ரோல் மாடல்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஏப்
2014
00:00

காலில், சக்கரம் இல்லாமலே, வீட்டிற்குள் ஸ்கேட்டிங் செய்து கொண்டிருந்தாள் இந்து. இன்னும், 25 நிமிடத்தில் மகள் சாருவின், ஸ்கூல் வேன் வந்து விடும். ஆனால், சாரு இன்னும் எழுந்த பாடில்லை. அடுப்பில், டிபனுக்கான சாம்பார் கொதித்துக் கொண்டிருந்தது; இட்லியும் தயார். சாருவை எழுப்பி, கிளப்பி விட்டால், ஓரளவு டென்ஷன் குறையும். அதன் பின், மதிய சாப்பாட்டுக்கு, சாதம், குழம்பு, பொறியல் வைத்து, தனக்கும், கணவன் சங்கருக்கும், டப்பா கட்டி விட்டு, பாத்திரங்களை ஒதுக்கி வைக்க வேண்டும்.
செல்ல சிணுங்கல்களும், கெஞ்சல்களுமாய் சோம்பல் கொண்டாடிக் கொண்டிருந்த குழந்தையை, எழுப்பி விட்டாள். 'விறுவிறு'வென பல்லை விளக்கி, காலைக் கடன்களை முடிக்க வைத்து, குளிப்பாட்டி டவலில் சுற்றி தூக்கி வந்து, அறைக்குள் விட்டாள். ஹாலில் பேப்பர் படித்து கொண்டிருந்த சங்கர், பேப்பரை மடித்து வைத்துக் கொண்டிருந்தான்.
''என்னங்க... இந்த யூனிபார்மை கொஞ்சம் போட்டு விடுறீங்களா? நான் டிபனை எடுத்து வைக்கறேன்.''
''நான் ஆபீசுக்கு கிளம்ப வேணாமா, உம்பொண்ணுக்கு ட்ரஸ் செய்துகிட்டிருந்தா, நான் எப்ப கிளம்ப?''
''நானுந்தானேங்க ஆபீசுக்குப் போகணும். கொஞ்சம் ஒத்தாசை செய்தீங்கன்னா, ரெண்டு பேரும் சேர்ந்தே போயிரலாம்.''
''உன்னை யாரு அப்படி கஷ்டப்பட்டு வேலைக்கு போகச் சொன்னா... நானா, உன்னை வேலைக்குப் போயி சம்பாதிச்சு கொடுன்னு கேக்கறேன்...உன் அகம்பாவம், நீ வேலைக்குப் போயே தீரணும்ன்னு நிக்கற. சரி, அது உன் இஷ்டம்ன்னு விட்டா, நானும், சேர்ந்து பறக்கணும்ன்னு நினைச்சா... அதெல்லாம் நடக்காது.''
பேச்சு செல்லும் திசையை உணர்ந்து, அவளே, குழந்தைக்கு, 'பரபர'வென, டிரஸ் செய்து கொண்டே, 'சரி விடுங்க. நீங்க கிளம்பற வழியப் பாருங்க,'' என்று, பேச்சை மாற்றினாள். ஆனாலும், இது போன்ற சந்தர்ப்பத்திற்காகவே, காதை தீட்டி வைத்துக் கொண்டு, அறைக்குள் படுத்திருந்த மாமியார் மீனாட்சி அம்மாள், மின்னலென எழுந்து, ஹாலுக்குள் வந்து, லாவகமாக பேச்சில் புகுந்தாள்.
''ஏன்பா சங்கர்... நீயுந்தான் கொஞ்சம், அவளுக்கு கூட மாட ஒத்தாச செஞ்சா என்ன? பாவம், அவளுந்தான் ரெக்க கட்டாத குறையா, பறக்கறா... என்னால தான் அஞ்சு நிமிஷம் சேந்தாப்பல உக்கார கூட முடியல; இல்லன்னா, காய் நறுக்கறது, கீரை ஆயறதுன்னு சுத்துக் காரியமாவது பாத்து கொடுப்பேன். இப்ப பாரு... என் ஒத்த பேத்தி, அவளுக்கு தல சீவி பின்னக்கூட தெம்பில்லாம போச்சு. ரெண்டு பேரும் வேலைக்குப் போறதுன்னா சும்மாவா... கொஞ்சம் அனுசரிச்சுப் போகணும்பா.''
