கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஆக
2014
00:00

கேள்வி: நான் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தி வருகிறேன். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9க்கு நான் மாறிக் கொள்ளலாமா? சிலர் முடியாது என்கின்றனர். சிக்கல் ஏற்பட்டுவிடுமோ என்று எண்ணி, இன்னும் மாறவில்லை. அறிவுரை தரவும்.
-என். ஜெயப்பிரகாஷ், மதுரை.
பதில்:
விண்டோஸ் சிஸ்டத்தின் பல்வேறு பதிப்புகளைப் பயன்படுத்துவோரிடையே இந்த குழப்பம் இன்னும் உள்ளது. இங்கு சற்று விரிவான பதிலை அனைவருக்கும் தருகிறேன். விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துவோர், இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் பதிப்பு 8 வரை மட்டுமே பயன்படுத்த முடியும். அதன் பின் வந்தவை எக்ஸ்பியில் இயங்காது. அதே போல விண்டோஸ் விஸ்டா இயக்குபவர்கள், பதிப்பு 9 வரை மட்டுமே இயக்க முடியும். உங்களிடம் விண்டோஸ் 7 மற்றும் 8 இருந்தால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10 வரை பயன்படுத்தலாம். விண்டோஸ் 8.1 வைத்துள்ளவர்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11 இயக்கலாம். எந்த விண்டோஸ் இயக்கம் இயங்கினாலும், அதில் ஆட்டோமேடிக் அப்டேட் செட் செய்துவிட்டால், விண்டோஸ் தனக்கு எது சரியானது என்று தேடிப் பார்த்து அப்டேட் செய்து கொள்ளும்.

கேள்வி: விண்டோஸ் விஸ்டா பயன்படுத்திக் கொண்டிருந்த நான், தற்போது விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன். இதில் டெஸ்க்டாப் திரையில் நிறைய ஐகான்கள் சேர்ந்துவிட்டால், அவற்றை எப்படி ஒழுங்குபடுத்துவது என்ற வழியக் காட்டவும்.
என்.சுந்தரம், சின்னமனூர்.
பதில்:
இது ஒரு சிக்கலான வேலை தான். ஆனால்,விண்டோஸ் இதனை எளிமைப்படுத்தும் வகையிலும், விரைவாக மேற்கொள்ளும் வகையிலும் ஒரு தீர்வு தருகிறது. எப்5 கீயைச் சற்று நேரம் தொடர்ந்து அழுத்தவும். ஐகான்கள் தாமாக, சீராக அமைக்கப்படும். அல்லது விஸ்டாவில் மேற்கொண்டது போல, டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து, View, Auto arrange எனத் தேர்ந்தெடுத்து இயக்கவும். ஐகான்கள் சரியாகிவிடும். தேவைப்படாத, பயன்படுத்தாத ஐகான்கள் இருந்தால், நீங்களாக அவற்றை நீக்கலாம்.

கேள்வி: கம்ப்யூட்டருக்கு சிஸ்டம் ஹெல்த் ரிப்போர்ட் பெறலாம் என்று என் நண்பன் கூறுகிறான். இதனை எப்படிப் பெறுவது? இதன் பயன்கள் என்ன?
என். ஸ்ரீதேவி, தாம்பரம்.
பதில்:
இதற்கு உங்களிடம் விண்டோஸ் 7 சிஸ்டம் இருக்க வேண்டும். ஸ்டார்ட் அருகே உள்ள தேடல் கட்டத்தில் perfmon /report என்று டைப் செய்து என்டர் தட்டவும். தொடர்ந்து Resource and Performance Monitor என்று ஒரு விண்டோ காட்டப்பட்டு, கம்ப்யூட்டர் இயக்கம் குறித்த அனைத்து தொழில் நுட்ப தகவல்களும் கிடைக்கும். இதுதான் உங்கள் கம்ப்யூட்டரின் ஹெல்த் ரிப்போர்ட். எங்கு பிரச்னை இருக்கிறது. அதற்கான தீர்வு என்ன என்பது அழகாகத் தெளிவாக விளக்கப்பட்டிருக்கும். எடுத்துக் காட்டாக, ஏதேனும் யு.எஸ்.பி. வழியாக இணைக்கப்பட்ட சாதனத்தின் சரியான ட்ரைவர் இல்லாததால், அந்த நிலை தரப்பட்டு, அதற்கான ட்ரைவர் பெறுவதற்கான வழிகள் காட்டப்படும்.
இதே போல அனைத்து பிரிவுகளிலும் கம்ப்யூட்டர் செயல்படும் திறன், எவ்வளவு திறனைப் பயன்படுத்துகிறது, பிரச்னைகள் இருந்தால் அவற்றைத் தீர்க்க வழி ஆகியவை காட்டப்படும்.இந்த அறிக்கை கம்ப்யூட்டரில் சேவ் செய்யப்படும். இதனை எச்.டி.எம்.எல். பைலாக சேவ் செய்து, உங்கள் நண்பருக்கு, இதனை இமெயிலில் அனுப்பவும் வழி தரப்படுகிறது.

