இதுவரை: அறிவியல் ஆசான் சங்கேத மொழியை அறிவதற்குள் கைலாஷ் கடத்தப்பட்டான்.
இனி-
சிறுவன் கைலாசை காணாது மிகுந்த பதட்டமும் கலவரமும் அடைந்த ஆசான், தன் ஹெலிகாப்டருக்கு விரையவும் எதிர்புறத்தில் இருந்து ஒரு கார் அதி வேகமாக அவரை மோதுவது போல் வர, ஆசான் வேகமாக நகர்ந்து கொண்டார்.
ஒரு நொடியில் பெரும் விபத்தில் இருந்து தப்பியதாக அவர் நினைத்தபோது அவருக்கு பின் புறத்தில் இருந்தும் ஒரு கார் அவரை நோக்கி வேகமாக வரவும் ஆசான் உண்மையை புரிந்து கொண்டார். சதிகார கும்பல் தன்னை கொல்ல வருகிறது என்று ஊகித்தவர் கார் நுழையாத சந்து பொந்துகளின் வழியே ஓடி வீடு வந்து சேர்ந்தார். அங்கு காவல் ரோபோவின் சக்தி பிடுங்கப் பெற்று அது செயலற்று விழுந்து கிடந்தது.
""வீடு முற்றிலும் திறந்து கிடக்க அவர் மனைவி ராட்சசியோ நன்கு குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தாள்.
""பிரசன்னா பிரசன்னா!'' என்று குரல் கொடுத்தபடி தன் ஆராய்ச்சிக் கூடம் வந்தார். பிரசன்னா உடல் நடுங்கியபடி இருக்க, கைலாஷின் ரோபோ அவனை தன் மடியில் கிடத்தி, ""பயப்படாதே பயப்படாதே! நாம் தான் தப்பித்துவிட்டோம் இல்லையா?'' என்று ஆறுதல் கூறி அவன் மார்பை அன்புடன் தேய்த்தபடி இருந்தது.
""பிரசன்னா என்ன ஆச்சுப்பா? இங்கு என்ன நடந்தது? ஏன் இப்படி கலவரமாய் இருக்கிறாய்?'' என்று அவர் கேள்வி மேல் கேள்வி கேட்டு அவனையே வெறித்தபடி இருந்தார்.
""ஆசான்! நீங்களும் கைலாசும் சென்ற அரை மணி நேரத்தில் நானும் பிரசன்னாவும் இந்த ஆராய்ச்சிக் கூடத்தில் அவனுக்கு துணையாக நின்ற போது யாரோ ஒருவன் காவல் ரோபோவின் சக்தியை பிடுங்கவும், அது ஈனு சுவரத்தில் "ஆபத்து ஆபத்து தப்பி ஓடுங்கள்' என்று கூறியது எனக்கு கேட்டது. உடனே நான் பிரசன்னாவிடம் சொல்ல பின் இருவரும் வாயில் நோக்கி சென்றோம்.
""ஒரு மர்ம நபரால் என் கைலாஷ் கை கட்டப்பட்டு, வாய் அடைக்கப்பட்டு நிலையில் காணப்பட்டான். வந்த மர்ம நபரின் நோக்கம் பிரசன்னாவையும் கடத்தி செல்ல வேண்டும் என்பதை நான் ஊகித்து விட்டேன். உடனே என் கைத் துப்பாக்கியை காட்டி மிரட்டினேன். நான் பிரசன்னாவை உள்ளே போகச் சொல்லிவிட்டு அந்த மர்ம நபரை குறி வைத்து தாக்க முற்பட்டேன். அந்த மர்ம நபரை சுட எத்தனித்தேன். அவன் ஒருவனாக இருந்ததாலும் அவன் எதிர்பார்த்த பறக்கும் பலூன் உடனே வந்து விட்டதாலும் தாமதியாது அவன் கைலாசுடன் அந்த பலூனில் பறந்து சென்று விட்டான். நான் அந்த பலூனை சுட்டு கீழ் இறக்கலாம் என்று யோசித்தேன்.
""அப்போது ஓடி வந்த பிரசன்னா "மடையா அப்படி செய்தால் நம் கைலாசும் வானில் இருந்து கீழே விழுவான். அது அவன் உயிருக்கு ஆபத்தாகிவிடும்,'' என்று எச்சரிக்கவும், நான் சரி என்று கூறி அவனை அழைத்துக் கொண்டு உள்ளே வந்துவிட்டேன்,'' என்றது ரோபோ.
""இப்போ என் கைலாஷை என்ன செய்யப் போறாங்களோ தெரியாது!'' என்று கூறி அது அழுதபடி இருந்தது ரோபோ. ஆசான் மிகுந்த வேதனை அடைந்தார்.
""ஒரு நாட்டின் நலன் கருதி செயல்பட்டால் எதிரிகள் எப்படி எல்லாம் பழி வாங்குகிறார்கள். அய்யோ பாவம் கைலாஷ். அவனை கடத்திய மன வருத்தத்தில் வந்தேன். ஆனால், இங்கும் அதன் எதிரொலி தென்பட்டிருக்கிறது. கைலாஷ் கடத்தப்பட்டது இப்போது ஊர்ஜிதமாகி விட்டது. இது அந்த போதைத் தீவினரின் சதிதான். தான் தப்பியதே தம்பிரான் புண்ணியமாய் போய்விட்டது!'' என்று கூறிய ஆசான் பிரசன்னாவைப் பார்த்தார்.
""ஏன் பிரசன்னா, உனக்கு அந்த மர்ம நபரை அடையாளம் தெரிந்ததா?''
