட்டு கதக் நடனமானது. கதை அல்ல...நிஜம்.
கி.பி. 16ஆம் நூற்றாண்டின் பாரசீக நடன வகைச் சாயலை இந்தக் கதக் நடனங்களில் காணமுடியும். மிகுந்த பயபக்தியோடு கோவில்களிலும், பின்னர் ராஜ சபைகளிலும் ஆடப்பட்டு வந்த இந்திச் சாஸ்திரீய கலை ரொம்பவுமே பிரபலமானதென்னமோ முகலாயர் ஆட்சி காலத்தில்தான். அதன் தாக்கத்தைக் கதக் இசையிலும், உடைகளிலும் பிரதிபலிப்பதைக் காணலாம்.
பின்னர் 18ஆம் நூற்றாண்டில் ராஜபுத்ர அரண்மனைகளிலும், நவாப் மாடமாளிகைகளிலும் அதிகமாய் பரவத் தொடங்கியது. அபிநயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தும் - லக்னோ கரானா, டைமிங்க்கு முக்கியத்துவம் தரும் - பனாரஸ் கரானா, நிருத்தா, பாத வேலைப்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் - ஜெய்பூர் கரானா, இப்படிக் கதக் வகை நடனத்திலும் பாணி... ஸ்டைல்ஸ் உண்டு.
சமீபத்தில் டெல்லி சென்றிருந்த போது, பிரபல ஜெய்பூர் கரானா கதக் ஜோடியின் நாட்டிய நிகழ்ச்சியைத் தற்செயலாய் காண நேர்ந்தது. மேடையின் வர்ண ஒளியில் தென்றல் போல் நுழைந்து, மெதுவாக வேகமெடுத்து, புயலாக உருவெடுத்து, இடி மின்னலுடன் கூடிய மழையை பொழிந்து தள்ளிய அற்புத நிகழ்ச்சி அது.
சிதாரும், தபலாவும் கேட்பதற்கே இனிமை. அதோடு இந்த "Made for Each Other' ஜோடி நடனத்தைப் பார்ப்பதென்பது இன்னும் சுகம். காலச்சக்கரத்துக்குள் ரிதத்தை மூன்றாக, நாலாகப் பிரித்தது கொள்ளை அழகு. அதுபோல் 108, 208 எனத் துரிதக் கதியில் பாத வேலைப்பாடுகள்... பரபரவென்று 10 தடவை, 20 தடவை சுற்றுவது.... அதுவும் அபிநயத்தோடு என்பது தனி.
விதவிதமாகப் பாடப்படும் வரியை - ஒரே கை அசைவுகளில், மணிக்கணக்கில் பண்ண எத்தனை எத்தனை பயிற்சி, திறமை வேண்டும். இருவரது முகத்திலும் இதமான அபிநயம். அப்படியொரு நுட்பமான புரிந்து கொள்ளுதல், ஒத்துழைப்பு...
உள்மனதில் அழகை ரசிகர்களுக்குப் புரியவைப்பதே ஒரு மௌனமான அழகு. ஒருவரது கால் பேசுகிறது என்றால் இன்னொருவரின் பாதங்களோ கொஞ்சுகிறது. மேடையில் ஆடியபடியே அரங்கத்தில் உள்ள அனைவரையும் அப்படியே உள்ளே இழுத்துப் போட்டுக் கொள்கிற High Level Ecstasy!
எல்லாம் காதல் மயம் என்றாகிவிட்டால் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகி விடுகிறது. அந்தக் காதலில் கொஞ்சமே கொஞ்சம் விண்டு எடுத்து மேடையில் காட்டுவது என்பது இவர்களுக்குக் கஷ்டமா என்ன?
இன்றைய காலகட்டத்தில் ஒரே சமயத்தில் கணவனும், மனைவியும் கலையிலும் வாழ்க்கையிலும் பயணிப்பது கத்திமேல் நடக்கிற மாதிரி. அது எப்படி இவர்களுக்கும் கைவந்த கலையாக வந்திருக்கிறது என்பதை கேட்டே விட்டேன்.
