கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 ஜன
2014
00:00

கேள்வி: பேஸ்புக்கில் அக்கவுண்ட் வைத்திருந்தால், அதற்கென தனி இமெயில் முகவரி தரப்படுமா? அப்படி எதுவும் எனக்கு அறிவிக்கப்படவில்லை. அப்படி கொடுக்கப்படுமானால், அதனைக் கொண்டு, மற்றவருக்கு இமெயில்களை அனுப்ப முடியுமா?
எஸ். சிந்தியா ராணி, கோவை.
பதில்:
பேஸ்புக்கில் அக்கவுண்ட் ஒன்றினைத் தொடங்கும்போதே, ஒவ்வொருவருக்கும் ஓர் இமெயில் முகவரி தரப்படும். அது username@facebook.com என்றபடி அமையும். இது தனியாக உங்களுக்குத் தெரிவிக்கப்பட மாட்டாது. தானாகவே இது அமையும். உங்கள் டைம்லைன் பக்கம் செல்ல, facebook.com/user name என்பது இணையப் பக்க முகவரியாக இருக்கும்.
இந்த மின்னஞ்சல் முகவரியினை மாற்ற வேண்டும் என நினைத்தால், நீங்கள் அதனை ஒருமுறை மாற்றிக் கொள்ளலாம். நீங்கள் புதிய பேஸ்புக் இமெயில் முகவரி தேர்ந்தெடுத்தால், அது About பிரிவில் உள்ள உங்களுடைய Contact Info பிரிவில் சேர்க்கப்படும்.
உங்கள் பேஸ்புக் இமெயில் முகவரிக்கு மற்றவர்கள் தாராளமாக மின் அஞ்சல்களை அனுப்ப முடியும். இதற்கு அவர்கள், பேஸ்புக் இமெயில் வசதியைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. ஹாட்மெயில், ஜிமெயில், யாஹூ மெயில் என எதனையும் பயன்படுத்தலாம். அந்த அஞ்சல்கள் Facebook Messages என்ற பிரிவிற்கு அனுப்பப்படும். நீங்கள் அதே போல, உங்கள் பேஸ்புக் இமெயில் முகவரியினைப் பயன்படுத்தி, மற்றவர்களுக்கு அஞ்சல்களை அனுப்பலாம். எந்த மின் அஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம். உங்கள் அஞ்சல்கள், பேஸ்புக் மெசேஜ் போல வடிவமைக்கப்படும். இதில் நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள பயனாளர் பெயர், உங்களின் படம் மற்றும் உங்கள் அஞ்சல் செய்தி இருக்கும். உங்கள் அஞ்சல் முகவரி, அவர்களுக்கு username@facebook.com எனக் காட்டப்படும்.
மெசேஜ் அனுப்ப, உங்கள் பேஸ்புக் பக்கத்தில், இடது பக்கத்தில், Messages என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து New Message என்பதில் கிளிக் செய்திடவும். மற்ற மின் அஞ்சல் சேவைகளில் உள்ளது போல, இதில் காணப்படும் To பீல்டில், நீங்கள் யாருக்கு அஞ்சல் அனுப்பவேண்டுமோ, அவர்களின் மின் அஞ்சல் முகவரியினை டைப் செய்திடவும். பின்னர், அஞ்சல் செய்தியை டைப் செய்து, Send கிளிக் செய்தால், அஞ்சல் அனுப்பப்படும்.

கேள்வி: நோமோ போபியா (Nomophobia) என்பது சமூக இணைய தளங்களுடன் சம்பந்தப்பட்டதா? இல்லை எனில், எதனுடன் சம்பந்தப்பட்டது என விளக்கமாகக் கூறவும்.
எஸ். ரஞ்சனி, சென்னை.
