பத்மஸ்ரீ விருது டாக்டர் பட்டம் கூடவே வாழ்க்கையும் தந்தது! | குமுதம் | Kumutham | tamil weekly supplements
பத்மஸ்ரீ விருது டாக்டர் பட்டம் கூடவே வாழ்க்கையும் தந்தது!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2014
00:00

பத்மஸ்ரீ! இந்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது. ஆனால் அதனை ஒரு விவசாயியாலும் பெற முடியும் என்று தமிழக விவசாயிகளைத் தலை நிமிர வைத்திருக்கிறார், வெங்கடபதி ரெட்டியார். விவசாயத்தில் புதிய உத்திகளைக் கண்டுபிடித்ததற்காக 2012ல் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. கனகாம்பரத்தில் நோய் தாக்காத, அதிக விளைச்சலைக் காட்டும் வகையில் கண்டறிந்தவர் வெங்கடபதி, கனகாம்பரம் மட்டுமல்ல, சவுக்கு, மிளகாய், கொய்யா என வெங்கடபதி ரெட்டியின் விவசாய சாதனைகள் தொடர்வதை கௌரவிக்கும் வகையில் அண்மையில் அவருக்கு "டாக்டர்' பட்டம் வழங்கியிருக்கிறது பெரியார் பல்கலைக்கழகம் அவரைச் சந்திக்க பாண்டிச்சேரி கிளம்பினோம். பாண்டிச்சேரியில் இருந்து அரை மணி நேரப் பயணத்தில் வந்துவிடுகிறது அவரது கூடப்பாக்கம் கிராமம். அதிக பஸ் வசதி இல்லாத கிராமம் அது. வெறும் நான்காவது வரை மட்டுமே படித்து இந்திய அளவில் தமிழக விவசாயிகளின் பெருமையைப் பேச வைத்தவரின் வீடு மிகச் சாதாரணமாகத்தான் இருக்கிறது. இனி வெங்கடபதியின் சாதனையை அவரது மொழியிலேயே கேட்போம்.
"நான் பிறந்து வளர்ந்தது ஒரு விவசாயக் குடும்பம்தான். பள்ளிப்படிப்புன்னாலே நமக்கு எட்டிக்காய்ங்க... அவ்வளவு அலர்ஜி. நாலாவதுக்கு மேல பள்ளிக்கூடம் போகலை. "இந்த நாயி உருப்படியாகலை. கல்யாணமாவது பண்ணி வெச்சா பொறுப்பு வருதான்னு பார்ப்போம்'னு 16 வயசுலேயே கல்யாணத்தை பண்ணிவெச்சிட்டாங்க. அப்படியிருந்தும் நமக்கு விளையாட்டுப் புத்தி போகலை. இவன் இங்கேயிருந்தா உருப்படவே மாட்டான்னு மாமியார் வீட்டுக்கு அனுப்பி வெச்சாங்க. அங்கே போனா கௌரவத்துக்காகவாவது ஏதாவது பண்ணனுமேனு விவசாயத்தைப் பார்க்க ஆரம்பிச்சேன். மாமனாருக்கு இருந்த அஞ்சு ஏக்கர் நிலத்தை முப்பது ஏக்கர் ஆக்கினேன். நல்லா போய்கிட்டு இருந்த வாழ்க்கையில் திடீர்னு மனைவி மூளைப் புற்றுநோயால தவறிட்டாங்க. அனாதரவாகிட்டேன்னு சொல்லலாம். அப்பத்தான் வாழ்க்கையே புரிஞ்சுச்சு. அடி படபடத்தான் அடிப்படையே புரியும். ஒரு கட்டத்துல எச்சில் இலையில இருந்துகூட சோறு எடுத்து சாப்பிட்டிருக்கேன். தற்கொலை முடிவுக்குப் போய் பூச்சி மருந்தெல்லாம் வாங்கிட்டேன். இதையெல்லாம் கவனிச்சு எங்க வீட்டுல வற்புறுத்தி இரண்டாவது கல்யாணம் செஞ்சு வெச்சாங்க.... என்று நிறுத்தியவர், தன் வாழ்க்கையில் வாசனை வீசச் செய்த கணகாம்பரத்துக்கு வந்தார்.
"விவசாயத்துல ஏதாவது புதுசா பண்ணணும், வழி சொல்லுங்கன்னு பெரியகுளத்துல இருக்கற தேனி வேளாண்மை ஆராய்ச்சி மையத்துல போய் நின்னேன். அங்கே இருந்த சம்பந்தமூர்த்தி டெல்லி கனகாம்பரத்தோட நாலு விதைகளை கையில கொடுத்தார். உதவி செய்தார்னு பார்த்தா வெறும் விதைகளைக் கொடுக்கறாரேனு வீட்டுக்கு வந்துட்டேன். அந்த விதைகளைச் செடிகளாக்கினேன். அந்த கனகாம்பர பூக்களை என வீட்டுக்காரி தலையில வெச்சுட்டு ஒரு கல்யாணத்துல போய் நின்னா, வந்தவங்க எல்லாரும் அந்தப் பூவையேதான் பார்த்துட்டுப் போனாங்க.
அடடா... இதுதான் நமக்கான ரூட்டுனு கனகாம்பரத்துக்கு லோன் கேட்டா.. நபார்டு வங்கியிலேயே கனகாம்பர் சாகுபடிக்கு வெறும் 2500 ரூபாய்தான் அலாட் பண்ணியிருக்குனு பேங்க்ல சொல்லிட்டாங்க. எனக்கு 25 ஆயிரம் தேவைப்பட்டுச்சு. புதுசா திறந்த வள்ளலாம் கிராம வங்கில என்னை நம்பி பணத்தை கொடுத்தாங்க.