""ம்ம். நன்கு பார்த்தேன். ஆனால், பயத்தின் காரணமாக அந்த உருவம் என் நினைவில் இருந்து அகன்று விட்டது,'' என்றான் பிரசன்னா.
""அவனை நான் நன்றாக மூளையில் பதிவு செய்துள்ளேன். அவர் இந்திய அறிவியல் முன்னேற்றத்துக்காக தன்னை முழுவதும் அர்ப்பணித்துக் கொண்ட இளம் துணை விஞ்ஞானி சகாணி,'' என்றது ரோபோ.
அவ்வளவுதான் ஆசான் வெகுண்டார்.
""இவனா அர்ப்பணித்துக் கொண்டவன். உடனே வாசகத்தை மாற்று. இந்திய தேசத்துக்கு துரோகம் இழைத்த கொடுமைக்காரன் சகாணி என்று. இவனையும் இவன் துணை போகும் அந்த கொடூர கும்பலையும் இனியும் நான் சும்மா விடப் போவதில்லை. என் பணி ஆரம்பமாகிவிட்டது. இனி அது குறிக்கோளை முடிக்காமல் ஓயாது,'' என்று உரக்க சபதம் செய்தபடி எழுந்தார் ஆசான். கைலாஷின் ரோபோ கைதட்டி மகிழ, பிரசன்னா தன் அப்பாவின் கைகளை பெருமையுடன் பற்றினான்.
""அப்பா! ஒரு கேள்வி கேட்கலாமா?'' என்றான் பிரசன்னா.
""ஓ... தாராமாக. கேள் மகனே கேள்,'' என்றான் ஆசான்.
""கைலாஷ் கூறிய அந்த சங்கேத மொழிக்கான விளக்கம் கிடைத்ததா?''
""கிடைத்தது. அது நம் நாட்டிற்கு பெரும் கேடு விளைவிப்பதாக இருந்தது. இம்மாதம் கடைசி வாரம் செயற்கை தீவினர் கப்பல் மூலம் அனுப்பும் அதிவீரிய போதைப் பொடி இந்தியாவில் மட்டுமே விற்க வேண்டும் என்றும், அதை உபயோகிப்பவர்கள் ஒரு வாரம் வான்வெளியில் மிதக்கும் சுகத்தை அடைவர் என்றும் தெரிவித்து இருந்தது.''
""ஏன் இந்தியாவில் மட்டும் விற்க வேண்டுமாம்?'' என்று கேட்டான்.
அதற்கு ஆசான், ""அதாவது இப்போது உலகில் அறிவியலில் மிக முன்னேறிய நாடாக இந்தியா விளங்குகிறது. இந்திய சக்தியால் தான் அந்த செயற்கை தீவை அழிக்க முடியும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். எனவே, இந்திய மக்களை இந்த போதைப் பழக்கத்துக்கு அடிமையாக்கிவிட்டால் அவர்கள் நம் நாட்டுக்கு எதிராகிவிடுவர் இல்லியா? மக்களின் ஆதரவு இல்லாமல் ஒரு நாடு மட்டும் என்ன சாதித்து விட முடியும். அத்துடன் அறிவியல் நடவடிக்கைகளை உளவறிய போதைக்கு அடிமையான மக்களே அவர்களுக்கு உளவாளியாகவும் ஆகிவிடுவர் இல்லியா? அதுதான் அவர்கள் எண்ணம். இது மிக கொடிய நோக்கம் கொண்டது. உடனே இதை நாம் முறியடிக்க வேண்டும்!'' என்றார் ஆசான்.
""அப்படி என்றால் இதை இந்திய அரசுக்கு தெரிவிக்கலாமா?'' என்றான் பிரசன்னா.
""கூடாது. அரசுக்கு தெரிந்தால் இந்த சங்கேத மொழி எப்படி கிடைத்தது என்பதை நாம் சொல்ல வேண்டி இருக்கும். அப்போது வீட்டுக்காவலில் இருக்கும் பிரகடீஸ்வரை நாம் காட்டி கொடுக்க வேண்டி இருக்கும். அது அவருக்கு ஆபத்து அல்லவா?'' என்றார் ஆசான்.
தலை அசைத்து தன் தவறை ஒப்புக் கொண்ட பிரசன்னா, ""அப்படி என்றால் ஒரே உபாயம் மட்டுமே உள்ளது!'' என்றான் பிரசன்னா.
""என்ன என்ன, கூறு!'' என்று அவசரப்படுத்தினார் ஆசான்.
""ஆம். இந்தியாவில் பிறந்து இன்று பிரான்சின் தலைநகர் பாரிசில் செட்டில் ஆகி உலகில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் என் தாய் மாமா துப்பறியும் சிங்கம் சீத்தாராம்தாஸ் தான் நமக்கு இருக்கும் ஒரே வழி,'' என்றான் உணர்ச்சியுடன்.
""ஆகா! அருமையான யோசனை. ஆம். உன் மாமனால் முடியாதது எதுவுமே இல்லை!''
தன் மகனின் புத்திசாலித்தனத்தை மெச்சி அவனை கட்டித் தழுவிக் கொண்ட ஆசான், உடனே துப்பறியும் சிங்கம் சீத்தாராமதாசுடன் தொடர்பு கொண்டார்.
நல்ல உத்தி கொடுத்த பிரசன்னாவை பாராட்டி, முத்தம் பதித்தபடி இருந்தது கைலாஷின் ரோபோ.
( — 9 தொடரும்)