கேள்வி-பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2014
00:00

கேள்வி: நான் விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன். என் டாஸ்க் பாரில், வலது மூலையில், அப்போது செயல்படும் புரோகிராம்களின் ஐகான்கள் காட்டப்படுகின்றன. இவை எனக்கு நன்கு பரிச்சயம் ஆகிவிட்ட படியால், அவற்றை நான் மறைத்தே வைக்க முடியுமா? அவ்வாறு வைத்த பின்னர், தேவை எனில், மீண்டும் அவற்றைக் காட்டப்படுமாறு செய்திடலாமா?
-செ. கண்ணப்பன், காரைக்குடி.
பதில்
: உங்களுடைய விண்டோஸ் 7 டாஸ்க் பாரில் அதிகமாக ஐகான்கள் தங்குவது அழகின்றி இருப்பதாக உணர்கிறீர்களா! இவற்றை நீங்கள் விரும்பினால், மறைக்கலாம். ஆனால், இவை தேவை இல்லை என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். கீழ்க்கண்டவாறு செயல்படவும்.
1. டாஸ்க் பாரின் வலது மூலையில், மேல் நோக்கிய அம்புக் குறி ஒன்றைக் காணலாம். இதன் மேலாக மவுஸின் கர்சரைக் கொண்டு செல்லுங்கள். அப்போது "Show hidden icons" என்று ஒரு சின்ன கட்டச் செய்தி தோன்றும்.
2. இந்த பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது ஐகான்கள் மேலாகவும், கீழாக உள்ள பிரிவில் "Customize" என்றும் காட்டப்படும்.
3. இப்போது கண்ட்ரோல் பேனலில் Notification Area Icons" என்ற பிரிவு விண்டோ காட்டப்படும். இந்த விண்டோவின் கீழாக, "Turn system icons on or off" என்று இருப்பதில் கிளிக் செய்திடவும்.
4. இனி விண்டோ "Turn system icons on or off" என்பதாக மாறும். இங்கு Clock", "Volume" (the speaker), "Network", "Power", and "Action Center" எனப் பல சிஸ்டம் ஐகான்கள் இருக்கும். இதில் கிளிக் செய்து, அந்த ஐகான் காட்டப்பட வேண்டுமா இல்லையா என்பதனை "On" or "Off" தேர்ந்தெடுத்து முடிவு செய்திடலாம். இதனை முடிவு செய்த பின்னர், ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடவும்.

கேள்வி: என் வீட்டில் பயன்படுத்தவும், என் மகன், தன் பள்ளி லேப்டாப் கம்ப்யூட்டருடன், கூடுதலாகப் பயன்படுத்தவும் ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர் வாங்க திட்டமிட்டுள்ளேன். விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 /8.1 ------இவற்றில் எது வாங்க? அறிவுரை கூறவும்.
என். குழந்தைசாமி, திருப்பரங்குன்றம்.
பதில்:
இதில் அறிவுரை கூற என்ன இருக்கிறது? உங்கள் தேவைகளே, நீங்கள் வாங்க விரும்பும் எந்த சாதனத்தையும் நிர்ணயம் செய்கின்றன. இங்கே அதற்கான தகவல்களைப் பார்ப்போம்.
விண்டோஸ் 8 மற்றும் அதன் மேம்படுத்தப்பட்ட சிஸ்டம் 8.1 உடன், கம்ப்யூட்டர்கள் ஒராண்டாகவே கிடைத்து வந்தாலும், இன்னும் விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் பெர்சனல் கம்ப்யூட்டர்கள் கிடைத்து வருகின்றன. ஆனால், விண்டோஸ் 8, விண்டோஸ் 7 மற்றும் விஸ்டா/எக்ஸ்பியிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். விண்டோஸ் 8 யூசர் இண்டர்பேஸ் ஏறத்தாழ ஸ்மார்ட் போனில் உள்ள சிஸ்ட்த்தைப் போன்றது. போனில் தரப்படுவதனைப் போன்றே, தொடு உணர் இயக்கம் (டச் ஸ்கிரீன்) கொண்டது.
இருப்பினும், விண்டோஸ் 8 மற்றும் 8.1 சிஸ்டங்களில், நீங்கள் விண்டோஸ் 7ல் பெறும் டெஸ்க்டாப் இயக்கம் போன்ற இயக்கத்தினை மேற்கொள்ளலாம். ஸ்டார்ட் பட்டன் மெனு இல்லாமல் இது கிடைக்கிறது. (விண்டோஸ் 8.2 மற்றும் விண்டோஸ் 9ல் இந்த ஸ்டார்ட் பட்டனும் கிடைக்க இருப்பதாகத் தகவல்கள் உள்ளன)
புதிய சிஸ்டமாக இருந்தாலும், விண்டோஸ் 8 பல விஷயங்களில் சிறப்பான வசதிகளையும், வேகத்தினையும் கொண்ட தாக உள்ளது. எனவே, நீங்கள் விண்டோஸ் 8 உள்ள கம்ப்யூட்டரை இரண்டொரு நாட்கள், நீங்கள் கம்ப்யூட்டர் வாங்கும் கடை அல்லது நண்பர்களிடம் பழகிப் பாருங்கள். நிச்சயம் அதனை வாங்கிட முடிவெடுப்பீர்கள். தொடர்ந்து சில நாட்கள் பழகிய பின்னரும், விண்டோஸ் 8 உங்களுக்குச் சிரமமானதாகத் தெரிந்தால், விண்டோஸ் 7 உள்ள சிஸ்டம் வாங்கவும். உங்களுக்கு எது வசதியாகப் படுகிறதோ, எது இயக்க எளிமையான ஒன்றாக இருக்கிறதோ, அதனை வாங்கவும்.