நல்ல பிள்ளை மாதிரி பேசி, தங்களுக்குள் சண்டையை ஊதி விடும் மாமியாரை பார்த்து, இந்துவுக்கு எரிச்சல், உச்சத்துக்குப் போனது.
''அம்மா, ஊர்லர்ந்து உங்கள இங்க கூட்டிட்டு வந்ததே, நீங்க ஓஞ்ச காலத்துலயாவது நிம்மதியா ரெஸ்ட் எடுக்கணும்ன்றதுக்காகத்தான். இந்த மகாராணி, ஆடம்பரத்துக்கு வேலைக்குப் போக, நீங்க வீட்டு வேலை செய்யணுமாக்கும். அதுக்கெல்லாம் இந்த வீட்ல இடமில்ல,'' என்று கூறியவன், அலுவலகம் செல்ல நேரமாகி விட்டதால், மேற்கொண்டு எதுவும் பேசாமல், தன் வேலையைப் பார்க்கப் போனதில், மீனாட்சியம்மாளுக்கு கொஞ்சம் சப்பென்று ஆனது.
சாருவை பள்ளி வேனில் ஏற்றி விட்டுத் திரும்பும் போது, சங்கர் ரெடியாகி கீழே வருவது தெரிந்தது. லிப்டிலிருந்து வெளியே வந்தவன், பழக்கதோஷத்தில் புன்னகைக்க ஆரம்பித்து, பின், கொஞ்ச நேரம் முன் நடந்த சண்டையை நினைவுபடுத்தி, அதை அந்தரத்தில் நிறுத்தினான். அவனது பிரயாசையைப் பார்த்த இந்துவுக்கு பாவமாகவும், சிரிப்பாகவும் இருந்தது. சங்கரும், ஒரு குழந்தையைப் போன்றவன் தான். அவனுக்கு இந்துவிடம் எந்தவிதக் கோபமும் கிடையாது. தான் வேண்டாம் என்று சொல்லும், ஒரு விஷயத்தை, இவ்வளவு பிடிவாதமாக அவள் தொடர்வது, அவ்வப்போது, அவனது ஈகோவை உரசும். அப்போதெல்லாம் இது போல அவன் சீறுவது சகஜம். மற்றபடி, சங்கர் ஒரு நல்ல கணவன்.
'எந்தவிதத்திலும், இது போன்ற சண்டைகளைத் தொடர விடக்கூடாது...' என்று நினைத்த இந்து, அலுவலகத்திற்கு நேரமானாலும் பரவாயில்லை என்று, அவனோடு சேர்ந்து நடந்தாள். கொஞ்சம் வியந்தாலும், அதை காட்டிக் கொள்ளாமலே, தன் காரை நோக்கி நடந்தான் சங்கர்.
''எனக்கு ஏற்கனவே லேட்; இதுல உன்னையெல்லாம் வழில ட்ராப் செய்ய முடியாது," அவளை நோக்கித் திரும்பாமல், நேரே பார்த்துக் கொண்டே சொன்னான்.
''நீங்க ஒண்ணும் என்னை,'டிராப்'செய்ய வேணாம்; எனக்கு இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு. அத முடிச்சுட்டு, ஆட்டோ பிடிச்சுப் போய்க்கறேன். ஆபீஸ் பஸ்ச விட்டாச்சு... ஆட்டோவுக்குதான் தண்டம் அழணும்ன்னு ஆனப்புறம், அஞ்சு பத்து நிமிஷத்துல என்ன ஆகிறப் போகுது? அதுக்கு பதிலாக, என் வீட்டுக்காரரு காரை கிளப்பி, ஒரு கையால ஸ்டியரிங்க் புடிச்சுட்டே, இன்னொரு கையால, எனக்கு டாடா சொல்ற அழகை தரிசனம் செய்தா... ஆபீசுக்கு லேட்டாப் போறோம்ன்ற டென்ஷன் கொஞ்சம் குறையும் இல்ல?"
