'குற்றால அருவியில் குளிச்சு வந்தேண்டி'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2014
00:00

வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி
ஆத்தங்கரை பக்கத்துல காத்திருக்கேன் வாடி
பலிஞ் சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு...
— இது, பணக்கார குடும்பம் படத்தில், கவிஞர் கண்ணதாசன் பாடலுக்கு, பி.சசீலாவும்,எல்.ஆர்.ஈஸ்வரியும் பாடிய, 'சுறுசுறு' சடுகுடு பாடலாகும். பாடலின் முதல்வரி, 'காவிரி தண்ணியில குளிச்சவதாண்டி...' என்ற வரி வரும்; அந்த வரியை மாற்றி,
குற்றால அருவியில் குளிச்சு வந்தேண்டி
வெறுங்காலால புலிகள மிதிச்சவதாண்டி...
என்று போட்டு தாக்கி, உண்மையிலேயே கபடி விளையாடி, அந்த பாடல் வரிகளுக்கு, நிஜவடிவம் கொடுத்தனர் நம் வாசகிகள்.
எங்கே என்று கேட்கிறீர்களா? 27வது ஆண்டாக, ௨௭வது முறையாக கடந்த, ஜூலை மாதம் மூன்று நாட்கள் நடைபெற்ற, வாரமலர் குற்றால டூரில் தான், வாசகியரின் இந்த உற்சாக கபடி ஆட்டம் நடைபெற்றது.
அருவி ஓசையை மிஞ்சும் விதத்தில், ஆர்ப்பாட்டமாக புழுதி பறக்க, பாய்ந்து பாய்ந்து, தரையில் உருண்டு புரண்டு, ஆவேசமாக பாடி, விளையாடிய வாசகியரின் ஆட்டத்தை பார்த்த போது, அடுத்த காமன்வெல்த் போட்டிக்கு, இவர்களை சிபாரிசு செய்யலாம் என்றே நினைக்கத் தோன்றியது.
தங்களைவிட பொறுப்பாகவும், பாதுகாப்பாகவும், 'வாரமலர்' குழுவினர் பார்த்துக் கொள்வர் என்று, எங்கள் மீது கொண்ட அபார நம்பிக்கையின் காரணமாக, உடன் வருவதாக இருந்த ஆண்களில் பலர், தங்களுக்கு பதிலாக, தங்கள் வீட்டு பெண்களையே அனுப்பி வைத்திருந்ததால், இம்முறை பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
டூரின் முதல் நாளன்று, வாசகர்கள் அறிமுகத்தின் போது, ஒவ்வொருவருக்கும் ஒரு வாசகரை, டூரின் தத்து குழந்தையாக கொடுத்த போது, சென்னை வாசகி உமாவும், ராமநாதபுரம் வாசகி கண்ணகியும், ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
மதுரையில், சில வாசகர்கள் இரவு, 2:00 மணிக்கு வந்து சேர்ந்த போதும், இன்முகத்துடன் வரவேற்று, அவர்களுக்கு தேவையான உணவை, அந்த நேரத்திலும் வழங்கிய மதுரை பிரேம் நிவாஸ் ஓட்டல் நிர்வாக பங்குதாரர் ராமசாமி மற்றும் அவரது மனைவி மீனாட்சியை வாசகர்கள் முன்னிலையில் நிறுத்தி, மதுரை தினமலர் இணை வெளியீட்டாளர் டாக்டர் எல்.ராமசுப்பு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.
மீனாட்சி டிராவல்ஸ் வோல்வா ஏசி., பஸ், மதுரையைவிட்டு, ரதம் போல், குற்றாலம் நோக்கி கிளம்பும் போதே, வாசகர்களிடம் உற்சாகம் வந்துவிட்டது. பஸ்சுக்குள்ளேயே பல்லடம் புவனேசுவரி, பள்ளிப்பட்டு லதா, போடி ஜான்சிராணி, சிதம்பரம் செல்வராணி போன்றோர் பாட்டுப்பாட, அந்த பாட்டிற்கு ஏற்ப, கோவை தீபா, பள்ளிப்பட்டு ஷில்பா ஆகியோர் நடன மாட, ராஜபாளையம் வந்ததே தெரியவில்லை.
