கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2014
00:00

கேள்வி: நான் வேர்ட் 2010க்கு மாறிவிட்டேன். பழைய ஆபீஸ் தொகுப்பில் தயாரிக்கப்பட்ட வேர்ட் டாகுமெண்ட்களை, இதில் படிக்க முடிகிறது. ஆனால், அவை வேர்ட் 2010க்கான பார்மட்டில் பைலாக மாறவில்லை. இதனை எப்படி ஏற்படுத்துவது? மொத்தமாக அனைத்து பைல்களையும், பேட்ச் பேட்சாக மாற்ற முடியுமா?
-என். சுகவனம், திண்டுக்கல்.
பதில்
: வேர்ட் 2010, பழைய டாகுமெண்ட்களை Compatibility Mode என்னும் வகையில் திறந்து காட்டும். நீங்கள் இதன் பார்மட்டினை மாற்ற வேண்டிய அவசியமில்லை. ஆனால், இதனைத் திருத்தி, புதியதாகப் பதிய வேண்டும் எனில், குறிப்பிட்ட டாகுமெண்ட்டினைத் திறக்கவும். பின், மெனுவில் "save” தேர்ந்தெடுத்து, பின் அதில் "save as” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Word Document என்பதனைத் தேர்ந்தெடுத்து சேவ் செய்தால், டாகுமெண்ட் புதிய தொகுப்பிற்கு ஏற்ற வகையில் சேவ் செய்யப்படும். ஆனால், பைல்களை மொத்தமாக புதிய பார்மட்டில் அமைக்க எந்த வசதியும் இல்லை.

கேள்வி: பேஸ்புக்கில், என்னை நண்பன் பட்டியலில் இருந்து நீக்கிய என் நண்பனை, நான் எப்படி என் நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்க முடியும்?
-எஸ். மாதவன், கோவை.
பதில்:
பயங்கரமான கோபத்தில் இருப்பது உங்கள் நீண்ட கடிதத்திலிருந்து தெரிகிறது. நம்மை நண்பன் இல்லை என்று சொன்னவருடன் ஏன் நாம் நண்பனாக இருக்க வேண்டும்? என்ற கேள்வி சரிதான். கவலையே பட வேண்டாம். உங்கள் நண்பர் உங்களைத் தன் நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கியவுடனேயே, உங்கள் நண்பர்கள் பட்டியலில் இருந்து அவர் பெயரும் தானாகவே நீக்கப்பட்டிருக்கும். உங்களுடைய பக்கத்தில் இருக்கும் தகவல்களில் (your profile), எந்த அளவிற்கு அவர் பார்க்க முடியும் என்பது, நீங்கள் உங்கள் பக்கத்தில் கொடுத்துள்ள வரையறைகளைப் (privacy settings) பொறுத்தது. ஒருவரை "unfriend” ஆக்கிட, அவருடைய பக்கம் செல்லவும். "Friends” என்பதனை அடுத்து உள்ள கீழ் நோக்கிய அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் "Unfriend” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

கேள்வி: பயர்பாக்ஸ் பிரவுசரை ரீசெட் செய்திட முடியுமா? அல்லது புக் மார்க்ஸ் எல்லாம் முறையாக சேவ் செய்த பின்னர், டெலீட் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்திட வேண்டுமா?
-என். மஞ்சுளா ராணி, கோவை.
பதில்:
பயர்பாக்ஸ் பிரவுசரில் பிரச்னைகள் தென்பட்டால், அதனை ரீசெட் செய்வதன் மூலம் தீர்வைக் காணலாம். இதனை மிக எளிதாகவும் மேற்கொள்ளலாம். பயர்பாக்ஸ் பிரவுசரில், வலது மேல் பக்கத்தில் உள்ள menu பட்டன் செல்லவும். இங்கு உள்ள "?”என்ற அடையாளக் குறியீட்டினைத் தேர்ந்தெடுக்கவும். இதன் பின்னர், கிடைக்கும் கீழ்விரி மெனுவில், Troubleshooting information என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து Reset Firefox என்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். நீங்கள் அமைத்த Bookmarks, browsing history, passwords, tabs, autofill information and personal dictionary என அனைத்தும் சேவ் செய்யப்படும். Extensions, search engines, download history, security settings, plugin settings, toolbars customizations and social features ஆகிய அனைத்தும் நீக்கப்படும். "Old Firefox Data” என்ற போல்டருக்குள், உங்கள் பழைய டேட்டா அனைத்தும் அமைக்கப்பட்டு, அந்த போல்டர் டெஸ்க்டாப்பில் சேவ் செய்யப்படும். உங்களுடைய ரீசெட் முயற்சி, உங்கள் பிரச்னைக்குத் தீர்வு தராவிட்டால், இந்த போல்டரிலிருந்து தேவையான டேட்டாவினை எடுத்துப் பயன்படுத்தலாம்.