''இந்த நக்கல் பேச்சுக்கெல்லாம் குறைச்சல் இல்ல; ஆனால், வீட்டுக்காரன் சொல்றத மட்டும் கேட்டுற மாட்டீங்க மகாராணி.''
ரிமோட்டில் காரைத் திறந்து, அதற்குள் தன்னை திணித்து கொண்ட சங்கர், காரை கிளப்பினான். தன் பக்க கண்ணாடியை இறக்கி, அவளைப் பார்த்து புன்னகைத்தான். இந்துவுக்கு, அந்தப் புன்னகை தந்த ஆசுவாசம், காலை முதல் ஏற்பட்டிருந்த டென்ஷனை நீக்கியது. அவளும் உற்சாகமாக டாடா காட்டி விடை கொடுத்தாள்.
அந்த மெல்லிய சந்தோஷத்துடனே, மீண்டும் தன் பிளாட்டுக்கு வந்து மிச்சமிருந்த வேலைகளை முடித்து, சோபாவில் சாய்ந்திருந்த மீனாட்சியம்மாளிடமும் சொல்லிக் கொண்டு அலுவலகத்திற்கு கிளம்பினாள் இந்து.
அலுவலகத்தில், தன் இருக்கையில் அமர்ந்தாள் இந்து. கணவனுக்கும் தனக்கும் நடந்த உரையாடலின் விளைவாக ஏற்பட்ட புன்னகை, அவள் உதட்டில் மீதமிருந்தது.
அதைப் பார்த்த தோழி பிரபா, ''என்ன இந்து, ஒரே புன்னகையாக இருக்கு... ஏதாவது விசேஷமா?'' என்றாள்.
''ஒரு விசேஷமில்ல; 'பிரேக்'ல இது பற்றி பேசுவோம்,'' என்று கூறி, அதே புன்னகையுடன் வேலையில் மூழ்கினாள் இந்து.
கேன்டீனில், ஒரு சவுகரியமான இடத்தில், காபி கோப்பைகளுடன் செட்டில் ஆனார்கள் இந்துவும், பிரபாவும்.
''இப்ப சொல்லுங்க மேடம். உங்க புன்னகையின் ரகசியத்தை,'' என்றாள் பிரபா.
''அடப் போப்பா, ரொம்பவும் கலாய்க்காத. காலைல கிளம்பறப்ப, என் கணவரோட ஒரு சின்ன சண்ட. தெரியாத்தனமா, 'எனக்கும் ஆபிசுக்கு லேட்டாவுது, பாப்பாவ கிளப்ப கொஞ்சம் உதவி பண்ணுங்க'ன்னு சொல்லிட்டேன். அவ்ளோதான்! 'நானா உன்ன வேலைக்கு போகச் சொல்றேன், உனக்கு திமிரு, அகம்பாவம்'ன்னு ஆரம்பிச்சாரு. வழக்கமா முன்னெல்லாம், நானும் இதுக்கெல்லாம் பதிலுக்கு பதில் சொல்லி, கால நேரத்துல பெரிய சண்டை, அழுகை, ரகளைன்னு நடக்கும். இன்னிக்கு நான் பாட்டுக்கு என் வேலைய பாத்துட்டு போனதுல, சண்டை சப்புன்னு முடிஞ்சிருச்சு. கிளம்பறப்ப, தலைவருக்கு நான் செண்ட் ஆப் கொடுத்ததுல சிரிப்பு வந்துருச்சு. இவ்ளோ ஈசியா சமாளிக்க வேண்டிய விஷயத்த இதுக்கு முன்னாடியெல்லாம் எப்படி காம்ப்ளிகேட் செய்துகிட்டிருந்தோம்ன்னு நினைச்சுப் பாத்ததுல சிரிப்பு வந்துருச்சு.''
''ஓ... காலையிலேயே ஊடல், சமாதானம் எல்லாம் நடந்துருச்சா... இது ரொமாண்டிக்கான விஷயமாச்சே!''
''உன்னைய திருத்தவே முடியாது.''
