ராவுத்தர் வாத்தியார் | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
ராவுத்தர் வாத்தியார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 டிச
2013
00:00

ராவுத்தர் வாத்தியாரின் மரணம், ஊர்க்காரர்கள் எல்லாரையும் ஒட்டு மொத்தமாக, உலுக்கி விட்டது. அதைவிடக் கொடுமை, அவரின் மரணத்தில், யாருமே எதிர்பார்த்திராத பெரும் பிரச்னை ஒன்றும் முளைத்தது. ராவுத்தர் குடும்பத்தினரின் ஏற்பாட்டின்படி, அவருக்கான இறுதிச் சடங்குகளை, முறைப்படி செய்வதற்காக, ஹஸ்ரத் பட்டம் பெற்ற, அவர்களின் குடும்ப நண்பரொருவர், அருப்புக் கோட்டையிலிருந்து வந்திருந்தார். அவர் சொன்ன பின் தான், அந்தப் பிரச்னை, எல்லாரின் கவனத்திற்கும் வந்து, உறுத்தத் துவங்கியது. ராவுத்தரை எங்கு அடக்கம் செய்வது...
கிராமத்தில், ஜாதிக்கொரு சுடுகாடு, இடுகாடு இருந்தது. அந்த ஊரில், ராவுத்தர் வாத்தியாரின் வரவுக்கு முன் வரை, முஸ்லிம்களோ, கிறிஸ்தவர்களோ இல்லை. ஆதலால், முஸ்லிமான ராவுத்தர் வாத்தியாரை, எங்கு அடக்கம் செய்வது என்ற கேள்வி எழுந்தது. 'பாங்கு ஒலித்த பின் தான், முஸ்லிம்களின், உடல்கள் அடக்கம் செய்யப்பட வேண்டுமென்பது சம்பிரதாயம்...' என்றார் ராவுத்தரின் குடும்ப நண்பர். அதனால், 'ராவுத்தரின் உடலை, அருப்புக்கோட்டைக்கு கொண்டு போய்விடலாம்...' என்றும் அபிப்ராயம் சொன்னார்.
ஊர்க்காரர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை... 'ராவுத்தர் எங்கள் கிராமத்தில் வாழ்ந்தவர்; அவர் இந்த கிராமத்தின் சொத்து. அதனால், அவரின் ஆன்மா, இங்கு தான் அமைதி கொள்ள வேண்டும். எங்கோ கண்காணாத இடத்திற்கு, அவரைக் கொண்டு போவதை, ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்...' என்றனர். ஆனால், 'அவரை எங்கே அடக்கம் செய்வது...' என்ற, கேள்விக்கான பதில் தான், யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
பத்து நாட்களுக்கு முன் தான், சண்முகமும், அவனுடைய கிராமத்தின் முக்கியஸ்தர்கள் சிலரும் சேர்ந்து, ராவுத்தர் வாத்தியாரை, சென்னை விமான நிலையத்திற்குப் போய், 'ஹஜ்' புனிதப் பயணத்திற்காக, சவூதி அரேபியாவிற்கு விமானம் ஏற்றி, அனுப்பி விட்டு வந்திருந்தனர். சவூதி அரேபியாவின், மெக்கா நகரில், 'ஹஜ்' பயணிகள், தங்கியிருந்த குடிசையில் ஏற்பட்ட தீ விபத்தில், நிறையப் பேர் இறந்து போயினர். அவர்களில் ராவுத்தரும் ஒருவர். எல்லாரும் சேர்ந்து, ஆசையாய் அனுப்பி வைத்த பயணம், கடைசியில், அவரையே விழுங்கி விட்டதே என்று, இந்த திட்டத்தை முன் மொழிந்தவன் என்ற முறையில், சண்முகத்துக்குள், குற்ற உணர்ச்சி குமைந்து வாட்டியது.
தொலைக்காட்சியில், செய்தியைக் கேட்டதும், அலுவலகத்திற்கு போன் பண்ணி, மூன்று நாட்கள் விடுப்புச் சொல்லி, அவசரமாக, தன்னுடைய கிராமத்திற்கு கிளம்பிப் போனான் சண்முகம். பஸ்சில் பயணிக்கும் போது, அவன் மனம் அமைதியின்றி தவித்தபடி, அழுகை, முட்டிக் கொண்டு வந்தது.
