பாண் மரம்! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements
பாண் மரம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 பிப்
2014
00:00

பாணன் அரசப்பேய்க்கு பன்முறை வணக்கம் தெரிவித்தான். ""பேய் வடிவில் உள்ள உம் வள்ளன்மையில் ஒரு சிறு கூறு, இந்தப் பேய் மனிதரிடம் இல்லையே. உன் புகழ் வானுலகு மட்டும் ஓங்குக!'' என்று வாயாரப் புகழ்ந்து வாழ்த்தினான். வாழ்த்திய வண்ணம் அகமகிழ்ச்சியுடன் வீடு சென்றான்.
புங்கமரத்தை நாடிச் சென்றபோது, அவன் மனைவியிடம் சொல்லிச் செல்லவில்லை. அவன் போனபின்பே, பூவணிக்குச் செய்தி தெரியவந்தது. வறுமையானாலும் கணவனை இழக்க எந்தத் தமிழ் நங்கைதான் சம்மதிப்பாள்.
""ஐயோ! வறுமை போதாதென்று, இந்தக் கண்ணராவிக் கோலமும் வேண்டுமோ?'' என்று அவள் அழுதாள். இரவிலேயே கணவன் வந்தது கண்டு அவள் மகிழ்ந்தாள். கையிலுள்ள கிளையைக் கண்டதும் புரியாமல் விழித்தாள். பாணன் மகிழ்ச்சியுடன் நடந்த செய்திகளைக் கூறினான். தன் வறுமை ஒழிந்தது என்று கூறி அவளையும் தேற்றினான்.
மறுநாள் பாணன் உயிருடன் வருவது கண்ட தலைவன் வியப்படைந்தான். பச்சைக்கிளையைக் கண்ட போது, அவனால் அவன் கண்களை நம்ப முடியவில்லை. தன் பணியாட்களுடன் சென்று புங்கமரத்தை பார்த்தான். கிளை அந்த மரத்தின் கிளைதான். முந்திய இரவு ஒடித்ததுதான் என்பது அவனுக்கு விளங்கிற்று. அவன் வாக்குறுதி செய்திருந்தபடியே, ஆறுவேலி நிலத்தை பழனக்கிழானுக்குக் கொடுத்தான். அது பயிராகும் வரை, முதலாண்டு வாழ்க்கைக்கான ஒரு சிறு தொகையும் அளித்தான்.
அரசப் பேய் பழனக்கிழானுக்கு நேரிடையாகச் செய்த உதவியுடன் அமையவில்லை. சோம்பேறியான பாணன் வயலுக்கு ஒழுங்காக நீர் பாய்ச்சவில்லை. உரம் போடவில்லை. அரசப் பேயே புங்கமரத்துப் பேய்களின் உதவியுடன் எல்லாம் செய்தது. பாணன் உழையாதிருந்தும் வயல் செழித்துக் கொழித்து வளர்ந்தது. அது கண்டு ஊரார் வியப்படைந்தனர்.
பாணன் இப்போது பெயரளவில் பெருஞ் செல்வனாகவே இருந்தான். ஆனால், அவன் நிலங்கள் இன்னும் ஊதியம் தரவில்லை. அரசன் கொடுத்த முன்பணம் அவன் பிழைப்புக்கே பற்றவில்லை. வேறு வேலை செய்யாததால் வீட்டு வறுமை முன் இருந்தபடியே கிட்டத்தட்ட நீடித்தது.
முதல் அறுவடையுடன் வறுமை தீர்ந்து விடும் என்ற எண்ணத்தோடு அவன் நாட்களை கழித்தான். ஆனால், அறுவடையில் அவனுக்கு ஒரு புதிய இக்கட்டு தோன்றிற்று. அதற்காக வேலை யாட்கள் தேவைப்பட்டனர். வேலைக்கு அவன் ஆட்களை அழைத்தான். அவர்கள், ""பணம் கொடு!'' என்றனர்.
""என்னிடம் இப்போது ஏது பணம்? எனக்கு இது முதலாண்டு. ஆனாலும், அறுவடை நல்ல அறுவடை என்றே தோன்றுகிறது. அறுத்தவுடன் உங்கள் பங்குக்கு நெல் தந்து விடுகிறேன்!'' என்றான்.
எல்லா நிலக்கிழாரும் பொன்னே கொடுத்தனர். அதுவும் முன்கூட்டிக் கொடுத்தனர். ஆகவே, கூலிக்கு நெல்லைக் கடனாக வாங்க யாரும் மறுத்தனர். பழனக்கிழான் மீண்டும் விழித்தான். அவனுக்கு உலகத்தின் ஒரே ஒரு நண்பன்தான் இருந்தான். அதுவே பேய் உலக நண்பனான அரசப் பேய்.
அவன் முன்னிரவில் அதை அணுகினான். தன் இக்கட்டைத் தெரிவித்தான். அரசப் பேயின் கனிந்த உள்ளம் அது கேட்கத் தாளவில்லை. அது இப்போதும் உதவ முன்வந்தது.
""அன்புமிக்க பாணனே! என் உதவியை நீ இதில் எதிர்பார்க்கலாம். நீ போய் வேலிக்கு நூறு அரிவாள் கொண்டு போய் நாளை மாலை வை. மற்றக் காரியத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்!'' என்றது அது.
பாணன் அவ்வாறே செய்தான். அரசப் பேய் புங்கமரத்துப் பேய்களை அழைத்தது.
