அந்துமணி பதில்கள்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
அந்துமணி பதில்கள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

03 ஆக
2014
00:00

* ம.முனீஸ்வரன், திருப்பத்தூர்: பெயர், நிம்மதி... இதில் எது மனிதனுக்கு தேவை?
பெயர் எப்படி வேண்டுமானாலும் எடுத்து விடலாம். நிம்மதி - இது தான் தேவை மனிதனுக்கு! இரவு தலையணையில் தலையைச் சாய்த்தால், உடனே தூக்கம் வர வேண்டும்; அது இல்லாத வாழ்க்கை நரகம்!

தி.பூராசாமி, கருவம்பாளையம்: தன் நேசிப்பை, ஒரு பெண் ஆணிடம் கூறலாமா?
இங்குள்ள ஆண்களில், 10 சதவீதம் மட்டுமே, 'ஜென்டில்மேன்'கள்! நேசிப்பை முதன் முதலில் ஒரு பெண் சொன்னால், நேசிக்கப்படும் நபர், அந்த, ௯௦ல் ஒருவராக இருந்து விட்டால், பெண்ணுக்கு மானக் கேடு வந்து விடும். எனவே, அதிக கவனம் வேண்டும்!

கு.முத்து, செங்கல்பட்டு: எந்த முடிவையும் என்னால் விரைவாக எடுக்க முடியவில்லையே...
பரவாயில்லை... கவலைப்படாதீர்கள்; வேகமான முடிவுகள், சில சமயங்களில் தீங்கையே விளைவிக்கும். வேகமாக முடிவெடுப்பதை விட, விவேகமாக முடிவெடுப்பதே நன்மை பயக்கும்.

அ.பா.மணி, தொண்டாமுத்தார்: இன்றைய மக்களின் அதிக விருப்பமாக இருப்பது எது?
வம்புகள்... தங்களைத் தவிர, மற்றவர்கள் பற்றிய வம்பு பேச்சு பேசுவதையே விருப்பமாக கொண்டுள்ளனர்.

* ஜெ.யோகராஜன், அண்ணாமலைநகர்: மற்றவர்களின் அறுவையிலிருந்து மீள நிறைய வழி சொல்கிறீர்கள். நாம் மற்றவர்களை அறுப்பதை எப்படி தெரிந்து கொள்வது?
நாம் அறுக்கும் போது, எதிராளி, 'திருதிரு'வென விழிப்பர். அக்கம் பக்கம், மேலே கீழே பார்ப்பர்; நம்மை திசை திருப்ப வேறு சப்ஜெக்ட் பேச முயல்வர். 'அவசர வேலை இருக்கு; அப்புறம் பார்ப்போமா...' என்பர். இவ்வளவு குறிப்புகளையும் நாம் உணராமல், தொடர்ந்து பேசினால், அடுத்த முறை நம் தலை தெரிந்தால், தப்பி ஓடி விடுவர்!

எஸ்.பி.கல்யாணசுந்தரம், ஆலங்குளம்: யாரைக் கண்டால் உங்களுக்கு பயம்?
உள்ளத்தில் இருந்து வராமல், உதட்டில் சிரிப்பைக் காட்டும் கள்ளச் சிரிப்பர்களைக் கண்டால், அலர்ஜி!

ஆர்.ராமர், குறிஞ்சிபாடி: ஒரு மனிதனால், எப்போது அறிஞனாக முடியும்?
தன் முட்டாள்தனத்தை உணர்ந்து, அவற்றை துறக்கும் போது அறிஞனாகிறான். ஆனால், நம் மக்களின் பெரும்பான்மையோருக்கு, அறிஞனாவதில் விருப்பமிருப்பதில்லை!

ச.செல்வராஜ், நரிமேடு: நான்கு பெண்கள் ஒன்று கூடினால், அவர்களால் ஐந்து நிமிடத்திற்கு மேல் ஒற்றுமையாக இருக்க முடியாது என்கின்றனரே... உண்மையா?
பழங்கால, படிக்காத பெண்களுக்காக அந்தக் காலத்தில் சொல்லப்பட்ட சொலவடை இது. இன்றைய பெண்களில் அநேகர், குறைந்தபட்சம் பத்தாவது வரையாவது படித்து விடுகின்றனர். மேலும், என்னென்னவோ மேற்படிப்புகளும் படிக்கின்றனர்; ஒற்றுமையாக இருக்கின்றனர்; எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்கின்றனர். எனவே, 'நூறு பெண்கள், ஐந்து நிமிடத்தில் தோழிகளாகி விடுகின்றனர்...' என வேண்டுமானால், இனி மாற்றிச் சொல்லாம்!

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X