ஏற்றினாளே என் நெஞ்சில்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2014
00:00

மழைக்காலத்தில் கடற்கரையின் அழகு கூடியிருப்பதாக நினைத்தான் ராம். இதற்கு காரணம், நண்பர்களின் அருகாமை என்று, உடனே தோன்றியது.
நண்பர்கள் அத்தனை பேரும், பள்ளி, கல்லூரி, கிரிக்கெட் என்று வாழ்க்கையை, கூடவே இருந்து அழகாக்கியவர்கள். ஊட்டிக்கும், கோவாவுக்கும் பிரத்யேக எழில் சேர்த்தவர்கள். ஒரகடம் ப்ளாண்ட்டில், அவன் இன்ஜினியராக இருக்கிற, கார் கம்பெனியின் பிரமாண்டம் பார்த்து, வியந்து அவன் முன்னேற்றத்திற்கு கை கொடுத்தவர்கள்.
''ராம்... 'ஒரு முக்கியமான விஷயம் இருக்கு. மீட் செய்யணும்'ன்னு கூப்பிட்டயே... என்னடா விஷயம்?''என்று, ஆரம்பித்தான் ஒரு நண்பன்.
''கல்யாண மேட்டரா நண்பா?'' இன்னொருவன் கேட்டான்.
உடனே, ராம் முகம், ஒரு கணம் வெட்கம் பூசி, பின், இயல்புக்கு வந்தது.
''மை காட்! ராம்... இதென்ன உன் கன்னம், வயசுப் பொண்ணுக மாதிரி, சிவந்து போகுது? யார்டா அது?''
''அவ பேரு யாமினி; நேத்திக்குதான், பொண்ணு பாத்துட்டு வந்தோம். ரொம்ப சடனா ஏற்பாடு செய்ததால உங்க யாருக்கும் சொல்ல முடியலே,'' என்றான் ராம்.
'வாவ்...' என்று, கோரசாக அலறினர்.
''பாத்தியா, எங்களுக்கு கடைசில சொல்லுற... சரி போகட்டும் மன்னிச்சு விட்டிர்றோம்; யாமினிய பத்தி சொல்லு...''
ராம் கண்களுக்குள், யாமினி தோன்றினாள். அவன் மனம் உற்சாகத்துடன் அவளை நினைத்துப் பார்த்தது.
'பட்டுப் புடவை, அவள் உடலை அவ்வளவு நளினமாகப் பற்றியிருந்தது. மிகச் சிறிய, பொட்டு புருவங்களையும், கண்களையும் பேரழகாகப் பிரதிபலித்தது. கழுத்தை ஒட்டிய ஆண்டிக் ரக சோக்கர், அவள் புன்னகையை ஏந்துகிற சந்தனக் கிண்ணம் போல தகதகத்தது.
பொண்ணு பார்த்து விட்டு வீடு திரும்பும் போது, அம்மா, 'பொண்ணு, ஆளு மட்டும், அழகு இல்ல; மனசும் அழகுதான். லீவு நாள்ல, கண் தெரியாத குழந்தைகளோட பள்ளிக் கூடத்துக்குப் போய், பாடம் படிச்சுக் காட்டுவாளாம்; அவங்களுக்காக பரீட்சை எழுதுவாளாம். ஊரை சுத்தாம, இப்படி பெரிய காரியம் செய்யுது பொண்ணு...' என்றாள்.
'ஆமாம்... ஆபீசுக்கும் போய்ட்டு கிடைக்கிற நேரத்துல, இப்படி சமூக சேவை செய்யறதுக்கு, நெஜமாவே பெரிய மனசுதான் வேணும்...' என்று அப்பா கூறிய போது, அக்கா குறுக்கிட்டு சொன்னாள்...
'அவங்களுக்கும், நம்ம ராமை பிடிச்சுட்ட மாதிரிதான் தெரியுது. ராஜா மாதிரி, சிரிச்ச முகமா இருக்கிற நம்ம ராமை பிடிக்காம போகுமா என்ன...' என்றாள்.
ராம், நண்பர்களிடம் என்ன சொன்னான் என்பது தெரியவேயில்லை. யாமினியின் மயக்கத்திலேயே வீடு வந்து சேர்ந்தான். அவனை ஏதோ பல்லக்கில் தூக்கி வந்தது போலிருந்தது.
வீடு வழக்கமானதாக இல்லை. அம்மா சிரித்துக் கொண்டே வந்து கதவைத் திறக்கவில்லை. அப்பா, 'டிவி'யுடன் கூடவே பாடும் சத்தம் கேட்கவில்லை. கைக் குழந்தையுடன், 'கண்ணே கனியமுதே' என்று, எப்போதும் கொஞ்சிக் கொண்டிருக்கும் அக்காவின் உற்சாகத்தைக் காணவில்லை.
''அம்மா, நான் நண்பர்களோட சாப்பிட்டுட்டேன்; நீங்கள்லாம் சாப்பிட்டாச்சா?'' என்று கேட்டுக் கொண்டே அம்மாவின் அருகில் போனான் ராம்.