கேள்வி: என்னுடைய ஜிமெயில் அக்கவுண்ட் தளத்தில், அனுப்பிய மெயிலை, அனுப்பியவுடன் மீண்டும் திரும்பப் பெறும் வசதி இல்லை. ஆனால், பெரும்பாலானவர்களின் அக்கவுண்ட்களில் இது உள்ளது. இது எதனால்?
-கா. சுப்ரமணியம், விருதுநகர்.
பதில்
: உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டில் இது இயக்க நிலையில் அமைக்கப்படவில்லை. இதனை சின்ன செட்டிங்ஸ் மூலம் சரி செய்துவிடலாம்.
1. உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்ட் தளத்தில் நுழையவும். கிடைத்தவுடன், உங்கள் திரையில் வலது மூலையில் மேலாகக் காணப்படும் ஐகான் அருகே செல்லவும். அங்கு கிடைக்கும் கீழ்விரி மெனுவில், 'Settings' என்னும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
2. மீண்டும் திரையில் வலது பக்க மூலையில் உள்ள 'Labs' என்னும் லிங்க்கில் கிளிக் செய்திடவும்.
3. இப்போது கிடைக்கும் விண்டோவில், கீழாகச் செல்லவும்.
4. இங்கு “Undo Send” என்ற ஆப்ஷன் கிடைக்கும் வரை செல்லவும். இதனை இயக்கும் வகையில் enable செய்திடவும்.
5. தொடர்ந்து திரையின் கீழாகச் சென்று 'Save Changes' என்பதில் கிளிக் செய்திடவும்.
இனி, நீங்கள் ஜிமெயில் தளத்தில், மின் அஞ்சல் ஒன்றை அனுப்பியவுடன், மேலாக, “Your message has been sent” என்பதன் அருகே, Hit 'Undo' to recall your email என்று ஒரு செய்தி கிடைக்கும். 10 விநாடிகளுக்குள், இந்த இடத்தில் கிளிக் செய்தால், அஞ்சல் அனுப்பப்பட மாட்டாது. இந்த கால நேரத்தை அதிகப்படுத்த விரும்பினால், மீண்டும் லேப்ஸ் சென்று அங்கு “Undo Send” ஆப்ஷன்ஸ் பகுதியில், இந்த நேரத்தினை 30 விநாடிகள் வரை நீட்டிக்கலாம்.

