அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2014
00:00

அன்புள்ள அம்மாவுக்கு,
என் வயது, 33; கணவர் வயது, 42. எனக்கு, 18 வயதில் திருமணம் நடந்தது. எங்கள் திருமணம் முடிந்து, 15 ஆண்டுகள் ஆகி விட்டன. 12 வயதில், ஒரு ஆண் குழந்தையும், ஐந்து வயதில், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். திருமணமான, 10 ஆண்டுகள் மிகவும் சந்தோஷமாக, எல்லாரும் பொறாமைப்படும்படி வாழ்ந்தோம். என் கணவர் மிகவும் நல்லவர்; எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர். டீ, காபி கூட, கடையில் குடிக்க மாட்டார். அப்படி ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெளியில் குடித்தால் கூட, வீட்டிற்கு வந்தவுடன் என்னிடம் சொல்லி விடுவார்.
எந்த சிறு விஷயத்தையும் என்னிடம் மறைத்ததில்லை. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில், (அதாவது, இரண்டாவது குழந்தை பிறந்த பின்) பிரச்னை ஆரம்பமானது. இப்போது எல்லாமே தலைகீழாக உள்ளது. அதற்கு நான் தான் காரணம். அவர் செக்சில் அதிக ஈடுபாடு உள்ளவர். இரவில் கொஞ்சம் கவர்ச்சியாக ஆடை அணியும்படி என்னை கட்டாயப்படுத்துவார். அதற்கு நான் சம்மதிக்காத காரணத்தால், எங்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை வரும். சில சமயங்களில் நான், 'கவர்ச்சியா இருக்கிறவளிடம் போக வேண்டியது தானே; என்னை ஏன் கட்டாயப் படுத்துகிறீர்கள்...' என்று, சண்டை போடுவேன். அதற்கு அவர், 'டீ, காபி கூட வீட்டில் தான் சாப்பிட வேண்டும் என்று நினைப்பவன் நான்; அப்படிப்பட்ட என்னை மிகவும் மோசமாக திட்டுகிறாய்...' என்று, சொல்வார்.
இந்த பிரச்னை கொஞ்சம், கொஞ்சமாக அதிகமாகி, இப்போது, நான்கு ஆண்டுகளாக என்னை தொடுவது இல்லை. முன்பெல்லாம், வாரத்துக்கு நான்கு நாட்கள் தாம்பத்தியத்தில் ஈடுபடுவோம். இப்போது, நான்கு ஆண்டுகள் ஆகியும் என்னை தொடவில்லை. முன்பெல்லாம் இரவு, 7:00 மணிக்கு, வீட்டிற்கு வந்தவுடன், இரண்டு குழந்தைகளிடமும் தூங்கும் வரை, கதை சொல்லி விளையாடுவார்.
இப்போது, குழந்தைகளை பார்த்தாலே எரிந்து விழுகிறார். இரண்டு ஆண்டுகளாக தினமும் குடித்து விட்டு, 10:00 மணிக்கு மேல் தான், வீட்டிற்கு வருகிறார். ஓட்டலில் சாப்பிட்டு விட்டு, வீட்டிற்கு வந்த உடன், தூங்கி விடுகிறார். குழந்தைகளிடம் பேசுவதே இல்லை; குழந்தைகள் இருவரும் என்னிடம், 'அப்பா ஏன் இப்படி இருக்கிறார்; நாங்கள் ஏதேனும் தப்பு செய்து விட்டோமா?' என்று, என்னை கேட்கின்றனர். அவர்களிடம் என் பிரச்னையை சொல்லி, புரிய வைக்க முடியாது. இதனால் அடிக்கடி, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வருகிறது.
மிகவும் நல்லவராகவும், குடும்ப பொறுப்புள்ளராகவும் இருந்த என் கணவரை, இந்த மோசமான நிலைக்கு தள்ளியதற்கு நான் தான் காரணம். இதை நினைக்கும் போது, என் மனம் வேதனைப்படுவதுடன், அவர் வேலை செய்யும் அலுவலகத்தில், வேறு யாரிடமாவது தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகமும் வருகிறது. அதற்கு காரணம், அவர் முன்பு சண்டை வரும் போது, 'கவர்ச்சியான பெண்ணோட தொடர்பு மட்டும் கிடைத்து விட்டால், உன்னை சாகும் வரை தொட மாட்டேன்...' என்று, அடிக்கடி கூறுவார். கடந்த மாதம் விவாகரத்து கேட்டு, வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதை படித்ததும், அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு அழுதேன். அதற்கு எந்த பதிலும் சொல்ல மறுத்து விட்டார். இந்த சங்கடமான நிலையில் தான், உங்களின் ஆலோசனை தேவை. நீங்கள் எனக்கு நல்ல முடிவை சொல்லவும்.