பதில்:
சத்தியமாக இல்லை. இது மொபைல் போன் சம்பந்தப்பட்டது. மொபைல் போனில் சிக்னல் சரியாகக் கிடைக்காமல் நாம் அடையும் பதற்றம், மொபைல் போனை உடன் எடுத்து வராமல், வெகு தூரம் வந்த பின்னர், அடடா, அய்யோ என்று பதட்டப்படுவது, பேட்டரியில் பவர் தீர்ந்து போய், வெற்று ஜடமாக மொபைல் போன் காட்சி அளிப்பதைப் பார்த்து வெறுப்பு கொள்வது போன்ற நிலைகளே நோமோ போபியா என்பதாகும். அதாவது இது nomobile phone phobia” என்பதனைக் குறிக்கிறது.

கேள்வி: நான் விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன். என்னுடைய கம்ப்யூட்டரில் நிரந்தரமாக, சிஸ்டம் பாண்ட் அளவினை எப்படி மாற்றுவது என்று வழி காட்டவும். என் வயது 65.
கா. வேல்ராஜன், மதுரை.
பதில்:
உங்கள் வயதைக் காட்டி, கம்ப்யூட்டரில் டெக்ஸ்ட் தோன்றுவதைப் பெரிதாக இருக்கும்படி செய்திட வழி கேட்கிறீர்கள். இருந்தா லும் மற்றவர்களும் இதனைத் தெரிந்து கொள்ளலாம். ஸ்டார்ட் மெனு செல்லவும். இதில் கண்ட்ரோல் பேனல் தேர்ந்தெடுக்கவும். கண்ட்ரோல் பேனல் விண்டோவின், மேல் வலது மூலையில் உள்ள தேடல் கட்டத்தில் Change window colors and metrics என டைப் செய்திடவும். இது Personalization என்ற ஆப்ஷனைக் காட்டும். இங்கு காணப்படும் Change window colors and metrics என்பதில் கிளிக் செய்திடவும். நீங்கள் Windows Color and Appearance என்ற விண்டோவில் அடுத்து இருப்பீர்கள். நீங்கள் விண்டோவின் எந்த பகுதியினை மாற்ற விரும்புகிறீர்களோ, அதனை அங்கு கிடைக்கும் கீழ்விரி மெனுவில் தேர்ந்தெடுக்கவும். இதில் காட்டப்படும் ஒவ்வொரு வகைக்கும் எழுத்து வகை அளவு மற்றும் வண்ணத்தினை மாற்ற ஆப்ஷன் கிடைக்காது. எடுத்துக்காட்டாக, Menu விண்டோவில் மாற்ற வேண்டும் எனில், நீங்கள் எழுத்து வகை, மாற்ற விரும்பும் அளவு, வண்ணம், அழுத்தமாகவா என்ற விருப்பம் ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் மாற்ற விரும்பும் அனைத்திற்கும் முன் தோற்றக்காட்சி விண்டோவின் மேலாகக் காட்டப்படும். ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். நாம் வழக்கமாகப் பார்க்கும் அளவில் வண்ணங்கள், சிஸ்டம் விண்டோவில் தோன்றாது. எடுத்துக்காட்டாக, ஒரு வாழ்த்து அட்டையில், ஒரு வண்ணம் மிக அழகாக இருக்கலாம். ஆனால், அதே அளவில் சிறப்பான தோற்றம் சிஸ்டம் விண்டோவில் கிடைக்காது. முன் தோற்றக் காட்சியைப் பார்த்த பின்னர், அது உங்களுக்குப் பிடித்தமாக இருந்தால், OK கிளிக் செய்து வெளியேறவும். மறுபடியும் பிடிக்கவில்லை என்றால், மறுபடியும் இதே போல சென்று மாற்றிக் கொள்ளலாம்.

கேள்வி: கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் பிரிவில் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வேகம், வேகம் என நம்மை கம்ப்யூட்டர்கள் அழைத்துச் செல்கின்றன. இருப்பினும், கம்ப்யூட்டர் ஒன்று பூட் ஆக ஏன் இவ்வளவு நேரம் ஆகிறது? ஸ்விட்ச் போட்டவுடன், பயன்பாட்டுக்கு ஒரு கம்ப்யூட்டரால் வர இயலாதா? அந்த பூட் நேரத்தில் என்ன நடக்கிறது என்றும் நம்மால் காண இயலவில்லையே?
ஆர். சிரஞ்சீவி தாஸ், திருப்பூர்.