கேள்வி: Dot Bomb என்பது ஒருவகை வைரஸின் பெயரா? இதனைத் தடுக்க தற்போது ஆண்ட்டி வைரஸ் உள்ளதா?
-எஸ். சக்திவேல், திருப்பூர்.
பதில்:
இப்படி எல்லாம், கற்பனையாக வதந்திகளை உருவாக்கிய உங்கள் நண்பர்களிடம் சற்று ஜாக்கிரதையாகவே இருங்கள். Dot Bomb என்பது செயல் இழந்த அல்லது இழந்து வரும் இணைய நிறுவனத்தினைக் குறிக்கும். 2000 ஆண்டு தொடக்கத்தில், பங்குச் சந்தை வீழ்ந்த நிலையில், பல நிறுவனங்கள் முடிவினைச் சந்தித்தன. அத்தகைய நிறுவனங்களின் நிலையைக் குறிக்க இந்த சொல் பயன்படுத்தப்பட்டது.

கேள்வி: நான் என்னுடைய இரண்டாவது மின் அஞ்சல் முகவரியாக ஜிமெயில் முகவரி ஒன்று வைத்துள்ளேன்.இதற்கென டெஸ்க்டாப்பில் ஐகான் ஒன்றையும் வைத்திருந்தேன். இப்போது திடீரென அதனைக் காணவில்லை. ஆனால், டெஸ்க்டாப்பில் உள்ள கூகுள் குரோம் ஐகான் அப்படியே உள்ளது. காரணம் என்ன? அதனை எப்படி திரும்பப் பெறுவது?
-எஸ்.சுரேந்திரன், புதுச்சேரி.
பதில்
: இது இரண்டாவது நிலையில் பயன்படுத்தப்படும் மின் அஞ்சல் முகவரி என்பதால், எப்போதாவது சில வேளைகளில் தான் பயன்படுத்துவீர்கள் என நினைக்கிறேன். அப்படி பயன்படுத்தப்பட்டிருந்தால், கம்ப்யூட்டரே டெஸ்க்டாப்பில் இருக்கும் பயன்படுத்தப்படாத ஐகான் களைச் சுத்தப்படுத்தும் வகையில், அதனை நீக்கியிருக்கும். இருப்பினும், உங்கள் ஜிமெயிலுக்கான ஐகானை மீண்டும் டெஸ்க்டாப்பில் எளிதாக அமைத்திடலாம். மேலும், நீங்கள் குரோம் பயன்படுத்துவதால், வழி இன்னும் எளிது.
கூகுள் குரோம் பிரவுசரில் உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்ட்டினைத் திறக்கவும். மெனுவில் Tools என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Application shortcutsஎன்பதனைக் கிளிக் செய்திடவும். இங்கு உங் களுடைய டெஸ்க்டாப், ஸ்டார்ட் மெனு என எதற்கும் ஷார்ட்கட் உருவாக்கலாம். டாஸ்க்பாரில் அதனை பின் செய்தும் வைக்கலாம்.
உங்களிடம் குரோம் பிரவுசர் இல்லை எனில், நீங்கள் பயன்படுத்தும் பிரவுசரில், ஜிமெயில் அக்கவுண்ட்டினைத் திறக்கவும். இங்கு அதன் முகவரியினை அப்படியே காப்பி செய்திடவும். பின்னர், டெஸ்க்டாப் செல்லவும். அங்கு, காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்திடவும். தொடர்ந்து கிடைக்கும் மெனுவில், New என்பதனையும் பின்னர் Shortcutஎன்பதனையும் தேர்ந்தெடுக்கவும்.
இங்கு ஏற்கனவே காப்பி செய்த முகவரி லிங்க்கினை பேஸ்ட் செய்திடவும். உங்களுடைய ஷார்ட் கட் இருக்க வேண்டிய இடமாக Desktop தேர்ந்தெடுக்கவும். அடுத்து next தேர்ந்தெடுத்து, இந்த ஷார்ட்கட்டுக்கு பெயர் ஒன்றைத் தரவும். தொடர்ந்து finish கிளிக் செய்து வெளியே வரவும். இனி, நீங்கள் கேட்ட ஜிமெயிலுக்கான ஷார்ட்கட் தயாராக இருக்கும்.