அந்துமணியின் ரசிகர் களும், ராஜபாளை யம் பிரமுகர்களுமான ராமசுப்பிரமணியராஜா, பிரபாகர் ராஜா இரு வரும் வாசகர்களை வரவேற்று, சிற்றுண்டி வழங்கியதுடன், அருமையான பரிசையும் கொடுத்து, வாசகர்களை சந்தோஷப்படுத்தி மகிழ்ந்தனர்.
ராஜபாளையம் தாண்டி வாசகர்கள் குற்றாலத்தில் நுழைந்ததும், முதலில் வரவேற்றது சாரல்தான். காற்று தென்றலாய் வீச, சாரல் பன்னீராய் பொழிந்திட, குற்றாலத்தில் வாசகர்கள் தங்கிய அலங்கார் ரிசார்ட்சினுள் நுழைந்தபோது, 'வெல்கம் ட்ரிங்ஸ்' கொடுத்து வரவேற்ற திண்டுக்கல் கீதா மெஸ் சந்திரசேகர்-விஜயலட்சுமி தலைமையிலான சமையல் குழுவினர், விதவிதமான சைவ, மற்றும் அசைவ சமையலை சமைத்து கொடுத்து அசத்தினர்.
அதிலும், அயிரை மீன் குழம்பு, நெய்மீன் கருவாட்டு குழம்பு என்று அசைவத்திலும், சானை சாப்ஸ், காளான் பிரியாணி, புதினாசாதம் என்று சைவத்திலும், தன் கைவண்ணத்தை காட்டி, அசத்தியிருந்தார் விஜயலட்சுமி. கூடுதலாக, வாசகர்கள் குளிக்க, கும்பிட, பொழுது போக்க போன இடங்களுக்கு எல்லாம், தன் மினி வேனை, 'மொபைல்' சமையலறையாக மாற்றி, சுடச்சுட போளி, மிளகாய் பஜ்ஜி, காபி, டீ போன்றவைகளை, 'ஆன் தி ஸ்பாட்'வழங்கி அசத்தினார்.
குற்றாலமும் வந்தாச்சு, அறைக்குள் லக்கேஜ்களை விட்டெறிஞ்சாச்சு; அடுத்து அருவி குளியல்தானே என்று, இந்த ஆண்டுக்கான சிகப்பு நிற டி - சர்ட்டை அணிந்து, ஐந்தருவிக்கு சென்ற போது, சரியான மழை. குழந்தைகளைப் போல, மழையிலும், மகிழ்ச்சியிலும் நனைந்து கொண்டே அருவியில் குளித்தனர் வாசகர்கள்.
அருவியில் அலுப்பு தீர, ஆசை தீர குளித்தவர்களுக்கு, பேராசிரியர் ஞானசம்பந்தன், தன் மனைவி அமுதாவுடன் பங்கேற்று நடத்திய பட்டிமன்ற பேச்சை கேட்டு, வயிறு வலிக்க சிரித்தனர். இந்த புதுமையான பட்டிமன்றத்தில், வாசகர்கள் பலரையும் பங்கேற்க வைத்து, உற்சாகப்படுத்தியது ஒரு தனிச் சிறப்பு.
இந்த விழாவோடு, 24 ஆண்டுகளுக்கு முன், அந்துமணி, 'தினமலர் - வாரமலர்' இதழில் எழுதி, தொடராக வந்த, 'தமிழ் மாநிலத்தில் அந்துமணி' என்ற புத்தகத்தை, ஞானசம்பந்தன் வெளியிட, அதை இலங்கை வாழ் தமிழரான, கோவை வாசகி புளோரா சுகந்தி பெற்றுக் கொண்டார். பின், அனைவருக்கும் அப்புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.