எத்தனை மகத்தான மனிதர் அவர். மொஹிதீன் முகமது என்பது தான், அவருடைய பெயர். அந்தப் பெயர், பள்ளிக்கூட பேரேடுகளில், அவர் கையெழுத்துப் போட்டு, சம்பளம் வாங்குவதற்கு மட்டும் தான். ஊரில், ராவுத்தர் வாத்தியார் என்று தான், அவர் பிரபலம்.
வேறு, எந்த பணியும் கிடைக்காததால், சிலர், ஆசிரியப் பணியை ஏற்றுக் கொள்கின்றனர்; மிகச் சிலரே, ஆசிரியப் பணிக்கென்றே பிறந்து, அதற்காகவே, தங்களை அர்ப்பணித்துக் கொள்கின்றனர். இதில், ராவுத்தர் வாத்தியார் இரண்டாவது ரகம்.
ஆசிரியப் பணி நிமித்தமாக, தன் மனைவி மற்றும் இரண்டும் குழந்தைகளுடன், ஊருக்குள் வந்து குடியேறியவர், வெகு சீக்கிரமே, கிராமத்தில் ஒருவராய் கலந்து போனார்.
ராவுத்தர் வாத்தியாரின் பூர்வீகம், மேற்கு வங்காளத்தில், கோல்கட்டாவிற்கு அருகில், ஒரு கிராமம். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த கலவரத்தைத் தொடர்ந்து, உயிர் பிழைத்தால் போதுமென்று, அவரின் சொந்தக்காரர்கள் அனைவரும் பாகிஸ்தானுக்குக் குடி போய் விட்டனர். ராவுத்தரின் அப்பாவுக்கு, அங்கு போவதில் விருப்பமில்லை. கோல்கட்டாவிலும் தொடர்ந்து வசிக்க முடியாத கலவர சூழல். அவரின் நண்பர் ஒருவர் தான், தமிழகத்தில், அருப்புக்கோட்டையில் வசிக்கும், தன் உறவினர்களின் முகவரி கொடுத்து, அனுப்பி வைத்திருக்கிறார். அங்கு போனவர்கள், அங்கேயே தங்கி விட்டனர்.
எப்போதும், தும்பைப் பூ போல் வெளுத்த வேட்டியும், சட்டையும் தான் அணிந்திருப்பார். கிராமத்துக்காரர்களுக்கு அவரைப் பார்க்க ஆச்சர்யமாக இருக்கும். 'நம்ம ஊர் கண்மா தண்ணியில் கூட, ராவுத்தர் அம்மா எப்படி, இத்தனை வெள்ளையா துவைக்குறாங்கன்னு தெரியலேயே...' என்று, பேசிக் கொள்வர். அடர்த்தியான தலைமுடியை, இரண்டு காதோரங்களிலும் வகிடெடுத்து, ஏற்றி சீவி இருப்பார். அது, அவருக்கு மிகவும் வசீகரமாக இருக்கும். சண்முகத்திற்கும், அவரைப் போலவே சீவிக்கொள்ளப் பிடிக்கும்.
ஆனால், அவன் எவ்வளவோ முயன்றும், அவரைப் போலவே சீவிக் கொள்வது, எந்த வயதிலும், அவனுக்குச் சாத்தியப்படவில்லை. வாத்தியார் நெடுநெடுவென்று உயரத்துடன், சதைப் பிடிப்பில்லாமல், கொஞ்சம் நோஞ்சானாக தெரிவார். ஆனால், முகத்தில் சுடர்விடும் களையும், நடையில் தெரியும் கம்பீரமும், அவர் மேல் மரியாதையை ஏற்படுத்தும்.
அம்மை தடுப்பூசி போடுகிறவனுக்கு அப்புறம், ஊர்க்காரர்கள், அதிகம் பயந்தது, ராவுத்தர் வாத்தியாருக்குத் தான். எப்போது, யாரைப் பார்த்தாலும், ஒன்று, பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பச் சொல்லி வற்புறுத்துவார் அல்லது குடும்பக் கட்டுப்பாடு செய்துக்கச் சொல்லிக் கெஞ்சுவார்.