கேள்வி: வேர்ட் புரோகிராமில் டேபிள் ஒன்றை இடைச் செருகினால், அது பார்டரை அமைத்துக் கொள்கிறது. எனக்குச் சில வேளைகளில், பார்டர் இல்லாத டேபிள் வேண்டியுள்ளது. அப்படி ஒரு டேபிளைப் பெற வேண்டும் என்றால் என்ன கட்டளை கொடுப்பது?
-எஸ். மீனா குமார், சென்னை.
பதில்:
நீங்கள் சொல்வது சரியே. வேர்ட் டாகுமெண்ட்டில், டேபிள் ஒன்றை இடைச் செருகலாக இணைக்கும் போது, செல்களைச் சுற்றி பார்டர்களை அமைத்துக் கொள்கிறது. பல செயல்பாடுகளுக்கு இந்த பார்டர் தேவைப்படுகிறது. ஆனால், பலர் இந்த பார்டர்கள் தங்களுக்கு வேண்டாம் என எண்ணுகின்றனர். இந்த பார்டர்கள் இல்லாமல் டேபிள் பெறப் பல வழிகள் உள்ளன. அதில் எளிதானது Ctrl+Alt+U கீகளை, டேபிளை அமைத்த பின்னர் அழுத்துவது. கீகளை அழுத்தும் முன்னர், கர்சரின் நிலை டேபிளுக்கு உள்ளாக இருக்க வேண்டும்.

கேள்வி: விண்டோஸ் 8 சிஸ்டம் பைல்களை, என் புதிய கம்ப்யூட்டரில் இருந்து, டிவிடி ஒன்றில் காப்பி செய்து, அதனைப் பயன்படுத்தி என்னுடைய லேப்டாப் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மாற்றிக் கொள்ளலாமா?
என்.ஜோதி முருகன், காரைக்கால்.
பதில்:
நிச்சயமாகச் செய்யக் கூடாது. இரண்டு காரணங்களுக்காக இது செயல்படாது. உங்களுடைய விண்டோஸ் 8 கம்ப்யூட்டரில் உள்ள சிஸ்டம் பைல்களை மட்டும் காப்பி செய்து, இன்னொரு கம்ப்யூட்டரில் பதிந்து, அதனை இயக்க முடியாது. இது போன்ற வழியில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மாற்ற முடியாது. விண்டோஸ் 8 சிஸ்டத்தினை, விண்டோஸ் 8 சிஸ்டம் டிவிடி அல்லது இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்துதான் அமைக்க முடியும்.
இன்னொன்று நீங்கள் முயற்சிக்கலாமா என்று கேட்கும் வழி, சட்டத்திற்குப் புறம்பானது. அப்படியே செய்தாலும், அது மைக்ரோசாப்ட் அனுமதி இன்றி இயங்காது. உங்கள் கம்ப்யூட்டர் இயக்கத்தினையே மைக்ரோசாப்ட் முடக்கிப் போட்டுவிடும்.

