இந்த தலைமுறைக்கு கிணறை பற்றித் தெரியாது. கிணற்றில் குளிப்பது, விளையாடுவது, கிணற்று படிக்கட்டில் அமர்ந்து படிப்பது, கோபித்துக்கொண்டால் கிணற்று படிக்கட்டில் அமர்ந்து அழுவது என கிராமங்களில் வாழ்ந்தவர்கள், கிணற்றின் நெருக்கத்தை நன்கு அனுபவித்தனர்.
"நினைவுகள் கசியும் இடம் கிணறு' என்பார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
தொட்டனைத் தூறும் மணற்கேணி மார்ந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு-
என திருவள்ளுவர், கேணி (கிணறுகளை) பற்றி எழுதியுள்ளார்.
அதாவது, மணலில் ஊற்று தோண்டிய அளவிற்கு நீர் ஊறும்; அதுபோல மனிதருக்கு கற்ற அளவிற்கேற்ப அறிவு சுரக்கும். இதிலிருந்து கிணறுகளுக்கு, வயது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அணைகள், நீர்தேக்கங்கள் இல்லாத காலத்தில் நீர் ஆதாரமாக, கிணறுகள் தோண்டி பயன்படுத்தினர். மனிதன் மற்றும் பிற உயிரினங்களில் இருபாலினம் உள்ளதைப்போல் ஆண் கிணறு, பெண் கிணறு என வகைப்படுத்தினர். விவசாய நிலத்தில் இருப்பது ஆண் கிணறு. அதை, விவசாயிகள் தங்கள் பிள்ளைகளைவிட அதிகம் நேசிப்பர். கயிற்றில் மாடுகளை பூட்டி, நாட்டுப்புற பாடல் பாடியவாறே கமலை மூலம் "சால்' கிணற்றுக்குள் இறக்கி, நீரை வெளியே இறைப்பர். ஏற்றம் மூலம் மனிதர்களே நீர் இறைப்பர்.
கிணற்றில் நீர் மட்டம் உயர்வது, குறைவதை வைத்தே விவசாயம் செழிப்பா? அல்லது வறட்சியா? என முடிவு செய்வர். கிணறு வற்றிவிட்டால், விவசாயி முடங்கிப் போய்விடுவான். வீட்டின் பின்புறம் இருப்பது பெண் கிணறு. கிணற்றடிதான் பெண்களின் அந்தரங்க வெளி. தண்ணீர் இறைத்து பாத்திரம் கழுவுதல், குளித்தல், துணி துவைத்தல், ஏகாந்த மனநிலையில் பாடுதல், அழுதல் என பெண்களின் சுக துக்கங்களை பகிர்ந்துகொள்ளும் தோழி கிணறு. பஞ்சம் பிழைப்பதற்காக, நல்லதங்காள் 7 பிள்ளைகளுடன், உடன் பிறந்த அண்ணன் நல்லதம்பி வீட்டிற்கு வந்தாள். நல்லதம்பியின் மனைவி மூளி அலங்காரியின்
கொடுமையால், 7 குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி கொன்று, தானும் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள்
நல்லதங்காள். அதற்கு சாட்சியாக வத்ராயிருப்பு அருகே அர்ச்சுனாபுரத்தில், "நல்லதங்காள் கிணறு' உள்ளது. இதன் நீட்சியாக, 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை வீட்டில் பெண்கள் கோபித்துக்கொண்டு தலைமறைவானால், கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்வர். கிணறுகளின் நினைவாக, மதுரையில் தொட்டியன் கிணற்று சந்து, வாணியர் கிணற்று சந்து, நல்ல தண்ணீர் கிணற்று சந்து என நன்றியுடன் தெருக்களுக்கு பெயர் சூட்டியுள்ளனர். மதுரை அருகே காதக்கிணறு, விருதுநகர் மாவட்டம்
மல்லாங்கிணறு, ராமநாதபுரம் கேணிக்கரை, கோவை கிணத்துக்கடவு என ஊர்களின் பெயரில் கிணறுகள் ஒட்டிக்கொண்டு உள்ளன.