ஒவ்வொரு வாத்தியாரும், வருஷத்திற்கு குறைந்தபட்சம், சிலரையாவது குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள ஆள் பிடித்துக் கொடுக்க வேண்டுமென்ற அரசு ஆணை அமலில் இருந்த காலகட்டம் அது. அதனால், ராவுத்தரைத் துாரத்தில் பார்த்தாலே, கிராமத்துக்காரர்கள் ஓடி ஒளிந்து கொள்வர்.
ராவுத்தர் வாத்தியாரிடம் பாடம் படித்தவர்கள் நிஜமாகவே பாக்கியவான்கள். மூன்றாம் வகுப்பு ஆங்கிலப் பாடத்திலிருந்து, பள்ளிப் பிள்ளைகள், ராவுத்தரின் வரம்புக்குள் வரத் துவங்குவர்.
ராவுத்தர் பாடம் நடத்தும் போது, தன்னை மிகக் கடுமையானவராக காண்பித்துக் கொள்வாரே தவிர, மனதளவில், பனிக்கட்டி மாதிரி; உடனே, உருகி விடும் தன்மை உடையவர். கோபத்தில், 'நறுக்' கென்று தலையில் கொட்டி விட்டு, அப்புறம், அருகில் அழைத்து, 'வலிக்குதாடா...' என்று, வாஞ்சையாய்த் தலையைத் தடவிக் கொடுப்பார்.
சண்முகத்தின் ஊரில், ஜாதிப் பிரிவுகள் தான் உண்டு. மதம் பற்றி அவர்கள் அதிகம் அறிந்திருக்கவில்லை. அந்த ஊருக்கு வந்த, முதல் முஸ்லிம் குடும்பம் ராவுத்தருடையது தான். முஸ்லிம் என்பதையும், ஊர்க்காரர்கள், இன்னொரு ஜாதியாகக் தான் புரிந்து கொண்டனர். 'தேவரே, நாயக்கரே' என்பது போல், அவரையும், 'ராவுத்தரே...' என்று உரிமையோடும், உள்ளன்போடும் அழைத்து மகிழ்ந்தனர்.
ராவுத்தரும், மதம் பற்றியெல்லாம், அதிகம் அலட்டிக் கொண்டதில்லை. பள்ளியில் அவரின் தலைமையில் தான், சரஸ்வதி பூஜையும், விநாயக சதுர்த்தியும் அமர்க்களமாகக் கொண்டாடப்படும். சுயமாய், அவர் புனைந்த பக்திப் பாடல்களைத் தான், அந்த பூஜைகளில், மாணவர்கள் பாடுவர். அம்மன் மேல் அவர் இயற்றிய எத்தனையோ கும்மிப்பாடல்கள், ஊர் திருவிழாவில், இப்போதும், பாடப்படுவது உண்டு.
மழைக்கஞ்சி ஊற்றும் கொண்டாட்டத்தில், அவரின் குடும்பமே கலந்து கொண்டு குதுாகலப்படும். யாராவது அவரிடம், 'நீங்க ஏன் ராவுத்தரே இங்கயெல்லாம் வந்து சிரமப் படுறீங்க...' என்றால், 'ஏன்... மழை எங்களுக்கும் தான வேணும்...' என்று, விகல்பமில்லாமல் சிரிப்பார்.
ராவுத்தருக்கு, அவரின் அல்லா மீதும், அதீத பிரியமும், பக்தியுமிருந்தது. ஊரிலும், அக்கம் பக்கத்திலும் எங்குமே மசூதி இல்லை. அதனால், வகுப்பறையிலேயே, ஒரு ஓரத்தில், பிரார்த்தனைக்கென்றே, பிரத்யேகமான வேலைப்பாடுகளுடன் வைத்திருக்கும், ஒரு துண்டை விரித்து, தலையில், ஒரு வெள்ளைக் கைக்குட்டையைப் போட்டு, முழந்தாளிட்டு, கைகளைத் துாக்கி பிரார்த்தனை செய்வதை, பள்ளிப் பிள்ளைகள் பலரும் பயமும், பக்தியுமாய் பார்த்துக் கொண்டிருப்பர்.
