கையில் செய்தித்தாளுடன், ஹாலில் அமர்ந்திருந்த ரகுவிற்கு, சமையலறையில் பானு ஏதோ புலம்பியபடியே, சாமான்களை கழுவி, 'நங் நங்'கென்று, கவிழ்ப்பது எரிச்சலைத் தந்தது.
''பானு... இப்போ உன் பிரச்னை என்ன?''
பொறுமை இழந்த ரகு, குரலை சற்றே உயர்த்திக் கேட்டான்.
''பாருங்க அந்த சிவந்தி, இன்னைக்கு சொல்லாம கொள்ளாம வேலைக்கு லீவ் போட்டுட்டா. ஒழுங்கா வந்துக்கிட்டு, இருக்கும் போதே, நடுவுல என்ன கேடு வருமோ,'' என்றாள் எரிச்சலுடன்.
காலை, 6:00 மணிக்கே வந்துவிடும் சிவந்தி, வாசலை பெருக்கி, தண்ணீர் தெளித்து கோலம் போடுவாள். பின், சாமான் கழுவுவது, துணி துவைப்பது, வீடு பெருக்குவதுடன், காய் நறுக்கித் தருவாள். மீண்டும் மாலையில் வந்து, மிச்ச மீதி உணவை எடுத்துக் கொண்டு, இருக்கும் பாத்திரத்தை கழுவி வைத்துவிட்டு போய் விடுவாள்.
'பம்பரமாய் சுழலும் அந்த பெண்ணிற்கு, பாவம் இன்று என்னவாயிற்றோ...' என்று எண்ணியபடியே, பானுவிடம், ''ஏன் பானு வார்த்தைகளைக் கொட்டற, அவளும் மனுஷிதானே... உடம்பு சரியில்லையோ என்னவோ?''
''ஹ்ம்ம்கும்... சாமான் கழுவி, வீடு பெருக்கி, அப்பாவுக்கும், பொண்ணுக்கும் சமைச்சு ஆபீசுக்கும், ஸ்கூலுக்கும் அனுப்பறதுக்குள்ள உயிர் போய்டும். அப்புறம் உக்காந்து துணி துவைக்க, மதியம் ஆகிடும். கொஞ்சம் கண்ணு அசரலாம்ன்னு படுக்கறதுக்குள்ள உங்க பொண்ணு ஸ்கூல் முடிஞ்சு வந்துடுவா,'' என்று, அலுத்துக் கொண்டாள்.
''பலபேர் வீட்டில வேலைக்கு ஆளே வச்சுக்கறது இல்ல. அவங்க எல்லாம் நீ சொன்ன அத்தனை வேலைகளையும் தினமும் செய்யலையா... ஒரு நாளுக்கே, உனக்கு இத்தனை கோபம் வருது,'' என்றான் எரிச்சலுடன் ரகு.
''சும்மா பேசி பேசி, என் கோபத்த அதிகப்படுத்தாதீங்க. உங்களுக்கு என்ன... ஒரு கவலையும் இல்ல; நாட்டு நடப்பு தெரிஞ்சாப் போதும். பொழுதுக்கும், பேப்பரும் கையுமா இருப்பீங்க. இங்க எனக்கு தானே பிரச்னை.''
மேற்கொண்டு பேசினால், காலைப் பொழுது கண்டிப்பாக கெட்டு விடும் என்று உணர்ந்த ரகு, செய்தித்தாளில் கவனத்தை திருப்பினான்.
'நிர்மலா நிர்மலா...' என்று, யாரோ மகளை அழைக்கும் குரல் கேட்டு, பேப்பரை மடித்து, ரகு எழுவதற்குள், ''யாரோ கூப்பிடறாங்க இல்ல; எழுந்து போய் பாக்க மாட்டீங்களா... எல்லாத்துக்கும் நானே அல்லாடணும்,'' என்றபடியே வாசலுக்கு விரைந்தாள் பானு.
அங்கு அரசினர் பெண்கள் பள்ளி சீருடையுடன் நின்றிருந்த சிவந்தியின், தங்கையைப் பார்த்தவுடன், பானுவிற்கு கோபம், பன்மடங்காய் பெருகியது.
''எங்கடி உன் அக்கா... ஏன் இன்னைக்கு வேலைக்கு வரலை,''என்று, கோபமாக கேட்டாள்.
''அக்காக்கு காய்ச்சல்; இன்னைக்கு மட்டும் உங்களப் பாத்துக்க சொல்லிச்சு. நாளைக்கு வந்துடுமாம்.''
''சரியா போச்சு போ! நீ போய், 'மள மள'ன்னு சாமான்களை கழுவிட்டு, வீடு பெருக்கிட்டு போ. துணிய சிவந்தி வந்து, நாளைக்கு துவைக்கட்டும்,''என்றாள்.
