'அடுக்குமாடி குடியிருப்பில் ஆக்ரோஷ சண்டை, குடைந்த குகை ரோட்டில் 'சேஸிங்', ஏ.கே.47 துப்பாக்கிகளுடன் ரத்த குளியல், கண் சிமிட்டும் நேரத்தில் காணாமல் போகும் 'பாம் பிளாஸ்ட்' கட்டடங்கள்,' இது தான், தொழில்நுட்பம், அதிநவீனம் என்ற பெயரில், தமிழ் சினிமா ஏற்றிருக்கும், புதிய பரிணாமம்.
இதே தமிழ் சினிமாவை, 30 ஆண்டுகளுக்கு பின்னோக்கி பார்த்தால், ரயிலை பார்ப்பதே அரிது. கண்மாய் கரை, கட்டை வண்டி, கன்றுக்குட்டி, காளைமாடு, ஓட்டு வீடு; இவை தான், அன்றைய சினிமாக்களின், அதிகபட்ச பட்ஜெட். இன்றுள்ள படங்களோ, 'யு.ஏ'(அனைத்து தரப்பினரும் பார்க்கலாம்) சான்றிதழ் பெற போராடுகின்றன; அதை பெற்ற பிறகும், மக்கள் மனதில் பதிகிறதா என்றால், கேள்விக்குறி தான்.
ஆனால், அன்று வந்த படங்கள், மக்களின் வாழ்க்கையுடன் ஒத்துப் போக காரணம், கதையிலிருந்த கிராமத்து பின்னணி. இன்று வெளியாகும் படங்களை வெற்றி படமாக்க, ஏதேதோ செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால் அன்றோ, எந்த விளம்பரமும் இல்லாமல், ஒவ்வொரு இதயத்தையும் துளைத்தது, அவர்களின் படைப்புகள். வாருங்கள், காணாமல் போன, அந்த கிராமத்து நாயகர்களை தேடுவோம்...
ரஜினி: வாய் நிறைய வெற்றிலை, தோள் பிடிக்க எடுபிடி சகிதமாக, 16 வயதினிலே 'பரட்டையாக' பட்டையை கிளப்பியதை யார் மறக்க முடியும்? 'மயிலை வைத்து குருவம்மாவை கிண்டலடிப்பதிலாகட்டும், சப்பாணியை நோகடிப்பதாகட்டும், கிராமத்து மைனர்களை, அப்படியே கண்முன் கொண்டுவந்தவராச்சே ரஜினி. அதன் பின் கிராமத்து கதை என்றால், அதில் ரஜினியின் பெயர், பெரும்பாலும் 'ராஜா'வாகத் தான் இருக்கும். இன்றோ, எந்திரன், கோச்சடையான் என நவீனத்தை தொட்ட அவரது படங்களில், ரஜினியின் உண்மை உருவத்தை பார்க்க முடியவில்லை.
கமல்: 'சந்தைக்கு போனும்... ஆத்தா வைய்யும், காசு கொடு...' என்று, அடித்தட்டு கிராமத்து கோழையின், கோமாளி குமுறலை, இதுபோல், வேறு யாரும் வெளிப்படுத்த முடியாது. கோவணம், கோணல் நடை, வெற்றிலை கலவை வடியும் வாய் என, கிராமத்தில் வலம் வந்த, அந்த அப்பாவி சப்பாணியை, இன்று பார்க்க முடியவில்லை. அன்று, 'ராமு' என்ற பெயர் இருந்தால், அது கமல் படமாக்கத்தான் இருக்கும். இன்று, 'ஆரோ 3 டி' ஒலியில், கமலின் குரலை, பின்னணி இசை பறித்துவிடுகிறது. ஒரு அற்புத கலைஞனின் நடிப்பை, ஆளவந்தான் போன்ற படங்களின் 'கிராபிக்ஸ்' காட்சிகள் விழுங்கி விட்டன.
விஜயகாந்த்: கிராமத்து மணலுக்கு, அதிகம் மல்லுக்கட்டியவர், இவராக தான் இருக்கும். பெரும்பாலும், 'பாண்டியா' என்ற பெயர் தான், அவருக்கு வைப்பார்கள். இல்லையென்றால், சின்னமணி, பொன்னுமணி என, கிராமத்து வாசனை, பெயரிலேயே இருக்கும். ஷோபனா, ராதா என அடங்காத நகரத்து நாயகிகளை, அடக்கும் காளையாக, அடங்காத காளையாக, ரசிகர்களை ஆட்டி வைத்த விஜயகாந்த்; அரசியலில் பெயர்பெற உதவியதும், அவரது படங்கள் தான். அதே விஜயகாந்த், கிராமத்து படங்களை துறந்த காலத்தில், சினிமாவில் ஜொலிக்க முடியாமல் போனதையும், மறுக்க முடியாது.
ராமராஜன்: இப்படி ஒரு நடிகனை, நாட்டிற்கு காட்டியதே கிராமம் தான். மாடுகளும், ஆட்டங்களும், பாடல்களும், பருத்தி விதையும் தான், அவரது அடையாளம். 'எங்க ஊரு பாட்டுக்காரன், வில்லுப்பாட்டுக்காரன், கரகாட்டக்காரன்,' என, படத்தின் பெயரில் கூட, கிராம வாசனை. படங்களில், ராமராஜனின் 'அக்மார்க்' பெயர் 'ராசா'. ரேகா, சீதா, கனகா போன்றோர் இருந்தால், அப்படத்தில் நாயகனாக, நிச்சயம் ராமராஜன் இருப்பார்.
இது போல், இன்னும் எத்தனையோ நடிகர்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், கிராமங்களை புறக்கணிக்கும் திரைக்கதையில் புதைந்துவிட்டார்கள். மண்ணின் பெருமை பேசும் இந்த தினத்தில், ஒரு நிமிடம் திரைப்படங்கள் தொலைத்த கிராமங்கள் மனதில் வந்து போகின்றன.