உறவுக்கு கை கொடுப்போம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
உறவுக்கு கை கொடுப்போம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 பிப்
2014
00:00

அலுவல் வேலை காரணமாக, புனேவுக்கு கிளம்பிக் கொண்டிருந்தான் அருண். அவன் அருகில் வந்த ரேணு, ''நீங்க கண்டிப்பா போய்த்தான் ஆகணுமா?'' என்று கேட்டாள்.
''எனக்கு மட்டும் உன்னையும், பூரணியையும் தனியே விட்டுட்டு, புனே போகணும்ன்னு ஆசையா? வேற வழி இல்லாமதான போறேன். மூணு நாளுதானே...ஓடி வந்துடுவேன்.''
''அதுக்கு இல்லீங்க...நம்ம கல்யாண நாள் வேற வருது; அன்னைக்கு விருந்துக்கு எல்லாரையும், கூப்பிட்டு இருக்கேன். 'ப்ளான் செய்தப்படி வர முடியல; வேலை இருக்கு'ன்னு ஏதாவது காரணம் சொல்லி, நீங்க சொதப்பிட போறீங்களோன்னு, ஒரே கவலையா இருக்கு.''
யோசனையுடன் சொன்ன ரேணுவின் கைகளை, மென்மையாய் பிடித்தவன், அருகில் இருந்த சோபாவில், அவளை அமர வைத்து, தானும் அமர்ந்து கொண்டான்.
''ரேணு...இது, நம்ம முதல் கல்யாண நாள்; அதுக்கு வராம, வேலைய காரணம் சொல்வேனா? நீ எதையும் போட்டு குழப்பிக்காம பூரணி கூட சேர்ந்து, மெனு ரெடி செய்து, ஓட்டலில்ஆர்டர் கொடுத்துடு. என்ன சரியா?''
அருண் திருமணநாள் விருந்து பற்றி பேசவும், ரேணு முகத்தில், கொஞ்சம் தெளிவு வந்தது.
''ம்ம்...சரி. மெனு ரெடி செய்துட்டு, உங்களுக்கு போன்ல சொல்றேன்,'' என்றாள்.
''சரி... கல்யாண நாளுக்கு, உனக்கு ஒரு புடவை வாங்கி கொடுத்தேனே... அதுக்கு ஏத்த மாதிரி, பேஷன் ஜுவெல்லர்ஸ் வாங்கிட்டியா, ஜாக்கெட் தைக்க கொடுத்துட்டியா?''
''ம்... எல்லாம் ரெடி.''
''ஆமா...நான் புடவ வாங்கிட்டு வந்த அன்னைக்கு பூரணி தூங்கிட்டு இருந்தாளே. அவகிட்ட புடவய காட்னயா... என்ன சொன்னா?''
''உஷ்... சத்தமா பேசாதீங்க; அவகிட்ட இன்னும் காட்டல. 'என்ன கட்ட போற அண்ணி'ன்னு கேட்டு, ஒரே நச்சரிப்பு. சஸ்பென்சா, இந்த புடவய கட்டி காட்டலாம்ன்னு இருக்கேன். அசந்து போய்டுவா! அப்புறம் அவளுக்கு, நாம எடுத்த அந்த டிசைனர் சல்வாரையும் காட்டலே. நம்ம கல்யாண நாள் அன்னைக்கு, அவ கைல கொடுத்து, பார்ட்டிக்கு போட்டுக்க சொல்லலாம்ன்னு இருக்கேன்.''
''என்னமோ போ... நீங்க ரெண்டு பேரும் நாத்தனார் மாதிரியா பழகறீங்க... ஏதோ சின்ன வயசுல இருந்து ஒண்ணா படிச்ச தோழிங்க மாதிரி இல்ல பழகறீங்க. ஆமா... நீங்க ரெண்டு பேரும் சண்டையே போட்டுக்க மாட்டீங்களா,'' என்று கேட்டு, ரேணுவை சீண்டினான் அருண்.
''சண்டையா... நாங்களா? நெவர்,'' பெருமையுடன், ரேணு சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ''என்ன அண்ணா, எங்களை ஏதோ கிண்டல் செய்துகிட்டு இருக்குற மாதிரி இருக்கு,'' என்றபடியே, உள்ளே வந்தாள் பூரணி.
