கூகுள் தரும் உடனடித் தீர்வு | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements
கூகுள் தரும் உடனடித் தீர்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 செப்
2010
00:00

தேடுதல் சாதனங்களைத் திறம்படத் தருவதில் தனக்கு நிகர் இல்லை என மீண்டும் கூகுள் நிரூபித்துள்ளது. சென்ற வாரம் கூகுள் இண்ஸ்டண்ட்(Goolgel Instant) என்ற  தேடுதலுக்கான முடிவுகள் தரும் புதிய தொழில் நுட்பத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நாம் தேடும் தகவல் குறித்த தளங்கள், நாம் நம்முடைய தேடுதல் தகவலைத் தரும் முன்னரே காட்டப்பட்டு கிடைக்கின்றன.  நம் தேடுதல் நேரம் குறைவதுடன், தேடல் தொடர்பான சரியான தளங்களும் நமக்குக் கிடைக்கின்றன.  கூகுள் தளத்தில் இதுவரை, தேடப்படும் பொருள் குறித்த சொற்களை டைப் செய்து என்டர் தட்டிய பின்னரே, கூகுள் தேடத் தொடங்கி நமக்கு, தேடல் தொடர்பான தளங்களைப் பட்டியலிடும். மேலாக, இந்த தேடலுக்கான நேரம் குறிக்கப்படுவதுடன், எத்தனை முடிவுகள் கண்டறியப்பட்டன என்றும் காட்டப்படும். இப்போது இது புதிய முறையில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்த புதிய முறையில் 15 நவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதாக கூகுள் அறிவித்துள்ளது. இதில் மையமாக  streaming search  என்னும் செயல்பாடு பயன்படுத்தப்படுகிறது. தேடுதல் இங்கு எப்போதும் ஓடும் ஓடை போல இயங்குகிறது. நாம் தேடுதலுக்கான சொல்லை டைப் செய்திடுகையில், நாம் அந்த தேடல் ஓடையில் இணைகிறோம்.  அந்த ஓடை முதல் சில எழுத்துக்களிலேயே அதனை உணர்ந்து, நமக்கு முடிவுகளைத் தருகிறது. நாம் தேடல் சொற்களை டைப் செய்யத் தொடங்கும்போதே, கூகுள் தன் தேடலைத் தொடங்கி, ஓரிரு எழுத்துக்கள் அமைக்கப்படும் போதே, என்னவாக இது முடியும் என்று கணித்து, அதற்கான தளங்களைத் தேடல் கட்டத்தின் கீழாகப் பட்டியல் இடுகிறது.  பழைய முறையில் நாம் தேடல் சொற்களை முழுமையாக அமைத்த பின்னர் என்டர் தட்டி, தேடச் சொல்லி கட்டளை கொடுப்போம். பின் காட்டப்படும் முடிவுகள் சரியாக உள்ளனவா என்று பார்ப்போம். நாம் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால், மீண்டும் நம் தேடலைச் சரி செய்து மீண்டும் தேடுவோம். புதிய முறையில், நாம் சொல்லை அமைக்கும்போதே முடிவுகள் காட்டப்பட்டு, தொடர்ந்து சொற்களுக்கேற்ப அவை மாற்றப்படுகின்றது. நாம் டைப் செய்திடும் போதே, சம்பந்தப்பட்ட முதன்மைத் தளம் சாம்பல் நிற  எழுத்துக்களில் காட்டப்படுகின்றது. அதுதான் நமக்கு வேண்டியது என்றால் அப்போதே நிறுத்தி தளங்களைக் காணலாம்.
இதனால் நாம் முடிக்கும் முன்னரே, நாம் எதிர்பார்த்த தளங்கள் கிடைத்துவிட்டால், தேடல் சொற்கள் தொகுதியை முடிக்காமலேயே நாம் நமக்குத் தேவையான தளங்களைப் பெற்றுச் செல்லலாம்.
