கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2013
00:00

கேள்வி: கேஷ் ரெப்ரெஷ் (Cache Refresh) என்பது எதனைக் குறிக்கிறது? கேஷ்மெமரியை எப்படி ரெப்ரெஷ் செய்திட முடியும். அல்லது இது வேறு எதனையும் சுட்டிக் காட்டுகிறதா?
சி. ஆனந்தன், திருமங்கலம்.
பதில்:
பொதுவான ஒன்றைக் கேட்டுள்ளீர்கள். சற்று விரிவாக இதனைப் பார்க்கலாம். இணையத்தை அணுக நமக்கு உதவும் பிரவுசர்கள், வெப் கேஷ் (Web Cache) என்ற ஒன்றை உருவாக்கிப் பயன்படுத்துகின்றன. இது, தற்காலிகமான ஸ்டோரேஜ் ஆகும். இதில் நாம் தரவிறக்கம் செய்து பார்த்த இணைய தளங்கள் குறித்த குறியீடுகள், மீடியா சங்கதிகள் ஆகியவை பதியப்பட்டு வைக்கப்படும். இதனால், இதே தளங்களுக்கு நாம் அடுத்து செல்கையில், இந்த பதிவுகளிலிருந்து தளங்கள் நமக்கு வேகமாகக் காட்டப்படும். எடுத்துக் காட்டாக, செய்திகளை வழங்கும் இணைய தளங்களை நாம் அடிக்கடி பார்க்கும் போது, அவற்றின் தலைப்பு பக்கம், பக்க வடிவமைப்பு போன்ற விஷயங்கள், இந்த தற்காலிக ஸ்டோரேஜிலிருந்து பெறப்பட்டு திரையில் காட்டப்படும். அதே நேரத்தில், மேம்படுத்தப்பட்ட செய்திகள், அதற்கான சர்வரிலிருந்து பெறப்பட்டு இணைக்கப்படும். இதனால், நேரம் மிச்சமாகிறது. சில நேரங்களில் இவை சரியாகச் செயல்படாதபோது, பிரச்னை ஏற்படும். எடுத்துக் காட்டாக, பழைய செய்தி தரவுகளே காட்டப்படும். அப்போது, இந்த மெமரியை நாம் ரெப்ரெஷ் செய்து அனைத்தையும் குறிப்பிட்ட இணைய தளத்திலிருந்து பெற்று தரும்படி கட்டாயப்படுத்தலாம். இவ்வாறு பிரவுசரைக் கட்டாயப்படுத்த, ஷார்ட் கட் கீ தொகுப்பு உள்ளது. சில வேளைகளில் இவை பிரவுசர்களுக்கிடையே மாறுபடலாம். ஆனால், பொதுவான ஷார்ட் கட் கீ தொகுப்பு CTRL + F5 ஆகும். F5 என்ற கீ அழுத்தல், ஓர் இணையப் பக்கத்தினை ரெப்ரெஷ் செய்து புதியனவாகக் காட்டும். ஆனால் இந்த கீ இணைப்பு, பிரவுசரை, குறிப்பிட்ட பக்கத்தினை அதன் சர்வரிலிருந்தே முழுமையாகப் பெற்றுக் காட்டுமாறு வற்புறுத்தும். வெப் கேஷ் மெமரியிலிருந்து பெறுவது அப்போது ஒதுக்கப்படும்.

கேள்வி: கூகுள் இணையத்தில் பல பிரிவுகளை ஏற்படுத்தி நமக்கு உதவிடுகிறது. இதற்கான குறிப்புகளை மட்டும் உள்ளடக்கி, ஏதேனும் ஓர் இணைய தளத்தில் தரலாமே. அல்லது அது போல ஏதேனும் ஒரு தளம் உள்ளதா?
கா. மீனாட்சி ராணி, மதுரை.