இப்படிக்கு,
உங்கள் அன்பு மகள்.


அன்புள்ள மகளுக்கு
உன் கணவர் அதிகம் சினிமா பார்ப்பார் என, நினைக்கிறேன். சினிமாக்களில் வரும் கவர்ச்சி நடிகைகளை போல, தன் மனைவியும் இரவில் தோற்றமளிக்க வேண்டும் என, எண்ணியிருக்கிறார். பத்து ஆண்டு தாம்பத்தியத்தில், இரு குழந்தைகளை பெற்ற பின், உன் இளமை தளர்ந்திருக்கக் கூடும். அதை சரிகட்ட உன் கணவன், உன்னை கவர்ச்சியாய் உடை உடுத்த சொல்லியிருப்பார். உன் கணவன் பணிபுரியும் அலுவலகத்தில் செக்சியாய் ஆடை உடுத்தும் பெண்மணி யாராவது இருந்திருப்பாள். அவளை மனதிலிருந்து அகற்றுவதற்காக, உன்னை அவ்வாறு ஆடை அணிய சொல்லியிருக்கலாம். பதினைந்து ஆண்டு தாம்பத்யம் செய்த, எந்தக் குடும்பப் பெண்ணும், எளிமையாகத் தான் இருப்பாள். ஆபாசமாய் ஆடை அணியச் சொல்லும் கணவனை எதிர்த்து வாதாடவே செய்வாள்.
வாரத்திற்கு நான்கு நாட்கள், உன்னுடன் தாம்பத்யம் வைத்துக் கொள்ளும் கணவர், உன் உதாசீன பேச்சால், வெந்து, நொந்து போயிருக்கிறார். தன் ஆசைகளுக்கு வடிகால் அமைத்து தராத மனைவியை பழி வாங்க முடிவு செய்திருக்கிறார். அந்த பழி வாங்கலின் ஒரு பகுதி தான் உன்னை, நான்கு ஆண்டுகளாய் தொடாதது. அஸ்தமனத்தில் கூடு அடையும் பறவையாய் இருந்த உன் கணவர், ஆந்தை போல், இரவில் சுற்ற ஆரம்பித்திருக்கிறார்.
பழி வெறி மண்டிப்போய், குடிப்பழக்கம் ஆரம்பித்திருக்கிறது. அவரின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு அலுவலகத்திலேயோ, நண்பர்கள் மூலமோ அறிமுகமான பெண்ணிடமோ, உன் கணவனுக்கு தகாத உறவு துளிர்த்தும் இருக்கலாம். ஆசை நாயகி உன்னை கத்தரித்து விடச்சொல்லி, உன் கணவனுக்கு தூபம் போட்டு இருப்பாள். அவளை திருப்திப்படுத்த, உனக்கு விவாகரத்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.
யானை தன் தலையில் தானே மண்ணை வாரி கொட்டிக் கொண்டது போல, வேண்டாத வார்த்தைகளை கணவனின் மீது வீசி, 15 ஆண்டு திருமண வாழ்க்கையை, நீயே சீர் குலைத்துள்ளாய்.
இனி, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
உன் கணவரிடம் இப்படிப் பேசு...
'பனிரெண்டு வயது மகன் இருக்கும் வீட்டில், கவர்ச்சியாய் ஆடை அணிந்து உலாத்துவது, ஒரு தாய்க்கு லஜ்ஜையாக இருக்காதா? குழந்தைகளின் எதிர்காலத்துக்காக காமம் சார்ந்த அதீத கற்பனைகளை, நாம் சுருக்கிக் கொள்ள வேண்டும் என, நான் நினைத்தது தவறா? இந்த விஷயங்களை எல்லாம் நாசூக்காய் சொல்லி, உங்களுக்கு விளக்காமல், நான் சண்டை போட்டது தவறு தான்.
