ஹேப்பி பர்த்டே டியர் காந்தி ! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements
ஹேப்பி பர்த்டே டியர் காந்தி !
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 அக்
2010
00:00

ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளும் நாள். இதுபோன்ற மனிதர், சூப்பர் மனிதர் உலகினில் வாழ்ந்தாரா என வியக்கும் மாமனிதர் காந்தி மகானின் பிறந்தநாள். அவருடைய வாழ்க்கை மாபெரும் நிகழ்வுகளின் சங்கமம். அந்த பெருங்கடலில் இருந்து ஒரு பகுதி இதோ...

அவர் தந்த அகிம்சை !
"உண்மையான அகிம்சை என்பது வல்லவர்களின் ஆயுதமேயன்றி கோழைகளின் ஆயுதமன்று!' என்றார் காந்திஜி. அகிம்சையை அகிம்சையால் வெல்ல முடியாமல் போகுமாயின், அதற்கு காரணம் உபயோகிப்பவரின் மனதின் பலவீனமே என்றார் காந்திஜி.   கடவுளை நேருக்கு நேராக காண வழி முதலாவது அன்பு, அடுத்தது அகிம்சை. அமெரிக்கப் பள்ளிகளில் மகாத்மா காந்தியின் அகிம்சை போதனைகள் போதிக்கப்படுகின்றன. அகிம்சை முறையில் இந்தியாவின் சுதந்திரத்தை எவ்வாறு காந்திஜி பெற்று தந்தார். காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கம், மார்ட்டின் லூதர் கிங்கின் மனித உரிமை போராட்டம், தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற இன வெறி எதிர்ப்பு போராட்டங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. அகிம்சை போராட்டத்தின் மூலமாகதான் நமது காந்திஜி நம் நாட்டிற்கே சுதந்திரம் பெற்று தந்தார். அகிம்சையையும் சத்தியத்தையும் முன்னிறுத்தி ஆன்மிக அரசியல் நடத்தி உலக அரங்கில் உயர்ந்த மனிதராய் விளங்கிய காந்தியடிகளின் வழியை உலகினில் உள்ள ஒவ்வொருவரும் உணர்ந்து பின்பற்ற வேண்டியது நாம் காந்திஜிக்கு செய்யும் நன்றி தெரிவித்தல் ஆகும். இதன் மூலம் உலகமே சுபிட்சம் பெறும்.

