நாடு சுதந்திரம் அடைந்திருந்த நேரத்தில், பிரிந்து கிடந்த மாகாணங்களை, உள்துறை அமைச்சர், சர்தார்படேல், இந்தியாவுடன் இணைக்க முயற்சி செய்த வேளையில் ஐதராபாத் நிஜாம் எதிர்ப்பு தெரிவித்து, ஐதராபாத்தை, பாகிஸ்தானுடன் இணைக்க முயற்சித்தார்.
இதை அறிந்த, சர்தார் வல்லபாய் படேல், "ஐதராபாத்திற்கு, ராணுவத்தை அனுப்ப வேண்டும்' எனப் பிரதமர் நேருவிடம் வலியுறுத்திய போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நேரு, படேலை பார்த்து, நீங்கள், மதவாதத்தின் ஒட்டுமொத்த உருவம் என்று கூறியதாகப் புத்தகம் ஒன்றில் இருந்த தகவலை, பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி, தன் இணைய பக்கத்தில் எழுதியிருந்தார்.
காஷ்மீர் பிரச்சனை: அதுபோல், இப்போது மேலும் ஒரு கடந்த கால அரசியல் நிகழ்வை, அத்வானி எழுதியுள்ளார். அதில், காஷ்மீர் பிரச்சினையைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 1947ல், காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்து, காஷ்மீர் மன்னர் மகாராஜா ஹரி சிங், ஒப்பந்தம் மேற்கொண்டதை எதிர்த்து, பாகிஸ்தான் பழங்குடியின மக்களும், காஷ்மீர் மன்னர் ராணுவத்தில் இருந்த முஸ்லிம் வீரர்களும், மன்னருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் ஒன்றிணைந்து, தாக்குதல் நடத்த புறப்பட்ட தகவலை அறிந்த, மவுண்ட்பேட்டன் பிரபு, அமைச்சரவையைக் கூட்டி விவாதித்துள்ளார். அதில், பிரதமர் நேரு, உள்துறை அமைச்சர், சர்தார் வல்லபாய் படேல், ராணுவத் தளபதி சாம் மானேக் ஷா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
"காஷ்மீருக்கு ராணுவத்தை அனுப்ப வேண்டும்' என, படேல் வலியுறுத்திய போது, அதற்கு மறுப்பு தெரிவித்த நேரு, "இந்த விவகாரத்தை, ஐ.நா.விடம் கொண்டு செல்வோம்' எனக் கூறியுள்ளார். இதற்கக் கடும் கண்டனம் தெரிவித்த படேல், "காஷ்மீர் உங்களுக்கு வேண்டுமா... வேண்டாமா....?' என, நேருவிடம் கேட்டுள்ளார்.
ராணுவத்தை அனுப்புங்கள்: நேரு, "காஷ்மீர் வேண்டும்' எனக் கூறியுள்ளார். படேல், "அப்படியானால் உடனடியாக ராணுவத்தைக் காஷ்மீருக்கு அனுப்புங்கள்' எனக் கூறியுள்ளார். "சரி' என நேரு கூறிய உடனேயே, அருகில் இருந்த ராணுவத் தளபதி சாம் மானேக் ஷாவிடம், "உங்களுக்கு உத்தரவு கிடைத்து விட்டது. படைகளைத் தயார்ப்படுத்திக் காஷ்மீர் சென்று, பாகிஸ்தான் குழுக்களை வீழ்த்துங்கள்' எனப் படேல் கூறியுள்ளார்.
அடுத்த சில மணி நேரத்தில் விமானங்களில் சென்ற நம் வீரர்கள், காஷ்மீரில் இறங்கி, தாக்க வந்த அந்நியப் படைகளை அடித்துத் துரத்தியுள்ளனர்.
இந்தத் தகவலை, சாம் மானேக் ஷா, பிரேம் சங்கர் ஜா என்ற பத்திரிகையாளரிடம் தெரவித்ததாக, அந்தப் பத்திரிகையாளர் கூறிய தகவலை, அத்வானி, தன் இணைய பக்கத்தில் எழுதியுள்ளார்.
குஜராத்தில் படேலுக்குச் சிலை: * சர்தார் படேலின் சிலை. உலகில் உள்ள சிலைகளிலேயே மிக உயரமான சிலையாக 182 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படவுள்ளது.
* தற்போது உலகின் மிக உயரமான சிலையாகக் கருதப்படும் சீனாவில் உள்ள புத்தர் சிலை 153 மீட்டர் உயரமுள்ளது.
* சர்தார் படேல் நடந்து செல்வது போன்ற தோற்றத்தில் இந்தச் சிலை அமைக்கப்படவுள்ளது.
* இரும்பால் வடிவமைக்கப்பட்டாலும் சிலையின் புறத்தோற்றம் உயர்தர வெண்கலத்தில் அமைக்கப்படும்.
* சிலையைப் பார்ப்பதற்காக அதன் உட்பகுதியில் உலகின் மிக உயரமான லிஃப்ட் அமைக்கப்படவுள்ளது.
* சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும், சிலையை அருகில் சென்று பார்ப்பதற்கும், சிலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இயற்கை வளங்களை ரசிப்பதற்கும் 200 பேர் நின்று பார்க்கக்கூடிய வகையிலான் கண்காணிப்பு கூண்டு அமைக்கப்படும்.
* நர்மதை ஆற்றில் 3.5 கி.மீ. தூரம் படகில் பயணித்துத் தான் சிலை இருக்கும் தீவுக்குச் செல்ல முடியும்.
* சிலையை அமைப்பதற்காக 2603 கோடி ரூபாய் செலவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. சிலை வடிவமைப்புப் பணி, நான்கு ஆண்டுகளில் முடிக்கப்படும்.
- தி. கோவிந்தராஜன்