'இத்தனையும் மீறி நான் கவர்ச்சி ஆடை அணிவது தான், உங்களுக்கு முக்கியம் என்றால், அதையும் உங்களுக்காக அணிந்து தரிசனம் தருகிறேன். 15 ஆண்டுகள் உங்களையே நினைத்து, உங்களுக்காகவே வாழும் என் மீது, துளியும் காதல் இல்லையா... நாம் விவாகரத்து செய்து கொண்டால், நம் இரு குழந்தைகளின் எதிர்காலம் பாழாகுமே என்று நினைத்து பார்த்தீர்களா...' என்று மென்மையாக கேட்டு, உன் தரப்பு நியாயங்களை, பொறுமையாக, உன் கணவர் நல்ல மூடில் இருக்கும் போது விளக்கு.
உன் கணவரின் அலுவலகத்தில், சக்களத்தி யாராவது வேலை பார்க்கிறாளா என, வேவு பார். அப்படி, யாராவது இருந்தால், இரு குடும்பத்து பெரியவர்களிடம் கூறி, அவர்களை விட்டு, அவளிடம் பேச சொல்லி, தொடர்பை துண்டிக்கச் செய்.
தற்கொலை எண்ணத்தை தவிர்... உன் கணவனை, உன் வழிக்கு கொண்டு வர என்னென்ன உபாயங்கள் இருக்கின்றனவோ, அத்தனையும் கையாளு. கணவனிடம் முழு சரணாகதி அடையாமல், மிடுக்காய் நடந்து, கணவனை மீட்டெடு. கணவனின் விவாகரத்து நோட்டீசுக்கு, சேர்ந்து வாழவே விரும்புவதாக பதில் கொடு; கவலைப்படாதே.
என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (21)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kuttisevaru - Chennai,இந்தியா
20-ஜூன்-201405:34:50 IST Report Abuse
kuttisevaru இந்த தினமலரை படிக்கிறப்ப ஒரே மண்ட காய்ச்சலா இருக்கு...lol ....ஒரு பக்கம் என் கணவன் என்ன கண்டுக்குறதே இல்லை ...அதனால எனக்கு வேற ஒருத்தரோட பழக்கம் ஆயிடிச்சி ..இப்ப என்ன பண்றதுன்னு ஒரு வாரம் செய்தி வருது....அடுத்த வாரம் என் கணவர் என்ன ரொம்ப தொல்லை பண்றார் ...அதனால நான் அவர கிட்ட சேர்கிறது இல்லை ...இப்ப அவருக்கு வேற தொடர்பு இருக்குமோனு பயமா இருக்குனு செய்தி வருது.....இப்படி இருந்தா பாவம் ஆண்கள் என்ன தான் பண்றது ?????..என்ன கொடுமை????...lol ..... இதுல சகுந்தலா அம்மா வேற ...ஒரே பிரச்சனைக்கு வாரா வாரம் வேற வேற பதில் தந்து, கேள்வி கேக்குறவங்க படிக்கிறவங்க எல்லாருக்கும் மண்டை காய்ச்சல் வர வச்சிடுறாங்க....lol ...முதல்ல சகுந்தலா அம்மாக்கு தான் கவுன்சிலிங் குடுக்கணும் ....lol
Rate this:
Share this comment
Cancel
meenavan - New Jersey,யூ.எஸ்.ஏ
19-ஜூன்-201407:40:21 IST Report Abuse
meenavan நட்புகளின் நல்வார்த்தைகளுக்கு நன்றியுடன் மீனவன்…. …….உண்மைதான் மஞ்சுராம்.இதற்கு தொடர்பதிவாக இன்னுமொரு கருத்து பதிய தயார் செய்து கொண்டிருந்தபோதுதான் உங்களது பதிவை வாசித்தேன்.ஈகோ ஆட்சி செய்து கொண்டிருந்தது என்பது உண்மைதான். சக வாசக நண்பர்களே ….இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பார்ப்போம். ஈகோ இரண்டு பேரிடமும் ஆட்சி செய்தது என்பதும் உண்மைதான்………...