நம் பேச்சு முறை, பொருள், கொடுக்கப்படும் செய்தி, அதற்கான சப்போர்ட் ஆகியவற்றை வைத்துத்தான் நம்மைப் பிறர் எடை போடுகின்றனர். இதற்காகவே, நாம் அடிக்கடி பிறர் எழுதிய நூல்களைப் படிக்க வேண்டும். சிறந்த கருத்துக்களை மனதில் தேக்கி, அவற்றைச் சரியான நேரத்தில் பயன்படுத்த வேண்டும்.
நம் பேச்சின் இடையே, நம் கருத்துக்களை வலுப்படுத்தும் வகையில், அறிஞர்கள் சிலர் நம் பேச்சின் பொருள் குறித்து சொல்லியதை மேற்கோளாகக் காட்டலாம். நாம் தொடர்ந்து புகழ் பெற்ற நூல்களைப் படித்து வந்தால், முன்னால் அறிஞர்கள் கூறியது நம் நினைவில் இருக்கும். அப்படி இல்லாத போது, இது போல மேற்கொள்களைப் பட்டியலிட்டுத் தரும் நூல்களை நாடுகிறோம். இப்போது இதற்கென இணையத்தை நாடுகிறோம். இந்த கோணத்தில், மேற்கோள்களுக்கென இணையத்தைத் தேடிய போது, அருமையான தளம் ஒன்று கண்ணில் பட்டது. அதன் முகவரி http://izquotes.com/.
இந்த தளத்தின் முகப்பு பக்கம் சென்றவுடன், நம்மை வழி நடத்தும் இடைமுக வழி காட்டப்படுகிறது. மேற்கோள்கள், மேற்கோள்களுக்கு உரிய ஆசிரியர்கள் அல்லது பெரிய தலைவர்கள் மற்றும் தலைப்புகள் (Quotes, Authors, or Topics) என மூன்று வகையான தேடல்களை மேற்கொள்ளலாம். இதில் உங்களுக்குத் தேவையான பொருளில் மேற்கோள்களைப் பெற லாம். அல்லது குறிப்பிட்ட ஆசிரியரின் மேற்கோள்கள் தேவை எனில், அதனைத் தேர்ந்தெடுத்துப் பெறலாம். ஏதேனும் ஒரு குறிப்பிட்ட மேற்கோள் உரை மறந்துவிட்டால், அதன் சில சொற்களை டைப் செய்து தேடிப் பெறலாம்.
நீங்கள் குறிப்பிட்ட மேற்கோள் ஒன்றினை, அப்போது பார்த்துக் கொண்டிருக்கும் பேஸ்புக் போன்ற சமுதாய இணைய தளங்களில் பதிக்க விரும்பினால், இந்த தளத்தில் இருந்து காப்பி செய்து, பின் அங்கு சென்று, பேஸ்ட் செய்திட வேண்டியதில்லை. அப்படியே அந்த தளங்களுக்கு அனுப்ப ஆப்ஷன் பட்டன்கள் தரப்பட்டுள்ளன. இந்த வகையில், பேஸ்புக், ட்விட்டர், கூகுள் ப்ளஸ் ஆகிய தளங்களுக்கான வழிகள் தரப்பட்டுள்ளன.