பதில்:
சரியான கேள்வி. நீங்கள் எதிர்பார்ப்பது, கூகுள் நிறுவனம் தரும் சேவைகளுக்கான டிப்ஸ்களை கூகுள் நிறுவனமே ஓர் இணைய தளம் ஏற்படுத்தித் தரலாமே என்பதுதான், இல்லையா? உங்களைப் போன்றவர்களின் எதிர்பார்ப்பு கூகுள் நிறுவனத்தை எட்டி இருக்க வேண்டும். அதனாலேயே அண்மையில், கூகுள் சேவைகள் குறித்து டிப்ஸ்கள் அடங்கிய தளம் ஒன்றினை, கூகுள் தொடங்கியுள்ளது. அதன் முகவரி https://www.google.com/get/ googletips/. இந்த தளத்தில், கூகுள் தரும் அனைத்து சேவைப் பிரிவுகளுக்குமான (Chrome, Google+, Google Maps, Google Drive, Gmail, YouTube, மற்றும் Google Search) பயன் குறிப்புகள் கிடைக்கின்றன. எடுத்துக் காட்டாக, ஜிமெயில் செய்திகளில் எப்படி, 10 ஜிபி வரையிலான பைல் ஒன்றை கூகுள் ட்ரைவில் அட்டாச் செய்வது என்ற டிப்ஸ் கிடைக்கிறது. இன்னொரு குறிப்பு, ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை எப்படி ஒரு ஸ்மார்ட் போனில் இன்ஸ்டால் செய்வது என்று விளக்குகிறது. ஒவ்வொரு குறிப்பும், ஸ்லைட் ஷோ வடிவில் தரப்பட்டுள்ளது. இவை அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை. ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களில் விளக்கம் கிடைக்கிறது. இதில் என்ன விசேஷம் என்றால், ஒவ்வொரு குறிப்பும், உங்களை அதன் இன்னொரு வசதியினை உபயோகப்படுத்தும் வகையில் வழி தருகிறது. இதனால், கூகுள் தரும் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த நீங்கள் முன்வருவீர்கள் என்று கூகுள் எதிர்பார்க்கிறது.

கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திலிருந்து வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறுமாறு தொடர்ந்து எழுதி வருகிறீர்கள். ஓ.எஸ். பொறுத்தவரை சரி. விண்டோஸ் 7 அல்லது 8க்கு மாறத் திட்டமிடுகிறோம். ஆனால், ஏற்கனவே நாங்கள் இயக்கி வரும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்களின் கதி என்ன? இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான புரோகிராம்களுக்கு மாறிக் கொள்ள வேண்டுமா?
என். சூர்யபிரபா, மதுரை.
பதில்
: http://www.microsoft.com/enus/windows /compatibility/CompatCenter/Home என்ற முகவரியில் உள்ள தளம் சென்று, விண்டோஸ் 8.1 க்கான சிஸ்டத்தில் உங்கள் அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம் இயங்குமா என்பதனை அறிந்து கொள்ளலாம். இந்த தளம் சென்று, நீங்கள் இயங்குமா என அறிய விரும்பும் புரோகிராமின் பெயர், பதிப்பு எண் ஆகியவற்றை டைப் செய்து அறிந்து கொள்ளலாம். இந்த புரோகிராம் இயங்குமா அல்லது நீங்கள் அப்கிரேட் செய்து கொள்ள வேண்டுமா? என்பது குறித்தும் அதற்கான வழிகள் குறித்தும் தகவல் தரப்படும். இத்தளத்தில் உள்ள Action Recommended என்ற ஐகானில் கிளிக் செய்து நீங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து தெரிந்து கொள்ளலாம். அப்ளிகேஷன் புரோகிராமினை விண்டோஸ் 7 அல்லது 8ல் இயக்கலாம் என்று தெரிந்தால், அதற்கான ஒரிஜினல் டிஸ்க் உங்களிடம் இருக்க வேண்டும். ஆப்பரேட்டிங் சிஸ்டம் மாற்றிப் பதிந்த பின்னர், அவற்றை இன்ஸ்டால் செய்திட அவை தேவைப்படும். இவற்றைப் பயன்படுத்தி நீங்கள் உருவாக்கிய டேட்டா பைல்கள், தாமாகவே இவற்றில் இயங்கத் தொடங்கும். அல்லது குறிப்பிட்ட புரோகிராம்களைத் தயாரித்து வழங்கிய நிறுவனங்களின் இணைய தளம் சென்றும் இதற்கான பதிலைப் பெறலாம்.

