அந்துமணி பா.கே.ப., | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

03 ஆக
2014
00:00

கம்ப்யூட்டர் துறையில் இருக்கிறார் நண்பர் ஒருவர். ஒரு நாள் விட்டு ஒரு நாள், போன் போட்டு பேசாமல் இருக்க மாட்டார். நேரில் பார்க்க வேண்டும் என, தொல்லை கொடுப்பார். சந்தித்த பின், என் முகத்தை பார்த்தபடியே, 'கம்'மென அமர்ந்து இருப்பார். என்னவென்று கேட்டால், 'உங்கள் முகத்திலிருந்து வீசும் ஒளியை பார்த்துக் கொண்டிருந்தாலே, என் மன பலம் கூடுகிறது...' என, பெரிய, 'ஐஸ்' கட்டியைத் தூக்கி, தலையில் வைப்பார்.
இப்படிப்பட்ட ஐஸ்களில் மயங்குபவனா நான்... 'சரி சரி... வந்த விஷயத்தைச் சொல்லுங்கள்...' என்பேன்.
கடந்த வாரத்தில் ஒரு நாள் அவருடன் பேசிக் கொண்டிருந்த போது, 'கம்ப்யூட்டர் ஆணா, பெண்ணா சொல்லுங்க...' என்றார்.
இப்படி ஒரு கோணத்தில் நான் சிந்தித்துப் பார்த்ததே இல்லை. கொஞ்ச நேரம் விழித்து விட்டு, 'தெரியலயே...' என்றேன்.
நண்பரே சொன்னார்:
கல்லூரியில் ஆசிரியர் ஒருவர் வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும் போது, 'ஆண் பால், பெண் பால் வேறுபடுத்தி காட்ட வார்த்தைகள் உள்ளன. ஆனால், ஆங்கிலத்தில் உயிரற்ற சில பொருட்களை பெண்பாலாக அழைப்பது உண்டு. உதாரணமாக, கப்பல் உயிரற்ற பொருள்; ஆனால், அதை ஆங்கிலத்தில் பெண்பாலாகக் கூறுவர்...' என, ஆசிரியர் விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது துடுக்கான மாணவன் ஒருவன் எழுந்து, 'கம்ப்யூட்டர் எந்த வகையைச் சேர்ந்தது?' என்று, கேட்டான்.
ஆசிரியருக்கு பதில் தெரியவில்லை; மொழி அகராதியிலும் இதற்கான விடை இல்லை. எனவே, வகுப்பிலுள்ள மாணவர்களை ஒரு குழுவாகவும், மாணவியரை இன்னொரு குழுவாகவும் பிரித்து, இதற்கான விடையை கண்டுபிடியுங்கள் என்றார். 'நீங்கள் சொல்லும் விடையை நிரூபிக்கும் வகையில், நான்கு உதாரணங்களையும் கூற வேண்டும்...' என்றார்.
இரண்டு குழுக்களும் தனித்தனியாக கூடி கம்ப்யூட்டர் குறித்து, ஆராய்ச்சி செய்தனர். பின், மாணவியர் அனைவரும், 'கம்ப்யூட்டர் ஆண் இனத்தை சேர்ந்தது...' என்றும், மாணவர்கள் அனைவரும், 'கம்ப்யூட்டர் ஒரு பெண்...' என்றும் கூறினர். அதற்கு அவர்கள் கூறிய விளக்கம் என்ன தெரியுமா?
மாணவியர் கூறிய விடை:
* கம்ப்யூட்டரில் ஏதாவது வேலை செய்ய வேண்டுமெனில், முதலில் அதை, 'பவர் ஆன்' செய்ய வேண்டும்.
* ஏகப்பட்ட தகவல் தொகுப்புகள் கம்ப்யூட்டரில் இருந்தாலும், அவைகளால் சுயமாக சிந்திக்க முடியாது.
* கம்ப்யூட்டர்கள் பிரச்னைகளை தீர்க்க உதவினாலும், பல நேரங்களில் அவையே பிரச்னைகளாக அமைகின்றன.
* ஒரு கம்ப்யூட்டர் வாங்கிய உடன் யோசிப்போம்... 'ஐயோ... சிறிது காலம் பொறுத்திருந்தால், இதை விட சிறந்த கம்ப்யூட்டராக வாங்கியிருக்கலாமே...' என்று!
— இந்த காரணங்களால், கம்ப்யூட்டர் ஆண் இனத்தை சேர்ந்தது தான் என்று கூறினர் மாணவியர்.
'கம்ப்யூட்டர் பெண்ணுக்குத் தான் சமம்...' என்பது, மாணவர்களின் கருத்து. அதற்கு அவர்கள் கூறும் காரணம்;
* கம்ப்யூட்டரின் தொழில்நுட்பம் அதை உருவாக்கியவரை தவிர, வேறு யாருக்கும் எளிதில் புரிவதில்லை.
* ஒரு கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் சாப்ட்வேரை, இன்னொரு கம்ப்யூட்டரில் எளிதில் பயன்படுத்தி விட முடியாது. அதாவது, கம்ப்யூட்டருக்கு, கம்ப்யூட்டர் பயன்பாடுகள் மாறுபடும்.
* நாம் செய்யும் சிறு தவறுகளைக் கூட கம்ப்யூட்டர் நினைவில் பதித்திருக்கும். நெடு நாட்களுக்கு பின் கூட, அதைத் திரும்ப எடுத்துக் கூறும் ஆற்றல் அதற்கு உண்டு.
* ஒரு கம்ப்யூட்டரை வாங்கிய உடனே, தொடர்ந்து மாத வருமானத்தில் பாதி பணம், அந்த கம்ப்யூட்டரின் மற்ற பாகங்களை வாங்க செலவு செய்ய வேண்டியிருக்கும்; என்றனர் மாணவர்கள்.
'இவற்றில் இருந்து கம்ப்யூட்டர் ஆணா, பெண்ணா என்று உங்கள் அனுபவத்தில் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இந்த சமாசாரம், 'நெட்'டில் படித்தது...' என்றார் நண்பர்.
— கம்ப்யூட்டர் பயன்படுத்துவோரே... உங்கள் அனுமானம் என்ன?

