தேக்கு மரத்தை தாக்கும் நோய்கள்:
சாம்பல் நோய்: நோய் தாக்கப்பட்ட இலைகளில் இருபுறமும் வெண்ணிற பூசாண வளர்ச்சி காணப்படும் 2 ஆண்டு வயதுடைய நாற்றுகளில் தோன்றும். சாம்பல் நோயை கட்டுப்படுத்த கந்தகத்தூள் சிறந்தது. காரிக்சின் என்ற பூசனக்கொல்லியை இலை வழியாகத் தெளிக்கலாம்.
துருநோய்: துருபோன்ற பழுப்பு நிற பூஞ்சாண வளர்ச்சி இலையின் பரப்பு முழுவதும் பரவிக்காணப்படும். நாற்றுகளில் மிகவும் அதிகமாகக் காணப்படும். பாதிக்கப்பட்ட நாற்றுக்களை அப்புறப்படுத்த வேண்டும். இலையின் இருபுறமும் "சல்பாக்ஸ்' என்ற பூஞ்சாணக் கொல்லியைத் தெளிக்க வேண்டும்.
இலைக்கருகல் நோய்: இலைகளின் ஒருபகுதியில் தோன்றும் பழுப்புநிற இலைக்கருகலானது காய்ந்து உதிர்ந்து விடும். மழைப்பொழிவினால் காய்ந்த கருகிய பகுதி கீழே விழுவதால் பாதிக்கப்பட்ட இலை ஓட்டையுடன் காணப்படும். பாதிக்கப்பட்ட இலைகளில் 0.1 சதம் மீத்தேன்-45 மருந்தை தெளிப்பதன் மூலம் இந்நோயை கட்டுப்படுத்தலாம்.
பாக்டீரியா வாடல் நோய்: நோய் காரணி கோல்டிரியா சொல்னேகியாரம் பாதிக்கப்பட்ட மரக்கன்று இலைகள் முற்றிலுமாக வாடி விடுகின்றன. வாஸ்குலார் திசுக்கள் பழுப்புநிறமாக மாற்றமடைகின்றன.இந்நோயைத் தவிர்ப்பதற்கு நாற்றங்காலில் வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
இலைப்புள்ளி நோய்: இந்நோய் பெரும்பாலும் 2 முதல் 8 மாதம் வயதுடைய இளம்கன்றுகளையே பெரிதும் தாக்குகின்றன. இலைகளின் விளிம்புகளில் தோன்றும் கரும்புள்ளிகள் நாளடைவில் இலையின் மைய நரம்புவரை பரவி பின் இலைகள் முழுவதும் பாதிக்கப்பட்டு உதிர்வதற்கு வழிவகுக்கிறது. கார்பண்டாசிம் 0.05 சதம் தெளிப்பதன் மூலம் இந்நோயின் தீவிரத்தைக் குறைக்கலாம்.
பாக்டீரியா வாடல் நோய்: நோய்க்காரணி - சூடோமோனாஸ் டெக்டோனா இளம் தேக்கு மரங்களின் அனைத்துப் பகுதியையும் தாக்குகின்றது. அடித்தண்டில் அழுகல், இலைகளின் வாடல், குருத்து அழுகல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. 8 லிட்டர் தண்ணீருக்கு 6 கிராம் வீதம் ஸ்ட்ரெப்டோமைசின் என்ற பாக்டீரியாக் கொல்லியைத் தயார் செய்து நாற்றங்காலில் மரக்கன்றுகளின் வேர் முழுவதும் நனையும்படி ஊற்றுவதன் மூலம் முற்றிலும் இந்நோயைத் தடுக்கலாம். (தகவல்: முனைவர் க.கண்ணன், முனைவர் வி.கே.சத்யா, முனைவர் பூ.லதா, பயிர் நோயியல் துறை, த.வே.ப. கழகம், கோயம்புத்தூர் - 641 003. போன்: 0422 - 661 1426)
இயற்கை முறையில் களைக்கொல்லி: கேரளாவில் ஒரு எளிமையான விவசாயி நரேந்திரநாத் என்பவர் அறிமுகப் படுத்தியுள்ளார். இக்கலவை களைகளைக் கொல்லும் எந்தப்பயிரிலும் இதைத்தெளித்தால் கருகிப்போகும். ஆனால் இது பயிர்களுடன் வளரும். களைகளை அகற்ற பயன்படுத்தக்கூடாது. செடிகள் மண்டிக் கிடக்கும். ஒரு நிலத்தை சுத்தம் செய்து அந்த நிலத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற நிலைவரும் போது இந்தக் கலவையைப் பயன்படுத்தலாம்.