இந்தப் பெண் தன் கணவனுக்கு தாம்பத்ய உறவை ஒருபோதும் மறுக்கவில்லை.தனக்கு விருப்பமில்லாத வகையில் உடையணிய மறுத்தார்……..இந்தப் பெண் நினைத்திருக்கலாம் சில நாட்களில் கோபம் குறைந்து கணவராகவே வருவார் என்று.இவருக்கு தன் உறவு தேவை என்று. ஆனால் இவர் ஆழமாக யோசிக்காமலும், கணவர் அப்படி செய்துவிடமாட்டார் என்ற நம்பிக்கையிலும் சொல்லிய சில தவறான வார்த்தைகளும் செயல்களும் கணவரை கொஞ்சம் அதிகமாகவே பிடிவாதத்தில் தள்ளிவிட்டன.தவறு இருவர் மேலும் இருக்கிறது.வார்த்தைப் பிரயோகங்கள் இருபக்கமும் தவறி இருக்கின்றன.அதீத அன்னியோன்யம்,அதீத பாசம் இது அதீத ஈகோவில் கொண்டு விட்டுவிட்டது இருவரையும். இந்த நான்கு வருட இடைவெளியின் தொடக்க காலத்திலேயே ஒருமுறை இந்தப் பெண் அவரை அணுகியிருந்தாலோ இல்லை இவரது கணவர் ஒருமுறை இவரை அணுகியிருந்தாலோ பிரச்னைகள் எப்போதோ தீர்ந்திருக்கும்.ஏனென்றால் இருவரிடம் மற்றவர் அணுகுவார் என்ற மிதமிஞ்சிய எதிர்பார்ப்பும் அணுகவில்லை என்றதால் ஏற்பட்ட மிதமிஞ்சிய ஏமாற்றமும் பிடிவாதத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.என்னுடைய அம்மாவிடம் அடிவாங்கியதால் கோபித்துக் கொண்டு சாப்பிடாமல் இருந்த நாட்கள் உண்டு. அம்மா “வா வந்து சாப்பிட்டு அப்புறமா போய் கோபமா இரு” என்று சொல்வார்.”எனக்கு சாப்பாடு வேண்டாம்” இது நான்.(பசி உயிர் போய்க்கொண்டிருக்கும்)மனம் இன்னும் ஒருமுறை அம்மா சொல்லமாட்டாரா என்று துடிக்கும்.அம்மா அப்படி சொல்லாமல் இருந்ததில்லை.ஆனால் சொல்லவில்லை என்றால் சாப்பிடாமல் வயிறைக்காயப்போடும் பிடிவாதம் நம் எல்லோரிடமும் இருந்ததுதானே…..இந்தப் பெண் விட்டுக்கொடுத்திருந்தால் கணவர்,தனக்காக தன் மனைவி விட்டுக்கொடுத்தார் என்று மகிழ்ந்திருப்பார்.கணவர் இறங்கி வந்திருந்தால்,தன்னைப் பிரிந்து கணவனால் இருக்கமுடியாது என்று இந்தப் பெண் நெகிழ்ந்து அவரது வேண்டுகோளுக்கு இணங்கியிருப்பார். உறவு பலத்திருக்கும்……..உன்னுடனான தாம்பத்ய உறவில்லாமல் என்னால் வாழமுடியும் என்று நிரூபித்து விவாகரத்து என்ற ஆயுதத்தால் மனைவியை தன் வழிக்கு கொண்டுவர முயலும் கணவன், கணவன் குடிக்கத் தொடங்கியபோதும் விட்டுக்கொடுக்காத மனைவி என்று குறைகளை அடுக்கலாம்….இருவர் மேலும் பக்கம் பக்கமாக….ஆனால் எனது வலி ஒரு அழகான குடும்பம் தேவையற்ற சிறு சச்சரவால் ஈகோவால் சிதறுபட்டு நிற்கிறதே என்பதைத்தான்..………..ஆலோசனைகள் என்று கருத்துகளைப் பகிரும்போது, குறைகள் காண்பதும்,உன்னால்தான் இது என்றும் விரல் நீட்டுவதும் எளிது. ஆனால்,ஒரு குடும்பத்தின் பிரச்னையை ஒரு மூன்றாம் மனிதனாய் அலசும்போது,தவறுகளை சுட்டிப் பழிப்பதைவிட தவறுகளை உணரச் செய்வதும்,உணர்ந்த மனங்களை உயரச்செய்வதும்தான் அவசியம் என்று நான் நினைக்கிறேன்.குடும்பம் என்பது சரி தவறு என்பதிலில்லை..கணக்குப் பார்க்காமல் விட்டுக்கொடுத்தலிலும் புரிதலும் ஏற்பதிலும்தான்...…....நட்புடன் மீனவன்