கனகாம்பரம் வளர்க்கிறதுக்கு எல்லாரும் யோசிப்பாங்க. ஏன்னா 23 டிகிரிக்கு மேல வெப்பம் தாங்காதுனு. ஆனா காற்றில் ஈரப்பதம்தான் கனகாம்பரத்துக்கு முக்கியம். அதை சீராக்கிக் கொடுத்தேன். சின்ன கொட்டகை போட்டு கனகாம்பரத்துக்கான புரடக்ஷன் யூனிட்டை அமைச்சேன். காற்றில் ஈரப்பதத்துக்காக வெளிநாட்டுல பண்ற மாதிரி நீரை ஸ்ப்ரே மூலம் தெளிச்சேன். அது ஈரப்பதத்தை நீடிக்க வைச்சது. 100 கன்றுகளை நட்டால் 40 கன்றுகள் மட்டும் வர்ற இடத்துல 100க்கு 90 கன்றுகள் வர ஆரம்பிச்சது. ஒரு செடியோட கிளையில் இருந்து செடி தான் உருவாக்க முடியும். ஆனா நான் ஒரு கிளையோட ஒவ்வொரு கனுவிலிருந்து ஒவ்வொரு செடியை உருவாக்கலாமேனு வெளிநாட்டு பாணியில முயற்சி செஞ்சேன். இது எல்லாமே 1980ல் நடந்தது. உலகமே ஏன், கட்டின பொண்டாட்டியே! என்னை பைத்தியக்காரனா பார்த்தா...' என்று இடைவெளி விடும் வெங்கடபதி என் முயற்சிகள் காசானதைப் பற்றி சொல்கிறார். "புதுச்சேரி அரசு மலர் கண்காட்சியல் 10 டெல்லி கனகாம்பரக் கன்றுகளை விற்பனைக்கு வெச்சிருந்தாங்க விலை 500 ரூபாய் எல்லாமே வித்து தீர்ந்துடுச்சு. நான் அவங்ககிட்ட போய் "இதே செடியை வெறும் அஞ்சு ரூபாய்க்குத் தர்றேன்'னு சொன்னேன். ஆச்சர்யமா பார்த்த அவங்க ஒரு லட்சம் செடிகளுக்கு ஆர்டர் கொடுத்தாங்க. ஒரு லட்சம் செடிகள் வேணும்னா 25 ஆயிரம் தாய்ச்செடிகள் வேணும். ஆனா என்கிட்ட அப்பா நானூறு தான் இருக்கு. பெரியகுளம் போய் என்ன பண்ணலாம்னு கேட்டேன். திசு வளர்ப்பு முறை பத்தி சொன்னாங்க. அதாவது ஒரு இலையில இரந்து ஒரு ஒரு செல்லை மட்டும் எடுத்து அதிலிருந்து புதிய கருக்களை உருவாக்கும் திட்டம் அது. அதன்படி, ஒரு லட்சம் செடிகள் தயார் பண்ணிக் கொடுத்தேன். ஒரு கிலோ அரிசி வாங்க வக்கில்லாதவன் கையில் 5 லட்சம் ரூபாய் டி.டி. எப்படி இருக்கும்?
புதுச்சேரி அரசு பாதி மான்யத்துல 2 ரூபாய் 50 பைசாவுக்கு வித்தாங்க. ஒரு மணி நேரத்துல ஒரு லட்சம் கன்றுகள் விற்று தீர்ந்துச்சு. இப்ப வீட்டுக்காரி என்னை ஹீரோவா பார்க்க ஆரம்பிச்சா. எல்லாம் கொஞ்ச காலம்தான். ஒரு நாள் என் மனைவி காபியில சர்க்கரை போடாம், சமையல்ல உப்பு போடாம சாப்பிடச் சொன்னா.. ஒரு நாள் பொறுத்துக்கிட்டேன். அதுவே ஒர வாரம் தொடர்ந்ததும் கடுப்பாகிடுச்சு. "ஏன் இப்படிப் பண்றே?'னு கேட்டேன். "திங்கறதுல மட்டும் வெரைட்டி கேக்கறீயே.. ஒரே கலர்ல கனகாம்பரம் கொடுத்தா போரடிக்காதா'னு கேட்டா. புத்திக்கு எட்டிச்சு. திரும்ப பெரியகுளம்.'
"அப்படி கலர் மாத்தணும்னா டிஎன்ஏல மாத்தணும்'னாங்க. அது என்னன்னு கத்துக்கிட்டேன். "அதுக்கு காமா ரேடியேஷன் வேணும். ஆனா அத கல்பாக்கத்துலதான் கிடைக்கும். வெளி ஆளுங்களுக்குத் தர மாட்டாங்க'என்று சொன்னாங்க. நான் விடலை. டீடியாக்கள்ல "காமா ரேடியேஷன் கிடைச்சா கனகாம்பரத்துல புது கலர் கண்டுபிடிக்கத் தயாரா இருக்கே'ன்னு அறிவிச்சேன். அதைப் படிச்சுட்டு அப்ப குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம் ஐயா ஏற்பாடு பண்ணிக் கொடுத்தாரு ஒரு கட்டத்துல கனகாம்பரம் செடி தேங்கிடிச்சு. உடனே பேங்க் மூலமா இலவசமா கொடுக்க ஏற்பாடு பண்ணினேன். டெல்லி கனகாம்பரம் நாடு முழுக்க பிரபலமாயிடிச்சு. கனகாம்பரம் தான் வாழ்க்கை கொடுத்துச்சு, விருதும் கொடுத்துச்சு என்கிறார் பத்மஸ்ரீ விவசாயி!

க. ராஜிவ் காந்தி

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X