'இலங்கையில் உச்சகட்ட போர் மேகம் சூழ்ந்திருந்த கால கட்டத்தில், தப்பித் தவறி, பூமியில் அழுந்த மிதித்தாலே கண்ணிவெடியில் சிக்கி, சுக்கு நூறாகிப்போய் விடும் அபாயத்தில், 'என் உயிருக்கு நானே பொறுப்பு...' என்று எழுதிக் கொடுத்து, அங்கு தனக்கு கிடைத்த, அன்றைய அனுபவத்தை, மிக அருமையாக எழுதியுள்ளார் அந்துமணி. இந்த புத்தகத்தை நான், ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். அவ்வளவு சுவராசியமான தொகுப்பு இது...' என்று, ஞானசம்பந்தன் சொல்லவே, வாசகர்கள் புத்தகத்தை, ஒரு பொக்கிஷமாக இறுக பிடித்து, அப்போதே வாசிக்க ஆர்வமானார்கள்.
இந்த நிகழ்வின்போது, அந்துமணியிடம் முதன் முதலாக கேள்வி கேட்டு, பதில் வாங்கி, அந்த உற்சாகம் காரணமாக, 'வாரமலர்' இதழில் இதுவரை இரண்டாயிரத்திற்கும் அதிகமான ஜோக்குகள், துணுக்குகள், கதைகள் என்று எழுதியவரும், தொடர்ந்து எழுதிவருபவருமான தென்காசி அருணாசலம், வாசகர்களிடம் பேசியதுடன், வாசகர்களுக்கு திருக்குறள் புத்தகத்தை பரிசாக வழங்கினார். அவரை அந்துமணியின் நண்பர்களான அருண், ரபீக், சுப்புராம், பேராசிரியர் கண்ணன், ஆட்டோ கண்ணன், பிரகாஷ் மற்றும் அழகர்சாமி ஆகியோர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.
இரண்டாம் நாளன்று, புலியருவி குளியல். அதுவரை அமைதியாக இருந்த போடி விஜயலட்சுமி, நெய்வேலி விஜயலட்சுமி, சிதம்பரம் தமிழரசி, காஞ்சிபுரம் ராணி, புதுமாவிலங்கை ஷகீரா, இடையகோட்டை முருகாயி, கோவை தெய்வானை, சிதம்பரம் கவிதா போன்றோர் மகிழ்ச்சி பொங்க குளித்தவர்கள், 'வாழ்க்கையில இப்படி ஒரு ஆனந்தத்தை அனுபவிச்சதே இல்லே; எல்லா புகழும் அந்துமணிக்கே...' என்று, கோஷமிட்டனர்.
'நெல்லை எஸ்.பி., ஆபிசில் இருந்து மெயினருவி பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசார், ஆண் வாசகர்களான நாகராஜ், பிரகாஷ், செந்தில்குமார் ஆகியோரை ஆளுக்கு ஒருவராக அழைத்து போய் குளிக்க வைக்க, மூன்று வாசகர்களும் மகிழ்ந்து போனது மட்டுமின்றி, நெகிழ்ந்தும் போனார்கள்.
இந்த இரண்டு அருவிகளுக்கும் போவதற்கான இடைப்பட்ட நேரத்தில்தான், வாசகியரின் கபடி விளையாட்டு, தூள் பறந்தது. பாட்டுப்பாடியபடி, 'பலிஞ்சடுகுடு சடுகுடு' என்று விளையாடிய போது, ஏற்பட்ட ஆனந்தத்திற்கு அளவே இல்லை. 'ஐயோ எனக்கு கபடி வேண்டாம்...' என்று ஒதுங்கிய ஜெயந்திக்கும், சுபாவிற்கும், 'டென்னிகாய்ட்' கொடுக்க, அதில் விளையாடி மகிழ்ந்தனர்.