ஓர் எடுத்துக் காட்டு மூலம் இதனைக் காணலாம். அமெரிக்க டாலருக்கான எக்சேஞ்ச் விகிதம் என்ன என்று காண்பதற்காக, “Exchange rates dollar to INR” என டைப் செய்திட முடிவெடுத்து,  Ex   என டைப் செய்தவுடனேயே, Expedia  என்ற தளம் குறித்து காட்டுகிறது. பின்னர் “Exch” என டைப் செய்தவுடன் கூகுள் அது “Exchange rates” என உணர்ந்து  அவை சார்பான   தன்   கால்குலேட்டர்  தளம் மற்றும் யுனிவர்சல் கன்வர்டர் தளம் ஒன்றையும் காட்டுகிறது. பின் தொடர்ந்து  “Exchange rates d” எனக் கொடுத்தவுடன், கீழுள்ள தளங்கள் மாறுகின்றன. அப்போதே பல்வேறு நாட்டு நாணய மதிப்பிற்கான மதிப்பு மாறுதல் காட்டும் தளங்கள் காட்டப்படுகின்றன. இங்கேயே நாம் இந்திய பணத்திற்கான தளத்திற்குச் செல்லலாம். அல்லது முழுமையாக டைப் செய்தால், இந்திய பணத்திற்கான மாறுதல் காட்டும் தளம் முதல் தளமாகக் கிடைக்கும். இவ்வாறு நாம் டைப் செய்து அடிக்கும் முன்னரோ, அல்லது அடித்து முடித்த அடுத்த நொடியிலேயே, என்டர் தட்டாமலேயே, நாம் தேடும் தளங்கள் காட்டப்படுகின்றன. எனவே நாம் என்ன வேண்டும் என்று கேட்பதற்கு முன்னரே, நாம் தேடுவதை நமக்குக் கூகுள் தருகிறது.  சுருக்கமாக இதன் பயன்களைக் கூறுவதென்றால், அதிவேக தேடல் முடிவுகள், மிகப் பயனுள்ள முடிவுகள்,உடனடித் தீர்வு ஆகியவற்றைக் கூறலாம்.  வழக்கமான தேடல் முறையில், ஒருவர் ஒரு தேடலை டைப் செய்திட குறைந்தது 10 விநாடிகள் எடுத்துக் கொள்வார். இது பலருக்கு 30முதல் 90 விநாடிகள் வரை நீட்டிக்கும். கூகுள் இண்ஸ்டன்ட் பயன்படுத்தினால், ஒரு தேடலுக்கு குறைந்த பட்சம் 2 முதல் 5 விநாடிகள் வரை நேரம் குறைகிறது. கூகுளின் அனைத்து வாடிக்கை யாளர்களும், புதிய முறையைப் பயன்படுத்தினால், நாளொன்றுக்கு  350 கோடி விநாடிகள் மிச்சமாகும். அதாவது ஒவ்வொரு விநாடியிலும், 11 மணி நேரம் உலக அளவில் மிச்சப்படுத்தப் படுகிறது.
இதனைத் தேடல் வழிகளில் பெரிய புரட்சி என்று சொல்ல முடியாது என்றாலும், மிகப் பெரிய முன்னேற்றம் என்பதை நாம் ஏற்றுக் கொண்டு கூகுள் நிறுவனத்தைப் பாராட்ட வேண்டும். அடுத்து கூகுள் என்ன செய்திடும்  என்று எண்ணிப் பார்த்தபோது, தேடல் கட்டத்தில் நாம் சொற்களை டைப் செய்கையில், நம் தேடல் பொருள் இதுவாக இருக்குமோ  என சிலவற்றை அந்த கட்டத்தைக் கீழாக விரித்துத் தரலாம். அப்போது நாம் தேடும் முழுமையான சொற்கள் தொகுதி இருப்பின், அதனைத் தேர்ந்தெடுக்கலாம். அவ்வாறு தேர்ந்தெடுக்கக் கர்சரை நகர்த்தும்போதே, கூகுள் அதற்கான தளங்களைக் காட்டலாம்.
மைக்ரோசாப்ட் தன் பிங் சர்ச் இன்ஜின் மூலம், கூகுள் நிறுவனத்தின் இடத்தைக் கைப்பற்ற முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கூகுள் இந்த தொழில் நுட்பம் மூலம் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, இந்த வகையில் தன் முதல் இடத்தை வேறு யாரும் எடுத்துக் கொள்ள முடியாது என்று நிரூபித்துள்ளது.
கூகுள் தரும் இந்த உடனடித் தேடல், ஏற்கனவே இருந்து வரும் தேடல் தளத்திற்குப் பதிலாக, முதல் கட்டமாக சில நாடுகளுக்கு மட்டுமே வழங்கப் பட்டுள்ளது.  மற்ற நாடுகளில் வழக்கமான தேடுதல் தளத்தில் இது தரப்படவில்லை. விரைவில் கிடைக்கலாம். அதுவரை http://www. google.com /webhp?sclient=psy  என்ற தளத்தில் இதனைப் பெறலாம். எந்த நாட்டினரும் இந்த தளம் சென்று இந்த தேடல் முறையைப் பயன்படுத்தலாம். நீங்களும் இந்த தளம் சென்று பார்த்து, இப்போதைக்கு இதனை ஒரு புக்மார்க்காக அடையாளம் வைத்துத் தேடும் போது இதனைப் பயன்படுத்தலாம்.வழக்கமான SafeSearch   இதிலும் செயல்படுகிறது. பாலியல் மற்றும் வன்முறைத் தளங்களை இதிலும் வடிகட்டிப் பார்க்கலாம்.
 இந்த தளத்தைப் பயன்படுத்த குரோம், பயர்பாக்ஸ், சபாரி அல்லது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 ஆகியவற்றில் ஒன்றை பிரவுசராகப் பயன்படுத்த வேண்டும். ஆப்பரா பிரவுசரில் இது செயல்படாது. மேலும் பல தளங்களில் கிடைக்கும் கூகுள் சர்ச் கட்டங்கள் வழியாகவும் இது இப்போதைக்கு இல்லை. மொபைல் போனுக்கான இன்ஸ்டண்ட் தேடல் தளம் இன்னும் தயாராகவில்லை. விரைவில் கிடைக்கும் என கூகுள் அறிவித்துள்ளது.
மேலும் தகவல்களுக்கு http://www.google.com/instant/   என்ற கூகுளின் தளத்திற்குச் செல்லவும்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X