சமீபத்தில், கோவையில் இருந்து கிளம்பி, ஈரோடு செல்லும் வழியில் திருப்பூர் சென்றோம்.
தூசி படிந்த சிறிய சாலைகளில், கசமுசா டிராபிக்; மாட்டு வண்டிகள் ஏராளம்.
ஊரைச் சுற்றி பார்த்துக் கொண்டிருக்கும் போது, திடீரென லென்ஸ் மாமா, 'மணி இங்கே பாரு... அந்த பனியன் கம்பெனி வாசலில், 'டேமேஜர் தேவை' என, எழுதி வைத்திருக்கின்றனர். மானேஜர் என்பதை தான், 'டேமேஜர்' எனத் தவறாக எழுதி விட்டனரா?' எனக் கேட்டு, 'கட கட' வெனச் சிரித்தார். எனக்கும் ஒன்றும் புரியவில்லை.
அடுத்த தெரு ஒன்றில் சுற்றி வரும்போது, அங்கேயும், 'டேமேஜர் தேவை...' என்ற போர்டு தொங்கியது.
'சரியான ஊரப்பா... இந்த ஊர் ஆட்களுக்கு, 'இங்கிலீஷ்' வரவே வராது போலிருக்கு. 'டேமேஜ்'ன்னா உடைஞ்சு போறது, சேதமடைவது. இதைச் செய்ய ஆட்கள் தேவை என, விளம்பரம் செய்கின்றனரே...' என்று புலம்பிய லென்ஸ் மாமாவிடம், 'இங்கே பாருங்க...' என, இன்னொரு நிறுவனத்தின் வாசலில் தொங்கிய அட்டையைக் காட்டினேன்.
அதில், 'டேமேஜ் செக்கர் தேவை!' என, எழுதப்பட்டு இருந்தது.
பனியன்கள் தைக்கப்பட்ட பின், அவற்றில் சேதம் ஏதும் இருக்கிறதா என, சோதனை செய்ய ஆட்கள் தேவை என்பதையே சுருக்கமாக, அந்த ஊர் மக்கள் தமக்குள் பரிமாறிக் கொள்ளும் வார்த்தையாக, 'டேமேஜர்' என்ற சொல்லை பயன்படுத்தியிருக்கின்றனர் என்பதை, புரிந்து கொண்டோம்.
திருப்பூரில் உள்ள, 90 சதவீத பனியன் பாக்டரிகளின் வாசல்களிலும், 'டெய்லர்கள், ஹெல்பர்கள், காஜா எடுப்பவர்கள், டேமேஜ் செக்கர்கள் தேவை' என்ற போர்டை காண முடிந்தது.
டெய்லரிங் துறையில் அனுபவம் இல்லாதவர்களுக்கும், ஏதாவது ஒரு வேலை திருப்பூரில் கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவே தோன்றுகிறது.
'வேலைக்கு ஆட்கள் தேவை... தேவை...' எனக் கூப்பிடுகின்றனர். செல்வம் கொழிக்கும் பகுதி; கவர்னர் வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் நம்ம ஊர், 'வி.ஓ.,'க்கள், (பொருள் தெரியும் தானே? 'வெட்டி ஆபிசர்கள்!') கவர்னர் பணி கிட்டும் வரை, திருப்பூரை தமக்கு சோறு போடும் ஊராக்கிக் கொள்ளலாம்.

'கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய் என்றவர் எவரோ; ஆனால், அது உண்மை தான்...' என்று கூறி, நண்பர் ஒருவர் கூறியது:
பெட்டி, படுக்கைகளை உற்று உற்றுப் பார்க்கிறவன், திருடனாக இருக்க வேண்டுமென்பதில்லை; திருட்டுக் கொடுத்து விட்டுத் தேடுகிறவனாகவும் இருக்கலாம்.
இருமிக் கொண்டிருப்பவன் நோயாளியாக இருக்க வேண்டுமென்பதில்லை; டாக்டராகவும் இருக்கலாம்.
வகுப்பில் முன் வரிசையில் உட்காருவதால் மட்டும் ஒருவன் புத்திசாலி என்பதில்லை; காது கோளாறு காரணமாகவும் இருக்கலாம்.
சுவரை வெள்ளையடிப்பது, அதைத் தூய்மைப்படுத்தத்தான் என்பதில்லை; கண்ட விளம்பரங்கள் எழுதி அசிங்கப்படுத்தவும் இருக்கலாம்.
முதலாளி தொழிலாளியைத் திட்டுவது அவன் குற்றம் செய்து விட்டதற்காக என்பதல்ல; சம்பள உயர்வு கேட்டதற்காகவும் இருக்கலாம்.
விமானம் ஏறுபவன் வெளிநாடு செல்கிறான் என்பதில்லை; 'ஹைஜாக்' செய்யவும் இருக்கலாம்.
நண்பரின் புதுமொழிகள் எப்படி?

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X