கேள்வி: ஆட்டோ கம்ப்ளீட் இயக்கத்தைத் தேவைப்படும்போது இயக்கியும், மற்ற வேளைகளில் நிறுத்தவும் டிப்ஸ் கொடுத்திருந்தீர்கள். என் சாம்சங் காலக்ஸி 2 ஸ்மார்ட் போனில் இதனை எப்படி மேற்கொள்வது என்று விளக்கவும். பலரும் இப்போது ஸ்மார்ட் போனை டெஸ்க்டாப் போல பயன்படுத்தி வருவதால், அவசியம் இந்த கேள்விக்குப் பதிலளிக்கவும்.
சா. பங்கஜ் குமார், சென்னை.
பதில்
: உங்கள் கேள்விக்கான பதில் பலருக்குப் பயன்படும் என்றால், நீங்கள் கூடுதல் வேண்டுகோள் எதனையும் தர வேண்டியதில்லை. அவசியம் பதில் தரப்படும். அப்படிப்பட்ட கேள்விகளே இங்கு பதில்களைப் பெறுகின்றன. இனி உங்கள் கேள்விக்கான பதிலைப் பார்ப்போம். அனைத்து ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களில் Settings ஐகான் கட்டாயம் தரப்பட்டிருக்கும். வழக்கமாக இது கியர் அடையாளமாக இருக்கும். அந்த ஐகானில் உங்கள் விரலால் தட்டி இயக்கவும். அடுத்தபடியாகக் கிடைக்கும் திரையில், Language and Keyboards என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Keyboard Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு autocomplete முதல் autocorrect வரை எதனையும் இயக்கவிடாமல் செட் செய்திடலாம்.

கேள்வி: பல்வேறு காரணங்களுக்காக என் பேஸ்புக் அக்கவுண்ட்டினை அடியோடு நீக்க விரும்புகிறேன். எனக்கு அவசரமாகப் பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பெயர் தராத வாசகர், சென்னை.
பதில்
: பேஸ்புக்கில் அக்கவுண்ட் திறந்து, நண்பர்களை அதிகம் சேர்த்து, சிக்கல்களுக்கு ஆளான பின்னர், அக்கவுண்ட்டையே நீக்க விரும்பும் பல வாசகர்கள் இந்த உதவி கேட்டு கடிதம் எழுதுகின்றனர். அவர்களுக்கான விரிவான பதில். உங்கள் அக்கவுண்ட்டினை நீக்கினால், நீங்கள் அதில் பதிந்து வைத்த அனைத்தும் நீக்கப்படும். இருப்பினும், சில காலம் பேஸ்புக் அதனை வைத்திருக்கும். நீங்கள் மீண்டும் பேஸ்புக் செல்ல விரும்பினால், அக்கவுண்ட் திறக்கும்போது அவை உங்கள் பார்வைக்குக் கிடைக்கும்.
அக்கவுண்ட்டை நீக்க, பேஸ்புக்கில் லாக் இன் செய்திடவும். அதன் பின்னர் settings மெனு தேர்ந்தெடுக்கவும். இது மேலாக வலது மூலையில் கிடைக்கும். இது ஒரு கியர் ஐகானாகக் காட்சி அளிக்கும். இந்த மெனுவில் Account Settings தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் திரையின் விண்டோவின் இடது பக்கம் கிடைக்கும் பட்டியலில் Security என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த விண்டோவின் கீழாக Deactivate your account என்று ஓர் இடம் காட்டப்படும்.
இப்போது பேஸ்புக் செய்வது வேடிக்கையாக இருக்கும். உங்கள் நண்பர்கள், மற்றும் நீங்கள் பதிவு செய்த போட்டோக்களைக் காட்டி, எதற்காக அக்கவுண்ட்டினை நீக்க முயற்சிக்கிறீர்கள் என்று கேட்கும். நீங்கள் தொடர்ந்து நான் இருக்க விரும்பவில்லை என்பது போல பதில் தந்தால், Confirm என்று உள்ள பட்டன் காட்டப்படும். இதில் கிளிக் செய்தால், உங்கள் அக்கவுண்ட் முடக்கப்படும்; கவனத்தில் கொள்க, நீக்கப்படாது.
