பண்டிகை நாட்களுக்கு இணையான உற்சாகம், மனம் கவர்ந்த ஹீரோக்களின் படம் வெளியாகும் போது தான், ஏற்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல், "தல, தளபதி' ரசிகர்களுக்கு, சரியான வேட்டை. விஜயா புரொடக்ஷன் தயாரித்து, "சிறுத்தை' சிவா இயக்கியுள்ள வீரம் படத்தில், "தல' அஜித். "ஆரம்பம்' தந்த ஹிட்டில், விரைவாய் பிறந்திருக்கிறது, வீரம். ஒளிப்பதிவாளர் வெற்றி, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு, அஜித்துடன் முதல் படம் என்பதால், அவர்களின் பங்களிப்பு அபாரம்.
தனது முந்தைய படங்களில், "டூயட்' பாடாத அஜித், இம்முறை தமன்னாவுடன் "டூயட்' ஆடி, பாடி, ஆட்டம் போட்டிருக்கிறார். கோர்ட், கூலிங் கிளாஸ், பைக், கார் என, வலம் வந்த அஜித், இம்முறை மாட்டு வண்டி ஓட்டுகிறார் என்றால், வித்தியாசத்தை யூகிக்க முடிகிறது.
இதுவரை, எந்த படங்களுக்கும் இல்லாத வகையில், மதுரையை உள்ளடக்கிய 6 மாவட்டங்களில், 40க்கும் மேற்பட்ட தியேட்டர்களில், வீரம் வெளியாகியிருக்கிறது. பாலா, விதார்த், நாசர், இளவரசு, மயில்சாமி, தம்பி ராமையா, அப்புக்குட்டி என, ஒவ்வொரு கதாபாத்திரத்திலும், கனகச்சிதமான தேர்வு.
"சென்சார் போர்டின்' கத்திரி விழுகாத படம் என்ற பாராட்டும், அதற்கு வழங்கிய "யு' சான்றிதழும், படத்திற்கு பெரிய பலம். எதிர்பார்த்தபடியே, "தல' ரசிகர்களுக்கு வீரம், "தல பொங்கல்'. "தலைவா' தலைவலிக்கு பின், விஜய்க்கு மட்டுமின்றி, அவரது ரசிகர்களுக்கும் தீணி போடும் என்ற எதிர்பார்ப்பில் வெளியாகியிருக்கும் படம், ஜில்லா. இசையமைப்பாளர் இமானை, "தமிழன்' படம் மூலம் அறிமுகப்படுத்திய விஜய், மீண்டும் "ஜில்லா'வில் இணைந்துள்ளார்.
மலையாள "மாஸ் ஸ்டார்' மோகன்லால், விஜய் உடன் கைகோர்த்திருப்பது, படத்திற்கு பெரிய பலம். துப்பாக்கியில் ஆடிய காஜல் அகர்வால், ஜில்லாவிலும் விஜய் உடன் ஜோடி. வழக்கமாக, "குத்து' பாடல்கள் பாடும் விஜய், இம்முறை "கண்டாங்கி... கண்டாங்கி' என்ற மெலோடி பாடலை பாடியிருக்கிறார். படம் வெளியாகும் முன்பே, அதிகம் பேர் "யூ டியூப்' மூலம், அந்த பாடலை கண்டுரசித்தனர். ஏற்கனவே "போக்கிரி'யில் ரவுடி, போலீசாக பிண்ணி எடுத்த விஜய், இம்முறையும், அதே ரவுடி, போலீஸ் "கெட்அப்'பில், கலக்கியிருக்கிறார்.
சூரி, தம்பி ராமையா. பூர்ணிமா பாக்கியராஜ், சம்பத், மகத், ரவிமரியா, என, நட்சத்திர பட்டாளங்களின் படையெடுப்பில், ஜில்லா தில்லாக திரைக்கு வந்திருக்கிறது. தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களிலும், ஜில்லா வசூல் வேட்டையாடும் என்ற எதிர்பார்ப்பு, தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்திரி மட்டுமின்றி, விஜய் ரசிகர்களுக்கும் உள்ளது.