''ம் ஆச்சுப்பா.''
''என்னம்மா... ஏதாவது பிரச்னையா? ஏன் உங்க முகம் ஒரு மாதிரியா இருக்கு?''
''ஒண்ணுமில்லப்பா.''
''இல்ல ஏதோ விஷயம் இருக்கு; இல்லன்னா உங்க முகம் இப்படி வாடி இருக்காது. என்ன விஷயம்ன்னு சொல்லு,'' என்றான்.
''தலவலிப்பா... அப்பாக்கிட்ட கேட்டுக்க,'' என்றாள்.
''அதெல்லாம் இல்ல; என்ன விஷயம்ன்னு நீயே சொல்லு. பொண்ணு வீட்டுல ஏதாவது சொன்னாங்களா?''
சடாரென்று நிமிர்ந்து பார்த்தாள் அம்மா. ஒரு துளி கண்ணீர், உடனே எட்டிப் பார்த்தது. ''எவ்வளவு புத்தி கூர்மை என் பையனுக்கு! கொடுத்து வெக்கலியே, அந்த பொண்ணுக்கு...'' என்ற போது, வார்த்தைகள் கரகரத்திருந்தன.
''தெளிவா சொல்லும்மா.''
''ஒரு வருஷம் கல்யாணம் வேணாம்ன்னு, அந்த பொண்ணு கண்டிஷனா சொல்லிட்டாளாம். அப்பா ரொம்ப, 'அப்செட்' ஆய்ட்டார்; ஏன், எல்லாரும்தான். எப்படி இருக்கு பார் நிலைமை... பிள்ளையை பெத்தவங்க கையை கட்டிகிட்டு நின்னு, அவங்க சொல்றதை கேட்டுக்க வேண்டியிருக்கு,'' என்றாள் கண்கலங்கியபடி அம்மா.
அவன் திகைத்தான். 'ஏன் இது முதல்ல தெரியாதா... ரெண்டு குடும்பமும் பேசி, இனிப்பும், கனியும் பரிமாறி, சிரிக்க சிரிக்க எழுந்து வந்தபோது, தெரியவில்லையா அவளுக்கு... இல்லை, அவனைப் பிடிக்காததனால், காரணம் சொல்கிறாளா... இல்லை காதல் பிரச்னையாக இருக்குமோ! எதுவாகவும் இருந்து விட்டுப் போகட்டும். என்னை எதற்காக வரவழைத்து, பெண் பார்க்க வைத்து, கனவுகளை மிதக்க விட்டு, பின் மூக்கறுக்க வேண்டும்... 'எங்க ராம் படிப்புல சூரப்புலி... கிரிக்கெட், சினிமா, ஷேர்ஸ்ன்னு எல்லாத்திலயும், அவனுக்கு அபார ஆர்வம் உண்டு. இப்ப பிரமோஷன் வேறு வந்திருக்கு... எல்லாம் நல்லபடியா நடந்தா உங்க பொண்ணு, பூனாவுக்கு போய், ராணி மாதிரி குடித்தனம் செய்ய வேண்டியதுதான்...' என்று, அக்கா சொன்னபோது, அவர்கள் அத்தனை பேர் முகங்களிலும் விளக்குகள் எரிந்தனவே. அவளுக்கு மட்டும் ஏன் பிடிக்கவில்லை...' என்று நினைத்த ராமுவிற்கு கோபத்துடன் கலந்த வேதனை ஏற்பட்டது.
மறுநாள் காலையில், உணவின் பக்கமே திரும்பாமல், அலுவலகம் கிளம்பினான் ராமு. அம்மா சமையலறையில் இருந்து, அவனை கண்கலங்க பார்த்ததை, பார்க்காத மாதிரி, கிளம்பினான். அலுவலகம் வந்தவன், சரேலென்று, தன் காபினுக்குள் நுழைந்து, கதவை மூடிக் கொண்டான். நெஞ்சில் ஏதோ அடைத்ததைப் போல், உணர்ந்தான். நிராகரிப்பின் வலி, நெஞ்சு வலியை விட பயங்கரமானது என்று, புரிந்தது.
மணி, 10:30க்கு கதவு திறந்தபோது, ''காபி வேணாம் புஷ்பாம்மா,'' என்று, சொல்ல வாய் திறந்தவன், அப்படியே நின்றான். கதவை திறந்து உள்ளே வந்தவள் யாமினி!
''ராம் சார், ஒரு பத்து நிமிஷம் எனக்காக, ஒதுக்க முடியுமா?'' என்று கேட்டாள் யாமினி.
புத்தம் புதிய இசைக்கருவி ஒலித்தது போலிருந்தது அவள் குரல்.
''வா... வாங்க யாமினி; ப்ளீஸ் சிட் டவுன்," என்றான். உள்ளே மனது படபடத்தது. மென்மையாக உடலை இருத்தி, சோபாவுக்கு வலிக்காமல், அவள் உட்கார்ந்தது, ஒரு ஓவியம் அமர்ந்தது போல் அழகாக இருந்தது.