ராவுத்தருக்குப் பாடம் சொல்லித் தருவதை விடவும், மிகவும் பிடித்தமான விஷயம், விவசாயம். விவசாயம் சம்பந்தமான பல்வேறு அறிவுரைகளை, அவர் குடியானவர்களுக்கு கூறுவார். அதுமட்டுமில்லாமல், நேரம் கிடைக்கும் போதெல்லாம், பிள்ளைகளை கண்மாய் கரைக்கு அழைத்துக் போய், மரக்கன்றுகளை நடச் செய்வார். பள்ளிக்குச் சொந்தமான தோட்டத்தில், காய்கறிகளையும், பழ மரங்களையும் நட்டு, அதைப் பராமரித்துக் கொண்டிருப்பார்.
அப்போது, அமலில் இருந்த மதிய உணவுத் திட்டத்தில், மற்ற பள்ளிகளில் எல்லாம், வெறும் கோதுமை உப்புமாவும், நெல்லுக் கஞ்சியும் அதற்குத் தொட்டுக் கொள்ள, கடலை மாவைக் கரைத்து செய்த, கொடூரமான ஒரு குழம்புமே பரிமாறப்பட, இவர்களின் பள்ளியில் மட்டும், பள்ளித் தோட்டத்தில் விளைந்த கீரைக் குழம்பும், கத்தரிக்காய், வெண்டைக்காய் என்று விதவிதமான காய்கறிகளும் பரிமாறப்பட்டு, பிள்ளைகளை ஆசை ஆசையாய் பள்ளிக்கு வரவழைத்தன.
அப்படி ருசியான மத்தியானச் சாப்பாட்டிற்காகவும், ராவுத்தரின் நச்சரிப்பிற்காகவும், பள்ளிக்கு அனுப்பப்பட்ட வர்களில் சண்முகமும் ஒருவன். ஆனால், படிப்பில் அவனுக்கிருந்த ஆர்வத்தையும், சூட்டிகையையும் மிகச் சரியாய் அடையாளம் கண்டு, அவனை, உற்சாகப்படுத்தி படிக்க வைத்தவர் ராவுத்தர் தான். எட்டாம் வகுப்பிற்கு அப்புறம், அவனின் படிப்பை நிறுத்தி, அவனை காட்டு வேலைகளுக்கு அனுப்ப, அவனுடைய அய்யா முற்பட்ட போது, ராவுத்தர் தான், அய்யாவிடம் பக்குவமாய் எடுத்துச் சொல்லி, அவரின் மனதை மாற்றி, பக்கத்து ஊரில், மேற்படிப்பு படிக்க ஏற்பாடு செய்தார்.
முறைசாராக் கல்வி என்ற பெயரில், படிப்பைத் தொடர முடியாமல், பாதியில் நிறுத்தியவர்களுக்காகவும், படிக்கவே சாத்தியமில்லாத முதியவர்களுக்காகவும், இரவுப் பள்ளிகள் துவங்கப்பட்ட போது, 'இதென்ன... ராத்திரி, பகல் எந்நேரமும் சொல்லிக் குடுத்துக்கிட்டே இருக்குற, சள்ளையான வேலையா இருக்கு...' என்று, சக ஆசிரியர்கள் சலித்துக் கொண்ட போதும், ராவுத்தர், அதையும் மிகவும் உற்சாகமாகவே ஏற்றுக் கொண்டார். ஒருநாளும், அலுத்துக் கொண்டதே இல்லை.
சண்முகத்திற்கு இன்ஜினியரிங் கல்லுாரியில் இடம் கிடைத்து, அவன். கல்லுாரியில் சேர வேண்டிய நேரத்தில், அவனின் அய்யாவால் பணம் புரட்ட முடியவில்லை. எத்தனையோ பேரிடம் கேட்டும், அவசரத்திற்கு பணம் கிடைக்கவில்லை. இதை, எப்படியோ அறிந்த ராவுத்தர், அய்யாவை அழைத்து, அந்த மாதம் வாங்கியிருந்த,மொத்தச் சம்பளத்தையும் கவரோடு கொடுத்தார்.