எனக்கு பேஸ்புக் அக்கவுண்ட்டே வேண்டாம் எனப் பிடிவாதமாக நீங்கள் இருந்தால், அதனை முழுமையாகக் "கொன்று' (kill) விடலாம். அப்போது கூட, பேஸ்புக், நீங்கள் பதிந்த டேட்டா அனைத்தையும் பேக் அப் எடுத்துக் கொள்ளுங்களேன் என்று ஒரு செய்தி காட்டும். பேக் அப் எடுத்துக் கொள்ளலாம். இதற்கான லிங்க் Download a copy of your Facebook data எனக் காட்டப்படும்.
இதன் பின்னர், அக்கவுண்ட்டை முற்றிலுமாக நீக்க, இதற்கான படிவம் உள்ள தளத்திற்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள். https:// www.facebook.com/help/delete_account என்பதே அந்தத் தளம். இங்கு சென்று, தேவையான தகவலை நிரப்பினால், உங்கள் அக்கவுண்ட் "கொல்லப்படும்'. கொன்று விட்டால், அப்புறம் உங்கள் அக்கவுண்ட் இருந்ததற்கான எந்த சுவடும் பேஸ்புக்கில் இருக்காது.

கேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டத்தில்,என் பிரவுசரை எப்போது திறந்தாலும், அது "about: blank” என்றே கிடைக்கிறது. நான் விரும்பும் இணைய தளத்தைப் பார்த்த பின்னர், மீண்டும் பிரவுசரை மூடித் திறந்தாலும், அதே "about: blank” கிடைக்கிறது. இது எதனால்? வைரஸ் காரணமா? அல்லது பிரவுசர் பிழையாக உள்ளதா?
சி.ஆர். ராஜசேகர், சிவகாசி.
பதில்:
இது வைரஸ் அல்ல. ஏதேனும் பிரவுசர் பிழையும் அல்ல. இது போல எந்த இணைய தளமும் இல்லாமல், பிரவுசர் திறப்பது உங்கள் பிரவுசரை வேகமாகத் திரையில் தோன்றுவதற்காக அமைக்கப்பட்ட ஒரு செட்டிங்ஸ் ஆகும். மேலும், உங்கள் இணைய இணைப்பு இங்கே குறைவான திறனையே பயன்படுத்திக் கொள்கிறது. நீங்கள் விரும்பும் வகையில், குறிப்பிட்ட இணைய தளத்துடன், உங்கள் பிரவுசர் திறக்கப்பட வேண்டும் எனில், கீழ்க்காணும் செட்டிங்ஸ் அமைக்கவும். உங்கள் பிரவுசர் என்னவென்று குறிப்பிடாததால், சில பிரவுசர்களுக்கான செட்டிங்ஸ் வழிகளைத் தருகிறேன்.
1.இன்டர்நெட் எக்ஸ்புளோரர்: கியர் ஐகானில் கிளிக் செய்து Internet options என்னும் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு என்று இருக்கும் இடத்தில், அதனை நீக்கிவிட்டு, நீங்கள் விரும்பும் இணைய தள முகவரியை அமைக்கவும். எ.கா. http://www.dinamalar.com/.
2.பயர்பாக்ஸ் பிரவுசரில், பயர்பாக்ஸ் பட்டனை கிளிக் செய்து, Options பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். ஹோம் பேஜ் என்னும் இடத்தில், மேலே எடுத்துக் காட்டியது போல, இணைய முகவரியை அமைக்கவும்.
3. கூகுள் குரோம் பிரவுசரில், ஆல்ட் அழுத்திக் கொண்டு F கீயை அழுத்தவும். பின்னர், Settings தேர்ந்தெடுக்கவும். On startup என்பதன் கீழாக, "open a specific page or set of pages.” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதனை அடுத்து, set pages என்பதில் கிளிக் செய்து, அங்கு, இணைய முகவரியை முழுமையாக டைப் செய்து அமைக்கவும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X