துபாய் பணம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
துபாய் பணம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 டிச
2013
00:00

''என்ன நாகு... டவுனுக்குப் போய், ஏஜன்ட்டைப் பார்த்தியா... என்ன சொன்னார்? அரபு நாட்டுக்கு, அடுத்த பயணம் எப்போதாம். உனக்கு நிச்சயமா, வாய்ப்பு உண்டுன்னு சொல்லியிருப்பாரே... நீதான், அவருக்கு ரொம்ப நெருக்கமானவனாச்சே,'' என, விசாரித்தான் லோக நாதன்.
நாகராஜன், சுரத்தில்லாமல் இருந்ததை வைத்தே, அவன் போன வேலை, நல்ல விதமாய் முடியவில்லை என்பதை புரிந்து கொண்டிருந்தாலும், எதிரில் வந்து விட்டதால், வேறு வழியில்லாமல் கேட்டு வைத்தான்.
அதிக நேரம், அவன் முன் நிற்க விரும்பவில்லை. மணி, சேகர், குமார் சம்பத் ஆகியோரிடம் கேட்டது போல், தன்னிடமும் பணம் கேட்டு விடுவானோ என்று, உள்ளூர உதைப்பு. மற்றவர்கள், நாகராஜன் கண்களில் படாமல் இருந்ததுடன், லோகநாதனையும் எச்சரித்தனர். அவனும், சுதாரிப்பாக இருந்த போதிலும், இப்படி ஏதாவது, ஒரு நேரத்தில் எக்குத் தப்பாய் எதிர்பட்டு விடுவதுண்டு.
அவனை நிமிர்ந்து பார்த்த, நாகு என்ற நாகராஜன், ''ரொம்ப நம்பிக்கையா போனேண்டா. வளைகுடா நாட்ல, இப்ப நிலைமை சரியில்ல. அங்கிருக்கிறவங் களுக்கே வேலையில்லைன்னு, வெளிநாட்டு ஆட்களை, திருப்பி அனுப்பி கிட்டிருக்காங்க. 'சப் கான்ட்ராக்ட்' கொடுத்துகிட்டிருந்த கம்பெனிகிட்டருந்து, எந்த தகவலும் இல்லை. 'நானே உள்ளூர்ல ஏதாவது, வேலை தேடிக்கலாம்'ன்னு இருக்கேன்னு, ஏஜன்ட் சொல்லிட்டான்டா,'' என்றான் நாகராஜன்
''மனச தளரவிடாத நாகு. உன்னைப்போல, பரோபகாரிக்கு துன்பம் வருதுன்னா, அது கடவுளுக்கே பொறுக்காது. நிச்சயமா, உனக்கு, இன்னொரு சான்ஸ் கிடைக்கும் பாரு... வரட்டுமா.''
''நில்லு லோகு.''
''அவசர வேலைடா. போயிட்டு வந்து, உன்னை பார்க்கறனே.''
''பணம் கேட்டுருவேன்னுதானே இப்படி பறக்கற. ஏண்டா... உங்களுக்கெல்லாம், மனசாட்சியே இல்லையா. வெளிநாட்டில் சம்பாதிக்கறதில் முக்கால் பங்கை, உங்களுக்கு தானேடா செலவழிச்சேன்.
''சாப்பாடு, சினிமா, டிரஸ்சுன்னு கேட்ட தெல்லாம் வாங்கிக் கொடுத்ததோடில்லாமல், கேட்டபோதெல்லாம், கணக்கு பார்க்காம, அள்ளிக் கொடுத்தேனே... அத்தனையும், ஒரு நாள்ல மறந்துடுமாடா. இரவு - பகல், இருபத்து நாலு மணி நேரமும், என்னையே சுத்தி சுத்தி வந்திங்களேடா. துாக்கத்துல கூட எழுப்பி, பணம் வாங்கிப் போனீங்களே. இப்ப பணம் தீர்ந்து போச்சுன்னதும், உங்களுக்கெல்லாம், என்னை மறந்து போச்சு; என் விலாசம் மறந்து போச்சு. ஒருத்தனும் எட்டிப் பார்க்கறதில்லை. நானே தேடி வந்தாலும், வீட்டுக்குள் இருந்துகிட்டே இல்லைங்கறீங்க. நேரில் பார்த்தாலும், அவசர வேலை, ஆத்திர வேலைன்னு, நழுவறீங்களடா... நன்றி கெட்ட நாய்களா,'' என்று ஆத்திரமாக, லோகநாதனின் சட்டையைப் பற்றினான். வெலவெலத்துப் போனான் லோகு...