மெல்ல தலை உயர்த்தி, அவனைப் பார்த்தவள், ''என்மேல் உங்களுக்கு வருத்தம்; ஏன், கோபமாகக் கூட இருக்கலாம் இல்லையா ராம் சார்?''
''அப்படி ஒண்ணும் இல்ல.''
''பொண்ணு பாக்க வந்த அன்னிக்கு, நம்ம ரெண்டு பேருக்கு மட்டுமில்ல, நம்ம ரெண்டு குடும்பத்துக்குமே எல்லாமே அழகா போச்சு. உங்களைப்பத்தி சரியா தெரியாது. ஆனா, என் மனசுல உங்களுக்கு, உடனே ஒரு இடம் கிடைச்சுடுச்சு. ஆனா, பூனால போஸ்டிங், பெரிய பதவி, உங்க பொண்ணு, ராணி மாதிரி குடித்தனம் செய்ய வேண்டியதுதான்னு உங்க அக்கா சொன்னதும், என் நெஞ்சே அடைச்சுப் போச்சு ராம் சார்,'' என்றாள்.
''ஏன் யாமினி?'' என்றான் புரியாமல்.
ஒரு கணம் அமைதியாக இருந்து, பின், தொடர்ந்தாள்...
''நானும் இன்ஜினியரிங் பட்டாதாரின்னு உங்களுக்கு தெரியும். இப்பத்தான் வளர்ந்து வர்ற கம்பெனில வேலைக்கு சேர்ந்திருக்கேன். நான் இருக்கிற டீமும் சரி, என்னோட பிராஜெக்டும் சரி, கம்பெனிக்கு ரொம்ப முக்கியமானது. எல்லாமே, ரொம்ப சரியான பாதையில போய்கிட்டிருக்கு. இந்த இடத்துக்கு வர்றதுக்காக, கம்பெனி எனக்காக பணம், நேரம், பயிற்சி, கான்டிராக்ட்ஸ்ன்னு நெறைய பாடுபட்டிருக்கு. இப்போ திடீர்ன்னு, எல்லாத்தையும் விட்டுட்டு பாதியில கிளம்பிப் போறது நியாயமில்ல. எந்த உழைப்பும், முயற்சியும் வீணாகப் போகக் கூடாது இல்லையா?''
''ஆமாம்,'' என்றான், தன்னை அறியாமல்.
''நான் இப்ப இருக்கிற இடத்துக்கு, இன்னொருத்தரை தயார் செய்றதுக்கு, குறைந்தது ஒரு வருஷமாவது தேவைப்படும். கம்பெனிக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உழைப்பை கொடுப்பதற்கும், எனக்கு கிடைச்ச அனுபவங்களை, அடுத்து வர்றவங்களுக்கு பகிர்ந்து கொடுப்பதற்கும், எல்லாத்துக்கும் மேல, என் மைண்ட்செட் மாறுவதற்கும் ஒரு வருஷம் ஆகும்,'' என்றவள், அவன் அமைதியாக இருப்பதைப் பார்த்து, ''கோபமா ராம் சார்,''என்றாள்.
''ஆமாம்.''
''சாரி சார்.''
''ஏன் தெரியுமா கோபம்?''
''தெரியல சார்.''
''சார் சார்ன்னு கூப்பிட்டு, அன்னியமாக்கறதுக்கு, இன்னும் அபிஷியலாவே பேசறதுக்கு,'' என்றான்.
வாய் விட்டு சிரித்தாள் யாமினி.
''யாமினி... என் நண்பன் சொல்வான்... 'கடவுளையும், வலியையும் உணரத்தான் முடியம்'ன்னு. இப்ப காதலையும், அதுல சேக்கணும்ன்னு தோணுது யாமினி.''
''யார் காதலை?'' என்றாள் மெல்ல சிவந்து.
''இதுல என்ன சந்தேகம்... நீ என்மேல வெச்சிருக்கிற காதல்.''
''ஓ...'' என்று மேலும் சிவந்து, அவள் சிரித்தபோது, அவன் பறவையாக வானத்தில் சிறகடித்து, கடல் மேல் மிதந்து கொண்டிருந்தான்.

உஷா நேயா

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shajan.m - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஜூன்-201412:08:11 IST Report Abuse
shajan.m உங்கள் கதை படித்தேன் ரசித்தேன் உண்மையாக சொல்லவேண்டும் என்றால் திருமணத்தை எதிர் நோக்கி இருக்கும் ஆண்களோ அல்லது பெண்களோ அவரவர் மனதில் நிறைய கனவுகள் இருக்கும் அதை பிரதிபலிப்பது போல் உங்கள் படைப்பு உள்ளது. அதில் கொஞ்சம் உரசல் மற்றும் காதல் சேர்த்து கவிதையாக கொடுத்த நடை அருமை. யதார்த்த நிகழ்வுகள் பாத்திரங்கள் நம் நண்பர்களையோ உறவினர்களையோ பிரதிபலிப்பது போல் உணர்தேன் நன்றி சகோதரி உங்கள் அடுத்த படைப்பும் யதார்த்தமாக அமைய என் வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X