கேள்வி: நான் பார்க்கும் வெப் சைட்களிலிருந்து டெக்ஸ்ட்டை வேர்ட் டாகுமெண்ட்டில் காப்பி செய்திடுகையில், ஏற்கனவே உள்ள வரிகளின் ஸ்டைலில் அமையாமல், வேறு ஒரு வகையில் அமைகிறது. பின் மீண்டும் இதனைத் தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டியுள்ளது. இதற்கான வேறு வழிகள் உள்ளனவா? ஆ.எழிலரசி, திருப்பூர்.
பதில்:
பலருக்கு தேவையான பதிலைத் தரும் கேள்வியைத் தந்தைமைக்கு நன்றி. இணையத்திலிருந்து மட்டுமல்ல, வேறு எந்த ஒரு பைலில் இருந்து டெக்ஸ்ட்டை பேஸ்ட் செய்தவுடன், டெக்ஸ்ட் முடிவடையும் இடத்தில், ஒரு சிறிய ஐகான் காட்டப்படும். இந்த இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று கிளிக் செய்திடவும். இனி, ஒரு சிறிய பாப் அப் செய்திக் கட்டம் பட்டியலாகக் காட்டப்படும். இதில் மூன்று ஆப்ஷன்கள் தரப்படும். அவை: Keep Source Formatting, Match destination Formatting மற்றும் Keep Text only. நீங்கள் விரும்பியபடி அமைய, இரண்டாவது ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். ஒட்டப்பட டெக்ஸ்ட் ஏற்கனவே உள்ள டெக்ஸ்ட்டின் ஸ்டைலை ஏற்றுக் கொண்டு தன்னை மாற்றிக் கொள்ளும்.

கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பியை விட்டுவிட எண்ணி, என் கம்ப்யூட்டரின் ராம் மெமரியை அதிகப்படுத்தி, கூடுதலாக ஹார்ட் டிஸ்க் ஒன்றையும் அமைத்துள்ேளன். இதனை அப்கிரேட் செய்திட, மைக்ரோசாப்ட் இணைய தளத்தில், விண்டோஸ் 8.1 அப்கிரேட் அசிஸ்டண்ட் மூலம் என் கம்ப்யூட்டர் குறித்துத் தெரிந்து கொள்ள விரும்பி தளம் சென்றேன். ஆனால், எந்த தகவலும் தர மறுக்கிறது. இது எதனால்?
-எஸ். கனகசபை, சிதம்பரம்.
பதில்:
நீங்கள் தீர்க்கமாக யோசித்து, முன்னேற்பாடுகளை மேற்கொண்டு செயல்படத் தொடங்கி இருக்கிறீர்கள். ஆனால், தவறான ஓர் அடிப்படையைக் கொண்டிருக்கிறீர்கள். விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்துடன் விண்டோஸ் 8 அப்கிரேட் அசிஸ்டண்ட் தான் செயல்படும். ((http://windows.microsoft.com/en-us/windows-8/)) விண்டோஸ் 8.1 இதன் பின், விண்டோஸ் 8 சிஸ்டத்தின் அப்டேட் செயல்பாடுகளுக்கென தரப்பட்டது. எனவே இயங்கவில்லை. எனவே, விண்டோஸ் 8 அசிஸ்டண்ட் லிங்க் சென்று செயல்படுத்திப் பார்க்கவும். உங்கள் கம்ப்யூட்டர் விண்டோஸ் 8 சிஸ்டத்தில் செயல்படும் என்றால், விண்டோஸ் 8.1லும் செயல்படும். விண்டோஸ் 8க்கு மாறிக் கொண்டு, பின்னர், விண்டோஸ் 8.1 மாறிக் கொள்ளவும்.