அத்தனை நேரம் ஆடியும் சற்றும் சோர்வுறாத மலர்ந்த முல்லைச் சிரிப்பும், விழிகளில் மினுக்கும் பார்வையுமாய் சொல்கிறார் விதாலால்....
"எனது External Mirror என் கணவர் அபிமன்யு என்பேன் நான். எங்கள் இருவருக்குமே கதக் டான்ஸ் மீது இப்படியொரு Passion. நாட்டியத்தில் ஒரு ஜீவன் இருக்கிற மாதிரி, எங்கள் தாம்த்யத்திலும் ஒரு Artistic Tendency கூடவே இருக்கிறது. கலையிலும் வாழ்க்கையிலும் ஈடுபடும் தம்பதியரிடம், நல்ல புரிந்து கொள்ளுதல் மட்டும் இருந்துவிட்டால் Wholesome Personality கிடைக்கிறது என்பதை அனுபவப்பூர்வமாக உணர முடிகிறது.
அதபோல் என் நடன குரு கீதாஞ்சலி லால்... நான் அவரிடம் சிஷ்யையாக வந்து சேர்ந்த வெள்ளிவிழா ஆண்டு இது. அற்புதமான குரு மாத்திரமல்ல. அருமையான மாமியாரும்கூட... தாயாய், சினேகிதியாய் அவர் என் மீது பரிவு காட்டுவது என் பூர்வ ஜென்ம புண்ணியம். அவரது கலை உணர்வைப் போலவே அவரது நகைச்சுவை உணர்வும், மனித நேயமும், டெல்லிக்கே தெரியும்.
தனது ஒவ்வொரு டான்ஸ் மாணவியிடமும் அவர் கொண்டுள்ள அக்கறை பிரமிக்க வைக்கும். தனக்குத் தெரிந்த கலை நுணுக்கங்களைக் கிரகித்துக் கொள்ளக்கூடிய தனது சிஷ்யையின் வயதுக்கும், திறமைக்கும் ஏற்ப - பல மேடை வாய்ப்புகளை வாங்கி வழங்குவதில் வள்ளல் அவர். அவர் எங்களோடு ஆடும்போது வயது தெரியாது... அவரது கிரேஸ் மட்டும்தான் கண்ணுக்குத் தெரியும்!
டெல்லி தூர்தர்ஷனின் "A'Grade சென்னை ஸ்ரீகிருஷ்ணகான சபாவின் "என்டோமெண்ட் அவார்ட்', "வோடோபோன் லேடி விருது', "தேவதாசி தேசிய விருது', "கல்பனா சால்வா விருது' ஒரு நிமிடத்தில் 103 Kathak Spins பண்ணிய உலகச் சாதனைக்காக Guinnessஇல் இடம் பெற்றது... இப்படி நான் எல்லாப் புகழும் கிடைக்கப் பெற்றது "குருகிருபை'யினால் தான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உண்டு.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், துபாய், ஜெர்மனி, எகிப்து, ஸ்விஸ், நெதர்லாண்ட், தென்ஆப்பிரிக்கா, கனடா, ஜப்பான், ஹாலந்து இப்படி எல்லா நாடுகளின் நாட்டிய விழாக்களிலும் ஆடினாலும் - கல்சுரல் தலைநகரமான உங்கள் சென்னையில் ஒரு "Strong Kathak Base' அமைக்க வேண்டும் என்பதுதான் இப்போதைய ஆசை... கனா....'
"இந்தப் பிரபஞ்சமே காதலினால் ஆனது' என்றார் மகாகவி காளிதாஸ்... ஆனால் இந்தக் காதல் ஜோடிகளோ "இந்த பிரபஞ்சமே நடனத்தில் ஆனது' என்கிறார்கள். "காதலியின் கடைக்கண் பார்வை இருந்தால் - காற்றிலேறி விண்ணையும் சாடலாம்...' என்று பாடிய பாரதி உண்மையிலேயே ஒரு தீர்க்கதரிசி!..
- சர்ச்சில் பாண்டியன்