திருமணம் முடிந்ததும், புதுப்பெண்ணை உறவுக்கார பெண்கள் ஊர் பொதுக் கிணற்றிற்கு அழைத்துச் செல்வர். புதுமணப் பெண்ணின் இரு கைகளிலும் வெற்றிலைகளை கொடுத்து, அதே கிணற்றில் வாளியில் இறைத்த நீரை கைகளில் ஊற்றுவர். கிணற்றில் வெற்றிலைகள் மிதக்கும். அதன்பிறகே, புதுமணப்பெண் அக்கிணற்றில் தண்ணீர் இறைக்க அனுமதிக்கப்படுவாள்.
ஊர் பொதுக் கிணற்றை சுற்றி, வட்டமாக மேடை அமைத்திருப்பர். அதில், இரவு பஞ்சாயத்து கூடுவது, அரசியல் பேசுவது, தூங்குவது நடக்கும். வெளி உலகம் தெரியாத நபரை, "கிணற்றுத் தவளையா இருக்கேயப்பா...,' எனவும், ஒரு பணி அல்லது முயற்சியில் பாதி முடித்து, முழுமையடையாவிடில் ",பாதி கிணறு தாண்டிட்ட, அப்புறம் என்னப்பா தயக்கம்,' என்பர்.
குடும்ப சண்டையின் போது பெண்கள் அழுதுகொண்டே, "எங்கப்பன் போயும், போயும் இப்பிடி பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டானே' (புதர், பூச்சி மண்டிய பராமரிப்பில்லாத கிணறு) என புலம்புவர். ஒரு சிறிய சம்பவம் மேலும் பூதாகரமாகும் போது," என்ன...,கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதையா இருக்கு...,' என பழமொழிகள் நீளும்.
மழைநீரை சேமிக்க, கிணறுபோல் வேறு அமைப்பு எதையும் ஒப்பிட முடியாது. மழைநீரை உள்வாங்கி, பின் மக்களுக்கே
தருகிறது கிணறு. "போர்வெல்', நீரை உறிஞ்சி வெளியே தள்ளுவதோடு சரி. அளவுகோல் இன்றி, எந்த சாமானியனும் நிலத்தடி நீர் மட்டத்தை தெரிந்துகொள்ளலாம் கிணற்றில். நீர் இறைப்பது உற்சாகமான உடற்பயிற்சியாக இருந்தது. "உனக்கென்னப்பா..., முப்பாட்டன் காலத்திலிருந்து கிணத்து தோட்டம் வச்சுருக்க, கவலையில்ல,' என பெருமை தேடித்தந்தன கிணறுகள். "ஏற்றமுன்னா ஏற்றம், இதிலே இருக்குது முன்னேற்றம்...,,' எனவும் "ஏத்தமய்யா, ஏத்தம்...,எங்கப்பன், உம்பாட்டன், முப்பாட்டன் சொத்து இது ஏத்தம்..,' என சினிமா பாடல்கள் கிணறுகளின் பெருமையை ஒலித்தன. மின் மோட்டார்கள் வந்தபின், கிணற்று நீரை உறிஞ்சி வெளியே தள்ளின. இன்று கிணறுகளில் கமலை ஓசை, ஏற்றம், கப்பி, துலா சத்தம் அடங்கி விட்டன. கிணறுகள் பயனற்று பாழுங்கிணறுகள் ஆகிவிட்டன. பல கிணறுகள் இருந்த சுவடு தெரியாமல் மூடப்பட்டு, கட்டடங்களாகிவிட்டன.
"விஞ்ஞான காலத்தில் எல்லாமே மிஷினு, மனித மனசுகூட மிஷினாச்சு போபுள்ள...,' திரைப்பாடல் வரிகள் உணர்த்துவது, நாம் தொலைத்தது முப்பாட்டன் சொத்தான 2 ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியமுள்ள ஈரமுள்ள கிணறுகளை மட்டுமல்ல, நம் நெஞ்சின் ஈரத்தையும்தான்.