Rate this:
Share this comment
Cancel
HoustonRaja - Houston,யூ.எஸ்.ஏ
19-ஜூன்-201400:43:47 IST Report Abuse
HoustonRaja அனைவருக்கும் எனது வணக்கங்கள். வழிப்போக்கன் புட்டு-புட்டு வைத்ததையும், மீனவன் அவர்கள் தனக்கே உரித்தான அழகு-தமிழில் நயமாக சொன்னதையும் வரவேற்கிறேன். சகுந்தலா மற்றும் காயத்ரி அவர்கள், பிரச்சனையின் சாரத்தை இந்த வாரம் தவறவிட்டுவிட்டார்கள் என்றே தோன்றுகிறது. இக்கடிதத்தில் பொதிந்துள்ள ஆழமான பிரச்சனை "உடல் நெருக்கம்" (Physical Intimacy) சார்ந்ததல்ல என்பதே எனது எண்ணம். அதனை பலரும் இங்கே அறிந்து எழுதியுள்ளீர்கள். It seems, Sex is just her alibi in this marital failure. செக்ஸ்-ல் பிணக்கம் என்பது, ஊருக்கு கூறும் ஏற்கும்படியான சாக்கு. அவ்வளவே. இந்தப்பெண், தன் கணவனைத் தன் விருப்பம்போல மாற்றி தன் "முழு" கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று ஆழமாக விழைவதே இங்கே சிக்கல். அதன் தாக்கமே இந்த உறவில் இப்போது விளைந்துவிட்ட தவிர்க்கமுடியாத பிளவு. திருமணமான புதிதில், தான் மாற்றப்படுவதை ஓரளவிற்கு (தன் ஆசை மனைவிக்காக) விரும்பியேற்ற கணவன், 10 ஆண்டுகளுகளில் தான் ஒரு கைபொம்மையாக மாறிவிட்டதே தனது மன-அழுத்தத்திற்கு காரணம் என்று விழித்து எழுந்து, தனது இன்னல்களை இப்பெண்ணிடம் கூறியிருப்பான். அப்போது அவள், (இங்கே அவளே நேராகவும் மறைமுகமாகவும் எழுதியிருப்பதைப்போல) எடுத்தெறிந்து பேசியதாலோ, வஞ்சித்ததாலோ (உணவு பரிமாறுதல், குழந்தைகளை கட்டுப்படுத்துதல்) அல்லது "கொஞ்ச நாட்கள் கத்திவிட்டு அடங்கி விடுவார்" என்று புறக்கணித்ததாலேயோ விவாகரத்தில் முடிந்துள்ளது. இனி செய்ய வேண்டியது - இப்பெண், இந்த உறவில் தனது எதிர்பார்ப்புகள், அவசியங்கள், தேவைகள் பற்றிய சுயபரிசோதனை செய்யவேண்டும். அதன் பின், பொறுமையாக கணவரது கடந்த கால வலிகளை தான் "இப்போது" எப்படியெல்லாம் மாற்றி யோசித்து புரிந்துள்ளார் என்று எடுத்துக்கூறியும், தனது ஆழ்ந்த வருத்தங்களை எடுத்துரைத்தும், இனி தான் எப்படி "அவருக்காக" மாறியிருப்பார் என்பதை நம்பிக்கையுடனும் திட்டங்களுடனும் "தெளிவாக-பொறுமையாக-உறுதியாக-கனிவாக" மீண்டும்-மீண்டும் எடுத்து விளக்க வேண்டும். அப்படி இப்பெண்ணால் செய்ய முடிந்தால், இந்தத் திருமணம் (அந்தக் கணவனின் மனமுறிவைப் பொறுத்து) பிழைக்கும் வாய்ப்பு "ஓரளவிற்கு" உள்ளது. நன்றி. [ஒரு அறிவிப்பு - இந்த குறிப்பை படிக்கும் "இராமன்" இணையத்தில் எங்கிருந்தாலும் உடனடியாக இந்தசபைக்கு வரவும்]
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X