கேள்வி: யோட்டா பைட் என்ற அளவு எத்தனை பைட்ஸ் என்று நம்மால் கணக்கிட முடியுமா? இப்போது உச்ச பட்ச அளவு என்ன?
-என். மாதவி ராஜன், திண்டுக்கல்.
பதில்:
நல்ல கேள்வி. ஹார்ட் டிஸ்க் அல்லது, டேட்டா சேமிக்கும் இடத்தின் கொள்ளளவு அதிகமாகும் போது, கூடுதலான அதிக டேட்டாவிற்கான அலகு பெயர்கள் உருவாகின்றன. நீங்கள் கேட்கும் யோட்டா பைட் ((YB)yottabyte) என்பது, 1024 ஸெட்டா பைட் (zettabyte (ZB)). ஒரு ஸெட்டா பைட் 1024 exabyte (EB). ஒரு எக்ஸாபைட் 1024 petabyte (PB). ஒரு பெட்டாபைட் 1024 terabyte (TB). ஒரு டெராபைட்1024 gigabyte (GB). ஒரு கிகா பைட் 1024 megabyte (MB). ஒரு மெகா பைட் 1024 கிலோ பைட் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
இனி, உங்களின் இன்னொரு கேள்விக்கு வருவோம். யோட்டா பைட்டில் எத்தனை பைட்ஸ் உள்ளது? சரியாகச் சொல்வது என்றால், ஒரு யோட்டா பைட் 1,208,925,819,614,629,174, 706,176 பைட்ஸ் ஆகும். (என்ன மூச்சு வாங்குகிற சத்தம் கேட்கிறதா! இதைக் கணக்கு போடும் முயற்சியினால் ஏற்பட்டதுதான் அது) இப்போதைக்கு டெரா பைட் அளவில் தான் ஹார்ட் டிஸ்க்குகள் உள்ளன. அண்மையில் 6 டெரா பைட், அதாவது, 6,144 கிகா பைட், அளவில் ஹார்ட் டிஸ்க்குகள் வெளியாகியுள்ளன.
யோட்டா பைட் அளவெல்லாம், வருங்காலத்தில் புழக்கத்தில் வரத் தேவையில்லை; நமக்கு இனி சில மெகா பைட் அளவே போதும் எனத் தொழில் நுட்ப வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

கேள்வி: சில வேளைகளில் என் ஜிமெயில் அக்கவுண்ட், யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுக்காமலேயே திறக்கப்படுகிறது. இணைய இணைப்பு கொடுத்து பிரவுசரில் மெயில் தளம் திறந்தவுடன் இது ஏற்படுகிறது. இது எவ்வாறு சாத்தியமாகிறது? இதனால், மற்றவர்கள் என் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகையில், இவற்றைப் பார்த்துவிடுவார்கள் என்ற பயம் ஏற்படுகிறது.
- என். கமலம், சின்னமனூர்.
பதில்:
இது உங்களால் ஏற்பட்ட விளைவுதான். ஜிமெயில் அக்கவுண்ட்டினை லாக் அவுட் செய்து மூடாமல், பிரவுசரை மூடி இருப்பீர்கள். எனவே, உங்கள் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டினை பிரவுசர் நினைவில் வைத்திருந்து, ஜிமெயில் தளம் சென்றவுடன், உங்கள் மெயில் அக்கவுண்ட்டினைத் திறந்து காட்டுகிறது.
நீங்கள் பயன்படுத்துகிற கம்ப்யூட்டரை நீங்கள் மட்டுமே, அல்லது உங்களுக்கு நம்பிக்கையான குடும்பத்தினர் மட்டுமே பயன் படுத்துகிறார்கள் எனில், அக்கவுண்ட்டினை மூடத்தேவை இல்லை. இதில் இன்னொரு சிக்கலும் உள்ளது. உங்கள் கம்ப்யூட்டரில் உங்களுக்குத் தெரியாமல், தகவல்களைத் திருடும் வைரஸ் அல்லது மால்வேர் புரோகிராம் இருந்தால், அது எளிதாக இதிலிருந்து மெயில்களை அனுப்பலாம் மற்றும் உங்கள் பாஸ்வேர்ட் உட்பட பல தனித் தகவல்களைத் திருடி அனுப்பலாம். எனவே, முறையாக லாக் அவுட் செய்து, வெளியேறும் பழக்கத்தினை மேற்கொள்ளுங்கள்.

Advertisement

 

மேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X