வெப்ப மண்டலப் பயிர்களில் கறிவேப்பிலையும் ஒன்றாகும். இதில் இரண்டு ரகங்கள் உள்ளன. நாட்டுக் கறிவேப்பிலை, காட்டுக் கறிவேப்பிலை என்பன அவை ஆகும்.
நாட்டுக் கறிவேப்பிலையே உணவுப் பதார்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதன் இலை இனிப்பும், துவர்ப்பும், நறுமணமும் கொண்டுள்ளது. காய்கறிகளோ, ரசமோ இதன் தாளிதம் இன்றி மணம் பெறுவதில்லை. "கறிவேப்பிலையோ வேப்பிலை; காய்கறிக்கெல்லாம் தாய்ப்பிள்ளை' என்பது பழமொழி. விவசாய முறையில் கறிவேப்பிலைச் செடியை எளிதாக வீட்டுத் தோட்டங்களிலும் பயிரிடலாம். எந்த மண்ணிலும் இது வளமாக வளரக்கூடியது.
தொடக்கத்தில் இது ஒரு செடி போன்று தோன்றினாலும், நாளாவட்டத்தில் ஒரு மரமாகவே மாறி விடும். இது ஆள் உயரத்திற்கு வளர்ந்ததும், அவ்வப்போது "கவாத்து' செய்து கொண்டே இருக்க வேண்டும். கவாத்து என்பது, இது மேலோட்டமாக வளர வளர வெட்டி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால், பல மடங்கு உயரத்திற்கு வளர்ந்து கொண்டே செல்லும். அவ்வாறு அதிகமான உயரத்திற்கு இது சென்று விட்டால், இலைகளைப் பறிப்பது அதிக கஷ்டமாகி விடும்.
ஆனால், விவசாய வியாபார நோக்கத்தில் கிராமங்களில் வளர்க்கப்படும் இந்தத் தாவரத்தின் மேலோட்டமான கிளைகளை மிகக் கவனமாகப் பார்த்து அவ்வப்போது கண்காணித்து, கவாத்து செய்து, இது படர்ந்து விரிந்து செல்ல வல்ல தன்மையிலும் இலைகளுடன் கூடிய ஈர்க்குகளை எளிதில் முறித்து விலையாக்கவும் இயலும். பொறுமையுடன் இந்த தாவரத்தைப் பேணிப் பாதுகாத்து வளர்த்தால் நல்ல வருமானத்தை அடையலாம். ஏன் என்றால், இது அதிகச்செலவு இல்லாமல் எளிதில் பலன் தர வல்லதாகும்.
கறிவேப்பிலை மரம் கரிய சாம்பல் நிறம் கொண்ட பட்டையை உடையதாகும். இலைகள் ஈர்க்கில் இரு மருங்கும் அமைந்திருக்கும். இந்த ஈர்க்கு ஏறத்தாழ 12 அங்குலம் வரை நீளம் உள்ளதாக இருக்கும். ஒரு ஈர்க்கில் 25 முதல் 30 இலைகள் உள்ளதைக் காணலாம். பூக்கள் கொத்துக் கொத்தாக கிளைகளின் நுனிகளில் இருப்பதைப் பார்க்கலாம். கறிவேப்பிலைப் பழம் மிகச் சிறிய உருண்டை வடிவத்தில் இருக்கும்.
இயற்கையான விவசாய முறையே கறிவேப்பிலைக்குச் சிறந்தது. மாதம் ஒருமுறை மரம் ஒன்றுக்கு ஒரு கிலோ கலப்பு உரம் இட்டு மண்ணைக் கிளறி விடுதல் நல்லது. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை போதிய தண்ணீர் ஊற்றி வர வேண்டும்.
கறிவேப்பிலையில் அடங்கியுள்ள ரசாயனத் தன்மை காரணமாக, இது சரீரத்திற்கும் பலம் தர வல்லது. பசியைத் தூண்டி விடுகின்ற ஆற்றல் இதனில் உள்ளது. சரீரச் சூட்டைத் தகுந்த முறையில் உண்டாக்கும் தன்மை இதற்கு உண்டு. பொதுவாக, இதன் இலை, ஈர்க்கு, பட்டை, காம்பு ஆகிய அனைத்துமே உணவிற்காகவும், மருந்திற்காகவும் உபயோகம் ஆகின்றன. மென்று சாப்பிடப் பயன்படும் மூலிகைகளில் இதுவும் ஒன்று என்று கோவை ஈஷா யோகா மையம் இயம்புகிறது.
- எஸ்.நாகரத்தினம்
விருதுநகர்.