கேள்வி: நான் விண்டோஸ் 8 பயன்படுத்தி வருகிறேன். இதன் வழியே மெயில் புரோகிராம் சென்று, மெயிலில் உள்ள லிங்க் ஒன்றில் கிளிக் செய்த பின்னர், மீண்டும் பின்புறம் செல்ல வேண்டி இடது புற அம்புக் குறியினை அழுத்தினால், மீண்டும் இமெயில் புரோகிராம் செல்ல இயலவில்லை. நான் தற்போது அவுட்லுக் என அழைக்கப்படும் ஹாட் மெயில் பயன்படுத்துகிறேன்.
என். சஞ்சீவி, சிவகாசி.
பதில்:
நீங்கள் உங்கள் மெயில் புரோகிராமினைப் பார்க்கையில், அந்த அப்ளிகேஷன் புரோகிராமினை மெட்ரோ இண்டர்பேஸ் மூலம் பயன்படுத்துகிறீர்கள்.
அதன் பின்னர், லிங்க் ஒன்றில் கிளிக் செய்த பின்னர், உங்கள் பிரவுசர், அது குரோம், பயர்பாக்ஸ் அல்லது இண்டர்நெட் எக்ஸ்புளோர்ர் ஆக எதுவாக இருந்தாலும், லிங்க் தொடர்பானது புதிய விண்டோவில் திறக்கப்படுகிறது. எனவே, மீண்டும் பின்னால் செல்வதற்கு, எந்த தளமும் இருப்பதில்லை.
நீங்கள் உங்கள் விண்டோஸ் 8 சிஸ்டத்தினை விண்டோஸ் 8.1.1.க்கு அப்டேட் செய்திடவும். உங்கள் டாஸ்க் பாரில், மெயில் அப்ளிகேஷன் கிடைக்கும். இதன் வழியாக, எந்த ஒரு அப்ளிகேஷன் புரோகிராமிற்கும் முன்னும் பின்னும் செல்லலாம். மேலும், உங்கள் மெயில் அப்ளிகேஷன் வேலை முடிந்த பின்னர், அதனை மட்டும் மேலே உள்ள எக்ஸ் அடையாளத்தில் கிளிக் செய்து மூடிக் கொள்ளலாம்.

கேள்வி: சாப்ட்வேர் புரோகிராம்களில், மிடில்வேர் Middleware என்பது என்ன? இதனால் என்ன பயன்? இவை நமக்குப் பாதுகாப்பு தருவதற்காக ஏற்படுத்தப்பட்டவையா?
என். பீதாம்பரம், சென்னை.
பதில்:
மிடில்வேர் என்பது ஒருவகை சாப்ட்வேர் புரோகிராம் தான். இது இரண்டு தனித்தனி சாப்ட்வேர் புரோகிராம்களை இணைக்கும் பாலமாகச் செயல்படும். ஒன்றிலிருந்து டேட்டாவினை மற்றொன்றுக்கு அனுப்ப வசதி ஏற்படுத்தித் தரும். பார்மட்டுகளை மாற்றித் தரும்.
இருவேறு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கும் சாப்ட்வேர் புரோகிராம் களுக்கிடையே கூட இவை செயல்படும்.

கேள்வி: என் யாஹூ மெயில் அக்கவுண்ட்டில், என் பக்கத்தில் கியர் ஐகான் தென்படவில்லை. தற்போது காட்டப்படும் புதிய தோற்றம் எனக்குப் பிடிக்கவில்லை. கியர் ஐகான் பெறுவது எப்படி? இந்த புதிய தோற்றத்தினை மாற்றிக் கொள்ளலாமா?
-என். சுந்தர மூர்த்தி, மதுரை.
பதில்:
உங்களுடைய இன் பாக்ஸில், வலது புறத்தில் மேலாக, ஹோம் ஐகான் மற்றும் உங்கள் பெயர் அருகே இந்த கியர் ஐகான் நிச்சயம் இருக்கும். உங்களிடம் உள்ள மானிட்டர் இதனைக் காட்டும் அளவிற்கு அகலமாக இல்லை என்று நினைக்கிறேன். திரைக் காட்சியை இடது புறமாக நகர்த்திப் பார்க்கவும். அதன் பின்னரும் தெரியவில்லை என்றால், உங்கள் பிரவுசரில் உள்ள கேஷ் மெமரியைக் காலி செய்து பார்க்கவும். காலி செய்த பின்னர், கம்ப்யூட்டரை மீண்டும் ஸ்டார்ட் செய்து பார்க்கவும். இன்னொரு காரணமும் இதில் இருக்கலாம். புதிய மெயில் அக்கவுண்ட் தோற்றத்தினைக் காட்டும் வகையிலான புதிய பிரவுசர் பதிப்பு இல்லாமல், பழைய பிரவுசர் பதிப்பினை நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். இதனை அப்டேட் செய்திடவும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 ஐப் பயன்படுத்துவோருக்கு, அவர்கள் அவுட்லுக் டாட் காம் பயன்பாட்டில் இந்த பிரச்னை உள்ளது. எனவே, உங்கள் பிரவுசரின் இன்றைய புதிய பதிப்பைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தவும்.