'அய்யோ வேண்டாம் சார்... நீங்களே புள்ள குட்டிகள வச்சுக்கிட்டு கஷ்டப்படுறீங்க. எல்லாத்தையும் குடுத்துட்டா எதை வச்சு சாப்புடுவீங்க...' என்று தயங்கி, அய்யா மறுத்த போது, 'அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். நம்ம ஊர்லயே, முதல் தடவையா ஒருத்தனுக்கு, இன்ஜினியரிங் படிக்க இடம் கிடைச்சுருக்கு... முதல்ல பையனக் காலேஜில போய் சேர்த்துட்டு வாங்க...' என்று, வற்புறுத்தி பணத்தைக் குடுத்து, அனுப்பி வைத்தார்.
ராவுத்தர் சொல்வதை, ஊர்க்காரர்கள் பெரும்பாலும், தட்டாமல் கேட்டு கொள்வர். ராவுத்தரைப் பற்றி எப்போது நினைத்தாலும், அவர், பலராமு நாயக்கரிடம் அடி வாங்கிய ஒரு சம்பவமும், கசப்புகளுடன் நினைவுக்கு வந்து சண்முகத்திற்கு, தொண்டையை அடைத்து விடும். அப்போது, சண்முகம், ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அந்த வருஷம் பள்ளி தொடங்கி, 52 வருஷம் நிறைவானதை ஒட்டி, பள்ளி புதுப் பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டிருந்தது. ஆண்டு விழாவும், மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
அந்த விழாவில், ராவுத்தர் வாத்தியார் எழுதி, மாணவர்களை நடிக்க வைத்து, இயக்கிய, ஒரு நகைச்சுவை நாடகமும் அரங்கேறியது. அந்த நாடகத்தில், சண்முகம், வக்கீலாக நடித்திருந்தான். நாடகத்தின் கதை, அத்தனை துல்லியமாய் ஞாபகமில்லை அவனுக்கு. ஒரு செட்டியாருக்கும், பகடைக்கும் ஏதோ ஒரு வழக்கு. அவர்கள் நீதிமன்றத்திற்கு வந்து, தங்கள் வழக்கைச் சொல்லி, அது பைசல் பண்ணப் படுவதுதான் கதை. கூடவே, தீண்டாமையின் கொடுமை பற்றியும், அது, மனிதர்களை, எப்படி மிருகமாக்கு கிறது என்றும், உறுத்தாமல் சொல்லப் பட்டிருந்ததாக சண்முகத்திற்கு ஞாபகம்!
காட்சிக்குக் காட்சி சிரித்துச் சிரித்து, அரங்கம் குலுங்கி, கிராமத்திற்கே வயிற்று வலி வந்து விட்டது. பலராமு நாயக்கரின் மகன், ரெங்கையா தான் கதாநாயகன். பகடையாக வேஷங்கட்டி, இடுப்பில், நாலுமுழ வேட்டியும், கட்கத்தில் இடுக்கிய துண்டுமாய், அதீத உடல் மொழியால், அமர்க்களப்படுத்தி விட்டான். அவன் மேடைக்கு வந்து நின்றாலே, கூட்டம் விழுந்து புரண்டு சிரித்தது. நாடகம் முடிந்த பின், அவன் எல்லாத் திசைகளிலிருந்தும், தன் மீது பொழிந்த பாராட்டு மழையில் நனைந்து, மகிழ்ந்து கொண்டிருந்தான்.
நாடகம் முடிந்து, நான்கைந்து நாட்கள் கடந்திருந்த நிலையில், ராவுத்தர் வாத்தியாரை வழி மறித்த, பலராமு நாயக்கர், காரணம் இன்னதென்று சொல்லாமலே, அவரை அடிக்கத் தொடங்கி விட்டார். சாவடியிலிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஊர்க்காரர்கள் ஓடிப் போய், பலராமு நாயக்கரைப் பிடித்து இழுத்துக் கொண்டனர்.