பதில்:
மிக மிக அருமையான கேள்வி. நீங்கள் குறிப்பிட்டது போல, கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் பிரிவில், மிகப் பெரிய அளவில், இதன் வல்லுநர்களே கணிக்க இயலாத அளவில் மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. இருப்பினும் ஏன், கம்ப்யூட்டர் ஒன்று பூட் ஆக, இயங்கத் தொடங்க இவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறது?
கம்ப்யூட்டர்களை ஆங்கிலத்தில் State machine என்று சொல்வார்கள் (பார்க்க: http://en.wikipedia.org/wiki/Finitestate_machine). அதாவது, இயங்கும் போதும் கூட, நிலையாக உள்ள ஒரு சாதனம். இது இயங்கத் தொடங்குகையில், இதில் ஏற்படும் தொடக்க இயல்புகள் உங்களுக்கும் எனக்கும் தேவை இல்லாத ஒன்று. அதனைத் தெரிந்து கொள்வதால், நமக்கு எந்த பலனும் இல்லை. அதன் பின்னர், அதன் இயக்கத்தில் செயல்படப் போகும் புரோகிராம்களே நமக்கு முக்கியம். முதல் எலக்ட்ரான் இயங்கத் தொடங்கியது முதல், பூட் ஆகித் தயாராய் நிற்கும் வரை நமக்கு எந்த தகவலும் பயனுள்ள வகையில் இருக்காது. பிரச்னை ஏற்பட்டு பாதியில் நின்றால்தான், அதன் தொடக்க செயல்பாட்டினை நாம் ஆய்வு செய்திடுகிறோம்.
இருப்பினும், பூட் செய்திடும் நேரம், முன்பு எடுத்துக் கொண்டதைக் காட்டிலும், குறைவாகவே தற்போது உள்ளது. இன்னும் தொடர்ந்து மேற்கொண்டு வரும் ஆய்வுகளால் இது குறைய வாய்ப்புள்ளது. இருப்பினும், இந்த திரைக்குப் பின்னால், ஏற்படும் செயல்பாடுகள் நமக்கு தெரியாமலேதான் இருக்கும்.

கேள்வி: ரெட்ரோ கம்ப்யூட்டிங் (Retrocomputing) என்று எந்த வகை கம்ப்யூட்டர் செயல்பாடு அழைக்கப்படுகிறது? இது குறித்து ஆங்கிலத்தில் ஒரு கட்டுரையில் தரப்பட்டது. ஆனால் தெளிவாக இல்லை.
எஸ். மூர்த்தி, புதுச்சேரி.
பதில்:
இது கம்ப்யூட்டர் செயல்பாட்டினை மட்டும் குறிக்கவில்லை. மிகப் பழமையான ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர்களைப் பயன்படுத்துவதனை இந்த சொல் கொண்டு குறிப்பிடுகின்றனர். Retro என்ற ஆங்கிலச்சொல் "பின்னோக்கி' என்ற பொருளைக் குறிக்கிறது. ரெட்ரோ கம்ப்யூட்டிங் சில வேளைகளில் பொழுதுபோக்கு அம்சமாகவும் கருதப்படுகிறது. சில இடங்களில் பழைய கம்ப்யூட்டர்களை வைத்துக் கொண்டு, பழைய சாப்ட்வேர் தொகுப்புகளை இயக்குபவர்களும் உள்ளனர். குறிப்பிட்ட சில பணிகளுக்கு அதுவே போதும் என எண்ணி பயன்படுத்துபவர்களும் உண்டு. தேனி மாவட்டத்தில் ஓர் ஊரில் இயங்கும் ரத்த பரிசோதனை நிலையத்தில், ரிப்போர்ட் அச்சிட, பழைய (விண்டோஸ் 95) கம்ப்யூட்டரில், டாஸ் இயக்கத்தில் இயங்கும் வேர்ட் ஸ்டார் என்னும் பழைய சாப்ட்வேர் தொகுப்பைப் பயன்படுத்தி வருகின்றனர். அங்கு புதிய நவீன கம்ப்யூட்டரும் உள்ளது. நமக்குப் பயன்படுகிறது எனில், பழைய கம்ப்யூட்டரையும், சாப்ட்வேர் தொகுப்பினையும் பயன்படுத்துவதில் தவறே இல்லை.