கேள்வி: என் அலுவலகத்தில் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் பயன்படுத்துகிறோம். இதில் யார் பயன்படுத்தினாலும், படிவங்களை நிரப்புகையில், உடன் பணியாற்றும் ஒருவர் சார்ந்த தகவல்கள் தாமாக அமர்ந்து கொள்கின்றன. அவர், தானாக எதுவும் செட்டிங்ஸ் அமைக்கவில்லை என்கிறார். இதனை எப்படி நீக்குவது என அவருக்கும் தெரியவில்லை. இந்த பிரச்னைக்குத் தீர்வு என்ன?
-எம். ஷண்முகம், மதுரை.
பதில்:
இது கம்ப்யூட்டர் தரும் வசதிதான்; ஆனால், இங்கு பிரச்னையாக முளைத்துள்ளது. ஒவ்வொரு முறையும் ஒருவர் தான் முழுமையாக தகவல்களை அமைப்பதில் நேரத்தினை வீணாக்காமல் இருக்க இந்த வசதி தரப்பட்டுள்ளது. இது பலர் பயன்படுத்தும் இடத்தில், சிக்கலையே ஏற்படுத்தும். ஒருவரின் தகவல் மட்டுமின்றி, சில வேளைகளில் தகவல்கள் கலந்தும் கிடைக்கும். மொத்தமாக இவற்றை நீக்க இன்டர்நெட் பிரவுசரில் சில செட்டிங்ஸ் அமைக்க வேண்டும். இன்டர்நெட் பிரவுசரில் Tools>Internet Options>Content>Autocomplete எனச் செல்லவும். இங்கு அனைவருக்குமான ஆப்ஷன்களை அமைக்கலாம். அல்லது நீக்கிவிடலாம்.

கேள்வி: பேஸ்புக்கில் பலர் தங்களுக்குப் பிடித்த வீடியோக்களை பதிவு செய்கின்றனர். அதிலேயே இயக்கிப் பார்க்க வேண்டியதுள்ளது. பின் நாளில் பார்க்கும் வகையில் பதிவு செய்து எப்படி? விளக்கவும்.
-என். கீர்த்திகா தேவி, சென்னை.
பதில்
: பேஸ்புக்கில், குறிப்பிட்ட வீடியோ பைலை, தனி டேப்பில் திறக்கவும். இப்போது அது இயங்கத் தொடங்கும் போது, அந்த டேப்பில் உள்ள முகவரிக் கட்டத்தில் உள்ள முகவரியை காப்பி செய்திடவும்.
பின்னர், http:// www.downvids.net/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். அங்கு கொடுக்கப்பட்டுள்ள முகவரிக் கட்டத்தில்,மேலே சொல்லியபடி காப்பி செய்த தள முகவரியினை பேஸ்ட் செய்து அருகே உள்ள download”என்பதில் கிளிக் செய்தால், அந்த வீடியோ பைலை டவுன்லோட் செய்வதற்கான இணைப்பு கிடைக்கும். அந்த இணைப்பில் அழுத்தி, பின்னர் save as linkஎன்பதில் அழுத்தினால், வீடியோ பைல் சேவ் செய்யப்படும்.

கேள்வி: நான் வேர்ட் 2003 பயன்படுத்தி வருகிறேன். ஆப்பரேட்டிங் சிஸ்டம் எக்ஸ்பி. இதில் தயாரிக்கப்படும் வேர்ட் டாகுமெண்ட்களில், அமையும் பக்க எண்களை என் விருப்பப்படி பார்மட் செய்திட முடியுமா ?
என். செல்வக் குமார், விருதுநகர்.
பதில்
: பார்மட் என எதனைச் சொல்லுகிறீர்கள் என்று தெரியவில்லை. இருப்பினும் பொதுவான வழிகளைத் தருகிறேன். முதலில் எந்த டாகுமெண்ட்டில் உள்ள பக்க எண்களை மாறுதலான பார்மட்டில் அமைக்க விரும்பு கிறீர்களோ, அதனைத் திறக்கவும். எந்த இடத்தில் உள்ள பக்க எண்களை அமைக்க விரும்புகிறீர்களோ, அந்த இட்த்தில் கர்சரை அமைக்கவும். பின்னர், வியு மெனு பெறவும். இதில் ஹெடர் அண்ட் புட்டர் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் ஹெடர் கட்டத்தில் கீழாக பக்க எண்களை எடிட் செய்திடும் டூல் பார் கட்டம் தரப்படும். இதில் பார்மட் பேஜ் ஐகானைக் கண்டு பிடித்து அதன் மீது கிளிக் செய்திடவும். இங்கு பேஜ் நம்பர்களுக்கான பலவித பார்மட்கள் தரப்படும். இதில் உங்களுக்கு விருப்பமான பார்மட்டினைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X