''இந்து, நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டியே?'' சிரிப்பிலிருந்து சட்டென சற்று சீரியசான முகபாவத்துக்கு மாறிய பிரபா, இந்துவை உற்றுப் பார்த்தபடி கேட்டாள்.
''என்னிக்கு உன்னை நான், தப்பா நினைச்சிருக்கேன். தாராளமா கேளு பிரபா.''
''இந்து, உன்னை இந்த மூணு வருஷமாத் தெரியும். ஆரம்பத்துல ரெண்டு வருஷம் வரைக்கும், உன்னை சரியான அழுமூஞ்சின்னே நினைச்சிருந்தேன். அப்படித்தான், 'கடுகடு'ன்னு ஆபீஸ் வருவ. அப்புறம் நாம பேசிப் பழக ஆரம்பிச்ச பின், அது உன் வீட்டு டென்ஷன்னு புரிஞ்சுது. அப்பல்லாம், நானும் உன்னோட சேர்ந்து, உன் மாமியாரையும், கணவரையும் திட்டியிருக்கேன். ஆனா, இப்பக் கேக்றேன்... உனக்கு பொருளாதாரத் தேவைன்னு பெருசா எதுவுமில்ல. உன் கணவரும், ஒரு எம்.என்.சி.,யில நல்ல பதவியில இருக்காரு. அது போக, பரம்பரைப் சொத்துகளும் இருக்குது. உன் அப்பா வீடும் வசதியானது. அப்படியிருக்கையில நீ ஏன் வேலை பாத்தே ஆகணும்ன்னு பிடிவாதம் பிடிக்றே?
''வீட்ட நல்லா பாத்துட்டு, சாருவோட நிறைய டைம் ஸ்பெண்ட் செய்து, நீயும் நிம்மதியா இருக்கலாம் இல்ல... சங்கர் சொல்றது போல உன்னோட, 'ஈகோ'வை கொஞ்சம் தள்ளி வச்சு,யோசிச்சுப் பார்த்து பதில் சொல்லு,'' என்றாள் பிரபா.
''இதையெல்லாம் நான், யோசிச்சிருக்க மாட்டேன்னா நினைக்கற?'' லேசான சிரிப்புடன் கேட்ட இந்துவை, வியந்து பார்த்தாள் பிரபா.
''சங்கர் இப்ப இந்த ஒரு வருஷமாத்தான், வேலைய விட்ருன்னு சொல்ல ஆரம்பிச்சுருக்கார். அதுவும், மாமா இறந்து, அத்தை எங்க கூட வந்து நிரந்தரமா இருக்க ஆரம்பிச்சபின், அவங்க ஏத்தி விட்டுத்தான் இப்படி பேசவே ஆரம்பிச்சுருக்கார். ஆனா, மூணு வருசத்துக்கு முன், பாப்பா பிறந்தப்பவே வேலைய விட்டுட்டு, குழந்தைய பாத்துக்கிட்டு வீட்டோட இருந்துரலாம்ன்னு முடிவு செஞ்சுருந்தேன்.
''போனமாசம் பிளஸ் 2 ரிசல்ட் வந்தப்ப, கலைன்னு என் சொந்தக்காரப் பொண்ணு ஒருத்தி, மாவட்டத்திலேயே முதலாவதாக வந்திருக்கிறதா சொல்லி, உனக்கு சுவீட் கொடுத்தேனே... ஞாபகம் இருக்கா,'' என்று கேட்டாள்.
'' ம்... ஞாபகம் இருக்கு. ஆனா, அதுக்கும், இதுக்கும் என்ன சம்பந்தம்?'' புரியாமல் கேட்டாள் பிரபா.