அருவி குளியல் மட்டுமின்றி, குற்றாலத்தின் அழகையும், ஆனந்தத்தையும் அள்ளி பருகுவதற்காக, படகு பயணம் மேற்கொண்டனர். படகு பயண முடிவில், பார்க்கில் நடந்த ஊஞ்சலாடும் போட்டியில், கோவை சரண்யா பறந்து பறந்து விளையாடி, ஊஞ்சல் ராணி பட்டம் பெற்றார்.
ஆடிப் பாடியும், விளையாடியும் களித்த வாசகர்களின் மனம், அமைதியும், அருளும் பெற, பழமையும், பெருமையுமிக்க குற்றாலநாதர் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு, சன்னதியில், அவர்களுக்கு தனித்தனியாக மாலை அணிவிக்கப்பட்டு கவுரவிக்கப் பட்டனர். 'எத்தனையோ பேரை மாலையும், கழுத்துமாக பார்த்து பழகிய என்னையும் பலர் பார்க்க மாலையும், கழுத்துமாக்கிய, 'வாரமலர்' இதழை வாழ்க்கையில் மறக்கவே மாட்டேன்...' என்றார் இடையகோட்டை வாசகி வளர்மதி.
வாசகர்கள் பங்கேற்பு நிகழ்ச்சியின் போது, சின்ன சின்ன கதைகள் மூலம், பெரிய பெரிய நம்பிக்கைகளை தன் செல்லக்குரலால் கேட்பவர்கள் மனதில் ஆழமாக விதைத்தபடி, எந்நேரமும் சுறுசுறுப்பாக வலம் வந்த கோவை சுபாஷினி, மைக்கை பிடித்தாலே வாசகர்களுக்கு தனி உற்சாம்தான்.
இவ்வளவும் நடந்து, இரவு விருந்தும் முடிந்த பின், அலுப்பில் தூங்கப் போவார்கள் என்று பார்த்தால், 'எங்கே போறீங்க? எல்லாரும் வாங்க, 'பாட்டுக்கு பாட்டு' விளையாடலாம்...' என்றபடி சென்னை திவ்யா புத்துணர்வோடு நிகழ்ச்சி தொகுப்பாளினியாகி, 'கலக்கு கலக்கு' என்று கலக்கியதுடன், யார் பாடினாலும், சின்ன சின்ன அழகான நடன அசைவுகளையும் கொடுத்து அசத்தினார். இந்த நிகழ்வில் விழுப்புரம் புனிதா, பழைய, புதிய பாடல்களை பாடி, அனைவரது பாராட்டையும் பெற்றார்.
மூன்றாம் நாள் குற்றாலத்தை விட்டு கிளம்பும் போது, 'எப்போது ரிசார்ட்சுக்கு வந்தாலும் சிறப்பு தள்ளுபடி யுடன் தங்கிக் கொள்ளலாம்...' என்று சொல்லி, அதற்கான கார்டை வாசகர்களுக்கு வழங்கினார் ரிசார்ட்ஸ் உரிமையாளர் ஈஸ்வர் ராஜ்.
டூரின் நிறைவாக வாசகர்கள் அனைவருக்கும் பார்சலாக இரவு உணவும், வீட்டில் காத்திருக்கும் உறவுகளுக்காக இனிப்பும் கொடுத்து, மதுரையில் வழியனுப்பிய போது, அனைவரது கண்களிலும், பிரிவைத் தாங்க முடியாத துயரம், கண்ணீராய் துளிர்த் திருந்தது.

குற்றாலமும், அந்துமணியும்...
முன்பெல்லாம் டூரில் பங்கேற்கும் வாசகர்கள், 'நாங்கள் அருவியில குளிக்க வர்றோம்; ஆனா, மறக்காமல் அந்துமணிய காட்டணும்...' என்பர். ஆனால், இந்த ஆண்டு, அதற்கு நேர்மாறாக இருந்தது. 'அந்துமணியை பாக்கறதுக்காகத் தான் வர்றோம்; அதற்கு பிறகு தான், அருவிகள்ல குளிப்போம்...' என, கங்கணம் கட்டியவர்கள் போல வந்தனர்.