நூற்றாண்டின் மனிதராக்கியது அகிம்சை !
20-ம் நூற்றாண்டின் சிறந்த மனிதர் யார்? அமெரிக்காவில் வெளியாகும் டைம் பத்திரிகை பெரிய விளைவை ஏற்படுத்திய தலைவர்களின் பெயரை பரிந்துரை செய்யும்படி, சர்வதேச அளவில் பல்வேறு துறைகளில் சிறந்த அறிஞர்களிடம் கேட்டு கொண்டது. ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஸ்பீன் ஜாப்ஸ், இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த மனிதராக மகாத்மா காந்தியைத்தான் தெரிவித்தார். காரணம், அவர் அகிம்சையை போதித்தவர். நேர்மையான முறையில் மாற்றத்தையும், நீதியையும் பெற முடியும் என நிரூபித்தவர் காந்தி என்றார். காந்தியம் கண்ட அகிம்சை வாய் மூடி செத்து போகுமாறு காந்தியடிகள் கூறவில்லை என்பதை உணர வேண்டும். உதாரணமாக ஒரு பெண்ணிற்கு ஆபத்து நேரிடும் போது பற்களையும், நகங்களையும் உபயோகித்து எதிரியை வீழ்த்த வேண்டும் என்று காந்திஜியே ஆணையிட்டுள்ளார். ஆயுதம் ஏந்தி போரிட்டுதான் ஆங்கிலேயரை வீழ்த்த முடியும் என்று தனி படையே அமைத்தவர் நேதாஜி. ஆனால், இறுதியில் காந்திஜியின் அகிம்சை போராட்டமே சிறந்தது என்று ரங்கூனிலிருந்து நேதாஜி அறிக்கை வெளியிட்டார். மகாத்மா காந்தி இந்திய விடுதலை போராட்டத்தை அனைத்து மக்களுக்குமான போராட்டமாக மாற்றினார். அதற்கு அவருடைய அகிம்சை தத்துவம் விடுதலை போராட்டத்தில் ஒரு சக்தி மிக்க வடிவமாக செயல்பட்டது. "அகிம்சை வழியில் எவரையும் வெல்லலாம்!' என உலகிற்கு உணர்த்தியவர் காந்திஜி. அவர் வழியை பின்பற்றி மார்ட்டின் லூதர்கிங், நெல்சன் மண்டேலா போன்ற மாபெரும் மனிதர்கள் போராடினர். "எந்த போராட்டத்திற்கும் உகந்த ஒரே வழி அறநெறி சார்ந்த அகிம்சை முறைதான். தீமைகளை வெல்வதற்கு ஒரே வழி காந்தியடிகள் மேற்கொண்ட சத்தியாக்கிரகம் என்பதை காந்தியடிகளின் வாழ்க்கை எனக்கு அறிவுறுத்தியது,' என்றார் மார்ட்டின் லூதர்கிங். அமெரிக்காவின் தென் மாநிலங்களில் இனவெறி தோன்றி, வெள்ளையருக்கும் கருப்பு இன மக்களுக்கும் இடையே போராட்டம், மார்ட்டின் லூதர்கிங் தலைமையில் 381 நாட்கள் நடந்தது. இதில் கிங் தன் அகிம்சை போராட்டத்தில் இயேசு நாதரின் போதனைகளையும், காந்திஜியின் வழிமுறைகளையும் கையாண்டார். தீமைகளை வெல்வதற்கு ஓர் உயரிய நடைமுறையாக காந்திஜியின் அகிம்சை போராட்டத்தையே அந்த 381 நாட்களிலும் கடைபிடித்தார். "ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை போராட்டத்திற்கு நடைமுறை சாத்தியமானதும், அறநெறி சார்ந்ததுமான ஒரே நெறி அகிம்சை முறைதான் என்ற நம்பிக்கையை நான் காந்திஜியிடமிருந்து பெற்றேன்!' என்று கூறினார் மார்ட்டின் லூதர்கிங். "அகிம்சையில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு. இப்படி வாழ்ந்து வருவதாலேயோ என்னவோ கடவுளை பற்றி அதிகம் தெரிந்து கொள்ள நான் முனைந்ததே இல்லை!'' என்றார் காந்திஜி. 600 மைல்களுக்கப்பாலிலிருந்து வந்த ஒரு வியாபார கூட்டம் நாட்டின் அதிகாரத்தை பிடித்து கொண்டது. பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டு, கையில் துப்பாக்கி - பீரங்கி போன்ற அழிவு கருவிகளினால் நம்மை மிரட்டி ஆண்டது. அக்கூட்டத்தை கத்தியின்றி ரத்தமின்றி விரட்டியது எது? ஆயுதமா? இல்லையே அகிம்சைதானே. இதைத்தான் காந்திஜியின் உப்பு போராட்டம் தொடங்கி, அவர் தண்டியாத்திரை சென்றபோது அதை பார்த்த நாமக்கல் கவிஞர்,
"கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது
சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்!'
என்று பாடினார்.
உலக வரலாற்றில் இல்லாத வகையில், போரும் பகைமையும் இல்லாமலேயே அகிம்சை என்ற பாதையில் நம்மை ஈடுபடுத்தி காந்திஜி  நமக்களித்த வெற்றி பாதையை நாமும் கடைபிடிக்க வேண்டும். பார் புகழும் இந்த அகிம்சை தத்துவத்தின் பிறப்பிடமாக திகழ்வது நம் தாய் திருநாடு. அந்த மாபெரும் தத்துவத்திற்கு எத்தகைய வகையில் நாம் பதில் மரியாதை செலுத்துகிறோம்  என்பதை எண்ணி பார்க்க வேண்டும். அகிம்சை என்பது உயர்ந்த லட்சியம். அது வாழ்க்கை முறையாக வந்துவிட்டால் வாழ்வில் அமைதி வந்துவிடும்.
                       ***

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X