''நானாடா உன்கிட்ட வந்து, இது வேணும், அது வேணும்ன்னு கேட்டேன். நீயாதானடா தேடிவந்து, உன் ஜம்பத்தைக் காட்டுறதுக்காக, எனக்கு செலவழிச்சே. அப்ப கூட நான், உன்கிட்ட ரொக்கமா வாங்கினதில்லை. நீ கட்டாயப்படுத்தினேன்னு, ஒண்ணு, ரெண்டு முறை வந்து, ஓட்டல்ல சாப்பிட்டேன். வேணும்னா, வா... உனக்கு வாங்கி கொடுக்கறேன். தின்னுட்டு போ... இந்த சட்டையை பிடிக்கிற வேலையெல்லாம் வேணாம்,'' என்று, திமிறினான் லோகு.
''பொய் சொல்லாதடா... நீ போட்டிருக்கிற சட்டை, இந்த பேன்ட், இந்த வாட்ச், ஏன் இந்த செருப்பு கூட, நான் வாங்கித் தந்தது தான். நான் வாங்கித்தரலைன்னா... நீ பிச்சைக்காரனாதாண்டா, கிழிஞ்ச துணி போட்டு திரிஞ்சிருக்கணும், நாதாரிப் பயலே. பேச்சா பேசற நீ.''
''நான் பிச்சைக்காரன் தான். இப்ப நீ மட்டும் என்ன குபேரனோ... நீயும், என்னை மாதிரி தான். நான் கேட்டாலும், ஊர்ல பத்து ரூபாய் தருவான். நீ தலைகீழா நின்னாலும், ஒருத்தனும் சல்லிக்காசு தர மாட்டான் தெரிஞ்சுக்கோ... கொஞ்சமாவா ஆட்டமா போட்டே... அதை நினைச்சுப்பார்; அப்புறம் எம்மேல சீறு,'' என்று, தன்னை விடுவித்துக் கொண்டு போனான் லோகநாதன்.
செய்வதறியாது தெருவில் நின்றான் நாகராஜன்.
''உனக்கிந்த நிலைமை தேவையா,'' என்ற குரல் கேட்டு திரும்பினான். கதிரேசன் நின்றிருந்தார்.
அவரைப் பார்த்ததும், அவன் முகம் மேலும் கருத்தது.
''என்ன செய்றது... உன்னை மாதிரி, இரக்கமில்லாத ஆசாமியெல்லாம் உறவுக்காரரா வாய்ச்சால், என்னைப் போன்றவங்களுக்கு, இந்த நிலைமையும் வரும். இதுக்கு மேலும் வரும். வேலையை பார்த்துக்கிட்டு போவியா... துக்கம் விசாரிக்கிறாரு.''
அவர் சிரித்தார்.
''நீ எதிர்பார்த்தியோ இல்லையோ... ஆனால், நான் எதிர்பார்த்தேன், சீக்கிரமே நீ நடுத்தெருவுக்கு வருவேன்னு.''
''வந்துட்டேன்ல, மனமாற பார்த்துட்டிங்கல்ல. அப்புறமென்ன பேச்சு, சந்தோஷமா போக வேண்டியதுதானே.''