''அப்ப அந்தக் கலை, ஒன்பதாம் வகுப்பு எழுதிட்டு பத்தாம் வகுப்பு போக இருந்தா. நான் ஒரு நாள், அவகிட்ட போன்ல பேசிகிட்டிருந்தப்ப சொன்னேன்... 'கலை... அடுத்த வருஷம் நல்லா படி; பத்தாவது மார்க்க வச்சுத்தான் பிளஸ் ஒன்ல, என்ன குரூப்ன்னு முடிவு செய்ய முடியும். இனி வர்ற மூணு வருஷமுமே, உனக்கு ரொம்ப முக்கியம். அப்படி இப்படின்னு, 'அட்வைஸா' அள்ளி விட்டுகிட்டிருந்தேன். அந்தப் பக்கம், அவ பேச்சையே காணோம். என்னான்னு கேட்டா, 'போக்கா... அப்பா என்னை பேருக்கு ஒரு டிகிரியில சேர்த்துட்டு, படிப்பு முடிக்கறதுக்குள்ள கல்யாணம் செய்து கொடுத்துரணும்ன்னு, அம்மாட்ட சொல்லிட்டிருந்தார். உன்னையுந்தான் மாமா பணத்தக் கொட்டி படிக்க வச்சார். நீயும் விழுந்து விழுந்து படிச்சு, நல்ல மார்க்கும் வாங்கின. கடைசில கல்யாணம் ஆன ரெண்டாவது வருஷம் புள்ள பொறந்தவுடனே, வேலைய விட்டுட்டு வீட்டுலதானே இருக்கப் போறே... அதைத்தான் அப்பா, அம்மாட்ட சொல்லிட்டிருந்தார். 'எங்கக்காவும், அத்தானும் இந்த ரெண்டு வருஷ கூத்துக்கு, இந்துவ படிக்க வச்சு, வீண் செலவு செய்தது போல, நானும் செய்துகிட்டிருக்க மாட்டேன். எப்படியும் வீட்டுல இருக்கப் போறவளுக்கு எதுக்கு படிப்பு'ன்னு சொல்லிக்கிட்டு இருந்தார். அப்பா சொல்றதும் நியாயந்தானேக்கா... அதனால, பாஸ் மார்க் வாங்கினா போதும்ன்னு முடிவு செய்திட்டேன்'ன்னு சொன்னா.
''இந்த பதிலக் கேட்டதும் எனக்கு ரொம்ப உறுத்தலாயிடுச்சு பிரபா. ஏற்கனவே எங்க சொந்தபந்தமெல்லாம் நல்ல வசதியானவங்கன்னாலும், படிப்பாளிங்கல்லாம் அதிகமில்ல. இப்ப நான் எடுக்கற முடிவு தான், எனக்கப்புறம் படிச்சுகிட்டிருக்கற நிறைய பொண்ணுங்களுக்கு ரோல் மாடலா இருக்கும்ன்னு உறைச்சது.
''அதனால தான் வேலைக்கு போயே ஆகணும்ன்னு முடிவு செஞ்சேன். நான் வேலைக்கு வரது பணத்துக்காகன்னு, என் அத்தை சொல்றாங்க. என் அகம்பாவம், ஈகோன்னு சங்கர் நினைக்கறார். இப்ப நீயும் அதேதான் நினைக்கறே... ஆனா, என் மனசாட்சிக்குத் தெரியும், நான் வேலைல இருக்கணும்ன்னு போராடறது எனக்காக அல்ல; நாலு பேருக்கு நாம ஒரு தப்பான முன்னுதாரணமா ஆகிடக் கூடாதேங்ற ஒரு நோக்கத்துக்காகத் தான் இந்த ஓட்டம் ஓடிக்கிட்டுருக்கேன்.''
பேசிக் கொண்டே எழுந்து, காகித காபிக் கப்பை, குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, விட்ட வேலையைத் தொடரத் தயாரானாள் இந்து.
'எல்லா வசதியும் இருந்தும், இந்து வேலைக்கு வர்றதுல இவ்வளவு விஷயம் இருக்கா... இது புரியாமல் போச்சே... கூடிய விரைவில், இந்துவின் கணவருக்கும் இது புரியும்...' என்று, மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் பிரபா.

லட்சுமி பாலகிருஷ்ணன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balaji - bangalore  ( Posted via: Dinamalar Android App )
29-ஏப்-201415:04:30 IST Report Abuse
balaji excellent one congrats
Rate this:
Share this comment
Cancel
Balagiri - Chennai,இந்தியா
28-ஏப்-201400:29:26 IST Report Abuse
Balagiri மொக்கை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X