கேள்வி: நான் எப்போது யு.எஸ்.பி. ட்ரைவினை கம்ப்யூட்டரிலிருந்து எடுக்க முயன்றாலும், This device is currently in use. Close any programs or windows that might be using the device, and then try again.” என்ற செய்தி கிடைக்கிறது. விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன். இந்த சிஸ்டத்தில் தான் இத்தகைய செய்தி கிடைக்கிறது. நான் யு.எஸ்.பி. ட்ரைவினைப் பயன்படுத்தாத போது ஏன் இந்த செய்தி வருகிறது என்று தெரியவில்லை. இதனை எப்படி சரி செய்வது? ஏன் இந்தப் பிரச்னை?
கே. சுலைமான், விழுப்புரம்.
பதில்:
விண்டோஸ் சிஸ்டத்தில் தரப்பட்டுள்ள "Safely Remove Hardware” வசதி, உங்கள் யு.எஸ்.பி. ட்ரைவினை எந்த நிலையில் பாதுகாப்பாக, சரியான் நிலையில் கம்ப்யூட்டரிலிருந்து நீக்கலாம் என்று தகவல் தருகிறது. இசைவிற்கான தகவல் தராமல், ட்ரைவ் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதாகத் தகவல் வந்தால், கம்ப்யூட்டர் அதனைப் பயன்படுத்திக் கொண்டிருப்பதாகத்தான் பொருள். பிரச்னைக்குரிய காரணங்களைச் சொல்கிறேன்.
நீங்கள் எதிர்பார்க்காத புரோகிராம் ஒன்று, உங்கள் ட்ரைவில் உள்ள பைல் ஒன்றை அணுகிக் கொண்டிருக்கலாம். விண்டோஸ் மீடியா பிளேயர் போன்ற புரோகிராம்கள், உங்கள் கம்ப்யூட்டரில் இணையும் யு.எஸ்.பி.ட்ரைவ்களில் உள்ள மியூசிக் பைல்களைக் கண்டறிந்து தன் லைப்ரேரியை அமைக்கலாம். இது போல எதுவும் இல்லை என்பதனை, டாஸ்க் மானேஜர் பார்த்த பின்னரே உறுதி செய்திட முடியும். இதனைத் திறந்து, "Processes” சென்று, அங்கு செயல்பட்டுக் கொண்டிருக்கும் புரோகிராம்களைக் காணவும். அப்படி ஏதேனும் புரோகிராம் செயல்பட்டுக் கொண்டிருந்தால், அதனைத் தேர்ந்தெடுத்து கீழாக உள்ள "End Process” பட்டனை அழுத்தவும். இதே போல பின்னணியில் இயங்கும் அனைத்து புரோகிராம்களையும் நிறுத்தவும்.
இதன் பின்னரும் யு.எஸ்.பி.ட்ரைவ் செயல்பாட்டில் இருப்பதாகத் தகவல் வந்தால், உங்கள் கம்ப்யூட்டர் ட்ரைவில் உள்ள இடத்தை மெமரியாகப் பயன்படுத்தி, வேகமாகச் செயல்பட முயற்சிக்கிறது என்று பொருள். இந்த சூழ்நிலையில், யு.எஸ்.பி ட்ரைவிற்கான ட்ரை வினை ரைட் கிளிக் செய்து, கிடைக்கும்மெனுவில், "Properties” தேர்ந்தெடுக்கவும். இங்கு "ReadyBoost” என்ற டேப்பினை அணுகவும். இதில் "Do Not Use This Device” என்ற ரேடியோ பட்டனில் கிளிக் செய்திடவும். பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும். அநேகமாக இனி உங்கள் யு.எஸ்.பி. ட்ரைவினை கம்ப்யூட்டரிலிருந்து நீக்குவதில் பிரச்னை ஏற்படாது என்று நினைக்கிறேன்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X