''சந்தோஷமா... எனக்கா, ஏண்டா நீ கெட்டுப் போறத பார்த்து சந்தோஷப்பட, நான், உன் எதிரியா... உன் பெரியப்பன்டா. நீ தலை நிமிர்ந்து நடக்கணும், சொத்து சுகத்தோடு சந்தோஷமா இருக்கணும். நாலு பேரு மதிக்கிறாப்ல வாழணும்ன்னு ஆசைப்படறவன்டா. அதனாலதான், உன்னை பள்ளிக்கூடத்துல சேர்த்தேன். உனக்கு படிப்பு ஏறலை. கை வேலையாவது கத்துக்கோன்னு, பெயின்டர்கிட்ட விட்டேன். நீயும் ஆர்வமா கத்துக்கிட்டு, நாலு காசு சம்பாதிக்க ஆரம்பிச்சே. உனக்கொரு கல்யாணத்தை செய்து வைக்கலாம்ன்னு, பொண்ணு பார்க்க ஆரம்பிச்சேன். அந்த நேரம், துபாய்ல வேலை வந்திருக்கு. ஏஜன்ட் மூலம் போகப் போறேன்னு சொன்னே.
''உங்க, அப்பா - அம்மா வேணாம்ன்னு சொன்னாங்க. நான், அந்த ஏஜன்ட்டைப் பார்த்து விசாரிச்சு, ஒப்பந்தமெல்லாம் முறையா இருக்குதான்னு, சரி பார்த்து திருப்தியான பின், உங்க அப்பாகிட்ட, 'பயப்பட ஒண்ணுமில்லை. மூணு ஆண்டு கான்ட்ராக்ட். போய் வரட்டும்'ன்னு சொன்னேன். கையில் இருந்த சேமிப்பிலிருந்து, கழுத்து, காதுல போட்டிருந்த நகை வரைக்கும், எல்லாம் திரட்டி, பயணச் செலவுக்கு பணம் கொடுத்தாங்க உங்க, அப்பா - அம்மா.
''போன இடத்திலிருந்து, மாசந்தோறும் பணம் அனுப்புவேன்னு பார்த்தேன். அப்பப்ப அனுப்பிகிட்டிருந்தால், அது சில்லரை செலவு களுக்கே போயிடும். மொத்தமாக கொண்டு வர்றேன். அப்பதான் உருப்படியா வீடு, வாசல் வாங்க முடியும். காடு கழனி வாங்கி, செட்டிலாக முடியும்ன்னு சொன்னே. ஒரு வகையில, அது சரின்னு பட்டதால, அந்த மூணு வருஷமும், உங்க குடும்பத்துக்கு நான் உதவி செய்தேன்.''
''போதும். நிறுத்திக்கிங்க... அதுக்கெல்லாம் சேர்த்து, வட்டியும் அசலுமா வாங்கிட்டிகிங்கல்ல. கூட்டு வட்டி வேற. எதிரி கூட, இந்தக் காரியத்தை செய்திருக்க மாட்டான். சொந்த தம்பிக்கு, சோறு போட்டதுக்கு, கணக்கு எழுதி வச்சு, காசு வாங்கறவன் சகோதரன் இல்லை. ஈட்டிக்காரன் கூட, அந்தக் காரியத்தை செய்ய மாட்டான். என் வாயிலிருந்து வந்திரப் போவுது... நகரு,'' என்று, அவரை தள்ளிவிட்டு, நடையைப் கட்டினான் நாகராஜன்.
''ஏண்டா நாகு... வழியில பெரியப்பாவைப் பார்த்தியா?''
உள் திண்ணையில் படுத்திருந்த மகனிடம் வந்தார் அப்பா கார்மேகம்.
பெரியப்பா என்று கேட்ட மாத்திரத்தில், கண்ணில் மிளகாய்த்தூள் பட்டது போல், தகித்து எழுந்தான் நாகராஜன்.
''அந்த உறவு அறுந்து வருஷம் இரண்டாச்சு. அவரைப்பத்தி பேசவோ, நினைக்கவோ கூடாதுன்னு சொல்லியிருக்கேன் இல்லையா... என்ன கூடப் பிறந்த பாசமோ, வெட்கம் கெட்ட மனுஷா,'' என்று சீறினான்.