ஒரு நிமிடம் தயங்கிய சிவந்தியின் தங்கை மீனா, ''அம்மா, எனக்கு ஸ்கூலுக்கு நேரமாச்சு. நேத்து நிர்மலா டியூஷனில், இந்த கணக்கு நோட்டை வச்சுட்டு வந்துட்டா; டீச்சர் கொடுத்து விட்டாங்க. அதை கொடுக்கத்தான் வந்தேன்,'' என்று கூறி, நோட்டை நீட்டினாள்.
நிர்மலாவும், மீனாவும் வெவ்வேறு பள்ளிகளில் படித்தாலும், ஒரே ஆசிரியையிடம் டியூஷன் படித்தனர். தன் மகள் டியூஷன் போகும் அதே டீச்சரிடம், தன் வீட்டு வேலைக்கார பெண்ணின் தங்கையும் படிக்க போவது தெரிந்தவுடன், பானுவினால் தாங்க முடியவில்லை.
''நோட்டை அந்த டேபிளில் வச்சுட்டு, நீ உள்ளே போய் வேலைய பாரு.''
மீனா சொன்னது எதையுமே காதில் வாங்காதது போல் பானு பேசியது, ரகுவிற்கு எரிச்சலாக வந்தது.
''பானு... அவதான் சொல்றா இல்ல, ஸ்கூலுக்கு நேரமாச்சுன்னு,'' என்று சொன்ன ரகுவை முறைத்த பானு, மீனாவிடம் திரும்பினாள்.
''என்ன... சொல்ல சொல்ல பெரிய இவளாட்டம் நிக்கற? போய் வேலையை பாருடினா, ஸ்கூலுக்கு நேரமாச்சாம். உன் அம்மா வீட்டுவேலை செய்யறா; உன் அக்காவும் வீட்டு வேலை செய்யறா. நீ மட்டும் படிச்சு கலெக்டராகப் போறியா?''
நக்கலாய் பேசிய பானுவை, அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்தாள் மீனா.
''ஏன் நான் கலெக்டர் ஆக கூடாதா... முயற்சி இருந்தா எதுவுமே சாத்தியம் தான். அன்னைக்கு ஒரு நாளைக்கு, எங்க அம்மாவுக்கு உடம்பு முடியலன்னு உங்க வீட்டுக்கு, வேலைக்கு வந்தா எங்க அக்கா. அம்மாவை விட அவ வேகமாவும், சுத்தமாவும் வேலை செய்யறத பாத்த நீங்க, சிவந்தி வேலைக்கு வந்தா, நூறு ரூபாய் சேத்து தரேன்னு எங்க அம்மாகிட்ட சொல்ல, படிச்சது போதும்ன்னு பத்தாவது படிச்சுக்கிட்டு இருந்த அக்காவ, உங்க வீட்டுக்கு வேலைக்கு அனுப்பிடுச்சு எங்க அம்மா. படிக்க முடியாம போய்டுச்சேன்னு எத்தன நாள், அவ அழுது இருக்கா தெரியுமா... தன்னால படிக்க முடியலைனாலும், நானாவது நல்லா படிக்கணும்ன்னு தான், என்னை கஷ்டப்பட்டு, எங்க அக்கா படிக்க வைக்குது. உங்க வீட்ட தவிர, இன்னும் ரெண்டு வீட்டில் வேலை செய்து தான், என்னை டியூஷன் எல்லாம் படிக்க வைக்குது.
''நான் படிச்சு, நல்ல வேலைக்கு போகணும்கறது தான் எங்க அக்காவோட கனவு. அதை நான் உண்மையா ஆக்குவேன். நாங்களும் வாழ்க்கையில் பெரிய நிலைக்கு போவோம். வீட்டு வேலை செய்றவங்க வீட்டு பொண்ணுங்க எல்லாம், வேலைக்காரியா மட்டும் இருக்கணும்ன்னு நினைக்காதீங்க. உங்க பொண்ணுக்கும் என் வயசு தான். அவ கூட இன்னைக்கு உங்களுக்கு சாமான துலக்கி உதவலாம்,'' என்று கூறியவள், அதற்கு மேல் அங்கே நிற்காமல், ''நான் வர்றேன்,''என்று கூறி, விரைந்து சென்று விட்டாள்.
தங்கள் வாழ்க்கை தரத்தை, கல்வியின் மூலம் உயர்த்த துடிக்கும் இந்த பெண்ணின் படிப்புக்கு, கண்டிப்பாக ஏதாவது உதவி செய்ய வேண்டும். அத்துடன், சிவந்தியிடம் திறந்தவெளி பல்கலைக்கழகம் பற்றி எடுத்து சொல்லி, மேற்கொண்டு படிக்க சொல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்ட ரகு, நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வையுடன் செல்லும் மீனாவை, பெருமையாய் பார்த்தான்.
முதன்முறையாக வாயடைத்து நின்றிருந்தாள் பானு.
நித்யா பாலாஜி