பசு வழிபட்ட கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் (ஆனிலையப்பர்) கோயிலை மாட்டுப்பொங்கலை ஒட்டி தரிசிக்கலாம். பசு வளர்ப்போர் அவசியம் சென்று வர வேண்டிய கோயில் இது.
தல வரலாறு: பிரம்மனுக்கு, தன் படைப்புத் திறன் காரணமாக கர்வம் ஏற்பட்டது. இதை அடக்க சிவபெருமான் காமதேனுவைக் கொண்டு திருவிளையாடல் நடத்தினார். காமதேனு, பூமிக்கு வந்து , வஞ்சி வனமாக இருந்த இத்தலத்தில் தவம் செய்தது. அப்போது, ""காமதேனுவே! இங்குள்ள புற்று ஒன்றில் ஆதிலிங்கம் இருக்கிறது. அதை வழிபடு,'' என்று அசரீரி கேட்டது. அதன்படி காமதேனுவும், புற்று இருந்த இடத்திற்கு சென்று, தன் பாலை சொரிந்து தினமும்
வழிபாடு செய்தது. ஒருநாள் தவறுதலாக, காமதேனுவின் குளம்படி புற்றின் மீது பட்டு விடவே, உள்ளிருந்து ரத்தம் வந்தது. அங்கே பார்த்த போது, லிங்கம் இருப்பது
தென்பட்டது. தன் கால் தவறுதலாகப் பட்டமைக்காக காமதேனு மன்னிப்பு கேட்டது.
சிவன், காமதேனுவிடம், ""நீ என்னை பக்திப்பூர்வமாக இத்தலத்தில் வழிபட்ட காரணத்தினால் இந்த உலகம் என்னை "பசுபதிநாதர்' என்ற பெயரால் அழைக்கும். இனிமேல் நீயே படைப்பு தொழில் செய்வாய்,'' என்று வரம் தந்தார். அதன்படி காமதேனுவும் படைப்பு தொழில் செய்து
வந்தது. கலங்கிப் போன பிரம்மா கர்வம் நீங்கினார். பின் சிவன், படைப்புத் தொழிலை பிரம்மனிடம் ஒப்படைத்து, காமதேனுவை சொர்க்கத்துக்கு அழைத்துக் கொண்டார்.
பிரம்மாவை வழிபட்டால் தலையெழுத்தே மாறும் என்பது போல,
காமதேனுவின் அம்சமான பசுக்களுக்கு தொண்டு செய்தாலும், பாவமெல்லாம் நீங்கி எல்லா நலனும் பெறலாம் என இந்த தல வரலாறு நமக்கு உணர்த்துகிறது. தல பெருமை : புகழ்ச்சோழ நாயனார் ஆண்ட ஊர் இது. எறிபத்த நாயனாரும், திருவிசைப்பா பாடிய கருவூர்த் தேவரும் பிறந்த தலம். சிவகாமியாண்டார் வாழ்ந்த தலம். கருவூர் சித்தர் இங்கு வாழ்ந்து,
ஆனிலையப்பரோடு ஐக்கியமானார். கோயிலுக்குள் கருங்கல்லால் ஆன கொடிமரம் உள்ளது. இதன் ஒரு பக்கத்தில், புகழ்ச்சோழ நாயனார், கையில் தலையோடு கூடிய தட்டுடன் நிற்கும் சிற்பமுள்ளது. மறுபுறத்தில் ஒரு பசு, சிவலிங்கத்தை நாவால் வருடுவதுபோலவும், அதன் பின் கால்களுக்கிடையில், பால் மடிக்கு நேர்கீழே சிவலிங்கம் அமைந்துள்ளதான சிற்பம் உள்ளது.
போன் : 04324 - 262 010.