''ஒண்ணுமில்ல பூரணி; சும்மா பேசிட்டு இருந்தோம். நீயும், ரேணுவும் விருந்துக்கு என்னென்ன செய்யணுமோ, அதயெல்லாம் செய்துடுங்க.''
''சரிண்ணா; விருந்தப் பத்தின கவலய விட்டுட்டு, முதல்ல நீ கிளம்பு. உனக்காக டாக்சி வெய்ட்டிங்!''
''என்னை துரத்துவதிலேயே குறியா இரு,” என்று, செல்லமாய் தங்கையின் கன்னத்தில் தட்டினான் அருண்.
மீண்டும் ஒருமுறை, எடுத்து வைத்தவைகளை சரிப்பார்த்து விட்டு, பெட்டியை மூடினான் அருண்.
மறுநாள் காலையில் வழக்கம் போல எழுந்த ரேணு, அன்றைய வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தாள்.
''அண்ணி... இன்னிக்கு நான் காலேஜ் கான்டீன்ல, சாப்பிட்டுக்கறேன்,'' என்று, உள்ளறையில் இருந்து, குரல் கொடுத்தாள் பூரணி.
''நீ வீட்டில சாப்பிட்டாலே ஒழுங்கா சாப்பிடமாட்டே... இரு, தட்டு எடுத்து வைக்கறேன். ஒரு வாய் சாப்பிட்டுட்டு போ,” சொல்லிக் கொண்டே, பூரணியின் அறைக் கதவை திறந்த ரேணு, அப்படியே திகைத்துப் போனாள். அருண், அவளுக்கு வாங்கி கொடுத்திருந்த பட்டு புடவையைக் கட்டி இருந்தாள் பூரணி. காதிலும், கழுத்திலும் ரேணுவின் ரூபி செட்!
தன்னை அழகாக அலங்கரித்துக் கொள்வதில் நாட்டம் உள்ளவள் ரேணு. திருமணநாள் அன்று, அருணை அசத்தி விட வேண்டும் என்று, பார்த்து பார்த்து ஜாக்கெட் தைத்து இருந்தாள். நகைகளையும் செட்டாக எடுத்து, அந்த புடவையின் அருகிலேயே வைத்து இருந்தாள். கண்கள் விரிய, அருண் பாராட்ட போகும் நொடியை எதிர்பார்த்திருந்த ரேணுவிற்கு, பூரணி தன்னிடம் கேட்காமல், புடவையை எடுத்து கட்டியிருப்பதை கண்டதும், கோபம் வந்தது.
''என்ன அண்ணி திகைச்சு போயி நிக்கற... இன்னைக்கு, எங்க காலேஜ்ல கல்சுரல்ஸ். ஆமாம்... நீ எப்போ, இந்த புடவய வாங்கினே? ஜாக்கெட் எனக்குன்னே தைச்ச மாதிரி இருக்கு. இந்த ஆரி வொர்க் ரொம்ப அழகா இருக்கு,'' என்றவாறு, புடவையை சரி செய்து கொண்டிருந்தவளை முறைத்தாள் ரேணு.
அதை கவனிக்காமல், கண்ணாடியில் பார்த்துக் கொண்டே, ''அண்ணி, இந்த புடவ எனக்கு நல்லா இருக்கா?'' என்று கேட்டபடி, திரும்பி பார்த்தாள்.
ரேணுவின் கண்களில் தெரிந்த கோபம், அவளை தடுமாற வைத்தது. ''என்னாச்சு அண்ணி, ஏன் ஒரு மாதிரியா பாக்குற?''என்று கேட்டு, ''இது, எங்க அண்ணன், உனக்காக வாங்கி கொடுத்தது. நீ ஏன் இத என்கிட்டே காட்டவே இல்லை,'' என்றாள்.
ரேணுவிற்கு பூரணியின் கேள்வி, கோபத்தை அதிகப்படுத்தியது.
''எங்க திருமண நாளுக்காக, ஆசையா அவர் எனக்கு வாங்கி கொடுத்துருக்கார். என்னைக் கேட்காம அதை எடுத்துக் கட்டிக்கிட்டு, கேள்வியா கேக்குற? எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லணும்ன்னு, எந்த அவசியமும் இல்லை. முதல்ல புடவய மாத்திட்டு, சுடிதார் எதையாவது போட்டுக்கிட்டு கிளம்பு,'' குரலில் உஷ்ணம் தெரிந்தது.