சுமார் ஒரு ஏக்கரில் இதனை பயன்படுத்த வேண்டுமானால் 250 லிட்டர் கரைசல் தேவைப்படும். 10 லிட்டர் கரைசல் தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள்.
* சுண்ணாம்பு - 3 கிலோ, கோமியம் - 3 லிட்டர்
* தண்ணீர் - 10 லிட்டர், வேப்ப எண்ணெய் - 2 லிட்டர்
* உப்பு - 4 கிலோ
செய்முறை: தண்ணீரில் சுண்ணாம்பைச் சேர்த்து கலக்கி 10 மணி நேரத்திற்கு வைத்திருக்க வேண்டும். இதிலிருந்து 7 லிட்டர் எடுத்து அத்துடன் உப்பைக் கரைத்தும், அத்துடன் கோமியத்தையும் சேர்த்து கலக்க வேண்டும். பின் இந்த கரைசலை வடிகட்டி எடுத்து அத்துடன் வேப்ப எண்ணெயைச் சேர்க்க வேண்டும். இதனை சுமார் 10 நிமிடங்களுக்கு வைத்திருக்கும் போது மேலே மிதந்து வரும். படிமத்தை நீக்கி விட வேண்டும். பின் இந்தக் கரைசலை ஸ்பிரேயர் மூலமாக களைச்செடிகளின் இலை மற்றும் தண்டுப் பகுதிகளில் விழுமாறு தெளிக்க வேண்டும். இக்கரைசலை தெளித்தப்பின் குறைந்தது 2 நாட்களுக்கு மழைவிழக் கூடாது. இக்கரைசலை தெளிக்கும் முன் குறிப்பிட்ட நிலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கவும் கூடாது. மேலும் விபரங்களுக்கு நரேந்திரநாத்தை தொடர்பு கொள்ள 098477 74725, 098477 74725 கைப்பேசி எண்ணைப் பயன்படுத்தவும்.
குழித்தட்டு முறையில் மஞ்சள் நாற்று உற்பத்தி: சாகுபடி செய்து வரும் வடிவேல் விளக்குகிறார். தக்காளி, கத்திரி நாற்றுகளுக்கு பயன்படுத்தும் பிளாஸ்டிக் குழித்தட்டுகளை பயன்படுத்தலாம். 35 நாட்களில் நாற்றுகளை நடவு செய்யலாம். பொதுவாக ஏக்கருக்கு 1000 கிலோ விதை மஞ்சள் தேவைப்படும். குழித்தட்டு முறையில் ஏக்கருக்கு 170 கிலோ விதை மஞ்சள் போதுமானது. அதன்படி விதை மஞ்சளுக்கு ரூ.3400 மற்றும் குழித்தட்டுக்கள், இயற்கை உரம் போன்ற செலவுகளுக்கு 6000 ரூபாய் வரை தான் செலவு. ஆனால் நேரடி விதைப்பில் ரூ.20,000/- வரை செலவாகும். குழித்தட்டு நாற்றுகளை நிழல் வலை அமைத்துத்தான் உற்பத்தி செய்ய வேண்டும் என்பதில்லை. தோட்டத்தில் உள்ள மர நிழலிலும் வளர்க்கலாம். ஏக்கருக்கு சுமார் 32 ஆயிரம் நாற்றுகள் தேவைப்படும். ஒரு செடியில் இருந்து சுமார் 500 கிராம் வரை விளைச்சல் பெற்றுள்ளனர். அதன்படி ஏக்கருக்கு 45 குவிண்டால் விளைச்சல் கிடைக்கும். நேரடி நடவு முறையில் சுமார் 25 குவிண்டால் அளவுக்குத் தான் கிடைக்கும். தொடர்புக்கு - போன்: 99440 33055
- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.