அதிலும் கோவை வாசகியும், துப்பறியும் நிறுவனம் நடத்துபவருமான சுபாஷினி, 'என் துப்பறியும் திறமைக்கு விட்ட சவால் இது! நான் டூர் துவங்கி இரண்டு நாட்களுக்குள் அந்துமணியை கண்டுபிடிக்காவிட்டால், என் தொழிலையே விட்டுவிடுகிறேன்...' என்று, சவால்விட்டபடி வந்தார்.
அந்துமணியின் படம் கொண்ட பனியன் அணிந்து, அருவிகளுக்கு போகும் போது கிடைக்கும் வரவேற்பையும், விசாரிப்புகளையும் பார்த்த வாசகர் செந்தில்குமார், 'நான்தான் அந்துமணி, நான்தான் அந்துமணி...' என்று, சொல்லிப் பார்த்தார்.
குழந்தையைப் போன்ற உடல் மற்றும் உள்ளத்துடன், வெள்ளந்தியாக பேசி சிரித்தபடி வலம்வந்த அவரை, அந்துமணியாக இருப்பாரோ என்ற சந்தேக பட்டியலில் இருந்து, முதலில் கழட்டி விட்டனர்.
இம்முறை அவர் எங்கே இருந்தார் என்று யோசிக்கும் டூர் வாசகர்களே... பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியின் போது, 'அன்புள்ள மான்விழியே... ஆசையில் ஒர் கடிதம்' என்ற அருமையான பழைய பாடலை பாடும் போது, ஒரு கட்டத்திற்கு மேல் பாட முடியாமல் அனைவரும் திணறிய போது,
'நலம் நலம்தானா முல்லை மலரே
சுகம் சுகம்தானா முத்துச்சுடரே
இளைய கன்னியின் இடை மெலிந்ததோ
எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ
வண்ண பூங்கொடி வடிவம் கொண்டதோ
வாடைக்காற்றிலே வாடி நின்றதோ...'
என்று, ராகத்தோடு பாடி எடுத்துக் கொடுத்தாரே... அவரே உங்கள் அன்பான அந்துமணி!
அதன்பின் ஊஞ்சலாடும் இடத்தில் எல்லாருக்கும் ஊஞ்சலாட சொல்லிக் கொடுத்தவரும், ஒவ்வொருவர் பெயரையும் சொல்லி உற்சாகப்படுத்தியவரும், போட்டோ எடுக்கும் போது, சிரிக்க சொன்னவரும், அவ்வளவு ஏன்... டூர் நிறைவாக மதுரையில் ரயில் ஏறும்போது, காரில் பறந்து வந்து, தன் அழைப்பினை ஏற்று, டூரில் கலந்து கொண்டதற்காக, ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து, நன்றி சொன்னாரே... அவர் தான் நம் அன்பிற்குரிய அந்துமணி!

-எல்.முருகராஜ்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arunachalam, Arunn - Hongkong,சீனா
05-ஆக-201411:32:34 IST Report Abuse
Arunachalam, Arunn ப்ரேம்னிவாஸ் நிறுவன ராமசாமி தம்பதியினர் விருந்தோம்பலில் ஆர்வமுள்ளவர்கள். உங்கள் வாசகர்களுக்கு நடுநிசியிலும் உணவு பரிமாறியது அவர்களின் (செட்டி நாட்டாரின்) விருந்தோம்பும் குணத்தை உயர்த்தி காட்டுகின்றது. ராமசாமி குடும்பம் எல்லா நலனும் பெற்று சிறப்புடன் வாழவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
sutharsanam - ahmedabad,இந்தியா
03-ஆக-201413:07:50 IST Report Abuse
sutharsanam குற்றால டூரில் கலந்து கொள்வது எப்படி?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X