'இந்த வாத்தியார், எங்க பரம்பரைக்கே பெரிய அவமானத்த தேடிக் குடுத்துட்டான். இவனக் கொல்லாம விட மாட்டேன்...' என்றபடி, அவர்களின் பிடியில் நிற்காமல், திமிறிக் கொண்டிருந்தார். பலராமு நாயக்கரைப் பிடித்திருந்தவர்கள், அவரை நாலு சாத்து சாத்தவும், வெடித்து, அழத் தொடங்கி விட்டார்.
'கம்பளத்து நாயக்கன் குலத்துல பொறந்த என் மகன, இவன், இந்த மாதிரி நடிக்க வச்சுட்டானே... பையன் அசல் பகடையாட்டமே இருக்கானே... 'உனக்குத் தான் பொறந்தானா, இல்ல...'ன்னு சம்பந்திகாரப் பயலுகள் எல்லாம் எகத்தாளமும், ஏகடியமும் பண்றான்களே...' என்றார் அழுகையுடனேயே.
அன்றைக்கு, ராவுத்தர் வாத்தியார், பள்ளிக்கு வரவில்லை. ராவுத்தர் மாதிரியான தேவ துாதரை, ஒரு சாமானியன் எப்படி அடிக்க முடியும் என்பதை, பள்ளிப் பிள்ளைகளால், நம்பவே முடியவில்லை. எல்லாரும் விசனப்பட்டுக் கொண்டு, பலராமு நாயக்கரை ஏதாவது செய்ய வேண்டுமென்றும், சதி ஆலோசனைகள் தீட்டிக் கொண்டு இருந்தனர். பலராமு நாயக்கர் துாங்கும் போது, அவர் மூக்கில் தலையணையை அமுக்கி, மூச்சை நிறுத்தி அவரைக் கொன்று விடுவதற்கான, திட்டத்தைச் சொன்னவன், அவரின் பையன் ரெங்கையா தான்.
இந்த விஷயம், ஊர் பஞ்சாயத்துக்கு வந்தது. பலராமு நாயக்கர், ராவுத்தர் வாத்தியாரின் காலில் விழுந்து, மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று, தீர்ப்பு சொல்லப்பட்டது. ராவுத்தர் வாத்தியார் பதறிப்போய் 'அய்யோ அதெல்லாம் வேண்டாம். அவர் மேல, எனக்கு எந்தக் கோபமும் இல்ல. ஏற்கனவே, அவர் மனசு ஒடஞ்சு கெடக்குறார். இதுக்கு மேலயும் அவரக் கஷ்டப்படுத்தாதீங்க...' என்று சொல்லி, பஞ்சாயத்திலிருந்து எழுந்து போய் விட்டார்.
ராவுத்தர் வாத்தியார் பணியிலிருந்து ஓய்வு பெறப் போகிறார் என்ற செய்தி கிடைத்ததும், ஊர்க்காரர்கள் அவருக்கு ஏதாவது பெரிதாய் செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டனர். என்ன செய்யலாம் என்று, பல சாத்தியங்களையும் அலசி ஆராய்ந்தபோது, சண்முகம் தான், அவரை, 'ஹஜ்' பயணத்திற்கு அனுப்பி வைக்கலாம்' என்று, அபிப்ராயம் சொன்னான். மார்க்கக் கடமைகளில் ஒன்றான ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்ள வேண்டுமென்பது, அவரின் ஆன்மிக லட்சியம் என்பதையும், அவரின் வறுமையான வாழ்க்கைச் சூழலில், அது, அவருக்கு என்றுமே சாத்தியப்படாது, என்பதையும் அவன் அறிந்திருந்தான்.