""தோழர்களே! பாணனுக்கு நாம் செய்த உதவியால், நம் பேய் உடல் மறைந்து வருகிறது. இன்னும் ஒரே ஓர் உதவிதான் செய்ய வேண்டும். அதன்பின் பேய் உலகிலிருந்தே எனக்கும், உங்களுக்கும் விடுதலை கிடைக்கும். ஆகவே, புறப்படுங்கள். பாணன் ஆறு வேலியிலும், ஆறு நூறு அரிவாள்கள் இருக்கின்றன. ஆளுக்கு ஒன்றாக எடுத்து, ஒரு இரவுக்குள்ளே, ஆறு வேலி நிலத்தையும் அறுவடை செய்து முடியுங்கள். வைக்கோலை ஒருபுறம் போர் போராகக் கட்டுங்கள். நெல்லை ஒரு புறம் அம்பாரம் அம்பாரமாகக் குவியுங்கள்!'' என்றது.
ஒரே இரவில் பேய்கள் யாரும் வியக்கத்தக்க வண்ணம் இத்தனையும் செய்தன. பாணன் பத்தாயத்தில் நெல் பொங்கி விழுந்தது. அதன் வெளியேயும் அம்பாரங்கள் கிடந்தன. அவன் களமுழுவதும் வைக்கோல் போர்கள் நிறைந்தன. இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு பாணனும், அவன் மனைவியும் கூத்தாடினர்.
வேலையாட்கள் இல்லாமல் எப்படி அவன் நெல்லும், வைக்கோலும் களம் சேர்ந்தனவென்று பண்ணை ஆட்களும், தலைவரும் வியந்தனர். அவனுக்குத் தனித் தெய்வ உதவி இருக்க வேண்டும் என்று கருதினர். அவனை அதுமுதல் பயபக்தியுடனே நடத்தினர்.
பாணன் பழனக்கிழானுக்கு செல்வமும், வாழ்வும் பெருகிற்று. பூவணி பொன்னணியாகத் திகழ்ந்தாள். ஆனால், அந்த மகிழ்விடையே கூட, பாணனுக்கு அரசப் பேய் நினைவு மாறவில்லை. அதற்குத் தனி நன்றியும் வணக்கப் பரிசும் கொண்டு, அவன் மனைவியுடன் பூவரச மரத்தை அணுகினான். அங்கே இருவரும் காத்து நின்றனர். ஆனால், பேயையே காணவில்லை. அவர்கள் முன் ஒரு கிழி கிடந்தது. அதில் ஓர் ஓலை நறுக்கு இருந்தது. பாணன் அதை எடுத்து வைத்துக் கொண்டான்.
அவர்கள் புங்க மரத்தை அணுகினர். அங்கும் ஒரு பேயின் அரவத்தைக்கூடக் காணவில்லை. ஆனால், இங்கும் நூற்றுக்கணக்கான கிழிகள் கிடந்தன. பூவணி அவற்றைத் திரட்டி எடுத்துக் கொண்டாள். வீட்டுக்கு வந்து அவர்கள் கிழிகளைப் பிரித்துப் பார்த்தனர். அரசப்பேயின் கிழி அத்தனையும் நவமணிகளாயிருந்தன. மற்றப் பேய்களின் கிழிகளில் பொன்னும், வெள்ளியும் இருந்தன. அரசப்பேயின் கிழி மீதுள்ள ஓலை நறுக்கை அவன் எடுத்துப் படித்தான்.
"பழங்குடி நண்பனே! நீ இனி யாரையும் அண்டி அவதியுற வேண்டாம். யாரையும் பாட வேண்டாம். பேய்கள் குடியிருந்த மரம் புங்க மரமல்ல, இனி பாண் மரம். அதைப்பாடு. அதை பாதுகாக்க ஏற்பாடு செய். உனக்கு ஏழு தலைமுறைக்கு வேண்டிய செல்வம் தந்திருக்கிறோம்.
அத்துடன் உனக்குச் செய்த உதவி எங்களுக்குச் செய்த உதவியே. அதன் நலங்களின் பயனால் நான் இந்திரர்களுள் ஒருவனானேன். பாண்மரப் பேய்களே கந்தருவர், கின்னரர் ஆயினர். உனக்கு எங்கள் வாழ்த்துக்கள். நீயும் உன் மனைவி மக்களும் நீடூழி வாழ்க!' என்று நறுக்கில் எழுதி இருந்தது.
பாணனுக்கு அப்போது பிள்ளை இல்லை. ஆகவே, "நீயும் உன் மக்களும்' என்ற சொற்றொடர் அவனுக்கு ஒரு புது வாழ்த்தாகவே தோன்றிற்று. அதை அவன் பூவணிக்கும் படித்துக் காட்டி மகிழ்ந்தான். இந்திரனாய்விட்ட அரசப்பேயின் வாக்குப் பொய்க்கவில்லை. அவர்களுக்கு ஆண் பெண் மகவுகள் பல பிறந்தன. அவர்கள் தலைவனைவிடச் செல்வராயினர்.
தலைவனுக்குத் தோட்ட வெளியிலேயே வீடு கட்டியிருந்தனர். ஆனால், அதற்கீடாகப் பாண்மரத்துக்கும், அரச மரத்துக்கும் வேலிகட்டி அவற்றைத் தமிழ்க் கோவிலாக்கினர். இரு மரங்களையும் வாயார அவன் இரு கவிதை நூல்களால் பாடினான். "அரசமரக்கோவை', பாண்மரக்கோவை' என அவை பெயரிடப்பட்டன. தமிழ் மீண்டும் தழைக்கத் தொடங்கிற்று.
-முற்றும்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X