மண்ணுக்கும், பெண்ணுக்கும் இணையான மதிப்பு தருவது, தமிழனுக்கு மட்டுமே தனிச்சிறப்பு. அதனால் தான், நம்மை வாழ வைக்கும்மண்ணுக்கும், விண்ணுக்கும் நன்றி சொல்ல, "பொங்கல்' கொண்டாடுகிறான்.
மண்ணில் பிறந்து, மண்ணில் வளர்ந்து, மண்ணில் மறையும், மனிதனின் வாழ்க்கையில், இடையில் வரும் இன்ப வாழ்க்கை, மண்ணிலிருந்து நம்மை பிரிக்கிறது. அதுவரை மண்ணாக தெரிந்தது, துலுசு, அழுக்கு, கறை என,பல வடிங்களை பெற்று, நம் வெறுப்பிற்கு ஆளாகிறது.
மண்பாண்டங்களும், மண்ணில் நடந்த ஆட்சியும் தான், வரலாற்றுச் சுவடுகளின்ஆதாரங்களை, நமக்கு தந்து சென்றுள்ளன. ஆனால், மணலின் சுவடு தெரியாத அளவிற்கு, நாம் அதிலிருந்து விலகிநிற்கிறோம். மண்பாண்டங்கள், வினோத பண்டங்களாக மாறிவருகின்றன.
மண்ணுக்கும், நமக்குமான உறவில், எங்கோ விழுந்த விரிசல், மீண்டும் இணைய, இன்றைய தலைமுறைகள் சில முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன. அந்த வரிசையில், திண்டுக்கல் மாவட்டம் வேடப்பட்டி வாசுகி தலைமையிலான கலைஞர்கள் சிலரின் முயற்சி, மீண்டும் மண்வாசனையை விரும்பும் சூழலை உருவாக்கியுள்ளது.
சுட்ட களிமண்ணில், இவர்கள் தயாரிக்கும் வண்ண நகைகள், பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. மண்ணால் ஆன அலங்கார பொம்மைகள், கைவினைப் பொருட்களை பார்த்திருப்போம்; கேட்டிருப்போம்.
இங்கு இருப்பவர்களும், அவற்றை செய்பவர்கள் தான்; ஆனால், அதில் ஒரு வித்தியாசம், "மண்' நகைகள். தங்கத்தால், பெண்களின் அங்கத்திற்கு பாதுகாப்பில்லாத இந்த காலகட்டத்தில், ஏதாவது மாற்றை தேடவேண்டிய கட்டாயம்.
கவரிங் உள்ளிட்ட எத்தனையோ மாற்று முடிவுகளை, இன்றைய பெண்கள் கையில் எடுத்துவிட்டனர். அவர்களுக்கு, மண்ணின் பெருமை சொல்லும் இந்நாளில், இந்த மண் நகைகளை அறிமுகப்படுத்துவதில், பெருமை கொள்கிறோம்.
மண் என்றாலே, அதில் மருத்துவம் மறைந்திருக்கும். அப்படியானால், அவற்றைஅணிபவர்களின் ஆரோக்கியம், உறுதி. மண் என்பதற்காக, "எப்படியோ... ஏதோ...' என, நினைக்க வேண்டாம். அதன் படைப்புகள், "மண்ணா... இது, பொன்னா...' என, திகைக்க வைக்கும், அற்புதம் அவை.
அதன் உரிமையாளர் ஜி.வாசுகியிடம் கேட்டபோது, ""நுணுக்கங்களுடன், நாங்கள் தயாரிக்கும் மண் நகைகளுக்கு, நல்ல வரவேற்பு உள்ளது. 2005ல், தமிழக முதல்வர் ஜெ.,விடம் பரிசு பெற்றேன். ரூ.100 முதல் ரூ.750 வரை, 'மண்' நகைகள் விற்கப்படுகிறது. இதில் சிறப்பு என்னவென்றால், மண் நகையையும்,பொன் நகையையும், வேறுபடுத்தி பார்ப்பது,சிரமம்.
மண்ணில் செய்யப்படும் நகைகள், தீயில் சுட்டு பின், வண்ணம் தீட்டி, விற்பனைக்கு தயார் செய்யப்படும். இந்தியா முழுவதும் மட்டுமின்றி, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளலூநாடுகளுக்கும் எங்கள் படைப்புகள், பறக்கின்றன,'' என்றார்.
பொன் மீது காதல் கொள்வோர், மண் மீதும் காதல் கொண்டால், "மண்ணின் மைந்தர்களாக' உலா வரலாமே! அ(றி)ணிய விரும்புவோர் 94432 47119ல் பேசலாம்.
-அரி