அண்ணியின் பேச்சால், மனதுக்குள் கோபம் எட்டிப் பார்த்தது பூரணிக்கு.
''உனக்கு வாங்கி கொடுத்தவன், எனக்கும் இதே போல வாங்கி கொடுத்திருந்தா, நான் ஏன், உன்னத எடுக்க போறேன்?''
''எனக்கு வாங்கற எல்லாத்தையுமே, உனக்கும் எதுக்கு வாங்கணும்... அதுவும், எங்க வாழ்க்கையில ரொம்ப முக்கியமான நாளுக்காக, வாங்கி கொடுத்திருக்கார். நீ அதுக்கும் போட்டிக்கு நின்னா எப்படி?''
ரேணு யோசிக்காமல், சட்டென்று வார்த்தைகளை விட்டுவிட, பூரணியின் கண்களில் கண்ணீர் எட்டி பார்த்தது.
''இப்போ எல்லாம் புரியுது அண்ணி. அண்ணன், உன்ன திருமணம் செய்றதுக்கு முன்னாடியெல்லாம், நான் கேக்காமலேயே எல்லாத்தையும் வாங்கி தருவான். இப்போ... உனக்கு வாங்கி தர்றதைக் கூட என்கிட்ட சொல்ல மாட்டேங்கறான். அண்ணன் இருந்தும், இந்த வீட்டில நான் ஒரு அனாதைன்னு, இப்போ தெரியுது. அம்மா, அப்பா இல்லாத எனக்கு, இப்போ அண்ணனும் இல்லன்னு ஆகி போச்சு,'' என்று, குரல் அடைக்க பேசியவள், அழ தொடங்கினாள்.
பூரணியின் வார்த்தையில் இன்னும் எரிச்சல் மூண்டது. ''முதல்ல அழறத நிறுத்திட்டு, புடவய மாத்திக்கிட்டு, கல்லூரிக்கு கிளம்பு,'' கண்டிப்புடன் சொன்ன ரேணு, மீண்டும் அடுக்களைக்கு வந்து விட்டாள். நீண்ட நேரம், பூரணியின் விசும்பல் கேட்டுக் கொண்டே இருந்தது.
''நான் வரேன்,'' வாசல் கதவு அறைந்து சாத்தப்படும் ஒலியும், அதை தொடர்ந்து, 'டப் டப்' என்ற, ஹைஹீல்ஸ் சத்தமும், அவள் கல்லூரிக்கு கிளம்பியதை ஊர்ஜிதப் படுத்த, அறைக்குள் நுழைந்தாள் பூரணி.
ஆசை ஆசையாய் கணவன் வாங்கி கொடுத்த புடவை, கட்டி அவிழ்த்த அடையாளத்தோடு, கசங்கி, கீழே தரையில் கிடக்க, அதை எடுத்தவள், மெல்ல நீவி மடித்தாள்; மனதுக்குள் கோபம் அதிகமானது. ஒரு முடிவுக்கு வந்தவளாய், கைக்கு கிடைத்த பையில், இரண்டு துணிகளை அடைத்துக் கொண்டாள். அருணுக்கு, 'அம்மாவுக்கு உடம்புக்கு முடியல, பார்த்துட்டு உடனே திரும்பிடுகிறேன். பூரணிக்கு பக்கத்து வீட்டு பாட்டி, துணைக்கு இருப்பா...' என்று, எஸ்.எம்.எஸ்., அனுப்பியவள், அடுத்த வீட்டு பாட்டியிடம் விவரம் சொல்லி, வீட்டு சாவியை கொடுத்தாள்.