''நான் வெட்கம் கெட்டவனாவே, இருந்துட்டுப் போறேன். ஆனால், நீ அவரை கண்டபடி பேசிகிட்டு திரியறத, எப்ப நிறுத்தப்போற. முகத்துக்கு நேராகவே, அசிங்கமா பேசறியாமே...''
''வத்தி வச்சாரா. ஆமாம் பேசினேன். அவருக்கும், நமக்கும் என்ன சம்பந்தம். வெக்கமாயில்ல, நான் இல்லாத நாளில், உங்களுக்கு கவளம் சோறு போட்டதுக்கு, கணக்கு பார்த்து எங்கிட்டருந்து கறாராய் காசு வாங்கினவரை, அண்ணன்னு உரிமை கொண்டாடறியே.''
''அவரைப் பத்தி, நீ தெரிஞ்சுகிட்டது, அவ்வளவு தான். தம்பிக்கு சோறு போட தயங்குறவரும், போட்ட சாப்பாட்டுக்கு, கணக்கு பார்க்கிறவரும் அவர் இல்லை. இன்னும் கொடுக்கணும், செய்யணும்ன்னு ஆசைப்படற வர்டா எங்க அண்ணன். நீ பொறந்ததுலருந்து என்னைக் காவது, நம்ம வீட்ல மூணு வேளை தின்னிருப்பியா. அங்கேதானே ஓடுவே. அவங்களும் உனக்கு வகை வகையா போட்டாங்களே... மறந்துட்டியா.''
''இதை அப்பவே ஞாபகப்படுத்த வேண்டியதுதானே. அதுக்கும் சேர்த்து, பணம் கொடுத்திருப்பேன்.''
''கையில் பணம் இருந்த ஆணவத்தில், நீ அதையும் செய்திருப்பே. ஆனால், அவர் வாங்கியிருப்பார்ன்னா நினைக்கறே.''
''சின்னப் பையன் போனாப் போகட்டும்னு விட்டிருப்பாரோ! அப்படியொண்ணும், அவர் தயவு பார்க்க வேணாம். அதுக்கும், ஒரு கணக்கு சொல்லட்டும். அதையும், ஒரு நாளைக்கு திருப்பிக் கொடுத்துடலாம்.''
''இப்பவும் நீ திருந்தலையேடா,'' என்று கவலைப்பட்ட கார்மேகம், மனைவியைப் பார்த்தார்.
''கற்பகம்... அந்தப் பணத்தைக் கொண்டு வா,'' என்றார்.
''பணமா... ஏது?'' என்று, நெற்றி சுருங்க கேட்டபடி நிமிர்ந்து உட்கார்ந்தான் நாகு. மரகதம் உள்ளே போய், சில நிமிடங்களில் திரும்பினாள். அவள் கையில் பருமனான, ஒரு மஞ்சள் பை. அதை கணவனிடம் கொடுத்தாள்.
அதற்குள் இருந்து பணக்கட்டுகளை எடுத்து வைத்தார் கார்மேகம்.
கொஞ்சம் சில்லரைகளும், பையிலிருந்து விழுந்தன. அதைப் பார்த்ததும், 'சொரேர்' என்றது அவனுக்கு; அதே பணம்.
'மூணு வருஷம், உன் அப்பன் ஆத்தாளுக்கு சாப்பாடு போட்டது, துணிமணி எடுத்துக் கொடுத்தது, நோய் வந்தபோது, வைத்தியம் பார்த்தது, நல்ல நாள், கெட்ட நாள்ல கைச் செலவுக்கு பணம் கொடுத்ததுன்னு, வருஷத்துக்கு, 80 ஆயிரம் வீதம், மூணு வருஷத்துக்கு, ரெண்டரை லட்சம், வட்டின்னு சேர்த்து, மூணு லட்சத்து பதினாயிரத்து பதினொரு ரூபாய் ஆச்சு. பதினொரு ரூபாயை தள்ளிடறேன். மீதியைக் கொடு. இப்பதான் உன்கிட்ட பணம் கொட்டி கிடக்குதே...' என்று நாலு பேர் முன் வைத்து, கறாராகக் கேட்க, 'அந்த பதினோரு ரூபாயை ஏன் தள்ளுபடி செய்யணும். அதையும் சேர்த்து வாங்கிக்கங்க...' என்று விட்டெறிந்த சில்லரைகள்.
