உளுந்து - மதுரை 1 : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் உளுந்து பயிரைத் தாக்கும் மஞ்சள் நோயைத் தாங்கி வளரும் இயல்புடைய வம்பன் 1, வம்பன் 2, வம்பன் 3, வம்பன் 4, வம்பன் 5, வம்பன் 6, உளுந்து கோ 6 ஆகிய இரகங்களை ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. விளைச்சலில் சாதனை படைத்த உளுந்து கோ 6 இரகத்தை விட அதிக விளைச்சலைத் தரும் மதுரை-1 இரகத்தை இந்த ஆண்டு வெளியிட்டுள்ளது.
இந்த புதிய உளுந்து இரகம், எக்டருக்கு 700 கிலோ விளைச்சலைத் தரும். மேலும் உளுந்தின் மாவு பொங்கும் தன்மையைக் கொண்டது. உளுந்து விதைத்த 70 முதல் 75 நாட்களில் அறுவடைக்கு தயாராகும். மஞ்சள் தேமல் நோய், களப்புழு தாக்குதலைத் தாங்கி வளரும் இயல்புடையது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் (நீலகிரி, கன்னியாகுமரி, தஞ்சாவூர் தவிர) பயிரிட ஏற்ற இந்த இரகம் வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் சோதனை முறையில் பயிரிட்ட போது எக்டருக்கு அதிக விளைச்சலாக 1679 கிலோ கொடுத்துள்ளது.
தீவனச்சோளம் - கோ.31 : இந்தியாவிலேயே முதன் முறையாக ஒரு புதிய துறை 1976ம் ஆண்டு த.வே.ப.கழகத்தில் உருவாக்கப்பட்டது. இந்த துறையின் மூலம் கம்பு நேப்பியா ஒட்டுப்புல் கோ. (சி.என்) 4, கினியா புல் கோ (ஜி.ஜி) 3, மறு நாம்பு தீவனச் சோளம் கோ (எப்எஸ்) 29 ஆகிய இரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது இந்த ஆண்டு தீவனச்சோளம் கோ.31 இரகம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பயிரிட ஏற்ற இந்த இரகம் கோ.29 இரகத்தை விட 15 சதம் கூடுதல் தீவன விளைச்சலைத் தரும் இயல்புடையது. அதிக எண்ணிக்கையில் தூர்கள், அகன்ற இலைகள், விதை உதிராத தன்மையுடன் விரைவாக தழைக்கும் திறன், குறைந்த அளவு நச்சுப் பொருட்கள் (நார்ச்சத்து 19.8 சதம்), புரதம் 19.86 சதம் ஆகியவை இந்த இரகத்தின் சிறப்பியல்புகளாகும்.
கறவைமாடுகள், ஆடுகள் விரும்பும் சுவையுள்ள இந்த இரகம் 190 டன் முதல் 227 டன் வரை பசுந்தீவன விளைச்சலைத் தரவல்லது. இதன் உலர் எடை விளைச்சல் 49.73 டன் ஆகும். இந்த இரகத்தை ஆண்டுக்கு 6 முதல் 7 முறை அறுவடை செய்து பயன்பெறலாம்.
நானோ துகள் தொழில்நுட்பம்: விவசாயி நஞ்சுக்குட்டி அடிக்கட்டை கரும்பை பொங்கலுக்கு வெட்டியுள்ளார். கிளையிட்ட கரும்பு (3 1/2 மாதம்) வளர்ந்து வெட்டுவதற்குத் தயாராக இருப்பது போல் மத மதவென்று வளர்ந்துள்ளது. இந்த அபரிமிதமான வளர்ச்சிக்குக் காரணம் நானோத் துகள் தொழில்நுட்ப கரைசல் தான். 1 தூரிலிருந்து 6 கரும்புகள் வந்துள்ளன. இப்ப, 6 மறுபடி புடைச்சிருக்கு. 3 தடவை நானோ கரைசல் ஸ்பிரே பண்ணியிருக்கார் விவசாயி.
10 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டரை கரைத்துத் தெளித்து வருகிறார் விவசாயி. கரைசலில் கொஞ்சத்தை கரும்பில் தெளித்து விட்டு மீதியை வேலி மசாலுக்குத் தெளிக்கிறார். தென்னைக்குத் தனியாகத் தெளிக்கிறார். கடந்த வருடம் ஆண்டிற்கு 120 காய்கள் 1 மரத்திலிருந்து கிடைத்துள்ளது. நானோ தெளிப்பிற்கு பிறகு இது 150 காய் வரை உயரலாம் என்று கணிக்கிறார் விவசாயி. நானோ தெளிப்பிற்கு பிறகு, தேங்காய் வெயிட் கூடுவதாக உணர்ந்துள்ளார். முன்பெல்லாம் 400-500 கிராம் தான் தேங்காய்கள் வெயிட் இருக்கும். இப்ப நானோ துகள் கரைசல் தெளித்த பிறகு 560 கிராம் வரை எடை வருவதாக கூறுகிறார் விவசாயி.
மல்பெரியை பொறுத்தவரை பசபசவென்று பளபளப்பு மாறாம அப்படியே இருக்கு. மேலும் விவரங்களுக்கு (விவசாயி கூ.ஓ.நஞ்சுக்குடா (எ) ராசு, தென்னைநல்லூர் போஸ்ட், தொண்டாமுத்தூர் (வழி), கோவை-641 109) மற்றும் புரபசர் ராஜசேகரன்,
செல்: 93809 54559.
- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.