கேள்வி: என் எக்ஸெல் ஒர்க்ஷீட்டில், வரிசையாக இல்லாமல், குறிப்பிட்ட பக்கங்களை மட்டும், பிரிண்ட் செய்திட முடியுமா? வழி காட்டவும்.
-தி. மலையரசன், திருப்பூர்.
பதில்:
உங்களுடைய ஒர்க்ஷீட் ஒவ்வொன்றும் அதன் பக்கத்திலேயே, அதாவது ஒரு தாளில், அடங்கும் என்றால், உங்கள் பிரச்னைக்குத் தீர்வு எளிது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், எந்த பக்கங்களை அச்செடுக்க வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். எடுத்துக் காட்டாக, பக்கங்கள் 4,8,10 அச்சடிக்க வேண்டும் என்றால், முதலில் ஒர்க்ஷீட் 4 தேர்ந்தெடுத்து, பின்னர், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு ஒர்க்ஷீட் 8, பின் 10 எனத் தேர்ந்தெடுக்கவும். இதன் பின்னர், நீங்கள் அச்சிடுகையில், இந்த பக்கங்கள் மட்டுமே அச்சாகும்.
இதற்குப் பதிலாக, ஒரே ஒர்க்ஷீட்டில் உள்ள வெவ்வேறு பக்கங்களை அச்செடுக்க வேண்டுமெனில், சற்று சிக்கலான வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டியதிருக்கும். இதற்கு ஓர் தீர்வு என்னவென்றால், அச்செடுக்க விரும்பாத பக்கங்களை மறைத்து (hide) வைத்து, பின் மறைக்கப்படாத பக்கங்களை அச்செடுப்பதாகும். இன்னொரு எளிய வழியையும் இங்கு தருகிறேன்.
1. ரிப்பனில் வியூ டேப் தேர்ந்தெடுக்கவும்.
2. அடுத்து Workbook Views குரூப்பில், Page Break Preview டூலின் மீது கிளிக் செய்திடவும். இப்போது எக்ஸெல் உங்கள் ஒர்க்ஷீட்டினைக் காட்டும். அதன் அனைத்து பேஜ் பிரேக் இடங்களும் தெரியும்.
3. இப்போது எந்த பக்கத்தினை அச்செடுக்க வேண்டுமோ, அதன் அனைத்து செல்களையும் தேர்ந்தெடுக்கவும்.
4. அடுத்து கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, அச்சடிக்க விரும்பும் அடுத்த பக்கத்தில் உள்ள செல்களைத் தேர்ந்தெடுக்கவும்.
5. இப்படியே, அச்செடுக்க விரும்பும் அனைத்து பக்கங்களிலும் உள்ள செல்களைத் தேர்ந்தெடுக்கவும்.
6. தொடர்ந்து, கண்ட்ரோல் + பி (Ctrl+P) அழுத்தவும். எக்ஸெல் 2007 பிரிண்ட் டயலாக் பாக்ஸைக் காட்டும். நீங்கள் எக்ஸெல் 2010 பயன்படுத்தினால், ரிப்பனில் பைல் டேப்பினைக் காட்டும். அதில் அச்செடுப்பதற்காண கண்ட்ரோல் கட்டளைகளைக் காணலாம்.
7. எக்ஸெல் 2007ல், Print What ஏரியாவில், Selection என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் 2010ல், தலைப்பின் கீழ் உள்ள பட்டனை அழுத்தி, Print Selection என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
8. ஓகே அல்லது பிரிண்ட் கிளிக் செய்தால், தேர்ந்தெடுத்த பக்கங்கள் அச்சாகும். தொடர்ந்து அச்சான பின்னர், Page Break Preview டிஸ்பிளேயை மூடவும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X