ரயில் கிளம்பும் நேரத்திற்கு முன்பே வந்துவிட்டதால், அன்ரிசர்வ்டு கம்பார்ட்மென்ட்டில் கூட்டம் சற்று குறைச்சலாக இருந்தது. ஜன்னலோர இருக்கை கிடைக்கவே, சற்றும் தாமதிக்காமல் அமர்ந்து விட்டாள். ரேணுவிற்கு, பூரணி பேசிய வார்த்தைகள், மனதில் மீண்டும் வந்து போனது. 'என்னவெல்லாம் பேசிட்டாள்... அவள் அண்ணன நான் அபகரிச்சுட்டேனாம். அவளுக்கு அருண் அண்ணன்னா, எனக்கு கணவன் இல்லையா... என்ன கேட்காம, என் புடவய கட்டினது தவறுன்னு சொன்னா, அதுக்கு இத்தனை பேசுவானேன்... சின்ன பெண் அதுவும் அம்மா இல்லாதவள்ன்னு நினைச்சு ஒரு தோழியா பழகியதற்கு, எப்படி எல்லாம் பேசிட்டா. இனி அவகிட்ட பேசவே கூடாது...' என்ற முடிவுடன், கண்களை இறுக மூடி கொண்டாள். மனம் அமைதி அடையாமல் தவித்தது. ஒவ்வொரு ஊரிலும் ரயில் நின்று, புறப்படும் போது, கொஞ்சம் கொஞ்சமாக கம்பார்ட்மென்ட்டில் கூட்டம் அதிகரித்து, ஊசி விழ கூட இடமில்லாமல் போனது.
சிறிது நேரத்தில், ரேணுவிற்கு எதிரில் அமர்ந்திருந்த சிவப்பு சட்டை இளைஞன் எழுந்து, கழிவறையை நோக்கி செல்ல, நின்றிருந்த வெள்ளை சட்டை இளைஞன், தன்னருகில் சிரமப்பட்டு நின்று கொண்டிருந்த முதியவரை, அந்த இடத்தில் அமர வைத்தான். சற்று நேரத்தில் திரும்பி வந்த சிவப்பு சட்டைக்காரன், தன்னுடைய இடம் பறிபோனதில் எரிச்சல் அடைந்து, ''மனுஷன் கொஞ்சம், அந்தண்ட போய்ட கூடாதே...உடனே உட்காந்துடுவியா, எந்திரியா முதல,'' என்றான். செய்வதறியாமல் முதியவர் விழிக்க, அவரை அமர வைத்த வெள்ளை சட்டை இளைஞன், பதிலுக்கு கத்தினான்.
''உன் இடம்ன்னு எழுதியா, இருக்கு? ரொம்ப கத்தாத...நாந்தான், அவர உட்கார சொன்னேன்.''
''வாய்யா, நியாயஸ்தர்...உனக்கு இடம் கிடைச்சு, நீ உட்கார்ந்து வருவ பாரு... அப்ப நீ எழுந்து, அவருக்கு இடம் கொடு,'' என்று பேசினான். கூட்டத்தில் சிவப்பு சட்டைக்கு சிலரும், வெள்ளை சட்டைக்கு பலரும் பரிந்து கொண்டு வந்தனர். இருவருக்குள்ளும் வாக்குவாதம் வலுத்து, கைகலப்பில் முடிந்துவிடுமோ என்று, பயந்த அந்த முதியவர், சிவப்பு சட்டையிடம், ''தம்பி நீயே உட்காரு. நான் நின்னுக்கறேன்,'' என்று, எழ முயல, ''சும்மாரு பெருசு...நீ உட்காரு. நானே நின்னுக்கிட்டு வறேன்,'' என்று சொன்ன சிவப்பு சட்டைகாரனை, வெள்ளை சட்டைகாரன் உட்பட அனைவரும் ஆச்சர்யமாய் பார்த்தனர்.
''எனக்கும், தாத்தா இருக்கு,'' எங்கோ பார்த்தபடி அவன் சொல்ல, சிநேகமாய், அவன் கைகளை பற்றினான் வெள்ளை சட்டை.
'அப்புறம் ஏண்டா, இவ்ளோ நேரம் பிரச்னை செய்த...' என்பது போல் பார்வையாலேயே கேட்டான். அதைப் புரிந்து கொண்ட சிவப்பு சட்டை, ''எவ்ளோ நேரம் நின்னுகிட்டு போறதுன்னு நினைச்சு கத்திட்டேன். வயசுல சின்னவன், நானே நிக்க யோசிக்கறேன். ஆனா, இந்த பெருசு, 'நான் நின்னுகிட்டு வரேன்; நீயே உட்காந்துக்கோ'ங்குறார். நானும் மனுஷந்தானே, உனக்குள்ள இருக்கற மனிதாபிமானம் எனக்கும் இருக்காதா,'' என்று சொல்லி முடித்தவனை, பாராட்டும் விதமாய் பார்த்தான் வெள்ளை சட்டை.