ஊர்க்காரர்கள் சண்முகத்திடமே அந்தப் பொறுப்பை ஒப்படைத்தனர். பள்ளியின் பழைய மாணவர்களுக்கு விவரம் சொல்லி எழுதவும், பணம் வந்து குவிந்தது. ஊர் பொதுவிலிருந்தும், பெருந்தொகையைக் கொடுத்தனர். ராவுத்தரைச் சம்மதிக்க வைப்பதற்கு தான், பெரும்பாடு பட வேண்டியிருந்தது. 'ஹஜ்' பயணத்தை, சொந்தப் பணத்திலிருந்து தான் மேற்கொள்ள வேண்டுமென்றும், இரவல் பணத்தில் கூடாது...' என்று சொல்லி, பிடிவாதமாய் மறுத்தார். 'இதுவும் உங்களின் பணம் தான் என்றும், அரசாங்கம் ஏழை முஸ்லிம்கள் புனிதப் பயணம் செல்வதற்கு, பண உதவி செய்வதைப் போல், இதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்' என்று எல்லாரும் வற்புறுத்தவே, அவர்களின் மனம் வருந்தக் கூடாது என்பதற்காக, அரை மனதுடன் சம்மதித்தார்.
சண்முகம் கிராமத்திற்குப் போய்ச் சேர்ந்த அடுத்தநாள் தான், ராவுத்தரின் சடலம், சவூதியிலிருந்து, விமானம் மூலம் கிராமத்திற்கு வந்துச் சேர்ந்தது. ஊரே துக்கத்தில் விம்மி, அழுது அரற்றியது. ராவுத்தர் வாத்தியாரை அடக்கம் செய்வது சம்பந்தமாக, விவாதித்து முடிவெடுக்க ஊர்க்கூட்டம், காளி அம்மன் கோவிலில் கூட்டப்பட்டிருந்தது. ஆளாளுக்கு ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தனர்.
பலராமு நாயக்கர் முதுமையின் தள்ளாட்டத்துடன், பஞ்சாயத்தாரின் முன்னால் வந்தார். 'பள்ளிக்குச் சொந்தமான தோட்ட நிலத்திற்குப் பக்கத்தில், தங்களுடைய பூர்வீக சொத்தான, ஆறரை ஏக்கர் நிலமிருப்பதாகவும், அதை, தான் ஊருக்கு பொதுவில் எழுதிக் கொடுத்து விடுவதாகவும், அங்கு, நாகூரில் உருவாக்கப்பட்டது போல், மசூதி ஒன்றைக் கட்டிக்கொண்டு, அங்கு, ராவுத்தரை அடக்கம் செய்து, அதையே தர்காவாக்கி வழிபடலாம்...' என்றும் சொன்னார்.
அப்படித் தான், சண்முகத்தின் கிராமத்தில், அவசர மசூதி ஒன்றும், தர்கா ஒன்றும் உருவானது. அன்றிலிருந்து, ஒவ்வொரு வருஷமும், ராவுத்தர் வாத்தியார் இறந்த நாள் என்பதை, ஊர்க்காரர்கள் குரு பூஜையாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். திருவிழாக்கள் வழக்கொழிந்து போன இன்றைய கால கட்டத்திலும், ராவுத்தருக்கான குருபூஜை மட்டும், எந்தத் தடங்கலுமில்லாமல், சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ராவுத்தரின் தர்கா மெது மெதுவாக, எல்லா மதத்தவர்களும் வந்து போகும் வழிபாட்டுத் தலமாகவும் மாறிவிட்டது.

சில்வியா மேரி
இயற்பெயர்: சோ.சுப்புராஜ், கட்டடப் பொறியாளர், சென்னையில், தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். மகள் மற்றும் மனைவி பெயரை இணைத்து, புனைப் பெயராக சூட்டிக் கொண்டுள்ளார். புனைப் பெயரில் வெளியாகும் முதல் சிறுகதை இது. இக்கதை, பரிசு பெற்றதில், மிகுந்த சந்தோஷம் அடைந்ததாக குறிப்பிடுகிறார்.
கல்லுாரியில் படிக்கும் காலத்தில், 'கணையாழி' இதழில், இவரது முதல் சிறுகதையும், 'தீபம்' இதழில், முதல் கவிதையும் வெளியாகியுள்ளது.
இவர் எழுதிய நாற்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல்வேறு தமிழ் வார, மாத இதழ்களில் வெளியாகியுள்ளன. பல பரிசுகளையும் பெற்றுள்ளார். 'துரத்தும் நிழல்கள்' என்ற தலைப்பில், ஒரு சிறுகதை தொகுப்பும் வெளியாகியுள்ளது.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X