"'அந்த தொயரத்த ஏன்ணே கேக்குற...' என்ற 'டயலாக்'கை, ஒருமுறை பேசிப்பாருங்கள்... 'இது 'கஞ்சா' கருப்பு
குரலாச்சேன்னு...' நீங்களே சொல்லிடுவீங்க.... தமிழ்
சினிமாவை ஆக்கிரமித்திருக்கும், நம்மூர் நாயகர்களில், மணக்க, மணக்க, மண்மணம் மாறாமல் தமிழ் பேசுபவர் 'கஞ்சா' கருப்பு.
அவரோடு பொங்கல் ஸ்பெஷல் பேட்டி...
சிவகங்கை ஓட்டல்காரர்... எப்படி 'கஞ்சா' கருப்பு ஆனார்?
அப்பா தலையாரி; நாங்க ஐந்து பேர். சின்ன வயசிலயே அப்பா இறந்ததும், மாமா தான் ஆதரவு. அவர் படிக்கவெச்சாரு; நமக்கு ஏறலே! சைக்கிள் கடை, அப்புறம் டீ கடை, அதுக்கப்புறம் சிவகங்கையில் ஓட்டல் வெச்ச பின்னாடி தான், நல்லகாலம் பொறந்துச்சு...
அப்போ, ஓட்டலில் நல்ல லாபம்ன்னு சொல்லுங்க?
ஏன்ணே... நண்பர்களை பார்க்க வந்த இயக்குனர் பாலா, ஓட்டலுக்கு வந்தாரு; 'ஒரு பிரச்னை, என் கூட வா...' என, தேனிக்கு கூட்டிட்டு போயி, 'பிதாமகன்' படத்தில் நடிக்க வெச்சார். ஒரு காட்சியில், என்னை 'கஞ்சாகுடி' என, திட்டுவார்கள். அதை கவனித்த பாலா, கருப்புராஜாவான என்னை, 'கஞ்சா' கருப்பாக மாற்றிவிட்டார்.
உண்மையை சொல்லுங்க... கஞ்சாவை பாத்திருக்கீங்களா?
'அய்யா... அம்மா.... சாமி மேலே சத்தியம்.... கேள்வி பட்டிருக்கிறேன் அவ்வளவு தாண்ணே... பார்த்தது கூட இல்ல!
'திருப்புமுனை' எப்போ வந்தது?
அமீர் சாரோட 'ராம்' படத்தில், 'வாழவந்தான்' கதாபாத்திரம், பேச வைத்தது. அதை பார்த்த இயக்குனர் லிங்குசாமி சாரு, 'வாழவந்தான் கேரக்டரில், வாழ்ந்துட்ட,' என, போனில்
பாராட்டினார். சுப்ரமணியபுரம் படத்தை பார்த்துட்டு, 'டின்னர்' கொடுத்து, பாராட்டுனாரு.
எத்தனை படங்களில் நடிச்சிருப்பீங்க... படிக்குற காலத்துலயே, நமக்கு கணக்கு வீக்கு... இப்படி
'டக்கு'ன்னு கேட்டா எப்படி? தமிழ், தெலுங்கு, இந்தி... அப்படி, இப்படின்னு, 230 படம் நடிச்சுருப்பேன். இப்போ, 'பீளா மன்னன்', 'இசை' படங்களில், நடிச்சுட்டு இருக்கேன்.
* உங்களுக்கும் போட்டி இருக்குமே?
சந்தானம் மாதிரி, நான் நடிக்க முடியாது; என்னை மாதிரி, அவர் நடிக்க முடியாது. நமக்கு என்ன வருதோ... அதை செய்யுறேன்; யாரையும் போட்டியா நினைக்கலே; நானும், யாருக்கும்
போட்டியில்ல! நம்ம வேலைய, சரியா செஞ்சா போதும்ண்ணே...!
சொந்த படம் கூட, தயாரிக்கிறீங்களாமே...?
நண்பர் மலையன்கோபியை மனசுல வெச்சு, ஒரு படம் தயாரிச்சுட்டு இருக்கேன். பொங்கலுக்கு அப்புறம், படத்தை ரிலீஸ் செய்ய ஐடியா பண்ணிருக்கோம்.
கருப்பின் பொங்கல் கரும்பு எப்படி?
எங்கே இருந்தாலும், பொங்கலுக்கு ஊர் வந்துருவேன். இங்கே இருந்த காலத்துல, அலங்காநல்லுார், அரளிப்பாறை ஜல்லிக் கட்டுகளை பார்க்க கிளம்பிடுவேன். இப்ப,
நானே ஜல்லிக்கட்டு காளை வளர்க்கிறேன். பிறவு...பொங்கல்ன்னா கரும்பு தானே...
நம்ம ஊர் ஆசை, விடுமாண்ணே... உங்க திருமணத்தின் பின்னணியில்,
'காதல்' இருந்ததா...
அண்ணே... அண்ணே... நம்ம போயி யாரண்ணே... காதலிக்க போறோம்? எங்க ஆத்தா பார்த்து தான், சங்கீதாவை கட்டி வெச்சது; அவங்க
பிசியோதெரபி முடிச்சவங்கன்னு, எல்லாத்துக்கும் தெரியும். பையன் தருண்காந்தி, பொண்ணு அனாமிகா. எல்லாரோட ஆசிர்வாதத்துல, நல்லா இருக்கேன்ணே...
நகைச்சுவை நடிகர்கள் அரசியலில் இறங்கியிருக்காங்க...நீங்க எப்படி?
ஐயா சாமி ஆளை விடுங்க...நான் நல்லா இருக்கிறது பிடிக்கலையா... என்றவாறு பேட்டியை முடித்தார்.
'கஞ்சா' போட, ஸாரி... 'கஞ்சா'விடம் கடலை போட,
84893 03610ல் 'ஹாய்' சொல்லுங்க!.