சிறிது நேரத்தில், இருவரும் சிநேகிதமாகி, கொண்டு வந்திருந்த உணவை பகிர்ந்து கொண்டே, ஏதோ சிரித்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்த ரேணு, யோசிக்க தொடங்கினாள். 'உறவோ, நட்போ இல்லாத ரெண்டு பேரு, சண்ட போட்ட கொஞ்ச நேரத்திலிலேயே சமாதானமாகி, நட்புடன் பழகுறாங்க. ஆனா, காலத்துக்கும் தொடர வேண்டியது நாத்தனார் - அண்ணி உறவு. அத உணராம, அருண் இல்லாத நேரத்தில, கோவிச்சுகிட்டு, பூரணிய தனியே விட்டுட்டு, பிறந்த வீட்டுக்கு கிளம்பினது எவ்வளவு பெரிய தப்பு. சின்ன பொண்ணு, பக்குவம் இல்லாம பேசிட்டாள். அத, அப்படியே விட்ருக்கணும். ஏன் நான் தானே முதல்ல அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்டுனேன்...' என்று, தான் செய்த செயலை நினைத்து, மனம் வருந்தினாள் ரேணு. 'பூரணிக்கு, அந்த புடவ, பிடிச்சுருந்தால், அவளிடமே அதை கொடுத்துடணும்' என்று, எண்ணிக் கொண்டாள்.
பூரணிக்கு, போன் செய்யலாம் என்று நினைத்து, மொபைலை எடுக்க, கைப்பையின் ஜிப்பை திறக்க, அதுவே ஒலித்தது. திரையில் பூரணியின் பெயர் ஒளிர, வேகமாக எடுத்தாள். ''அண்ணி எங்க போயிட்ட நீ... உனக்கு பிடிக்கும்ன்னு பேல் பூரி வாங்கிட்டு வந்திருக்கேன். வீடு பூட்டி இருக்கு,'' என்று 'படபட'த்தாள் பூரணி.
காலையில் போட்ட சண்டையை மறந்து, தனக்கு பிடித்த பேல் பூரியை வாங்கி வந்து நிற்கும், நாத்தனாரை நினைத்து, மனம் உருகியது. அவளையும் அறியாமல், கண்களில் நீர் திரையிட்டது. 'இத்தனை பாசத்துடன் இருக்கும் இவளிடமா, அற்பத்தனமான விஷயத்துக்கு கோபித்துக் கொண்டேன்' மீண்டும், ஒருமுறை தன் செயலை நினைத்து வெட்கினாள்.
''பூரணி, நான் அம்மா வீட்டுக்கு போயிட்டு, நாளைக்கு வந்துடுவேன். பக்கத்து வீட்டு பாட்டிகிட்ட சாவி இருக்கு. அவங்க இன்னைக்கு நைட்டு, உனக்கு துணைக்கு இருப்பாங்க. அப்புறம், தோசை மாவு இருக்கு... ராத்திரி தோசை ஊத்திக்கோ,'' என்றாள்.
''அண்ணி உனக்கு என் மேல கோபமா... அதான் ஊருக்கு போறியா?”
''அதெல்லாம் ஒண்ணும் இல்ல. அம்மாவ பாக்கணும்ன்னு தோணுச்சு... அதான், உடனே கிளம்பிட்டேன். உன்கிட்ட கூட சொல்லலை. சாரி பூரணி.''
''பரவாயில்லை அண்ணி. நீ பத்திரமா போயிட்டு வா. ஆனா, நாளைக்கு கண்டிப்பா வந்துடு. விருந்துக்கு ஏற்பாடு செய்யணுமே... நீ இல்லாம எனக்கு, இன்னைக்கு, ரொம்ப போர் அடிக்கும். அப்புறம் அண்ணி, நானும் அப்படி நடந்திருக்க கூடாது. ரொம்ப சாரி,'' பூரணியின் குரல், நெகிழ்ந்து இருந்தது.
ஊர் வந்தவுடன், இறங்குவதற்காக கூட்டத்துடன் நின்றிருந்த ரேணுவிற்கு, அந்த இரண்டு இளைஞர்களும், ஒதுங்கி வழி விட்டனர். கண்களில் நன்றியுடன் குறிப்பாக, தங்களை மட்டுமே பார்த்து, 'ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்...' என்று, சொல்லிக் கொண்டே இறங்கிய ரேணுவை, புரியாமல் பார்த்தனர், அந்த இருவரும்!

-நித்யா பாலாஜி

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X