''இது எப்படி இங்கே வந்தது?''
''இங்கிருந்து போயிருந்தால் தானே,'' என்றபடி பணத்தை, மீண்டும் பையில் அடைத்து, அவனிடம் நீட்டினார்.
''உன்மேல எங்களை விடவும், அண்ணனுக்கு எதிர்பார்ப்பும், கனவுகளும் அதிகம் இருந்தது. நீ கொண்டு வரும் பணத்தில், ஒரு காசும் வீணாக்காமல், நல்ல முறையில் வீட்டை புதுப்பித்து, நிரந்தர வருமானத்துக்கு வழி ஏற்படும்படி, முதலீடு செய்து, உனக்கு கல்யாணம் செய்து வைத்து, பின், இங்கேயே, ஒரு வேலை பார்த்து வைக்கணும்ன்னு ஆசையாசையா இருந்தார். நீ, அவர் ஆசையிலும் மண்ணைப் போட்டே. பணத்தோடு வந்த உனக்கு, கூடவே அகங்காரமும் வந்திருந்தது. உன் இஷ்டம் போல் நடக்க ஆரம்பிச்சே. பணத்தை தண்ணியாய் கொட்டி, நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு கொட்டமடிச்சே. எங்க பேச்சை கேட்கலை. எடுத்துச் சொல்ல வந்த பெரியப்பாவையும் உதாசீனப்படுத்தினே. 'பணத்தை, இப்படி ஊதாரித்தனமா செலவழிச்சால் பார்த்துக்கிட்டிருக்கும் போதே, எல்லாம் கரைஞ்சிடுமே. பணத் திமிர் கண்ணை மறைக்கிறது. எடுத்துச் சொன்னால் கேட்க மாட்டானே... என்ன செய்யறது'ன்னு கவலைப்பட்டார்.
''பணத்தைப் பத்தி பேச்செடுக்கும் போதெல்லாம், 'இதென்ன பணம். இது போல பத்து மடங்கு சம்பாதிக்கிற திறமை என்கிட்ட இருக்கு. இறைக்க இறைக்கத்தானே நீர் சுரக்கும். அது போல செலவழிக்க செலவழிக்கத்தான் பணம் சேரும்'ன்னு, வெட்டி வேதாந்தம் பேசி வீணாக்கிகிட்டிருந்தே... அப்பதான், அண்ணன் சாப்பாட்டு கணக்கோடு வந்தார். எங்களுக்குமே, அதிர்ச்சியாய் இருந்தது. ஆனால், உங்கிட்ட பணத்தை வாங்கி, உனக்குத் தெரியாமல் எங்கிட்ட கொடுத்து, 'நாகு போற போக்கைப் பார்த்தால், கடைசி பைசாவையும் செலவழிச்சுட்டுதான் ஓய்வான் போலிருக்கு. அந்த நேரம் யாரும் வந்து, இவனுக்கு உதவுவாங்கன்னு எதிர்பார்க்க முடியாது. அவன் நினைப்பது போல், வெளிநாட்டு பயணமும் நம்ம வசதிக்கு அமையாது. அப்படி, ஒரு நெருக்கடி வரும்போது, இந்த பணம் அவனுக்கு உதவும். இதைக் கொண்டு, அவன் ஒரு கடைபோட்டு பிழைச்சுக்கட்டும்'ன்னு சொன்னார். தீர்க்கதரிசி. அவர் சொன்னது போலவே, இப்ப நிக்கற... இந்தா பணம். இனியாவது சமர்த்தா இரு,'' என்றார் அப்பா.
நாகராஜன் கண்களில் நீர் சுரந்தது. பெரியப்பாவிடம் மன்னிப்பு கேட்க கிளம்பினான்.

படுதலம் சுகுமாரன்

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X